அரசியல்இந்தியா

சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கான சங்கம் உதயமான வரலாறு – முனைவர் அ.ப.அருண்கண்ணன்

549 20250122 151731 0000

முனைவர் அ.ப.அருண்கண்ணன்

19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அரசு கல்லூரிகளுடன் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளும் அன்றைய சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்டன. அரசு கல்லூரிகளுக்கு இணையாக வளர்ச்சி அடைந்த அரசு உதவிபெறும் தனியார் கல்லூரி ஆசிரியர்களை ஒருங்கிணைக்க 1946-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்கலைகழக ஆசிரியர் சங்கம்தான் ஏ.யு.டி(AUT). தமிழ் நாட்டில் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்காக உருவான முதல் சங்கம். இக்கல்லூரிகள் அனைத்தும், 1857-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளாக (Affiliated colleges) செயல்பட்டன.

சுதந்திரம் அடைந்தபிறகு தமிழ் நாட்டில் கல்லூரிகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக, 1966-ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, தென்பகுதியில் செயல்பட்ட கல்லூரிகள் அதன் இணைப்புக் கல்லூரிகளாக இயங்கத் தொடங்கின. அப்படி செயல்படத் தொடங்கிய பல தனியார் கல்லூரிகள் ஆசிரியர்களுக்கு ஒழுங்காக சம்பளத்தை வழங்கவில்லை, ஆசிரியர்களையும் தான்தோன்றித்தனமாக பணியில் இருந்து நீக்கியது உட்பட ஆசிரியர்களுக்கு எதிராக இத்தகைய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது அந்தக் கல்லூரிகள். இந்த மோசமான பணிச் சூழல்களுக்கு எதிராக ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது மதுரை காமாரசர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா மற்றும் அழகப்பா பல்கலைகழகங்களுக்கான ஆசிரியர் சங்கம் மூட்டா (MUTA). 

இந்த இரண்டு சங்கங்களும் இணைந்து எடுத்த முயற்சிகளின் விளைவாக தமிழ்நாட்டில் 1975-ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று தி.மு.க. அரசால் தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்று அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டம் கொண்டு வரப்பட்டாலும் தனியார் கல்லூரி நிர்வாகங்களின் போக்கில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. மாநில அரசுக்கு எதிராக 70-களின் இறுதியிலும் 80-களின் தொடக்கத்திலும் மிகப் பெரிய போராட்டங்களை கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (JAC-ஜே,ஏ,சி) நடத்தியுள்ளது. அதில் ஒன்று, சென்னையில் உள்ள எஸ்.ஐ.ஈ.டி. பெண்கள் கல்லூரியில் ஏ.யு.டி. நடத்தியது மற்றொன்று காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் கல்லூரியில் மூட்டா நடத்தியது. இந்த இரண்டு போராட்டங்களும் தமிழக தனியார் கல்லூரிகள் சங்க வரலாற்றில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய போராட்டங்கள். சென்னையில் நடைபெற்ற ஜே.ஏ.சி. போராட்டம் காரணமாகவே 1982-ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு தனியார் ஒழுங்காற்று சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன் காரணமாகவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களையும் சிறப்பு அலுவலரை நியமித்து அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சாத்தியம் உருவானது. 

1980-களில் உயர் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்

தமிழ்நாட்டில் 1980-களின் நடுப்பகுதிவரை அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் என இரண்டு வகையான கல்லூரிகள் மட்டுமே செயல்பட்டன. ஆனால் 1985-ஆம் ஆண்டு முதல் அரசின் எந்த நிதி உதவியும் இல்லாமல் இயங்கும் சுயநிதிக் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டன. இப்படி தொடங்கிய சுயநிதி கல்லூரிகளின் எண்ணிக்கை இன்றைக்கு பன்மடங்காக உயர்ந்துள்ளது. (AISHE 21-22) அகில இந்திய கணக்கெடுப்பின்படி தமிழ் நாட்டில் மொத்தம் 2807 கல்லூரிகள் செயல்படுகின்றன. அவற்றில் 2128 கல்லூரிகள் சுயநிதிக் கல்லூரிகளாக உள்ளன! 

இதன் காரணமாக இன்றைக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளில் அரசு சம்பளத்துடன் நிரந்தரப்பணியில் இருப்பவர்களுடைய எண்ணிக்கை பெரிதும் சுருங்கி சுயநிதிக் கல்லூரிகள்/ பிரிவுகளில் பணி நிரந்தரமற்று மிகக் குறைவான ஊதியத்துடன் பணிபுரிகின்றவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. 

அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை 1980களுக்கு பிறகு மாறவே இல்லை. அதாவது அரசு உதவிபெறும் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படவே இல்லை. எனவே இன்றைக்கு தமிழ் நாட்டில் உள்ள 2393 தனியார் கல்லூரிகளில் 265 கல்லூரிகள் மட்டுமே அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகள். இதில் பெரும்பான்மையான கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகளாகும். அக்கல்லூரிகளில் செயல்படுகிற ஆசிரியர் சங்கங்கள் சுயநிதிக் கல்லூரி/பிரிவு ஆசிரியர்களை தங்களுடைய சங்கத்திற்குள் இணைத்து அவர்களுடைய கோரிக்கைகளுக்காக சில முக்கியமான போராட்டங்களை நடத்தியுள்ளன. 

இது போன்ற முயற்சிகள் ஒரு புறம் இருந்தாலும் சுயநிதிக் கல்லூரிகளில் மிக மோசமான பணிச் சூழலில் பணி புரிகிற பெரும் எண்ணிக்கை யிலான ஆசிரியர்கள் சங்கமாக இணையாமல் உதிரிகளாக உள்ளனர். 1970-களில் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சந்தித்ததை விடப் பல மடங்கு மோசமான ஒடுக்குமுறைகளை இன்றைக்கு சுய நிதி கல்லூரி/ பிரிவுகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சந்திக்கின்றனர். இன்றைக்கு மாறியுள்ள அரசியல் சூழலில் ஆசிரியர்களை சங்கமாக இணைத்துப் போராட எடுக்கும் முயற்சிகள் தமிழ்நாட்டில் அரிதாக உள்ளது. இந்நிலையில் சென்னைப் பல்கலைகழகத்தின் சுயநிதிக் கல்லூரி/ பிரிவுகளில் பணிபுரியும் இத்தகு ஆசிரியர்களை சங்கமாக திரட்ட எடுத்த முயற்சிகளையும் அதில் கிடைத்த படிப்பினைகளையும் பதிவு செய்யும் முயற்சியே இக்கட்டுரை. 

டி.எஸ்.நாராயணசாமி கல்லூரி ஆசிரியர்களின் போராட்டம்

சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் டி.எஸ்.நாராயணசாமி கலை அறிவியல் கல்லூரி 1996-ஆம் ஆண்டு தொடங்கி 2017-ஆம் ஆண்டுவரை செயல்பட்ட சுயநிதி கல்லூரியாகும். பல ஆண்டுகளாகச் சம்பளத்தை உயர்த்தாதது போன்ற பல்வேறு காரணங்களால் அங்குப் பணி புரிந்த ஆசிரியர்கள் மத்தியில் நிர்வாகத்திற்கு எதிரான மனநிலை உருவாகியிருந்தது. 2016 லில் வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக இக்கல்லூரி வளாகத்திற்கு தினமும் வந்து செல்வதே பாதுகாப்பற்றதாக இருந்தது. இருப்பினும், ஆசிரியர்கள் அனைவரும் கல்லூரிக்கு வர நிர்பந்திக்கப்பட்டனர். 

நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள். இந்திய மாணவர் சங்கத்தில் செயல்பட்ட அனுபவமுள்ள அக்கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான வெண்மணி இப்போராட்டத்தை வழிநடத்தினார். வகுப்பைத் தவிர மற்ற பணிகளை புறக்கணிப்பது என தொடங்கிய போராட்டம், ஒரு நாள் முழுவேலை நிறுத்தம் என நீண்டது. மூன்று வாரங்கள்வரை நீடித்த இப்போராட்டத்தில் சில குறிப்பிடத் தக்க வெற்றிகளை ஆசிரியர்கள் பெற்றனர். 

சங்கமாக இணைக்க எடுத்த முயற்சிகள் 

இப்போராட்டத்தில் கிடைத்த படிப்பினைகள் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களை சங்கமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது. எனவே அப்படி ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும் என வெண்மணி, எழிலன், கணபதி, அண்ணாதுரை, பூபதி உட்பட சிலர் தொடர்ந்து சந்தித்து விவாதித்துக் கொண்டிருந்த போதுதான் கட்டுரையாளரும் அவர்களுடன் இணைந்தார். 

ஆரம்பத்தில் ஆசிரியர்களை ஒன்றிணைப்பதற்கு எடுத்த பல்வேறு முயற்சிகள் வெற்றி பெறவில்லை. எங்களுடைய தொடர் முயற்சியின் காரணமாக 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதி சென்னை இக்சா மையத்தில் நடந்த கூட்டத்தில் 150 சுயநிதி கல்லூரி/ பிரிவுகளை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். அன்று நடந்த கூட்டத்தில் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கான ஆசிரியர்கள் சங்கம் என்கிற பெயரில் சங்கத்தை விரைவில் பதிவு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான வேலைகளைச் செய்வதற்கு 21 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. 

ஆசிரியர்களின் பணி நீக்கம் 

இக்சா மையத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் உற்சாகத்துடன் சென்று அவர்களுடன் பணி புரியும் ஆசிரியர்களை சங்கத்தில் உறுப்பினாராக்குவதற்கான வேலைகளைத் தங்களுடைய கல்லூரிகளில் தொடங்கினர். இதனை அறிந்த கல்லூரி நிர்வாகங்கள் சிலரை பணியிலிருந்து நீக்கின. இதில் 21 பேர் கொண்ட குழுவில் செயல்பட்ட சுரேஷ் உட்பட சிலரும் இதில் பாதிக்கப்பட்டனர். 

அடுத்தடுத்த மாதங்களில், ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் 21 பேர் கொண்ட குழு உறுப்பினர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும், சங்கம் பதிவை நோக்கி நகர்வதில் தடையை உருவாக்கியது. ஆனாலும் அதில் ஒத்த கருத்துடைய 10 பேர் அதற்கான முயற்சிகளை தொடர்வது என முடிவு செய்து பணிகளைத் தொடர்ந்தோம். ஆனாலும் முன்பு இருந்த வேகத்துடன் இந்தக் குழுவால் செயல்பட முடியவில்லை. 

ஸ்ரீராம் கல்லூரி போராட்டம் 

2019-ஆம் ஆண்டு, ஜூன் 17 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம் கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடங்கினார்கள். நீண்ட நாட்களாக சம்பளம் உயர்த்தாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தை தொடங்கினார்கள். 2017-ஆம் ஆண்டு முதல் சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கான சங்கம் உருவாக்க வேண்டும் என்று தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த பூபதிதான் மற்ற ஆசிரியர்களை ஒருங்கிணைத்து இந்தப் போராட்டத்தை நடத்தினார். இந்தப் போராட்டம் ஐந்து நாட்கள்வரை நீடித்தது. முதலில் ஆசிரியர்களை அழைத்துப் பேச மறுத்த நிர்வாகம் மூன்றாம் நாள் முடிவில் பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொண்டது.     

போராட்டத்தின் ஐந்தாம் நாள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆசிரியர்களின் 7 கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாக நிர்வாகம் ஒத்துக்கொண்டதால் போராட்டம் முடிவுக்குவந்தது. இப்போராட்டத்தில் பெரிய வெற்றிகளைப் பெற்றதற்கு ஆசிரியர்களின் ஒற்றுமையும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அப்போதைய பொதுச் செயலாளராக இருந்த காந்திராஜ் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் மாநில பொறுப்பாளர் கு.பூபாலன் போன்றவர்களின் வழிகாட்டுதலும் முக்கிய பங்கு வகித்தன.

கல்லூரி நிர்வாகத்தின் உண்மை முகம் 

பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்டபடி நிர்வாகம் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடங்கியது. சம்பள உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றியது.  ஆனால் ஆசிரியர்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் நோக்குடன் முனைவர் பட்டம் முடித்தவர்களுக்கு மட்டும் அந்த சம்பள உயர்வை வழங்கியது. இதை ஏற்றுக்கொள்வதா அல்லது அனைவருக்கும் சம்பள உயர்வை வழங்க வேண்டும் என மீண்டும் போராடுவதா என்பதில் ஆசிரியர்களிடையே ஒத்த கருத்தை உருவாக்க முடியவில்லை. இதனால் ஆசிரியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர். 

இதை எதிர்பார்த்த நிர்வாகம் வேறு சில காரணங்களைக் கூறி போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இளவரசி மற்றும் சில ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பணியில் இருந்து நீக்கியது. அடுத்த சில மாதங்களில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பூபதி உட்பட 7 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். 13 ஆண்டுகள் அதே கல்லூரியில் பணி புரிந்த பூபதி அப்போது துறைத் தலைவர். ஆனால் அவருக்கு போதுமான வேலைப்பளு இல்லை எனக் காரணம் கூறி டிசம்பர் 13, 2019 அன்று அடுத்த நாளில் இருந்து அவர் கல்லூரிக்கு வரக் கூடாது என நிர்வாகம் கூறியது. 

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட வேண்டிய சூழல் உருவானதால் சங்கத்தை பதிவு செய்வதை பற்றி பிறகு சிந்தித்துக்கொள்ளாலம் என முடிவு செய்யப்பட்டு 2017-ஆம் ஆண்டே எங்கள் குழுவால் தீர்மானிக்கப்பட்ட ‘சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கான ஆசிரியர் சங்கம்’ என்கிற பெயரில் செயல்படுவது எனவும் அதற்கு அண்ணாதுரை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 

பூபதி உட்பட பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணி நீக்கத்திற்கு எதிராக இச்சங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார் அரசு கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் சிவக்குமார். இந்த முயற்சியின் விளைவாக மண்டலக் கல்லூரி கல்வி இயக்குனர் முதலில் நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார். பிறகு பிப்ரவரி மாதத்தில் கல்லூரிக்கே நேரில் சென்று இரு தரப்பையும் விசாரித்தார். விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்த நிர்வாகம் தாங்கள் அரசிடம் இருந்து எந்த நிதியும் பெறாததால் தங்களை கல்லூரிக் கல்வி இயக்குனரகம் கட்டுப்படுத்த முடியாது எனவும் தாங்கள் ஒரு மொழிவழிச் சிறுபான்மையினர் கல்லூரி. ஆகவே 1976 தனியார் கல்லூரி ஒழுக்காற்றுச் சட்டம் மூலம் இந்தப் பணி நீக்கத்தை தடுக்க முடியாது எனவும் வாதிட்டது. 

இவற்றை எதிர்த்துப் போராட ஆயத்தமாகிக் கொண்டிருந்துபோது கரோனா பொது முடக்கம் குறிக்கிட்டதால் சங்கத்தால் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த முடியவில்லை. ஏற்கனவே ஆண்டின் நடுவில் பணியில் இருந்து நீக்கப்பட்டதால் வேறு எந்த கல்லூரிக்கும் பூபதி உட்பட பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் யாராலும் பணிக்குச் செல்ல முடியவில்லை. மேலும் அடுத்த கல்வியாண்டில் கரோனா காரணமாக ஏற்கனவே பணியில் இருந்தவர்களே வேலையை விட்டு நீக்கப்பட்ட சூழலில் இவர்களால் அந்த ஆண்டும் பணிக்குச் செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் பூபதி வேறு வழியின்றி வாழ்வாதாரத்திற்காக பெட்டிக் கடை நடத்தும் நிலைக்குச் சென்றார். தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பூபதிக்கு தமிழ் நாட்டில் ஆசிரியர் பணி கிடைக்காமல் இந்நிலைமைக்கு சென்றதை நம்முடைய ஆட்சியாளர்களும் மௌனமாகவே வேடிக்கைப் பார்த்தனர். இருப்பினும் பூபதியின் தளராத முயற்சியின் காரணமாக 2022-ஆம் ஆண்டு மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பினார். 

கரோனா பொதுமுடக்கமும் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களும் 

ஏற்கனவே ஆசிரியர்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்த தனியார் கல்வி நிறுவனங்கள் கரோனாவை மிகப் பெரிய வாய்ப்பாக கருதி ஆசிரியர்களை மேலும் சுரண்டின. ஏற்கனவே வழங்கிய சொற்ப சம்பளத்தை பிடித்தம் செய்தன. சில தனியார் கல்லூரிகள் பல மாதங்கள் முழுமையான சம்பளத்தை வழங்காமல் இருந்தன. சென்னை ஆவடியில் உள்ள ஒரு சுயநிதி கல்லுரயில் ஆசிரியராக பணிபுரிந்த லோகநாதன் அவருடைய எட்டுமாத கைக்குழந்தை உள்ளிட்ட குடும்பத்தை வைத்துகொண்டு குறைவான சம்பளத்தில் வாழ்க்கையை நடுத்துவது சிரமமாக இருந்தது. இத்தகைய சூழலில் கரோனா காரணமாக அந்த சம்பளத்தை பாதியாக குறைத்தது கல்லூரி நிர்வாகம். வேறு வழியின்றி மாற்று வருமானத்திற்காக பனை மரம் ஏறிய லோகநாதன் தவறி விழுந்து இறந்து போன கதையும் நடந்தேறியது. 

இந்த மோசமான சூழலை வெளிக்கொணர்ந்து அதை ஒரு பேசு பொருளாக ஆக்கும் முயற்சியை சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கான ஆசிரியர் சங்கம் மேற்கொண்டதின் விளைவுதான் கட்டுரையாளரும் கிஷோரும் இணைந்து ஆசிரியர்களிடம் நடத்திய ஆய்வை அடிப்படையாக வைத்து எழுதிய கட்டுரை 2021-ம் ஆண்டு ஜூலை 28 அன்று ஆங்கில இந்து நாளிதழில் நடுபக்கத்தில் வெளியானது. அதன் காரணமாக சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் மோசமான சூழல் பரவலாக பேசுபொருளானது. அந்தக் காலகட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் சுயநிதிக் கல்லூரி செயலர்களுக்கு நடந்த கூட்டதில் அப்போதைய துணைவேந்தர் கௌரி இந்த ஆய்வை சுட்டிக் காட்டி ஆசிரியர்களுக்கு முழுமையான சம்பளத்தை வழங்குமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. 

சுயநிதி கல்லூரி ஆசிரியர் சங்கம் உதயமானது 

2021ஆம் ஆண்டு திமுக அரசு புதிதாக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே சென்னைப் பல்கலைக்கழக மொழிப் பாடம் தொடர்பாக எடுத்த முடிவால் சுயநிதிக் கல்லூரிகளில் பணிபுரிந்த 200-க்கும் மேற்பட்ட தமிழ் உதவிப் பேராசிரியர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதில் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்கான ஆசிரியர் சங்கம் உயர்கல்வித் துறையிடம் முறையிட்டதால் உயர்கல்வித் துறைச் செயலர் தலையிட்டு பல்கலைக்கழகத்தின் அந்த ஆணையை திரும்பப் பெற வைத்தார். இது போன்று சங்கம் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டாலும் பதிவு செய்யப்படாத சங்கமாகவே இருந்தது. சங்கத்தில் இருந்த ஆசிரியர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியதால் 2022 ஆம் ஆண்டில் சுயநிதிக் கல்வி நிறுவனங்களுக்கான ஆசிரியர் சங்கம் பதிவு செய்யப்பட்டது. 

சங்கத்திற்கு அனுபவமுள்ளவர்கள் வழிகாட்ட வேண்டும் என்பதற்காக ஏற்கனவே ஆசிரியர் இயக்கங்களில் நீண்ட அனுபவமுள்ள மூட்டாவின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆர்.மனோகரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணாதுரை செயலாளராகவும் வெண்மணி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

இறுதியாக 

அசல் கல்வி சான்றிதழ்ளை வாங்கி வைத்துகொண்டு சுயநிதி கல்லூரி செய்த அட்டூழியத்தால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் வசந்தவாணன். அதற்கு நீதி கேட்டு உயர் நீதிமன்றம் சென்றார் அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் சங்கத்தின் கார்த்திக் மதியழகன். அதன் பிறகு அசல் சான்றிதல்களை வாங்கி வைத்து கொள்ளக்கூடாது என கல்வி நிறுவனங்ககளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சான்றிதல்களை வாங்கி வைத்துக் கொண்டு ஆசிரியர்களை மிரட்டும் போக்கு தொடரவே செய்கிறது. குறைவான ஊதியத்துடன் எந்தவித உரிமைகளும் இன்றி நவீன அடிமைகளாக பணிபுரிகின்றனர் சுயநிதி கல்லூரி/ பிரிவு ஆசிரியர்கள். எனவே சங்கமாக இணைந்து இவைகளுக்கு எதிராக போராடுவேண்டிய அவசியம் உள்ளது. 

சுயநிதி கல்லூரி/ பிரிவுகளில் பணி புரிகிறவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டதாரிகளாகவும் அவர்கள் வருமானம் மட்டும்தான் அவர்களுடைய வாழ்க்கையை வழி நடத்துவதற்கு ஒரே வாய்ப்பாக உள்ளதால் எளிதாக அவர்கள் போராட்ட களத்திற்கு வரத் தயாராக இல்லை என்பதுதான் கள எதார்த்தமாக உள்ளது. மேலும் நகர்ப் புறங்களில் வாடகை வீடுகளில் வசிக்கிற சுயநிதி கல்லூரி/ பிரிவு ஆசிரியர்கள் நிலைமை இன்னும் மோசம். ஒரு மாதம் கூட வருமானம் இன்றி நகரத்தில் வாழ முடியாத சூழல் உள்ளது. ஏற்கனவே எப்போது வேண்டுமானாலும் பணியில் இருந்த நீக்கப்படலாம் என பயத்துடன் வேலை செய்வதால் சங்கத்தில் செயல்படுவதாக அறியப்பட்டால் நம் வேலை பறி போய்விடுமோ என்கிற அச்சத்தில் உள்ளவர்களையும் பரவலாகப் பார்க்கமுடிகிறது. 

இந்த சவால்கள் ஒரு புறம் இருந்தாலும் சில ஆசிரியர்கள் துடிப்புடன் இக் கொடுமைகளுக்கு எதிராக சங்கமாக இணைந்து போராட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் சங்கத்தில் செயல்படுவதையும் தொடர்ந்து பார்க்கமுடிகிறது. 

1970 மற்றும் 80-களில் ஆசிரியர்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாறு நமக்கான உரிமைகளை போராட்டத்தின் வாயிலாக மட்டுமே வென்றெடுக்க முடியும் என்கிற செய்தியை நமக்கு உணர்த்துகிறது. எனவே போராட்டம் தான் நமக்கு முன்னால் இருக்கும் ஒரே வாய்ப்பு என்பதை உணர்ந்து சுயநிதி கல்லூரி/ பிரிவு ஆசிரியர்கள் போராட தெருவிற்கு வரும் காலம் விரைவில் நடக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லமுடியும். 

தமிழ் நாட்டில் உள்ள 2393 தனியார் கல்லூரிகளில் பணி புரியும் பல ஆயிர கணக்கான நிரந்தரமற்ற ஆசிரியர்களின் உரிமைகளை பாதுகாப்பது என்பது அங்கு பயிலும் 17,78,140 மாணவர்களின் உரிமையை நிலைநாட்டுவதுடன் அவர்களது பெற்றோர்களின் மீது கட்டணக்கொள்ளையின் வாயிலாக நடைபெறும் சுரண்டளையும் தடுத்து நிறுத்துவதாகும். எனவே சுயநிதி கல்லூரி/ பிரிவு ஆசிரியர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவர்கள் மட்டுமே சங்கமாக இணைந்து போராடுவது போதாது. 

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பரந்துபட்ட கூட்டமைப்பினை உருவாக்கி கடந்த நாற்பது ஆண்டுகளாக கல்வியில் கட்டுப்பாடற்ற தனியார்மயத்தை அனுமதித்ததால் எப்படி ஒட்டு மொத்த சமூகமூம் பாதிக்கப்படுகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, உறுதியான போராட்டங்களை நடத்துவதின் மூலமாகத்தான் சுயநிதி கல்லூரி/ பிரிவு ஆசிரியர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியும். அதற்கான முன்கை எடுக்க வேண்டிய பொறுப்பு நிரந்தர கல்லூரி ஆசிரியர் சங்கங்களிடம் தான் உள்ளது. 

(இந்த கட்டுரை மூட்டாவின் 26-வது மாநாட்டு மலருக்காக எழுதப்பட்டது)

முனைவர் அ.ப.அருண்கண்ணன்

தொடர்புக்கு: [email protected] 

1 Comment

  • அருமையான கட்டுரை கல்லூரி ஆசிரியர்கள் கொத்தடிமைகளாக நடத்தபடுவது மிகவும் அவலகரமான சூழல்

Comments are closed.