– சுபாஷினி அலி
தமிழில்: மோசஸ் பிரபு
கல்வி அமைச்சகம் (Ministry of Education) கடந்த வாரம் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் (Unified District Information System for Education +) மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை 2023-24 ஆம் ஆண்டில் மாணவர்களின் மொத்த சேர்க்கை தொடர்பான சமீபத்திய தரவுகளை உள்ளடக்கியிருந்தது. கல்வித்துறையில் முன்னேற்றம் குறித்து ஒன்றிய அரசு கூறிவரும் பெருமித கூற்றுகள் பொய்யென இந்த அறிக்கை நிறுவுகிறது. கடந்த ஆண்டுகளை விட 2023-24ல் மொத்த மாணவர் சேர்க்கை ஒரு கோடிக்கும் மேல் குறைந்துள்ளது என்ற உண்மையை அறிக்கை வெளிப்படுத்துகிறது.
2023-24ல் நாடு முழுவதும் மொத்தம் 24.8 கோடி மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர், இது முந்தைய ஆண்டை விட 37 லட்சம் மாணவர்கள் குறைவு. 2018-19 ஆம் ஆண்டில், பள்ளியில் மொத்த மாணவர்களின் சேர்க்கை 26.02 கோடியாக இருந்தது. அடுத்த ஆண்டு, 2019-20ல், இது 1.6 சதவீதம் அதிகரித்து 26.45 கோடியைத் தாண்டி, 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிகரித்திருந்தனர். 2012-13 ஆண்டுகளில் கூட மொத்த மாணவர் சேர்க்கை 26.3 கோடியாக இருந்தது. 2012-2024 பன்னிரண்டு ஆண்டுகளில் மக்கள்தொகை விகிதம் அதிகரித்திருந்தாலும், பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டை விட 2023-24 ஆம் ஆண்டில் 37 லட்சம் மாணவர்கள் குறைந்துள்ளதை பகுப்பாய்வு செய்துள்ள அறிக்கை, சில அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிக்கிறது. இதில் 16 லட்சம் மாணவர்கள் பெண்கள் மற்றும் 21 லட்சம் பேர் ஆண்கள் கல்வி முறையை விட்டு வெளியேறியுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மாணவர் சேர்க்கையை கணக்கிடும் முறை மிகவும் பயனுள்ள வகையில் செய்யப்பட்டுள்ளதாகவும், முந்தைய ஆண்டுகளுடன் எண்ணிக்கையில் உள்ள சில வேறுபாடுகளை அறிந்துகொள்ள இதுவே காரணமாக இருக்கிறது என்றும் அமைச்சகம் குறிப்பிடுகிறது. இருப்பினும், மாணவர் சேர்க்கை குறைவது ஆழ்ந்த கவலைக்குரிய விஷயம் என்றும், இது குறித்து விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் அமைச்சகமே ஒப்புக்கொள்கிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் மாணவர் சேர்க்கை குறைவு:
பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் மாணவர் சேர்க்கை மிக அதிகமாக குறைந்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், பீகார் 2.49 கோடி மாணவர்களின் சேர்க்கையைக் கொண்டிருந்தது, கடந்த ஆண்டு இது 2.13 கோடி என்ற அளவில் (35.65 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் சரிவு) குறைந்துள்ளது. உத்தரப்பிரதேசம் 2018-19 ஆம் ஆண்டில் 4.44 கோடி மாணவர்களின் சேர்க்கையைக் காட்டியது, இது சமீபத்திய தரவுகளின்படி 28.26 லட்சம் குறைந்து 4.16 கோடியாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் 2.32 கோடியாக இருந்த எண்ணிக்கை தற்போது 18.55 லட்சம் மாணவர்கள் குறைந்து 2.13 கோடியாக மாறியுள்ளது.
தரவு வெளியான பிறகு, இந்த சரிவுக்கான பல காரணங்கள் பல்வேறு நிபுணர்களால் முன்வைக்கப்படுகின்றன. கல்விக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடி, சில கல்வி உதவித் தொகை திட்டங்களை நிறுத்தியது அல்லது முறையாக கல்வி உதவித் தொகையை வழங்காதது ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாஜக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, தனியார் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. ஹரியானா போன்ற பல பாஜக மாநிலங்கள், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு அரசு சார்பில் மானியம் (Subsidy) வழங்குகின்றன. மறுபுறம், அரசு பள்ளிகள் கல்விக்கான கட்டணத்தை உயர்த்துகின்றன. இது பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறுகிறது.
அரசுப் பள்ளிகள் பெரிய அளவில் மூடப்படுவதையும், குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசுப் பள்ளிகளை ஒரே பள்ளியாக இணைப்பதன் (School Complex) மூலமாகவும் கடும் பாதிப்புகள் உருவாகின்றன. இதனால், ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பெரும்பாலும் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, பள்ளிக்குச் செல்ல வேண்டிய தூரம் அதிகரித்துள்ளது. தினமும் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. பெண் மாணவர்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற பயணங்களால் ஏற்படும் பாதுகாப்பின்மை மேலும் நிலைமையை சிக்கலாக்குகிறது.
அரசுப் பள்ளிகள் மூடப்படுதல்:
2022 ஆம் ஆண்டின் UDISE அறிக்கை, 2018-19 ஆம் ஆண்டில் நாட்டில் 50,000 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதாகக் கூறியது. 2024 ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேச அரசு 27,000 அரசுப் பள்ளிகளை மூடியதாகத் தெரிவிக்கிறது. குறிப்பாக பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் தனியார் பள்ளிகள் திறப்பது அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்த இரண்டு மாநிலங்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்திலும் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை சரிவைக் காட்டுகிறது. இதே மாநிலங்களில் அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைதான் மாணவர் சேர்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளால் இந்த இடைவெளியை சரி செய்ய முடியாது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
இலவச பொதுக் கல்விக்கு முக்கியத்துவம்:
இலவச பொதுக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதே மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்யும், மாணவர்கள் கல்வி முறையை விட்டு வெளியேறாமல் பாதுகாக்கும், தரமான கல்விக்கான வாய்ப்பையும் உருவாக்கும். கேரள மாநிலம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். 2021-2022க்கான கேரளாவின் மொத்த சேர்க்கை விகிதம் (GER – Gross Enrollment Ratio) 41.3 சதவீதமாக இருந்தது, இது தேசிய சராசரியான 28.4 சதவீதத்தை விட அதிகமாகும். GER என்பது ஒரு குறிப்பிட்ட வயதுள்ள மாணவர்கள் உயர்கல்வியில் பெறும் பங்கேற்கும் அளவைக் குறிப்பதாகும். சமீபத்திய 2023-24 அறிக்கையிலும், கேரளாவின் மாணவர் சேர்க்கை புள்ளிவிவரங்கள் பாராட்டத்தக்கவையாக உள்ளன. ஆண்களை விட பெண் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதும் பாராட்டத்தக்கது.
கேரளாவில் கல்விக்கான அரசு ஒதுக்கும் நிதி, அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியது, கல்வி உதவித்தொகையை எந்த இடையூறும் இல்லாமல் கிடைக்கச் செய்தது, பள்ளி மாணவிகளுக்கு தரமான நாப்கின்கள் வழங்கப்படுவது போன்ற நடவடிக்கைகள் பள்ளிகளில் ஆரோக்கியமான, இணக்கமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. இதுவே அதிக மாணவர் சேர்க்கைக்கும் மற்றும் தக்கவைப்புக்கும் முக்கிய காரணமாக உள்ளது. கேரள மாநிலத்தில், தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதுபோன்ற பல பெருமைகளை கேரளா மாநிலம் பெற்றுள்ளது.
பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் பிற பிரச்சினைகள்:
சமீபத்திய UDISE அறிக்கை வெளியிட்டுள்ள சில உண்மைகள், பல மாநிலங்களில் உள்ள ஏழை மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பிற பிரச்சனைகளின் பின்னணியைக் கொண்டு பார்க்கப்பட வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கென தனி கழிப்பறைகள் இல்லை என்பதை அரசு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பல கழிப்பறைகளுக்கு கதவுகள் இல்லை; பல பள்ளிகளுக்கு தண்ணீர் வசதி இல்லை; பல பள்ளிகளின் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன; வகுப்பறைகளில் காற்றோட்டம் இல்லை; பெரும்பாலும் நாற்காலிகள் மற்றும் மேஜைகள் இல்லை. பல மாநிலங்களில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களால் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளும் உள்ளன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சாதிப் பாகுபாடுகள் எண்ணற்ற சம்பவங்கள் உள்ளன. இந்தக் காரணிகள் அனைத்தும் கல்வியின் வருந்தத்தக்க நிலைக்கு முக்கிய காரணம்.
ஒற்றை ஆசிரியர் பள்ளிகள்:
பல மாநிலங்களில் உள்ள மற்றொரு குறைபாடு என்னவென்றால், அதிக எண்ணிக்கையிலான ‘ஒற்றை ஆசிரியர் பள்ளிகள்’ இருப்பது. அதாவது, 4-6 (மற்றும் 8) வகுப்புகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ள பள்ளிகள். அரசாங்க அறிக்கைகளின்படி, 2023-24 இல், இந்தியாவில் 110,971 பள்ளிகள் ஒரே ஆசிரியரை மட்டும் கொண்டு செயல்படுகின்றன என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் 89 சதவீதம் பள்ளிகள் கிராமப்புறங்களில் உள்ளன. அருணாச்சலப் பிரதேசம், கோவா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளைக் கொண்ட மாநிலங்களாக உள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான ஒற்றை ஆசிரியர் பள்ளிகளும், கேரளாவில் மிகக் குறைவாக ஒரு சில பள்ளிகளும் உள்ளன. கேரளாவில் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இமாச்சலில், ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் 20க்கும் குறைவான குழந்தைகள் உள்ளனர், கேரளாவில் சராசரியாக 10 மாணவர்கள் உள்ளனர். உண்மையில், கேரளாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் ஒரு ஆசிரியர் பள்ளிகள் உள்ளன. மேலும் நாடு முழுவதும் இதுபோன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ள பள்ளியில் சராசரி மாணவர்களின் எண்ணிக்கை 70 ஆகவும், பீகாரில் இது 96 ஆகவும் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த இரு மாநிலங்களிலும் கல்வியின் நிலை கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது.
சமீபத்திய அரசாங்க அறிக்கை வெளிப்படுத்தும் உண்மை என்னவெனில், மாணவர் சேர்க்கை குறைவு மட்டுமல்ல, பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு நிலை மற்றும் கற்பித்தல் நிலை பரிதாபமாக உள்ளது.
கேரளாவின் மாதிரி:
இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கேரளா இதில் தனித்து நிற்கிறது. கேரளாவில் அரசுப் பள்ளிகளில் துணை ஆசிரியர்களோ, ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களோ இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டுப் பார்க்க வேண்டும். அங்கு ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை உள்ளது. மேலும் அவர்களின் திறன்கள் மற்றும் கற்பித்தல் முறைகளை தொடர்ந்து மேம்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதனுடன் ஒப்பிடும்போது, உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 24,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க மாதம் ரூ.7,000 ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்களில் பலர் தையல்காரர்களாகவும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களாகவும், கடை உதவியாளர்களாகவும், தங்கள் சொற்ப வருமானத்தை அதிகரிக்க இதர வேலைகளையும் செய்கிறார்கள். கூடுதலாக, 1,42,000 ‘ஷிக்ஷா மித்ராக்கள்’ (கல்வியின் நண்பன்) என்ற திட்டத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓர் ஆண்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பிலிருந்து தூக்கி எறியப்படும் அச்சுறுத்தல் அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும்போது, அவர்கள் கற்பிப்பதில் கவனம் செலுத்த முடியும் என்பது கற்பனை செய்ய முடியாதது. இது தவிர, அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேலாக காலியாக உள்ளன.
பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் பெரும்பாலான மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலான கல்வித் தரம் ஆகியவை நாட்டின் மிக மோசமான அறிகுறிகளாகும். அதிக மாணவர் சேர்க்கை மற்றும் சேர்ந்த மாணவர்களை தக்கவைக்கும் நடவடிக்கை மற்றும் பொதுக் கல்வி முறையில் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் ஆகிய இரண்டிலும் கேரள மாநிலம் உதாரணமாக உள்ளது. முற்றிலும் அத்தியாவசியமான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு கல்வியில் கேரள மாதிரியை நாடு பின்பற்றப்பட வேண்டும்.
– சுபாஷினி அலி
தமிழில்: மோசஸ் பிரபு