தொடர்கள்

சங்கம் எல்லாம் எதுக்கு ப்ரோ? – 2

Why-Union-Poster

தோழர் பரணிதரன்
தலைவர் UNITE

சங்கம் எல்லாம் எதுக்கு ப்ரோ? – 1

2014 டிசம்பர் மாதம் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டி.சி.எஸ் தன் நிறுவனத்தில் வேலை செய்யும் 25,000 பேரை இந்தியா முழுவதிலும் இருந்து வேலையை விட்டு அனுப்புவதாக அறிவித்தது. இது நாடு முழுக்கவும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. 2014க்கு முன்பு சுமார் 15 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் பெரும் பங்காற்றிய ஐடி துறையில் முதல்முறையாக பல ஆயிரக்கணக்கான பேர் வேலையை விட்டு அனுப்பும் நிலை வந்தது. இந்திய ஐடி துறையில் இதுபோன்று அறிவிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பப்படுவது இதுவே முதல்முறை.

2014 காலத்தில் டி.சி.எஸ்சில் இருந்து வெளியேற்றுவதற்காக தயார் செய்யப்பட்ட 25,000 பேர் கொண்ட பட்டியலில் பெரும்பான்மையானவர்கள் நடுநிலை மேலாண்மை (Middle Level Management) பணியில் இருந்தவர்கள்.  அதாவது சுமார் 8 முதல் 16 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஊழியர்களை அவர்கள் வெளியேற்றினர். இதற்கு முந்தைய காலத்தில் ஒரு நிறுவனத்தில் ஊழியர்களை வெளியேற்ற வேண்டும் என்றால் அந்நிறுவனம் ஒன்று நஷ்டத்தில் இயங்க வேண்டும் அல்லது அந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான தேவை இல்லாமல் இருக்க வேண்டும்.

ஆனால் முதல்முறையாக அமெரிக்காவில் நிகழ்வது போன்று லாபத்தில் சிறிய சரிவுக்கே பெரிய எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பும் முறை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. டி.சி.எஸ் நிறுவனத்தின் 2014 ஆம் ஆண்டில் நிகர லாபம் 19,164 கோடி ரூபாய். இப்படி அதிக லாபத்தை ஈட்டிய அந்நிறுவனமே 25,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்: ஒன்று லாபத்தில் சிறிய வீழ்ச்சி, மற்றொன்று முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் தாங்கள் லாபத்தை முதன்மைப்படுத்துவதாகக் காட்டிக்கொள்ள இந்த செயலில் ஈடுபட்டனர். இதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் லாபத்தின் சிறிய வீழ்ச்சியை ஈடுகட்டவும் அவர்கள் முடிவு செய்தனர்.

இது சட்டபூர்வமாக இந்திய தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவில் பணிநீக்கம் (Layoff) என்பது அந்த நிறுவனத்தின் உற்பத்தி மூலப்பொருள் செலவு உயர்வு அல்லது தேவை குறைவு ஆகிய காரணங்களால் அந்த நிறுவனத்தை மூட நினைத்தால் மட்டுமே செய்யலாம். அப்படி பணிநீக்கம் செய்வதற்கு உரிய இழப்பீடு தர வேண்டும். மீண்டும் நிறுவனம் தொடங்கப்பட்டால் அவர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இதுவே இங்கே தொழிலாளர் சட்டங்கள் கூறுவது.

ஆனால் ஐடி நிறுவனங்களில் அமெரிக்காவில் பயன்படுத்தும் தன்மையில் பணிநீக்கம் செய்யப்படுகிறது. அதாவது ‘நியமனம்-நீக்கம்’ (Hire-Fire) முறையில், நாங்கள் விரும்பியபடி வேலையில் வைத்துக் கொள்ளலாம் அல்லது நீக்கலாம் என்ற முறையில் அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. அதனாலேயே நம் இந்திய ஊடகங்களில் கூட இந்திய தொழிலாளர் சட்டத்திற்கு நேர் எதிரான சொல்லான ‘பணிநீக்கம்’ (Layoff) என்பதை அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் பெரும்பாலும் அமெரிக்கச் சந்தையை மையப்படுத்தி இருப்பதால், அமெரிக்கச் சந்தையை மையப்படுத்திய சொற்களின் பயன்பாடு இங்கே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. இது அமெரிக்க மயமாக்கலின் (Americanisation) ஒரு பகுதி. இதன் விளைவாக, அமெரிக்காவில் ஊழியர்களை நடத்துவது போலவே இங்கும் எந்த முன்னறிவிப்பும் இன்றி, ஒரு சில நிறுவன நிர்வாகிகளின் முடிவின்படி ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர். அன்று காலை வேலைக்கு வந்தவுடன் அழைத்து, “இனிமேல் இந்த நிறுவனத்தில் பணி செய்ய முடியாது” என்று அறிவித்து வெளியேற்றுகின்றனர்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல், சொற்களின் பயன்பாட்டிற்கும் இந்திய தொழிலாளர் சட்டத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. இந்திய சட்டத்தின்படி ஒருவரை பணி நீக்கம் (Retrenchment) செய்ய வேண்டும் என்றால் அரசுக்கு முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்க வேண்டும். மேலும் அந்த ஊழியருக்கு முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டு அவருக்கு இழப்பீடு உறுதி செய்யப்பட வேண்டும்.

இதை எல்லாம் தவிர்க்க நிறுவனங்கள் புதிய வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன. ஊழியர்கள் தாமாகவே வேலையை விட்டு விலகுவது போன்று ராஜினாமா (Resignation) வாங்கிக் கொள்கின்றனர். அப்படி செய்ய மறுப்பவர்களிடம், மனித வள மேலாளர்கள் (HR) “உங்களை நாங்கள் பணி நீக்கம் (Terminate) செய்வோம். அப்படி செய்தால் உங்கள் தொழில் வாழ்க்கையில் கறுப்புக்குறி (Black Mark) வந்துவிடும்”  என்பதுபோன்ற மிரட்டல்களுக்கு உட்படுத்தி ராஜினாமா பெறுகின்றனர்.

2014 டிசம்பர் மாதம் டி.சி.எஸ்சிலும் இதே போன்று நடைபெற்றது. டி.சி.எஸ் என்னும் நிறுவனம் பொதுவாக அரசு வேலை போன்றது என்ற ஒரு பிம்பம் ஐடி ஊழியர்கள் மத்தியில் இருந்தது. விரும்பிய ஊதியம் இல்லை என்றாலும், நிலையான வேலை மற்றும் வேலை பாதுகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. டாடா நிறுவனத்தின் பாரம்பரியம் மீது நம்பிக்கை கொண்டிருந்த ஐடி ஊழியர்கள் நீண்ட நாட்கள் டி.சி.எஸ்சில் பணிபுரிந்து வந்தனர். அப்படிப்பட்டவர்களே 2014 டிசம்பர் மாதம் தங்கள் பெயர்கள் 25,000 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த 25,000 பேர் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டனர், அவர்களுக்கான உரிய இழப்பீடு தரப்படுமா, இது அரசுக்குத் தெரியுமா என்ற பல கேள்விகள் எழுந்தன. அந்த நிலையில் இந்த பணிநீக்கத்திற்கு எதிரான குரல் முதல் முதலில் சென்னையிலிருந்து எழுந்தது. சென்னையில் இருந்து “We Against TCS Layoff” என்ற சமூக ஊடகக் கணக்கு தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே பல்லாயிரம் பேர் அதைப் பின்தொடர ஆரம்பித்தனர். அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதை முழுமையாகத் தடுக்க வேண்டும் என்ற முதல் கூட்டுக் குரல் ஐடி துறையில் இருந்து ஆரம்பித்தது.

பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட பலர் ஒன்று திரள ஆரம்பித்தனர். சிலர் பல்வேறு அமைப்புகளின் பின்னும், சிலர் நேரடியாக தொழிலாளர் துறைக்கும் நீதிமன்றத்திற்கும் சென்றனர். ஒரு பெண் தான் பிரசவ காலத்தில் இருக்கும்போது வேலை நீக்கம் செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் டி.சி.எஸ் நிர்வாகத்தை கடுமையாக கண்டித்தனர். பின்னர் டி.சி.எஸ் நிர்வாகம், அந்தப் பெண் பிரசவ காலத்தில் இருந்தது தங்களுக்குத் தெரியாது என்றும், அவரை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்வதாகவும் உறுதியளித்தது.

இதே காலகட்டத்தில் முதல்முறையாக சென்னை ஓ.எம்.ஆர். (ஐடி எக்ஸ்பிரஸ்) என அழைக்கப்படும் 40 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலையில் டி.சி.எஸ் நிறுவனத்திற்கு எதிராக பல அமைப்புகள் கண்டனப் போஸ்டர்கள் ஒட்டினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) சார்பில் முதல்முறையாக டி.சி.எஸ் நிறுவனத்தை எதிர்த்து ஓ.எம்.ஆர்.இல் ஒரு பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பணிநீக்கத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்துகள் பெற்று அரசுக்கு அனுப்புவது என்ற முடிவின் அடிப்படையில் அந்தக் கண்டனப் பொதுக்கூட்டம் திட்டமிடப்பட்டது. 2015 ஜனவரி மாதம் ஓ.எம்.ஆர். சோழிங்கநல்லூர் சந்திப்பில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்காக சென்னை ஓ.எம்.ஆர் முழுவதும் கண்டனப் போஸ்டர்கள் டி.சி.எஸ் நிறுவனங்களுக்கு முன்பு ஒட்டப்பட்டன. இதே காலகட்டத்தில் ம.கா.இ.க அமைப்பின் தொழிற்சங்கமான என்.டி.எல்.எஃப் சார்பிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவர்களின் போஸ்டர்கள் எங்கள் போஸ்டர்களுக்கு அருகிலேயே ஒட்டப்பட்டதால், அப்போதைய அமைப்பின் நிர்வாகிகள் எங்களைத் தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்கள் சார்பில், ஐடி நிறுவனங்களில் உள்ள ஊழியர்களை முதலில் அரசியல் மயப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும், அப்படி இருக்கும்போது இதுபோன்ற பிரச்சினைகளில் பரவலான போராட்ட உணர்வை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்றும், நமக்குள் சண்டையிட்டுக் கொள்வது எந்த வகையிலும் அவர்களை அரசியல் மயப்படுத்துவதற்கோ, அமைப்பாக்குவதற்கோ உதவாது என்றும் கூறினோம். ஆனால் அவர்கள் இதை ஏற்கத் தயாராக இல்லை.

2015 ஜனவரி மாதம், டி.ஒய்.எஃப்.ஐ (DYFI) மாநில செயலாளர் தோழர் வேல்முருகன் தலைமையில், சி.ஐ.டி.யு (CITU) மாநில தலைவர் தோழர் ஏ.சவுந்தர்ராஜன் எம்.எல்.ஏ கண்டன உரை நிகழ்த்தினார். தோழர் சவுந்தர்ராஜன் அந்தக் கூட்டத்தில் மட்டுமல்லாமல், அப்போது நடைபெற்ற பல தொலைக்காட்சி விவாதங்களிலும், நேர்காணல்களிலும், சட்டமன்றத்திலும் டி.சி.எஸ் பிரச்சினையை முன்வைத்து ஐடி ஊழியர்களின் வேலைப் பாதுகாப்புக்குக் குரல் கொடுத்தார்.

“கண்டிப்பாக சங்கம் அமைப்பதில் சில இழப்புகள் நேரிடும். ஆனால் இழப்புகள் இல்லாமல் எந்தச் சங்கமும் உருவாக்கப்படுவதில்லை. அப்படி உருவாக்கப்பட்ட சங்கங்களால் ஊழியர்கள் உரிமைகள் வென்றெடுக்கப்படாமல் போனதும் இல்லை.”

அந்தப் பொதுக்கூட்டத்தில் தோழர் சவுந்தர்ராஜன் பேசும்போது ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தார். ஐடி துறை போன்ற புதிய துறைகளில், அதுவும் புதிய தாராளமயக் கொள்கைக்குப் பின் வந்த துறைகளில், ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏற்கனவே இருக்கும் துறைகளை விடப் பன்மடங்கு அதிகம். அவற்றை ஐடி துறை சார்ந்த ஊழியர்கள் ஒன்று திரளாமல் மாற்றுவது மிகவும் கடினம். “கண்டிப்பாக சங்கம் அமைப்பதில் சில இழப்புகள் நேரிடும். ஆனால் இழப்புகள் இல்லாமல் எந்தச் சங்கமும் உருவாக்கப்படுவதில்லை. அப்படி உருவாக்கப்பட்ட சங்கங்களால் ஊழியர்கள் உரிமைகள் வென்றெடுக்கப்படாமல் போனதும் இல்லை. அதனால் ஐடி ஊழியர்கள் சங்கம் அமைப்பதில் சில இழப்புகளுக்குத் தயாராக வேண்டும். அதுவே அவர்களின் நீண்டகால பணி உறுதியை உறுதிசெய்யும்” என்று உரையாற்றினார். இதன் பின்னர் டி.ஒய்.எஃப்.ஐ சார்பில் ஐடி ஊழியர்கள் பணிப் பாதுகாப்பை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கம் மேடையிலேயே அறிவிக்கப்பட்டு, முதல் கையெழுத்தை தோழர் ஏ.சவுந்தர்ராஜன் இட்டுத் தொடங்கி வைத்தார்.

அந்தக் கூட்டம் நடைபெற்ற காலகட்டத்திலேயே, ஏற்கனவே குறிப்பிட்டது போல், டி.சி.எஸ்சின் 25,000 பேர் கொண்ட பணிநீக்கம் இந்தியா முழுவதும் பெரிய தாக்கத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக, அகில இந்திய அளவில் ஐடி துறையில் உள்ள செயல்பாட்டாளர்களின் கூட்டத்தை நடத்துவது என்று கட்டற்ற மென்பொருள் இயக்க உறுப்பினர்களும், தொழிற்சங்க செயல்பாட்டாளர்களும் முடிவு செய்தனர். இந்திய அளவில் முதல் முறையாக ஒரு ஐடி ஊழியர்கள் மாநாடும், டி.சி.எஸ் கண்டனப் போராட்டமும் டெல்லியில் திட்டமிடப்பட்டது.

இதற்காக தமிழகத்திலிருந்து கே.பி.எஃப் (KPF) சார்பில் நானும் மற்றொரு தோழரும் டெல்லிக்குச் சென்றிருந்தோம். டெல்லியில் கூட்டத்துக்கு முந்தைய நாள், டெல்லியின் பரவலான ஐடி நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் மாநாட்டுக்கான துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. பின்னர் அடுத்த நாள் சர்வதேச கலாச்சார பாரம்பரிய மையம், புது டெல்லியில் மாநாடு நடைபெற்றது. அதில் கட்டற்ற மென்பொருள் இயக்கம் – இந்தியா அமைப்பின் செயலாளர் கிரண் சந்திரா, தலைவர் பிரபீர், சி.ஐ.டி.யு அகில இந்திய பொருளாளர் ஹேமலதா, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் போன்ற பல முக்கிய நபர்கள் பங்கேற்றனர். மேலும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பல ஐடி துறை செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். சுமார் 50 பேர் கொண்ட இந்தக் கூட்டத்தில் மிகவும் ஆழமான விவாதங்கள் நடத்தப்பட்டன.

சுமார் 30 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள ஐடி துறை எந்த சட்டத்தின் கீழ் இயங்குகிறது, அதில் வேலை செய்யும் ஐடி ஊழியர்களுக்கு எந்த தொழிலாளர் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு உள்ளது, அவர்கள் எந்த சட்டத்தின் கீழ் வருவார்கள் போன்ற கேள்விகளே தொடக்க விவாதமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் 90-களுக்குப் பின்பு இந்தியாவில் உருவாக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் இது போன்ற சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால் இந்நிறுவனங்கள், முக்கியமாக பன்னாட்டு நிறுவனங்கள், வரும்போதே அரசிடம் பல சட்டங்களிலிருந்து சலுகைகள் பெற்றுக்கொள்கின்றன. 

இதில் பேசிய முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங், “ஐடி ஊழியர்கள் தொழிற்சாலை சட்டத்தின் கீழ் இருந்தாலும் அல்லது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின் (Shops and Establishments Act) கீழ் இருந்தாலும், தொழில் தகராறு சட்டத்தின் (Industrial Disputes Act) கீழ் தகராறுகளைப் பதிவு செய்ய ஊழியர்களுக்கு உரிமை உண்டு” என்று விளக்கினார். கூட்டத்தில் பேசிய சி.ஐ.டி.யு பொருளாளர் ஹேமலதா, “முதல் முறையாக ஐடி ஊழியர்கள் தங்கள் பிரச்சினைகளுக்காகப் பேசத் தொடங்கியுள்ளனர். அவர்களைத் திரட்ட வேண்டும், அவர்களுக்கான உரிமைகளை நாம் பேச வேண்டும். அதுவே தொடக்கப் புள்ளியாக அவர்களை அமைப்பாக்குவதற்கு வழியாக இருக்கும்” என்று கூறினார். 

கூட்டத்தின் முடிவில் அனைவரும் ஜந்தர் மந்தர் சென்று டி.சி.எஸ் பணிநீக்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இதில் இந்தியா முழுவதும் இருந்து வந்த ஐடி ஊழியர்கள், செயல்பாட்டாளர்கள், கட்டற்ற மென்பொருள் இயக்க உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகள் பங்கேற்றனர். ஐடி துறையில் நடந்த பணி நீக்கத்திற்கு எதிராக டெல்லியின் மையத்தில் நடந்த முதல் ஆர்ப்பாட்டம் இதுவே. இந்த டெல்லி மாநாடும் போராட்டமும் கடந்த 12 ஆண்டுகளாக அகில இந்திய அளவில் ஒரு ஒருங்கிணைப்புக்கு வழிவகுத்தது.

“எந்த ஐடி ஊழியர்கள் சமூகத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டார்களோ, அதே ஊழியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் தொழிலாளி வர்க்கமாக பிற தொழிலாளர்கள் வந்து ஆதரவு தெரிவித்தனர். வர்க்க ஒற்றுமைக்கு இதுவே மிகப்பெரிய உதாரணமாக அமைந்தது.”

பின்னர் சென்னையில் பரனூர் மஹிந்திரா சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (SEZ) முன் கே.பி.எஃப் சார்பில் ஒரு மிகப்பெரிய கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு உதவியுடன் அந்த மஹிந்திரா சிட்டியில் உள்ள பிற தொழிலாளர்களும் திரட்டப்பட்டனர். சி.ஐ.டி.யு சார்பாக இருந்த தோழர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பிற தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பங்கேற்று தங்கள் கண்டன உரையை ஆற்றினர். எந்த ஐடி ஊழியர்கள் சமூகத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டார்களோ, அதே ஊழியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் தொழிலாளி வர்க்கமாக பிற தொழிலாளர்கள் வந்து ஆதரவு தெரிவித்தனர். வர்க்க ஒற்றுமைக்கு இதுவே மிகப்பெரிய உதாரணமாக அமைந்தது.

“எந்த ஐடி ஊழியர்கள் ‘நாங்கள் தொழிலாளர்கள் இல்லை’ என்று சொன்னார்களோ, அதே ஊழியர்கள் 2014இல் ‘நாங்கள் தொழிலாளர்கள், நாங்கள் தொழில் தகராறு சட்டத்தின் கீழ் வருகிறோம்’ என்று கூறிய வரலாறு உள்ளது.”

2014-ல் வேலை நீக்கம் செய்யப்பட்ட பலர் டி.சி.எஸ் நிறுவனத்துக்கு எதிராக 2ஏ வழக்கு (2A Case) பதிவு செய்தனர். தொழிலாளர் துறையுடன் கலந்தாலோசித்த பின்னர் நீதிமன்றத்திற்கும் வழக்கை எடுத்துச் சென்று இன்று வரை நிறுவனத்திற்கு எதிராக வழக்கு நடத்திக் கொண்டிருக்கின்றனர். எந்த ஐடி துறை ஊழியர்கள் “நாங்கள் தொழிலாளர்கள் இல்லை” என்று சொன்னார்களோ, அதே ஊழியர்கள் 2014-இல் “நாங்கள் தொழிலாளர்கள், நாங்கள் தொழில் தகராறு சட்டத்தின் கீழ் வருகிறோம்” என்று கூறிய வரலாறு உள்ளது. 

இதே காலகட்டத்தில் எச்.சி.எல் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு நபர் நீதிமன்றம் வரை சென்று தன் வேலையை மீட்டெடுத்தார். அந்தத் தீர்ப்பில் ஐடி ஊழியர்களும் தொழிலாளர்கள் என்பதும், அவர்களுக்குத் தொழில் தகராறு சம்பந்தமான அனைத்து உரிமைகளும் உண்டு என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. அதுவரை ஐடி ஊழியர்கள் எந்த சட்டத்தின் கீழ் வருகிறார்கள் என்ற குழப்பம் இருந்த வேளையில், இந்தத் தீர்ப்பு பல ஊழியர்கள் அநீதிக்கு எதிராகப் போராடுவதற்கு வழிவகுத்தது.

2014-இல் நடைபெற்ற டி.சி.எஸ் பணிநீக்கம் ஐடி ஊழியர்களின் பார்வையைத் தொழிலாளர் சட்டங்கள் மீதும் தொழிற்சங்கங்கள் மீதும் திருப்பியது. அதுவரை அங்குமிங்குமாக தனித்தனியாக செயல்பட்ட இயக்கங்கள் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை நோக்கித் தள்ளப்படுவதற்கான உந்து சக்தியாக 2014-ஆம் ஆண்டு டி.சி.எஸ் பணிநீக்கம் அமைந்தது…

பயணம் தொடரும்…