“இழப்பதற்கு எதுவும் இல்லாதவனிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கக் கூடாது என்று ஹிட்லர் கூறியிருக்கிறார். அதனால் என்னிடம் கவனமா பேசனும்” என்று ஹிட்லராகவே தன்னை உணர்ந்துகொண்டு பேசுகிறார் சீமான்.
ஹிட்லரையே ஏற்றுக்கொண்டு அவனது வாயில் உதிர்த்த கொடுஞ்சொற்களை மேற்கோள்காட்டி பேசுகிற சீமான், இங்கே சமத்துவத்திற்காகவும் சமூகநீதிக்காகவும் பெண்விடுதலைக்காகவும் சுயமரியாதைக்காகவும் உழைத்துவிட்டுச் சென்றிருக்கிற பெரியாரை தொடர்ச்சியாக அவதூறு செய்கிறார்.
பட்டும்படாமலும் தொட்டும்தொடாமலும் பெரியாரை தாழ்த்திப் பேசிவந்த சீமான், இப்போது பெரியாரை நேரடியாக மிகக்கேவலமாக அவமதித்துப் பேசித் துவங்கியிருக்கிறார். அப்படிப்பட்ட சீமானுக்கும், அவ்வப்போது அவமதித்துக்கொண்டே இருக்கிற ஹெச்.ராஜா, அண்ணாமலை வகையறாவுக்களுக்கும் நாம் அறிவுத்தளத்தில் மிகச்சரியான பதிலடி கொடுத்துவருகிறோம். பெரியார் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல தான். ஆனாலும், அவரை எல்லோரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய புள்ளியில் எல்லாம் இவர்கள் எதிர்ப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது. அதிலும் பெரியார் குறித்து வதந்தி பரப்புவதும், பொய்களை வன்மத்துடன் கக்குவதும் எல்லாம் பேச்சுரிமையில் வரவே வராது. அதனைப் பொறுத்துக்கொண்டு அமைதியாகவும் போகமுடியாது. இத்தகைய உடனுக்குடனான பதிலடிகளால் திணறிப்போய் பதில்பேசமுடியாமல் அவர்கள் ஓடிப்போவதால்தான், இன்னமும் பெரியார் மண் என்று தமிழ்நாடு அழைக்கப்படுகிறது.
நிற்க!!!
சரி, இதுமட்டுமே போதுமா? நிச்சயமாகப் போதாது.
பெரியாரையும் அவர் ஆற்றிய பணிகளையும் பொதுவெளியில் இகழ்வாகப் பேசி இவர்களால் கைதட்டு வாங்கமுடிகிற சூழல் ஏன் உருவானது என்பதை நாம் ஆய்வு செய்தே ஆகவேண்டும். சமீபத்தில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவுக்குப் பின்னர் சுமார் 35 இலட்சம் வாக்குகளுடன் ஐந்தாவது பெரிய கட்சியாக சீமானின் நாம் தமிழர் கட்சி எப்படி மாற முடிந்தது?
போகிற போக்கைப் பார்த்தால், அக்கட்சியின் உறுப்பினர்களும் அக்கட்சிக்கு வாக்களித்தவர்களும் அடுத்ததாக விஜயின் தவெக கட்சிக்குத்தான் தாவுவார்கள் போலத் தெரிகிறது.
நாம் தமிழர் கட்சி மட்டுமல்லாமல், பாஜக கூட்டணி வாங்கிய 79 இலட்சம் சொச்சம் வாக்குகளையும் சேர்த்தால், ஒரு கோடியை விஞ்சும் வாக்குகளை இந்த பிற்போக்குக் கூட்டம் பெற்றிருக்கிறது. நம்முடைய நாட்டில் இருக்கிற தேர்தல் முறையின் காரணமாக, அவர்களால் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறமுடியவில்லை. ஆனால், இதுவே விகிதாச்சாரப் பிரதிநித்துவ முறைப்படி தேர்தல் நடைபெறுவதாக இருந்தால், 40இல் 10 தொகுதிகளாவது இந்த பாஜக மற்றும் சீமான் கூட்டத்தின் வசம் சென்றிருக்கும். இதையெல்லாம் ஏதோ பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. இத்தனை இலட்சம் மக்களிடமும் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான மனநிலையை எப்படி சீமான் உள்ளிட்ட பிற்போக்காளர்களால் விதைக்கமுடிந்தது என்று நாம் சிந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதைக் கோடிட்டுக் காட்டவே முயற்சி செய்கிறேன். ஒரு கோடி மனங்களில் பெரியார் எதிர்ப்பைக் கொண்டுசெல்ல முடிகிறதென்றால் நாம் மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறோம் என்றுதானே பொருள். அதெப்படி அந்த ஒரு கோடிப்பேரும் பெரியாரிய எதிர்ப்பாளர்கள் என்று சொல்லமுடியும் என்று கேட்கலாம். பெரியாரிய எதிர்ப்பு மட்டுமே அவர்களைப் பிற்போக்காளர்களுக்கு வாக்களிக்கத் தூண்டவில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதமில்லை என்றாலுமே, பெரியாரிய ஆதரவைக் கொண்டிருக்கிற எவராலும் பாஜகவிற்கோ சீமானிற்கோ ஓட்டுப்போட்டிருக்க முடியவே முடியாது தானே என்கிற கேள்வியை எழுப்பிப் பார்த்தால் அதன் உண்மையான ஆபத்து நமக்குப் புரியும்.
பெரியாரின் கருத்துகளை இழிவுபடுத்தும் ஒவ்வொரு தருணத்திலும் நாம் எதிர்த்து நின்றுப் போராடி வெல்கிறோமே தவிர, பெரியாரியக் கருத்துகளுக்கு பொதுப்புத்தியில் மறைமுகமாக உருவாக்கப்படும் எதிர்ப்புப் பிற்போக்குக் கருத்துகளுக்கு நாம் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிப்பதில்லை. அக்கருத்துகள் உருவாகும் இடத்தைக் கண்டறிந்து அவற்றை வேரிலேயே தடுத்துவிடுவதற்கான முயற்சியையும் நாம் எடுப்பதில்லை. மாறாக், பெரியாரை வெறுமனே ஒரு நாயக பிம்பமாக மட்டுமே அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றுவிடுவோமோ என்கிற அச்சமும் மேலெழுகிறது. அப்படிச் செய்கிறபோது என்னவாகும் தெரியுமா? இன்றைக்கு பெரியார் குறித்த வதந்திகளையும் வன்மக் கருத்துகளையும் சீமான் போன்றவர்கள் பரப்பும்போது அவற்றை மறுப்பதற்கும் எதிர்த்து வாதிடுவதற்கும் இன்றைக்கு இருக்கிற முற்போக்காளர்களின் எண்ணிக்கையானது அடுத்த தலைமுறையில் வெகுவாகக் குறைந்தேபோகும்.
சரி, அப்படி எங்குதான் கோட்டை விட்டிருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்த்தால், நிறைய இடங்களைக் குறிப்பிடமுடியும். அவற்றில் மிகவும் முக்கியமாக கல்வித்தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் முற்றுமுழுதாக நாம் பெரியாரின் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும்.
கல்வித்தளம்:
நம்முடைய சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தின் மூலமாக, பெரியார் குறித்து எந்தெந்த வகுப்பில் எந்தெந்த அளவிற்கு பெரியார் குறித்து நம் குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம் என்பதைப் பார்ப்போம்.
ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலும் பெரியார் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.
5 ஆம் வகுப்பின் தமிழ்ப் பாடத்தில் பாரதிதாசனுக்கு புரட்சிக்கவி பட்டம் சூட்டியவர் பெரியார் என்று ஒரு வரி இருக்கிறது. சமூக அறிவியல் பாடத்தில் பெரியார் பெயர் எங்குமில்லை.
6 ஆம் வகுப்பின் தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ஒரு இடத்தில் கூட பெரியார் பெயர் இல்லை.
7 ஆம் வகுப்பின் தமிழ்ப் பாடத்தில் முத்துராமலிங்கத் தேவரையும் காயிதே மில்லத்தையும் பெரியார் பாராட்டிய குறிப்பு மட்டும் இருக்கிறது. அறிவியல் பாடத்திலோ பெரியார் குறித்து ஏதுமில்லை.
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், ஐந்து இடங்களில் வெவ்வேறு கட்டுரைகளில் பெரியாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே வகுப்பின் தமிழ் பாடத்தில், பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து அரைப்பக்கத்திற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் அவர் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்த சிறுகுறிப்பு மட்டும் உள்ளது. ஆனால், அதே வகுப்பின் தமிழ்ப்பாடத்தில் பெரியாரின் சிந்தனைகள் என்கிற தலைப்பில் பெரியார் குறித்து மிகச்சிறப்பான ஒரு கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.
11 ஆம் பாடத்தின் தமிழ் மற்றும் வரலாற்றுப் பாடங்களில் ஒரு இடத்தில் கூட பெரியார் பெயர் இல்லை.
12 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் அரைப் பக்கத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கம் உருவாக்கியது குறித்து இருக்கிறது. அதே வகுப்பின் தமிழ் பாடத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிவாஜி என்கிற பட்டத்தை இணைத்தவர் பெரியார் என்கிற ஒருவரி மட்டும் இருக்கிறது.
ஆக, ஒன்பதாம் வகுப்பின் தமிழ்ப் பாடத்தில் இருக்கிற ஒரு கட்டுரை தவிர பெரிதாக நாம் எங்கேயும் பெரியாரையும், பெரியாரியத்தையும், பெரியார் இங்கு என்ன மாதிரியான சமூக மாற்றங்களுக்கு வித்திட்டார் என்பதையும் நாம் அதிகளவில் நம் குழந்தைகளுக்கு சொல்லித்தரவில்லை என்றுதான் தோன்றுகிறது.
பொத்தாம்பொதுவாக குற்றஞ்சாட்டுவதற்கு பதிலாக, சரியான வழிமுறைகளைக் கண்டறிந்து மாற்றத்தை செய்வது அவசியம். ஐரோப்பிய உதாரணம் ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஐரோப்பாவில் குழந்தைகள் ஓரளவுக்கு ஒரு மொழியை வாசிக்கத் துவங்கிவிட்டாலே, அவர்களது பாடப்புத்தகத்தைத் தாண்டி ஒவ்வொரு ஆண்டும் ஒன்றோ அல்லது இரண்டோ வேறொரு பொதுநூலை வாசித்து, அதுகுறித்து விவாதத்தையும் உரையாடலையும் நடத்தும்படியான ஒரு முறையை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த விவாதத்திற்கும் உரையாடலுக்கும் மதிப்பெண்ணையும் வழங்குவதால், அந்நூல்களை குழந்தைகள் அவசியம் படித்தே ஆகவேண்டும் என்கிற சூழலில், அதன் கருத்துகளை உள்வாங்கிவிடுகிறார்கள். அப்படியான ஒரு ஏற்பாட்டை தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வித்துறை சிந்தித்து முயற்சி செய்து பார்க்கலாம். ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஒன்றோ அல்லது இரண்டோ நூல்களை பாடத்திட்டத்துடன் இணைத்து, அவற்றை வாசித்தே ஆகவேண்டும் என்றும், அவற்றை வாசித்தபிறகான உரையாடலுக்கும் விவாதத்திற்கும் மதிப்பெண் உண்டென்றும் ஒரு திட்டத்தை உருவாக்கி அமல்படுத்தலாம். இதன்மூலம் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’, அம்பேத்கரின், ‘விசாவுக்காக காத்திருக்கிறேன்’, ‘சாதி ஒழிப்பு’, ‘இந்தியாவில் சாதிகள்’ உள்ளிட்ட பல நூல்களை ஆண்டிற்கு ஒன்றென இணைக்கலாம்.
பண்பாட்டுத்தளம்:
பாடத்திட்டத்தில் செய்யவேண்டிய மாற்றத்தைப்போல, பாடத்திட்டத்தைத் தாண்டிய சிறார் இலக்கியத்திலும் அதிகமான மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது. சாதிப்பெயரை பெயருடன் சேர்த்து பொதுவெளியில் எழுதுவதைத் தடுப்பதற்காக பண்பாட்டுத்தளத்தில் மிகப்பெரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாலேயே பெரியார் காலத்தில் இருந்து அது தொடர்ந்துவருகிறது. ஆனால், அதற்குப் பின்னர் அதிலிருந்து வேறெந்த முயற்சியும் பண்பாட்டுத்தளத்தில் செய்யப்படுவதில்லை. சாதிக்கயிறு கட்டி தன்னுடைய சாதியைப் பறைசாற்றிக்கொள்ளும் அளவிற்கு மோசமான நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாகவோ அல்லது அவரது வாழ்க்கையில் அவர் முன்நின்று நடத்திய போராட்டங்களை சின்னச்சின்னதாகவோ நம் குழந்தைகளுக்கு நூலாக நாம் உருவாக்கத் தவறிவிட்டோம். ஆனால் மூடநம்பிக்கையைப் பரப்பும் ஆயிரக்கணக்கான நூல்கள் இங்கே தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிறார் இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முற்போக்காளர்கள் இணைந்து முறையான ஒரு எதிர்காலத் திட்டத்தை உருவாக்கி பெரியாரின் கொள்கைகளை ஒவ்வொரு வயதுக்கும் ஏற்றவாறான சுவாரசியமான நூல்களை உருவாக்கவேண்டும். சோட்டா பீமெல்லாம் இங்கே பிரமலமாகிக் கொண்டிருக்கிற காலத்தில், பெரியாரை மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஒரு வீரதீர கார்ட்டூன் கேரக்டராக உருவாக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் ஆழமாகக் கொண்டுபோயிருக்க முடியும். ஆனால் தொலைக்காட்சிகளும், ஊடகங்களும், அவற்றையெல்லாம் நடத்திக்கொண்டிருப்பவர்களும் இப்படியான எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளத் தயாராக இல்லாமல் இருக்கிறார்கள்.
நூல்களைத் தாண்டி ஊடக வெளியில்தான் மிகப்பெரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. தமிழில் இயங்கிவரும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பெரும்பாலானவற்றில் நாடகங்கள் ஒளிபரப்பாகின்றன. அவை அனைத்துமே மிகவும் பிற்போக்கான கருத்துகளையே மக்கள் மத்தியில் பரப்பி திணித்து வருகின்றன. அவ்வளவு ஏன், ஆயிரமாயிரம் சுவாரசியங்கள் இடம்பெற்றிருக்கும் பெரியாரின் வாழ்க்கை குறித்து ஒரு நாடகமோ திரைப்படமோ தொடரோ கூட எடுக்கப்படவில்லை. 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த எந்தத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் பெரியாரியத்தைப் பேசுவதற்கு நாளொன்றிற்கு அரைமணி நேரம்கூட இல்லையென்பதை என்னவென்று சொல்வது. இத்தனை ஆண்டுகால தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பெரியார் குறித்த ஒரேயொரு திரைப்படம் தவிர வேறெந்த படமும் எடுக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், இப்போது பிரபலமாகிக் கொண்டிருக்கும் பல்வேறு ஓடிடிகளில் கூட பெரியார் கண்டுகொள்ளப்படவில்லை. பெரியார் நடத்திய தமிழ் உரிமைப் போராட்டங்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள், பெண்ணுரிமைப் போராட்டங்கள், கடவுள் மறுப்பு மற்றும் சாதி ஒழிப்புப் பிரச்சாரங்கள், வைக்கம் போராட்டம் என எண்ணற்ற போராட்டங்களை மிகுந்த சுவாரசியமிக்க திரைக்கதையுடன் காட்சி ஊடகங்களில் நம்மால் கொண்டுவந்து இனிவரும் தலைமுறையின் மனதில் ஆழமாக பெரியாரின் கருத்துகளை விதைக்கமுடியும்.
ஆகவே, சீமான், ஹெச்.ராஜா, அண்ணாமலை போன்ற பொய்யர்களின் வதந்திகளை உடைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு பெரியாரையும் அவரது கருத்தியலையும், அவர் முன்நின்று நடத்திய போராட்டங்களையும், அவற்றால் நம் அனைவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். அதனைச் செய்வதற்கான அனைத்து முயற்சியையும் நாம் கூட்டாக ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என்று கோருவதே இக்கட்டுரையின் மைய நோக்கமாகும்.
– இ.பா.சிந்தன்