சமூகம்சிறார் இலக்கியம்மற்றவை

குழந்தைகளிடம் சமூகப் பிரச்சனைகளைப் பேசலாமா கூடாதா? – இ.பா.சிந்தன்

549 (2)

குழந்தைகளிடம் சமூகப் பிரச்சனைகளைப் பேசலாமா கூடாதா?

சரி, இந்தத் தலைப்பில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்குமே நாம் பொருள் தெரிந்துகொண்டு, அதன்பிறகு மேலும் உரையாடினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

‘குழந்தைகளிடம் சமூகப் பிரச்சனைகளைப் பேசலாமா கூடாதா?’

இதில் முதலில் இருக்கும் வார்த்தை ‘குழந்தைகள்’. அதற்கான பொருளைத் தேடுவோம்.

குழந்தைகள் என்றால் யார்? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள். “எங்கம்மாவுக்கு நான் என்னைக்கும் குழந்தைதான்” என்று நம்மில் பலரும்கூட சொல்லிக்கொள்வோம். ஆனால் பொதுவாக ஒரு மனிதரைக் குழந்தையா இல்லையா என்று எப்படி அளவிடுவது? 

இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான ஆணையமான யூனிசெஃப் அமைப்பைத் துணைக்கு வைத்துக்கொள்வோம். யூனிசெஃப்-இன் விதிப்படி, 18 வயதுக்குக் குறைவாக இவ்வுலகில் வாழும் அனைவருமே குழந்தைகள்தான்.

குழந்தைகளுக்குப் பொருள் தெரிந்துகொண்டுவிட்டோம். சரி, நம் தலைப்பில் இருக்கும் அடுத்த வார்த்தை என்ன? ‘சமூகப் பிரச்சனைகள்’. 

‘சமூகப் பிரச்சனைகள் என்றால் என்ன?’ – வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகத்தில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்துகொண்டே இருக்கும். அந்தந்த காலகட்டத்தில் அதெல்லாமும் சமூகப் பிரச்சனைகள்தான். அவை ஒட்டுமொத்தமாக எல்லா மக்களையும் பாதிக்கும் பிரச்சனைகளாக இருக்கலாம். அல்லது மிகக்குறிப்பிட்ட அடையாளத்துடன் சில நிலத்தில் வாழும் மனிதர்களின் பிரச்சனைகளாக இருக்கலாம். அப்பிரச்சனைகள், குழந்தைகளிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தலாம். அவர்களைச் சுற்றியிருக்கும் வேறுசிலருக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூட இருக்கலாம்.

குழந்தைகள் என்றால் யாரென்று தெரிந்துகொண்டுவிட்டோம். சமூகப் பிரச்சனைகள் என்றால் என்னவென்று தெரிந்துகொண்டுவிட்டோம். அந்தப் பிரச்சனைகள் குறித்து குழந்தைகளிடம் பேசலாமா கூடாதா? அதுதானே அடுத்தது. சரி அதையும் பார்ப்போம்.

குழந்தைகளுக்கு ஏன் சமூகப் பிரச்சனை சார்ந்த கதைகள் சொல்லியாக வேண்டும்?

குழந்தைகள் இந்த உலகைப்பற்றி எதுவுமே தெரியாமல்தான் பிறக்கிறார்கள். பிறந்ததற்குப் பிறகுதான், சுற்றி இருக்கும் ஒவ்வொன்றையும் குறித்து பல்வேறு வழிகளில் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, தொட்டு உணர்ந்து என நிறைய வழியைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு 18 வயதாகும் வரையிலும் அவர்களை நாம் குழந்தைகள் என்றே கருதுகிறோம். இவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் இன்றைக்குச் சுமார் 45 கோடியாகும். இவர்களுக்குத் தேர்தலில் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து ஓட்டுப்போடும் அளவுக்கு அறிவு முதிர்ச்சி வந்திருக்காது. அதன்காரணமாக தேர்தல் ஜனநாயகத்திலும் அதன்மூலம் கிடைக்கிற அதிகாரத்திலும் அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், அவர்கள் ஏதோவொரு நாளில் திடீரென்று இந்தத் தேசத்தின் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வரத்தான் போகிறார்கள். இந்தச் சமூகத்தைச் சரியாக ஒருங்கிணைத்து வழிநடத்தும் அதிகாரிகளாகவும் ஆவார்கள். சமூகத்தில் ஏதோவொரு வகையில் ஏதோவொரு துறையில் உழைத்துப் பங்களிக்கத்தான் போகிறார்கள். அப்போது இந்த உலகில் ஏற்கனவே இருந்துவருகிற சமூகப் பிரச்சனைகள் என்னென்ன, ஏற்றத்தாழ்வுகள் எங்கெல்லாம் இருக்கின்றன, ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள், அடிப்படை உரிமைகள் கூட இல்லாதவர்களை எப்படி மீட்டெடுப்பது, சமத்துவம் ஏன் அவசியம், சமூகநீதி தேவைதானா, அதற்கெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற ஆயிரமாயிரம் கேள்விகளுக்கான பதில்களை 18 வயது அடைந்துவிடும் அந்த ஒரு நொடியில் நிச்சயமாகத் தெரிந்துகொண்டுவிட முடியாது. அதனால் அவர்கள் எப்படி நடக்கவும், பேசவும், ஓடவும், உண்ணவும், படிக்கவும் ஒவ்வொரு கட்டத்திலும் அந்தந்த வயதிற்கு ஏற்றவாறு கற்றுக்கொள்கிறார்களோ அதேபோன்று தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தையும், அதன் ஏற்ற இறக்கங்களையும், பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளாகக் கடந்தகாலத்தில் என்னென்னவெல்லாம் யார் யாரால் சொல்லப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் குழந்தைகளின் வயதுக்கேற்ப அவர்கள் கற்பதற்கு நாம் வழிவகை செய்துதர வேண்டும். அப்போதுதான் 18வது வயதில் தேர்தலில் ஓட்டுப் போடுவது முதல், சமூகத்தில் இயல்பாக நடமாடுவது வரையிலும் அனைத்தையும் அவர்களால் தடையின்றித் தெளிவாகச் செய்யமுடியும்.

இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் சிறுவயதுமுதலே அவர்கள் மெதுமெதுவாக ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். அல்லது மற்றவர்களால் அவர்களிடம் உருவாக்கப்படுகிறது. 

முதலாவதாகக் குடும்பம், இரண்டாவது பள்ளிக்கூடம், மூன்றாவது அரசாங்கம், நான்காவதாக இந்தச் சமூகம்.

எல்லாக் குடும்பங்களுமே எப்போதும் முற்போக்காக இருக்கும் என்று சொல்லவே முடியாது. நம்முடைய வரலாற்றில் அப்படி இருந்ததாக எந்த உதாரணமும் இல்லை. ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அந்தக் குழந்தைக்குச் சாதிய அடையாளத்தையும் மத அடையாளத்தையும் குடும்ப அடையாளத்தையும் அவற்றோடு தொடர்புடைய பல பிற்போக்குத்தனங்களையும் தருவதே குடும்பங்கள்தான். அதனால் குடும்பங்களிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்வது குழந்தைகளுக்கு ஆபத்தாகத்தான் இருக்கும்.

அடுத்ததாகப் பள்ளிக்கூடம். அவை உருவாக்கப்பட்டதன் அடிப்படை காரணமே, எல்லாக் குடும்பங்களாலும் ஒரே மாதிரியாகக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க முடியாது என்பதால்தான். ஆனால் அங்கேயும் பெரியளவுக்குச் சமூகத்தின் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டிக் கற்பித்தல் நிகழ்வதில்லை. இன்றைக்கும் பள்ளிக்கூடங்களில் சாதிக்கயிறு கட்டிக்கொண்டு மாணவர்கள் வருவதைப் பார்க்கமுடிகிறது. பாடத்திட்டங்களிலேயே சமூகத்தின் பிரச்சனைகள் அதிகமாகச் சேர்க்கப்படவில்லை என்பதோடு, பாடத்திட்டங்கள் தாண்டிய உரையாடலை நடத்தவும் சூழல் இல்லை. பாடத்திட்டம், பயிற்றுவிக்கும் முறை, ஆசிரியர்கள், கட்டமைப்பு ஆகிய அனைத்தும் சேர்ந்து சமத்துவச் சமூகத்தை விரும்பும் குழந்தைகளை உருவாக்குவதற்கான பெரியளவிற்கான திட்டமும் வழிகாட்டுதலும் இப்போதைக்கு இல்லை.

மூன்றாவதாக அரசாங்கங்கள். அவர்கள் உருவாக்கும் சட்டதிட்டங்களால்தான் குழந்தைகளுக்குப் பல பிரச்சனைகளே வருகின்றன.

நான்காவதாகச் சமூகம். அங்கே இருக்கிற மூடநம்பிக்கைகளும், சமகாலப் பிரச்சனைகளும் தானே எல்லாவற்றுக்கும் காரணம். அதனால் குழந்தைகளுக்குத் தேவையான கல்வி அங்கிருந்துதான் தவறாகவே கிடைக்கிறது.

இப்படி எல்லாப் பக்கத்திலிருந்தும் குழந்தைகளுக்குக் கிடைக்கிற மோசமான பிற்போக்குத்தனக் கருத்துத் திணிப்புகளை மாற்றுவதற்கும் தடுப்பதற்கும் ஏதாவது ஒரு வழியில் எங்கிருந்தாவது முயற்சி செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படியென்றால் குழந்தைகளுக்கு அரசியல், சமூகப் பிரச்சனைகள், வரலாறு இதெல்லாம் அவசியமா என்று ஒரு கேள்வி வரும். இவற்றையெல்லாம் குழந்தைகள் அறிந்துகொண்டால், குழந்தைகள் மனதில் பிரச்சனைகளும் பிரிவினைகள் குறித்த எண்ணங்களும் வந்துவிடாதா என்ற கேள்வியும் எழும்தான். எந்தக் கருத்தையும் திணிக்காமல் குழந்தைகள் வளர வேண்டும் என்பதுதான் சரியான வாதமும்கூட. ஆனால், மேலே நான் சொன்ன அந்த நான்கு பிரிவினரும் குழந்தைகளை அப்படித் திணிப்பில்லாமல் வளரவிடுவதில்லை. அவர்களால் முடிந்தளவுக்கு அவர்களுடைய கருத்தைத் திணித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அதை உடைக்கவாவது நாம் ஏதாவது வழியில் குழந்தைகளிடம் உரையாடியாக வேண்டியிருக்கிறது.

நம் சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை இன்றைக்கு நம்மால் முழுமையாகச் சரிசெய்யமுடியவில்லை என்றாலுமே கூட, நாளைக்கோ அல்லது நாளை மறுநாளோ, இல்லையென்றால் இன்னும் 10-20 ஆண்டுகள் கழித்தோ, அல்லது நூற்றாண்டுகள் தாண்டியோ சரிசெய்ய வேண்டுமென்றால், இன்றைக்குக் குழந்தைகளாக இருப்பவர்களிடம் அந்தப் பிரச்சனைகளையெல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொன்னால்தான், நாம் விட்ட இடத்திலிருந்து அதைச் சரிசெய்வதற்கு எதிர்காலத்தில் அவர்களால் தொடர முடியும். அதற்குக் குழந்தைகளின் கல்வி, பள்ளிக்கூடங்கள் எல்லாம் பெரிய பங்களிப்பைச் செலுத்த வேண்டும். ஆனால், அது பெரியளவுக்குச் சாத்தியமில்லாமல் போவதற்கான காரணங்களை ஏற்கனவே மேலே பார்த்தோம். மிகப்பெரிய உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், நம் நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளாகச் சாதி ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மனிதர்களைப் பிரித்துவைத்து, சிலர் மேலே என்றும் சிலர் கீழே என்றும் மாற்றி வைத்திருக்கிறது. ஆனால் நம் குழந்தைகளுக்கான பாடப்புத்தகத்தில் எங்கேயும் அதைப்பற்றி விரிவாகப் பேசுவதே இல்லை. பாடப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று சொன்னதுடன் முடிந்துவிட்டது. நூலைத் திறந்து உள்ளே போய் பார்த்தால், தீண்டாமை என்றால் என்ன? அது ஏன், எப்படி வந்தது? அது யாரையெல்லாம் பாதிக்கிறது? அது இன்றைக்கும் இருக்கிறதா இல்லையா? அதற்குக் காரணமான சாதி என்றால் என்ன? அதை எப்படி ஒழிக்க வேண்டும்? இந்த மாதிரி எதையுமே நம் பாடப்புத்தகங்களோ நம் கல்விமுறையோ பேசுவதே இல்லை. அதேபோல, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்றும், ஏழைகள் பாவம் என்றும் சொல்லித் தருகிறோமே தவிர, ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள் என்றோ, சமூகத்தில் ஒருசிலர் மட்டுமே எப்படிப் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்றோ நாம் குழந்தைகளுக்குச் சொல்லித்தரவோ அல்லது இயல்பாக அவர்களைக் கேள்வியெழுப்ப வைத்து பதில் தேடவைக்கவோ எந்த முயற்சியும் எடுப்பதில்லை. சமூகத்தில் நிலவும் அனைத்துவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் குறித்துப் பேசாமல் விட்டால் அதெல்லாம் தானாகவே சரியாகிவிடும் என்கிற மூடநம்பிக்கையிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். ஒடுக்கப்படுதல் என்றால் எது என்றும், ஒடுக்கப்படுபவர்கள் ஏன் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையும், யாரும் யாரையும் ஒடுக்குதல் தவறு என்றும் எந்த வழியிலாவது சொல்லித்தான் ஆகவேண்டி இருக்கிறது. இல்லையென்றால், சமத்துவமின்மை என்பது தலைமுறை தலைமுறையாகத் தொடரவே செய்யும்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். ஒருமுறை ஒரு இஸ்ரேலியப் பேராசிரியரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, “எப்படி இவ்வளவு வருசமா பாலஸ்தீனர்கள் மேல ஒரு வெறுப்புணர்வு இஸ்ரேலியர்களுக்குத் தொடர்ந்து இருந்துட்டே இருக்கு? பாலஸ்தீனர்களையே பார்க்காத ஒன்னு ரெண்டு தலைமுறையே வளந்துருக்குமே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “கல்விதான் எல்லாத்துக்கும் காரணம். இஸ்ரேலியப் பாடப்புத்தகத்திலும் சிறார் நூல்களிலும் முழுக்கமுழுக்க பாலஸ்தீனர்கள் மேல் வெறுப்புணர்வுடன் எழுதப்பட்ட கதைகளும், கட்டுரைகளும், பாடல்களும், பொய்யான வரலாற்றுத் தகவல்களும்தான்” என்று பதில் சொன்னார்..

அதேமாதிரி அப்படியே ஒரு பாசிட்டிவான உதாரணமாக அமெரிக்கா பக்கமாகத் திரும்பிப் பார்த்தால், 1960களில் கருப்பின மக்களுடைய பெரிய எழுச்சி நடந்தது உங்களுக்குத் தெரியும். மார்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ், ரோசா பார்க்ஸ் என்று ஏராளமானோர் குரல் கொடுத்தார்கள். அந்தக் காலகட்டத்தில் அந்தப் போராட்டங்களில் எல்லாம் வெள்ளையின மக்களின் பங்களிப்பு மிகமிகக் குறைவு. ஆனால் அப்படியே இப்போது ஜார்ஜ ஃப்ளாய்ட் என்கிற கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நடுத்தெருவில் வெள்ளையின வெறியர்களால் கொல்லப்பட்டதற்குப் பிறகு, பெரிய போராட்டம் வெடித்தது அமெரிக்காவில். அந்தப் போராட்டங்களில் வெள்ளையின மக்களை ஏராளமான எண்ணிக்கையில் பார்க்கமுடிகிறது. எப்படி இது சாத்தியமானது? அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட, ‘இனவெறி தவறு’ என்பதை வெள்ளையின மக்களிடமும் கொண்டுசெல்லப்பட்ட பிரச்சாரங்கள்தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

அமெரிக்காவில் மார்ட்டின் லூதர்கிங் உள்ளிட்ட ஏராளமான கருப்பினப் போராளிகள் பற்றிய ஏராளமான சிறுவர் இலக்கிய நூல்கள் வந்திருக்கின்றன. இன்றைக்கும் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் வெள்ளையின வீட்டுக்குழந்தைகளும் நிறையபேர் படிக்கிறார்கள். அவர்களின் மனதில் ஒரு சிறிய மாற்றத்தையாவது அந்த நூல்கள் ஏற்படுத்தியிருக்கின்றன. பெரிய மாற்றத்திற்காக இன்னும் பெரிதாக உழைத்திருந்தால், ட்ரம்ப் போன்றவர்கள் அதிபராவதைக் கூட தடுத்திருக்கமுடியும்தான்.

அதேபோல இங்கேயும் சாதி ஒடுக்குமுறை குறித்து குழந்தைகளிடம் கதைகளாகவாவது நாம சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இங்கே இன்றைக்கும் பெரியார் குறித்து பெரிதாகக் குழந்தைகளுக்கான நூல்கள் எழுதப்படவில்லை. அம்பேத்கர் குறித்து விரிவாகக் குழந்தைகளிடம் நூல்கள் வழியாக நாம் உரையாடுவதில்லை. 

சாதி மட்டுமல்லாமல், சமூகத்தில் இருக்கிற மற்ற ஏராளமான பிரச்சனைகளையும், அவற்றின் வேர்களையும் வரலாற்றையும் நாம் பேசுவதே இல்லை. பெண் என்பதாலேயே ஒடுக்கப்படும் ஆணாதிக்கப் பிரச்சனைகள், தனிப்பெற்றோருடன் வாழும் குழந்தைகளின் பிரச்சனைகள், வீடில்லாமல் வாழும் மனிதர்கள், மலைமேல் வாழும் மனிதர்கள், கடலோரத்தில் வாழும் மனிதர்கள், முறைசாராத அன்றாடக் கூலித் தொழிலாளர்கள், திருநர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், ஆணாதிக்கம் நிலவும் சமத்துவமின்மையால் பாதிக்கப்படுபவர்கள், மதத்தால் சிறுபான்மையினர் என்று ஒடுக்கப்படுபவர்கள், மாற்றுத் திறனாளிகள், சூழலியல் பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் என்று ஏராளமான மக்கள் வாழ்கிறார்கள் இவ்வுலகில். அவர்களின் பிரச்சனைகளை எல்லாத் தரப்புக் குழந்தைகளிடம் நாம் உரையாடியே ஆகவேண்டும். நாளை வளர்ந்து இந்தச் சமூகத்தை ஆளப்போகிற குழந்தைகளுக்குச் சமூகத்தின் பல்வேறு விதமான பிரச்சனைகளைச் சொல்லி வளர்த்தோமானால், எந்தப் பதவிக்குப் போனாலும் அந்தப் பதவியின் அதிகாரத்திற்கேற்பச் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆர்வமும் வேகமும் அக்கறையும் அவர்களுக்கு நிச்சயமாக வரும்.

பாடப்புத்தகங்களும், பெற்றோரும், அரசுகளும், சமூகமும் இவற்றையெல்லாம் பேசவில்லை என்றால் ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், கதைசொல்லிகளும், குழந்தைகளுக்காகச் செயல்படும் களச் செயல்பாட்டாளர்களுமாவது பேசியே ஆக வேண்டும். 

அவை நூல்கள் வழியாகவோ, கதைகள் வழியாகவோ, பாடல்கள் வழியாகவோ கலைகள் வழியாகவோ, அல்லது வேறு என்ன வழியாக இருந்தாலும் சரி. ஆனால், சமூகப் பிரச்சனைகளைக் குழந்தைகளிடம் அவரவர் வயதுக்கேற்ற தன்மையில் சுவாரசியமாகவும் அவர்களே ஆர்வமாக ரசித்து உள்வாங்கும் வகையிலும் நாம் உரையாடியே ஆகவேண்டும்…

– இ.பா.சிந்தன்

1 Comment

  • ஆம் குழந்தைகளிடம் பேசித்தான் ஆகவேண்டும். பேசும் விதம் குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கேற்ப செயல் வடிவமாக, அனுபவம் கிடைக்கும் விதமாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு குழந்தை வாழும் பகுதியில் இருக்கும் வீடுகளை உதாரணப்படுத்தலாம். கோடீஸ்வர வீடுகள் இருக்கும் விதத்தையும், ஒருவேளை சாப்பாடு கிடைக்காத சூழல் இருக்கும் மனிதர்களையும் பெயர் குறிப்பிடாமல் பேசினால் குழந்தைகள் புரிந்துகொள்வர். இதற்கு மாற்று என்ன தீர்வு என்று கேட்டால் “யாரையும் யாரும் ஏமாற்றக் கூடாது; எல்லோரும் வேலை செய்து வாழ வேண்டும்; திருடக்கூடாது; பொய் பேசக்கூடாது…” இப்படி நிறைய அனுபவங்கள் குழந்தைகளிடமிருந்து குறிப்பாக ஆரம்பப்பள்ளி குழந்தைகளிடம் பேசினால் பேசினால் என்ன பேசினேன் அவர்களிடமிருந்து வந்த அனுபவங்கள் தான் எனக்கு கிடைத்த குழந்தைகளின் உயர்ந்த உள்ளக் குரல்கள். மேலும் சாதி சார்ந்த கருத்துகள் குழந்தைகள் மனதில் பெரியோர்களால் விதைக்கப்பட்டதையும் உரையாடி நீக்கிய அனுபவமும் கிடைக்கப் பெற்றேன். ஆம் குழந்தைகள் முதலில் ஊர் தெரு என்றும், மற்றொரு பெயர் குறிப்பிட்டும் கூறிய தெரு பெயரை “அப்படி கூறக்கூடாது என்றும் பிள்ளையார் கோயில் தெரு, நடுத்தெரு…” இப்படித்தான் கூப்பிடனும் என்றவுடன் அவ்வாறே குழந்தைகளும் வழிமொழிந்தனர். இன்னும் நிறைய அனுபவங்களை கூறலாம். ஆம் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடும் வரைக்கும் நம்முடைய பாதுகாப்பிலே பத்திரமாக வைத்திருந்து குப்பைக்கூடை பார்த்தவுடன் எடுத்து போட வேண்டும் என்று அனுபவ வாயிலாக குழந்தைகளுடன் உரையாடியதால் அவர்களும் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று தனித்தனியே பிரித்து போட அறிந்தனர். கடவுள் குறித்தும் குழந்தைகளுடன் உரையாடினேன். குழந்தைகள் எது சரி எது தவறு என்பதை உணர்ந்து பயணிக்கும் விதமாக உரையாடும் விதத்தில் தான் உரையாட வேண்டும். உரையாடியும் வருகிறேன். குழந்தைகளிடம் பேச வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பெருமை வாய்ந்தவர்களே. அந்த வகையில் எல்லாவற்றையும் குழந்தைகளிடம் அவர்களுக்கு உரிய முறையில் உரையாடினால் இவ்வுலகை முன்னோக்கி நகர்த்தும் ஆகச்சிறந்த மனிதர்களாக குழந்தைகள் இருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குழந்தைகளிடம் உரையாட வேண்டும் என்று மிகச்சிறப்பாக கட்டுரை எழுதிய எழுத்தாளர் தோழர் இ. பா. சிந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

Leave a Reply