அரசியல்உலகம்

சிரியா : ஆசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சி – எப்படிப் புரிந்துகொள்வது?

549 (6)

– விஜய் பிரசாத்

– தமிழில் : த.பொன்சங்கர்

2024 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஹெச்டிஎஸ் என்று அறியப்படுகிற ஹயாத் தஹ்ரித் அல்-சாம் (சிரிய விடுதலைக் குழு) என்கிற இயக்கத்தால் தலைமை தாங்கப்பட்ட கிளர்ச்சிப்படைகள் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றின. அதனைத் தொடர்ந்து, சிரியாவின் அதிபராக இருந்த பஷார் அல்-ஆசாத் விமானத்தின் மூலம் இரஷ்யாவின் மாஸ்கோவிற்கு தப்பி ஓடினார். இதன்மூலம், 1971 இல் அதிபரான  ஹபீஸ் அல்-ஆசாத் (1930-2020), அவரைத் தொடர்ந்து 2000லிருந்து அதிபராக இருந்துவந்த அவரது மகன் பசார் ஆகியோர் உருவாக்கி நடத்திவந்த 53 ஆண்டுகால ‘ஆசாத் குடும்ப ஆட்சி’ முடிவுக்கு வந்துள்ளது. 

இந்த அதிகார மாற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், வரலாற்றின் சில முக்கியப் பக்கங்களைத் திருப்பிப் பார்ப்பது அவசியம்.

2017ல் ஜபாத் அல்-நுஸ்ரா (சிரிய வெற்றிக்கான முன்னணி) என்ற அமைப்பானது, சிரியாவில் இயங்கிவந்த அல்கொய்தாவுடன் இணைந்து செயல்பட்டு வந்தது. அதிலிருந்துதான் ஹயாத் தஹ்ரீர் அல்-சாம் (ஹெச்டிஎஸ்) என்கிற ஒரு புதிய அமைப்பு உருவானது. அபுஜபீர் ஷேக் மற்றும் இராணுவ கமாண்டர் அபூ முகமது அல்-ஜொலானி ஆகியோரின் தலைமையில் இந்த அமைப்பு வழிநடத்தப்பட்டது.

கடந்த ஏழு வருடங்களாக சிரியாவின் வடக்குப் பகுதியான இத்லிப் நகரத்திற்கு உள்ளே மட்டுமே இயங்கும்படியாக ஹயாத் தஹ்ரீர் அல்-சாம் (ஹெச்டிஎஸ்) இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டில் அல்கொய்தா படைவீரர்களின் ஒரு குழுவினரால் கோரசன் என்கிற வலையமைப்பு சமி அல்-யுராய்டி என்ற மதத்தலைவரின் தலைமையின்  கீழ் துவங்கப்பட்டது. இதன் நோக்கம், ஒட்டுமொத்த நகரத்தையும் அங்கு இயங்கிவந்த இஸ்லாமிய அமைப்புகளையும் கட்டுப்படுத்துவதாகும். அடுத்த வருடத்தில் நகர நிர்வாகத்தை நிர்வகிக்கும் நோக்கில், அஹ்ரார் அல்-சாம் உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்து செயலாற்ற அல்-நுஸ்ரா முயற்சி செய்தது. 2015ல் இரஷ்ய இராணுவத் தலையீட்டின் காரணமாக, இத்லிப் நகரத்தில் இயங்கிய இக்குழுக்களின் திறன் பாதிக்கப்பட்டது. இது 2016ல் அல்கொய்தாவிலிருந்து பல இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வெளியேறுவதற்கு வழி வகுத்தது. அதனைத் தொடர்ந்து 2017 இல் ஹெச்டிஎஸ் என்கிற அமைப்பு உருவானது. அல்கொய்தா உடன் தொடர்பில் இருந்த எஞ்சியவர்கள், ஹராஸ் அல்-தீன் (மத நிறுவனங்களின் பாதுகாவலர்கள்) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அவ்வருடத்தின் முடிவில் அவர்களின் முயற்சியை முறியடித்து இத்லிப் நகரத்திற்குள் மிகப்பெரும் சக்தியாக ‘எச்டிஎஸ்’ அமைப்பு உருவெடுத்தது. நகரம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றி இத்லிப் நகரத்தை ‘சிரிய இரட்சிப்பு அரசாங்கத்தின் இல்லம்’ என அறிவித்தது. 2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில், சிரிய அரசாங்கத்தின் இராணுவமான சிரிய அரபு இராணுவம் இத்லிப் நகரை நோக்கி நகர்ந்தபோது, இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் காப்பாற்றுவதற்காக, சிரியாவின் வடக்குப் பகுதியை நோக்கி படையெடுத்தது துருக்கி. இந்தப் படையெடுப்பைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரஷ்யா-துருக்கி போர் நிறுத்தம் நடைபெற்றது. இதனால் எச்டிஎஸ் எவ்வித சேதாரமும் இன்றி இத்லிப் நகரத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டது.

துருக்கிய ஆதரவு ஆயுதப் படைகளுடனும், மத்திய ஆசியா முழுவதிலும் உள்ள போராளிகளுடனும், துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சியைச் சேர்ந்த பல உய்கர் போராளிகள் உள்ளிட்ட மத்திய ஆசியப் போராளிகளுடனும் இணைந்து தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக்கொண்டது ஹெச்டிஎஸ். 

துருக்கி மற்றும் இஸ்ரேலிய ஆதரவுடன் நவம்பர்  2024 இல் ‘ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கை’ ஹெச்டிஎஸ்னால் துவங்கப்பட்டது. அதன்மூலம், 14 நாட்களில் அலெப்போவில் இருந்து டமாஸ்காஸ் வரையிலான நெடுஞ்சாலை எம்5 ஐ வீழ்த்தியது. சிரிய அரசின் படையான சிரிய அரபு இராணுவத்தினால் தாக்குப்பிடிக்கமுடியாமல், அவர்கள் முன் மண்டியிட்டதோடு மட்டுமல்லாமல், எவ்வித இரத்தக்களரியும் இன்றி டமாஸ்கஸின் கதவுகள் திறந்து விடப்பட்டன.

ஜிகாதிக்களின் மின்னலிடித் தாக்குதல்

ஹெச்டிஎஸ்ஸின் எதிர்பாராத வெற்றி குறித்து ஈரானிய அதிகாரிகள் நவம்பரிலேயே கணித்திருந்தனர். சிரிய இராணுவ நிலைகளின் மீது நீடித்த இஸ்ரேலியத் தாக்குதல், லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பு, உக்ரைன் போர் ஆகியவற்றினால் சிரிய அரசின் பாதுகாப்பு பலவீனம் அடைந்திருந்தது. இந்தத் தகவல்களை எல்லாம் சிரிய அதிபர் ஆசாத்திடம் ஈரானிய அதிகாரிகள் ஏற்கனவே பகிர்ந்திருந்தனர். 

கிளர்ச்சியாளர்களிடம் அலெப்போ வீழ்ந்த பிறகு தன்னைச் சந்தித்த ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியிடம் ஆசாத் “இது ஒரு தோல்வி அல்ல. இதுவொரு தந்திரமான பின்வாங்கல் மட்டுமே” என்று கூறினார். ஆனால், இது முற்றிலும் ஒரு மாயத் தோற்றம். இது அராக்ச்சிக்கும் நன்றாக தெரியும்.  அவர் ஆசாத்திடம் டமாஸ்காஸை காப்பதற்கு புதிய துருப்புகளை அனுப்பும் திறன் ஈரானிடம் இல்லை என அப்போது தெரிவித்தார். மேலும் அரசை காப்பதற்கான அதிகப்படியான பலம் தற்போது இரஷ்யாவிடமும் இல்லை எனவும் டர்தசில் இருந்த இரஷ்ய கடற்படைத்தளத்தைக் கூட இரஷ்யாவினால் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை எனவும் சிரிய அதிபர் ஆசாத்திடம் ஈரானிய உயர் அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்பட்டது. சிரிய இராணுவத்திற்கு எதிரான ஹெச்டிஎஸ்ஸின் தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில், இரஷ்ய அரசாங்கத்தின் சிரியாவிற்கான தூதர் அலெக்சாண்டர் லாவ்ரெண்ட்யவ், அமெரிக்காவில் வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்தோடு தொடர்பில் இருப்பதாகவும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி சிரியாவில் நடக்கும் சச்சரவுகளை கையாள்வது குறித்து பேசப்படும் என்றும் தெரிவித்தார். ஆசாத் அரசாங்கம் மட்டுமே தனியாக செயல்பட்டு, அனைத்து கிளர்ச்சியாளர் அமைப்புகளையும் அடக்கி வென்றுவிட முடியும் என்றோ, கிழக்கின் எண்ணெய் வயல்களை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்காவை அங்கிருந்து அகற்றிவிட முடியும் என்றோ இரஷ்யாவுக்கோ ஈரானுக்கோ நம்பிக்கையே இல்லை. இரஷ்யாவும் ஈரானும் ஆசாத் அரசாங்கத்தை பாதுகாக்க அதிகப்படியான துருப்புகளை அனுப்ப விரும்பவில்லை என்பதே  அதன் பொருளாகும்.

2011 இல் இருந்து சிரியாவின் இராணுவ நிலைகளின் மீது இஸ்ரேலிய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அத்தகைய தாக்குதலில் ஈரானிய துருப்புகள் நிலை கொண்டிருந்த தளங்களும் அடங்கும். இத்தாக்குதல்களில் சிரியாவின் இராணுவத் தளவாடங்களும், பொருட்களும் பலத்த சேதம் அடைந்தன. இதனால் சிரிய இராணுவத்தின் பலம் குன்றியது. 2023 அக்டோபரில் இருந்து சிரியாவின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் அதிகப்படுத்தியது. ஈரானியப்படைகள், சிரிய வான் பாதுகாப்பு நிலைகள் மற்றும் இராணுவத் தளவாட உற்பத்தி நிலையங்கள் மீது குறி வைத்துத் தாக்கியது இஸ்ரேல்.

சிரியாவின் நிலைமை குறித்து மதிப்பீடு செய்வதற்காக டிசம்பர் 4 ஆம் தேதியன்று ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் இரானியத் தலைமைத் தளபதியான மேஜர் ஜெனரல் முகமது பகேரி, ஈராக்கிய இராணுவத் தளபதியான யாஹ்யா ரசூல், இரஷ்ய இராணுவ அமைச்சரான ஆண்ட்ரே பெலெளசோவ், சிரிய இராணுவத் தலைமை ஜெனரலான அப்துல் கரீம் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர். அலெப்போவிலிருந்து எச்டிஎஸ்ஸின் நகர்வு பற்றி அவர்கள் விவாதித்தனர். லெபனானில் அறிவிக்கப்பட்டு சரியாக அமல்படுத்தப்படாத போர்நிறுத்தமும், சிரியாவின் பலவீனமான படைகளையும் பார்க்கையில், இது ஒரு ஆபத்தான சூழ்நிலை என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர். டமாஸ்கஸில் நடந்த ஆசாத் அரசாங்கத்தை ஆதரிப்பதாகக் கூறினாலும், அதை பாதுகாப்பதற்கான எந்த ஒரு உறுதியான முடிவும் எட்டுவதற்கு அவர்களால் முடியவில்லை.

இஸ்ரேல் தாக்குதலின் காரணமாக சிரிய வீரர்களிடம் மனச்சோர்வு அதிகரித்து இருந்தது. சிரிய வீரர்களின் மனச்சோர்வை மீண்டும் சரிசெய்ய முடியாதபடி, 2017ல் கிளர்ச்சியாளர்களால் இத்லிப் நகரில் ஏற்பட்டிருந்த முட்டுக்கட்டை அமைந்தது.

2015 இல் சிரியாவில் நடந்த மோதல்களில் ரஷ்யா நுழைந்தபோது, கதீப் அல்-பாத், சப்பிஹா போன்ற அரசுக்கு ஆதரவாக இயங்கும் போராளிக் குழுக்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று சிரிய அரசாங்கத்திடம் இரஷ்ய ராணுவத் தலைமை அறிவுறுத்தியது. அதனால் தனியாக இயங்கவிடாமல், அவற்றை இரஷ்ய இராணுவத் தலைமையின் கீழ் நான்காவது மற்றும் ஐந்தாவது படைப் பிரிவில் இணைத்துக்கொண்டது இரஷ்ய இராணுவம். அதேபோல, சிரிய வீரர்களைக் கொண்ட சொந்த பட்டாலியன்களை ஈரானும் உருவாக்கிக் கொண்டது. படைவீரர்களின் பொருளாதார நிலை மந்தமாகிக் கொண்டிருந்த சூழலில், அயல்நாட்டுப் படையுடன் இணைந்து வேலை பார்க்கவேண்டிய சூழலும் சேர்ந்து அவர்களிடம் ஒருவிதமான மனசோர்வை ஏற்படுத்தியது. டமாஸ்கஸையும், குறிப்பாக அதிபர் மாளிகையையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த குடியரசு காவல் அமைப்புமேகூட வரலாற்று ரீதியான தனது அதிகாரத்தை இழந்துவிட்டிருந்தது.

2011 க்கு பிறகு சிரிய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரக் கட்டுப்பாட்டில் சிரியாவின் எந்தப்பகுதியும் இல்லை. ஏற்கனவே 1973 இல் இருந்தே சிரியாவின் கோலன் குன்றுப் பகுதிகள் இஸ்ரேலின் கைவசம்தான் இருந்து வந்திருக்கிறது. பின்னர் 2011 களில் சிரியாவின் வடக்குப் பகுதி எல்லைகளுக்கு நுழைந்து பல சிரிய நிலப்பரப்பை துருக்கி விழுங்கியிருக்கிறது. அதே நேரத்தில் குர்தீஸ் போராளிப் படைக்குழுக்களான ஒய்.பி.ஜி மற்றும் பி.கே.கே ஆகியவை சிரிய-துருக்கி எல்லைப் பகுதியில் தனக்கென்று ஒரு மண்டலத்தை உருவாக்கி இருந்தது. வடமேற்கு சிரியாவோ கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டு இருந்தது. இக்கிளர்ச்சியாளர்களில் ஹெச்டிஎஸ் மட்டுமல்லாது  துருக்கிய ஆதரவுப் போராளிக் குழுக்களும் இருந்தன. வடகிழக்கு சிரியாவோ அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அங்கிருக்கும் எண்ணெய் வயல்களில் அமெரிக்கா தன் அதிகாரத்தை நிலைநாட்டியது.

இப்பிராந்தியத்தில் வடக்கு ஈரான் மற்றும் வடகிழக்கு சிரியா பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டும் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள துடிக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் அமெரிக்கப் படைகள் மோதின. இதற்கிடையில் தெற்கு சிரியாவில் அமைதியைக் கொண்டுவருவதற்காக, கிளர்ச்சியாளர்களுடன் பல அவசர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது சிரிய அரசாங்கம். இருப்பினும், புஷ்ரா அல்-சாம், டரா, ஹெரான், டபாஸ் போன்ற தெற்கு நகரங்களுக்கு அரசாங்கத்தால் தன்னுடைய அதிகாரிகள் எவரையும் அனுப்ப முடியவில்லை. இந்நகரங்கள் இத்லிப் போலவே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. டமாஸ்கஸ் நோக்கி ஹெச்டிஎஸ்  அமைப்பு நகர்ந்த போது, நாட்டின் கிழக்கு முனையான ஈராக்கின் எல்லையில் இருந்த கிளர்ச்சியாளர்களைப் போலவே, தெற்கில் இருந்த கிளர்ச்சியாளர்களும் எழுச்சி பெற்றனர். இதன் மூலம் ஆசாத்துடைய உண்மையான பலவீனப்பட்ட முகம் வெளிப்பட்டது.

இஸ்ரேலுக்கு அனுகூலமான சூழல்:

1973 இல் சிரியாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கோலன் குன்றுகளுக்குச் சென்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “மத்திய ஆசியாவின் வரலாற்றில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்” என்று அறிவித்தார். மேலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கோலன் பகுதிக்கும் சிரிய இராணுவ எல்லைக்கும் இடையில் ஐநாவால் உருவாக்கப்பட்ட சண்டையில்லா அமைதிப் பகுதியைத் தாக்கி ஆக்கிரமிக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார். அந்தப் பகுதியானது, 1974 இல் நடைபெற்ற போரின் போது இஸ்ரேல் கைப்பற்றிய கோலன் குன்றுகளுக்கும் சிரிய இராணுவம் நிலை கொண்டிருந்த பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளாகும்.  இஸ்ரேலிய டாங்குகள் கியூனேட்ரா ஆட்சி பகுதியில் உள்ள கிராமப்புறங்கள் வழியாக சென்று முக்கிய நகரத்தை கைப்பற்றியது. இப்படையெடுப்பால் இஸ்ரேல்-சிரிய எல்லை மாறுபட்ட வடிவத்திற்கு வந்திருக்கிறது. இப்போது இஸ்ரேல் பல கிலோ மீட்டர்கள் சிரியாவிற்குள் நகர்ந்து கிட்டத்தட்ட எல்லைப் பகுதி முழுமையையும் கைப்பற்றி விட்டது.

டமாஸ்கசை நோக்கி ஹெச்டிஎஸ் முன்னேறிய இறுதி நாட்களில்,  வான்வழி உதவிகளை கிளர்ச்சியாளர்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் வழங்கியது. இஸ்ரேலிய விமானப்படை டமாஸ்கசின் மத்தியில் இருந்த உளவுத்துறை தலைமையகத்தையும், இராணுவ நிலைகளின் மீதும் குண்டு வீசி தகர்த்தது. சிரிய இராணுவம் தங்கி இருந்த தளங்களையும், டமாஸ்கஸை பாதுகாக்க சிரிய ராணுவம் வைத்திருந்த ஆயுத கையிருப்புகளையும், மெசா விமான தளம் உட்பட இஸ்ரேலியர்கள் தாக்கி அழித்தனர். கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் காரணம் கூறியது. இஸ்ரேலியர்கள் இந்த வான்வழித் தாக்குதலை தொடரப்போவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் யாரைக் குறிவைக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடப்படவில்லை.

2011ல் சிரியாவில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது சிரியாவின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. கிளர்ச்சியாளர்களுக்கும் சிரிய அரசாங்கத்திற்குமான மோதல் தெற்கு சிரியா முழுவதும் இஸ்ரேல் எல்லைக்கு அருகில் பரவியதால், எல்லையைத் தாண்டி சிரிய படைகள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கியது. குறிப்பாக, 2013 இல் ஏவுகணைகளைக் கொண்டு சிரிய இராணுவ நிலைகள் மீது தாக்கி அவர்களை பலவீனப்படுத்தி கிளர்ச்சியாளர்களை இஸ்ரேலியப் படைகள் பலப்படுத்தின.  2013 ஆம் ஆண்டின் இறுதியில் 210 என்ற சிறப்பு இராணுவப் படைப்பிரிவை உருவாக்கி, சிரிய-இஸ்ரேலிய போர்நிறுத்தப் பகுதியில் தனது அதிரடி இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளை தொடங்கியது இஸ்ரேல். இதனால் முக்கியமாக இன்றைக்கு அதிகாரத்தைப் பிடித்திருக்கும் ஹெச்டிஎஸ் இயக்கத்தின் முன்னோடியும் அல்கொய்தாவின் துணை அமைப்புமான ஜமாத் அல்-நுஸ்ரா, இஸ்ரேலின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பலனடைந்தது. அந்த அமைப்புகளை ஒருபோதும் இஸ்ரேல் தாக்கவே இல்லை. மாறாக, சிரியப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதன் மூலமும் சிரிய அரசின் கூட்டாளிகளான ஈரானிய ஜெனரல் முகமது அலி அல்லாதாதியை 2015 ஜனவரியிலும், ஃபத்தா தலைவர் சமீர் குந்தரை 2015 பிற்பகுதியிலும் கொன்றதன் மூலமும் சிரிய அரசாங்கத்தை மட்டும் வலுவிழக்கச் செய்தது இஸ்ரேல். ஹெச்டிஎஸ் அமைப்பு தலைநகர் மீது நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் வான்வழி ஆதரவை வலுவாக வழங்கியதாக டமாஸ்காஸில் உள்ள ஒரு முன்னாள் பத்திரிக்கை அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

சிரியாவின் எதிர்காலம்

இறுதியாக, எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் சிரியாவை விட்டு ஆசாத் வெளியேறினார்.  டமாஸ்கஸ் வீழ்வதற்கு முன்பு சில மூத்த தலைவர்கள் ஆசாத்துடன் சேர்ந்து வெளியேறி இருக்க வேண்டும் அல்லது ஈராக் எல்லைக்குச் சென்றிருக்கக் கூடும் என்று டமாஸ்கஸில் உள்ள சில முன்னாள் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஹெச்டிஎஸ் போன்ற தாக்குதல் நடத்தும் குழுக்களிடமிருந்து தங்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்று நம்பிய பல சிரியர்கள், ஆசாத்தின் இந்த மௌனத்தைப் பார்த்து அஞ்சித்தான் போயிருக்கின்றனர். ஆசாத் அரசின் குடியரசுக் காவல் படையினர்கூட, தலைநகரைக் காக்க எவ்வித முயற்சியும் செய்யாததும், ஆசாத் தனது மக்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய வார்த்தைகள் எதுவும் கூறாமல் வெளியேறியதும் ஆசாத் அரசாங்கத்தினுடைய வீழ்ச்சியின் அறிகுறியாகும்.

ஹெச்டிஎஸ் அமைப்பின் புதிய அரசாங்கத்தை ஆதரிப்பதா வேண்டாமா என்பதில் மக்கள் குழப்பத்திலேயே இருக்கின்றனர். நீண்டகாலப் போரினால் வாழ்நிலை சீரழிந்து போயிருக்கும் பலதரப்பட்ட மக்களும் இப்புதிய மாற்றத்தை அங்கீகரித்து  வரவேற்கின்றனர். அவர்கள் இந்த புதிய நிலையைத் தெருக்களில் கொண்டாடி மகிழ்கின்றனர். அகண்ட மத்திய கிழக்கின் சூழல் அவர்கள் இப்போது உடனடியாக அக்கறை கொள்ளவில்லை. இருப்பினும், இஸ்ரேலின் நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் பொருத்து இது மாறக்கூடும். 

கணிசமான பகுதியினர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயல்பாடுகளை நினைத்து அச்சப்படுகின்றனர். சன்னி முஸ்லீம் அல்லாத ஆசாத் சமூகத்தைச் சேர்ந்த அலவைத் வகைப்பிரிவு மக்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இழிவாக ஏளனம் செய்யும் போக்கைப் பார்க்கமுடிகிறது. அலவைத் மக்களை தொலைந்துபோனவர்கள் என்கிற பொருள்வரும்படி ‘அஹல் அல் படில்’ என்று அழைப்பதும், சலாபி மொழியில் விசுவாச துரோகம் கொண்டவர்கள் என்று கூறுவதும், அதற்கான தண்டனைகள் குறித்துப்பேசி தாக்குதலுக்கு இலக்கானவர்களாக அச்சுருத்துவதும் தொடர்கிறது. அவர்களைத் தொடர்ச்சியாக அச்சத்தில் வைத்திருக்கும் போக்கையும் பார்க்கமுடிகிறது. மதவெறி சித்தாந்தத்தினால் உந்தப்பட்ட இந்த சக்திகளை புதிய அரசாங்கம் கட்டுப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இத்தகைய மதவெறி என்பது உடனடியாகத் தோன்றும் முரண்பாடுகளின் வெளிப்பாடு மட்டுமே. சிரியப் பிரதேசத்தில் இஸ்ரேல், துருக்கி, அமெரிக்கா  ஆகிய நாடுகளின் ஊடுருவல்களை புதிய அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? 

அது அந்த நிலத்தை மீண்டும் வெல்ல முற்படுமா? அண்டை நாடுகளுடன் குறிப்பாக லெபனான் உடனான இப்புதிய அரசாங்கத்தின் உறவு என்னவாக இருக்கும்? இலட்சக்கணக்கான சிரிய அகதிகள் புலம்பெயர்ந்ததற்கான அடிப்படை காரணங்கள் அகற்றப்பட்டு, அவர்கள் நாடு திரும்புவார்களா? ஒருவேளை அவர்கள் திரும்பி வந்தால் சிரியாவிற்குள் அவர்களுக்கு என்ன மாதிரியான எதிர்காலம் காத்திருக்கும்? இதற்கு நடுவே, பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு இவை அனைத்தினால் ஏற்படப்போகிற சாதக, பாதக, பாதிப்புகள் என்ன? என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும். 

– விஜய் பிரசாத்

– தமிழில் : த.பொன்சங்கர்