அறிவியல்

மரணத்துக்குப் பிந்தைய இனப்பெருக்கம் தொடர்பான சவால்கள்

549 (5)

சரோஜினி நாடிம்பள்ளி & ரிச்சா ஷர்மா

மொழிபெயர்ப்பு : கா.வேணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி

2024 அக்டோபர் 4 அன்று, இறந்துவிட்ட ஒரு இளைஞரின் உறையவைத்த உயிரணுக்கள் (விந்தணு) வாயிலாக மரணத்திற்குப் பிந்தைய மகப்பேறு நடைமுறை நடத்த அவருடைய பெற்றோருக்கு தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. திருமணமாகாத அந்த இளைஞர் புற்றுநோய்க்கான சிகிச்சையான கீமோதெரபி செய்துகொள்ளும்போது தில்லி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது உயிரணுக்களை பாதுகாத்து வைத்திருந்தார். 2020 செப்டம்பரில் அவர் உயிரிழந்தார். அவரது பெற்றோர்கள், சட்டரீதியான வாரிசுகளாக, 2020 டிசம்பரில் மருத்துவமனையிடம் தங்களது மகனின் உயிரணுக்களை தரக் கோரி அணுகினர். அவ்வாறு தருவதற்கு உயர் நீதிமன்றத்தின் உரிய உத்தரவு தேவை என்று மருத்துவமனை கூறி உயிரணுவை தர மறுத்துவிட்டது. எனவே, இளைஞனின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

“இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப (முறைப்படுத்துல்) சட்டம், 2021 (ART சட்டம்) உள்ளிட்ட எந்தச் சட்டங்களிலும் திருமணமாகாத மரணமடைந்த ஆணின் உறையவைத்த உயிரணுக்குகளை அவரது பெற்றோருக்கோ அல்லது சட்ட வாரிசுகளுக்கோ வழங்குவதற்கான வழிமுறைகள் தெளிவாகக் குறிபிடப்படவில்லை என்று மருத்துவமனை வாதிட்டது. நீதிமன்றமும் 2021 ல் கொண்டுவரப்பட்ட இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப சட்டமோ 2022ல் கொண்டு வரப்பட்ட அந்த சட்ட விதிகளோ இந்த வகையான சூழலைக் கையாளும் வல்லமையோடு இல்லை என்று குறிப்பிட்டது. தனது ஆணையில், 2018ல் நீதிமன்ற கவனத்துக்கு வந்த இதே மாதிரியான வேறொரு வழக்கைப் பற்றி குறிப்பிட்டது. அந்த வழக்கில் ஜெர்மனியில் இறந்து போன திருமணமாகாத தங்கள் மகனின் உறையவைத்த உயிரணுக்களை பேரக் குழந்தைகளைப் பெறுவதற்காகப் பயன்படுத்தினர். அவர்கள் மகன் இறந்தபிறகு, ஜெர்மனியிலிருந்து உயிரணுக்கள் கப்பல் வாயிலாக இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.  வாடகைத் தாய் மற்றும் கருமுட்டை தானத்தின் வாயிலாக இரண்டு குழந்தைகளை கருவுறுவதற்கு அந்த உயிரணுக்கள் பயன்படுத்தப்பட்டன. 

நிலுவையில் உள்ள சட்டங்களும் ஏற்பாடுகளும்

இனப்பெருக்கம் சார்ந்த தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களால், உயிரணுக்களை (விந்தணுக்களும் கருமுட்டைகளும்) உடலுக்கு வெளியே உறையவைத்து பராமரிப்பது நீண்ட காலத்திற்கு சாத்தியமாகியுள்ளது. ஆனால் உறையவைத்த உயிரணுக்களை மரணத்திற்குப் பிந்தைய கருத்தரிப்பிற்குப் பயன்படுத்துவது சிக்கலான நெறிமுறையையும், சமூக மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த சிக்கல்களையும் எழுப்புகிறது.

ART சட்டமும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2022ம், கருத்தரிப்பு, கருத்தரிக்காத தன்மை, உயிரணுக்கள் தானம் மற்றும் வாடகைத் தாய் தொடர்பான விஷயங்களைத் தீர்மானிக்கிறது. ஆனால், இவை எதுவும் தற்போதைய வழக்கை கையாளப் போதுமானதாக இல்லை. அது அல்லாமல், ART சட்டத்தின் பிரிவுகள்  குழப்பங்களையும் இடைவெளிகளையும் கொண்டுள்ளன. உதாரணமாக, சட்டத்தின் பிரிவு 24(f) பின்வருமாறு கூறுகிறது: “மரணத்திற்குப் பிந்தைய உயிரணுக்கள் சேகரிப்பு, யார் அதில் ஈடுபடுகிறார்களோ அந்த தம்பதியினரின் சம்மதம் முன்னதாக கிடைத்தால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.” ஆனால் பிரிவு 2(e) “தம்பதியர்”  என்றால் கருத்தரிக்காத திருமணமான தம்பதியர் என்று  வரையறுக்கிறது. எனவே, சட்டம் கருத்தரிக்காத திருமணமான தம்பதிகள் மட்டுமே இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்று குறிப்பிடுகிறது, திருமணம் செய்யாத தனிநபர்களோ அல்லது பாட்டி-தாத்தாவோ அல்ல. உயர்நீதிமன்ற உத்தரவு மறைந்தவரின் தெளிவான சம்மதத்தை வலியுறுத்துகிறது. சட்டத்தில் தெளிவு இல்லாததால், இந்த சம்மதத்தை நீதிமன்றம் ஏற்கும் விதம் கேள்விகளை எழுப்புகிறது.

இந்த வழக்கில் உள்ள உணர்வு ரீதியான அம்சங்களை ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், மரணத்திற்குப் பிந்தைய கருத்தரித்தல் மூலம் தங்கள் குடும்ப மரபணு நிரந்தரமாக தொடர வேண்டும் என்பதற்கான “தங்கள் மகனின் மரபைப் பாதுகாக்கும்” மனுதாரர்களின் விருப்பத்தை விமர்சன ரீதியாக ஆராய்வது முக்கியமானது. இதன் மூலம் மரபணு இணைப்பும் குழந்தையின் பிறப்பும் குடும்ப அமைப்பின் அடிப்படை அம்சங்கள் என்கிற சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள கருத்து உயிர்ப்பிக்கப்படுகிறது. இது குறித்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பின்வருமாறு பதிலளித்தது, “ART சட்டம் கருத்தரிக்கமுடியாத  தம்பதிகள் அல்லது பெண்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கம் கொண்டது. மேலும் அது, வாடகைத் தாய் மூலம் பேரக்குழந்தையைப் பெற விரும்பும் மனுதாரர்கள் போன்ற சூழ்நிலைகளை உள்ளடக்குவதில்லை.”

இந்த வழக்கில் சட்டவிதிகள் இல்லாத நிலையில், தாத்தா பாட்டியாக இருப்பதில் உள்ள அறம் சார்ந்த நெறிமுறையையும், இறந்த மகனின் உயிரணுக்களைப் பெறுவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டியது அவசியம். சட்டப்படியான முதன்மையான அக்கறை பெற்றோர் யார் என்பது தான். உயிரணு தானம் செய்தவர் இறந்ததால், பெற்றோர் உரிமை யாருக்கு கிடைக்கும்? இறந்துபோனவரும் வாடகைத் தாயும் குழந்தையின் பெற்றோராகக் கருதப்படுவார்களா? பிறப்பு சான்றிதழில் என்ன எழுதப்படும்?

தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமை

மரபணு சார்ந்த பொருள் என்பதை கையாளும்போது சர்வதேச சட்ட முன்னுதாரணங்களான, ஜெர்மனியில் நடந்த Doodeward v. Spence மற்றும் Yearworth v. North Bristol NHS Trust வழக்குகளை, நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.  இவ்வழக்குகள்  மனித உயிரியல் சார்ந்த பொருள் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது பற்றியும்  மரணத்திற்குப் பிறகு அவற்றை தன்னிச்சையாகக் கட்டுப்படுத்தும் உரிமை யாருக்கு உள்ளது என்பது பற்றியும் ஆராய்ந்துள்ளன. இந்த வழக்குகள் மரணத்திற்குப் பிந்தைய உயிரணுக்களின் சேகரிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான மாறிவரும் சட்டக் கண்ணோட்டங்களை எடுத்துக் காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டுதல் போன்ற சில விதிமுறைகள், இனப்பெருக்கம் சார்ந்த ‘பொருள்’ உட்பட, மனித மரபணு சார்ந்த ‘பொருளை’ பாதுகாப்பாக கையாளுவதை உறுதி செய்யும் போது, ​​அவை மரணத்திற்குப் பிந்தைய கரு உருவாகத்தின் நெறிமுறைகளையும் சட்ட சிக்கல்கள் குறித்த தெளிவான வழிகாட்டுதலையும் வழங்கத் தவறிவிட்டன.

மரபணு சார்ந்த பொருட்களை “சொத்து” எனக் காட்டுவது

இந்த முன்னுதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு, உயர்நீதிமன்றம் உயிரணுக்கள் போன்ற மரபணு சார்ந்த பொருள் ஒரு சொத்தாகக் கருதப்படும் என்றும், இறந்துபோன மனித உடல் (பிணம்) அல்லது பிணத்தின் பாகங்கள் போன்று உயிரணுக்களும் மரணித்தவரின் உடலியல் பொருட்களில் ஒரு பகுதி என்று கருதப்படுவதற்கான தகுதியைக் கொண்டது என்றும் முடிவு செய்தது. இனப்பெருக்கம் சார்ந்த திசுக்கள் உள்ளிட்ட மனித உயிரியல் சார்ந்த திசுக்களை சொத்து என்று வகைப்படுத்துவது பெண்ணிய விவாதங்களின் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறது. மனித திசுக்களை ‘சொத்து’ என்று கருதும் அணுகுமுறை பற்றி விமர்சன ரீதியாக பார்க்கிறார்கள். இத்தகைய அணுகுமுறையால் மனித திசுக்கள் வியாபாரப் பண்டமாகிவிடும் என்றும் மனிதர்களை வெறும் ’பொருட்கள்’ என்பதாலும், மக்களின் தனித்துவத்தை பொருளாக்குவதாலும் அதன் மதிப்பு குறைக்கப்படுகிறது என்றும் கருதினார்கள். 

இந்த அணுகுமுறை ஆணாதிக்கம், முதலாளித்துவம் மற்றும் இனப்பெருக்க உயிரியல் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைவதிலிருந்து உருவாகிறது என்று அவர்கள் வாதிட்டனர். மேலும், “மருத்துவ அறிவியல், மக்கள்தொகை கட்டுப்பாடு அல்லது பெண் என்பதால் அவர்களுக்கு இருக்கும் குடும்ப உறவு என்கிற ஆணாதிக்க அமைப்பு” மூலமாக பெண்களை வெறும் உடலாகக் கருதுகிற பொதுவான கவலையை பெண் உடல் பகிர்ந்து கொள்கிறது என்றும் அவர்கள் வாதிட்டனர். உயர்நீதிமன்ற ஆணை, ஆணின் உயிரணுக்களை எந்தவித வியாபாரம் அல்லது பணம் சார்ந்த நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை வெளிப்படையாக தடைசெய்தாலும், ஆணின் உயிரணுவை ‘சொத்து’ என்று வரையறை செய்ததன் மூலம் மரபணு இனப்பெருக்கம் சார்ந்த ‘பொருளை’ வணிகமயமாக்குகிறது.

மாறாக, இங்கு யாருடைய உரிமைகள் ஆபத்தில் உள்ளன என்பதை மதிப்பிடுவது முக்கியம். கருத்தரிக்க இயலாத  தம்பதிகள் கருத்தரிப்பதை அறிவியல் சாத்தியமாக்கியுள்ளதால், இறந்த மகனின் மரபை  அவனது பாதுகாக்கப்பட்ட உயிரணுக்கள் மூலம் தொடர வேண்டும் என்கிற பெற்றோரின் விருப்பத்தை மறுக்க முடியாது என்று நீதிமன்ற உத்தரவு வலியுறுத்தியது. இது அதன் நெறிமுறை மற்றும் சட்டரீதியான மாற்றங்களைப் பற்றிய குழப்பங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் தருவதைவிட  அதிகமான கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் இல்லாத நிலையில், தற்போதுள்ள சட்டங்களை மறுபரிசீலனை செய்வதும் மரணத்திற்குப் பிந்தைய கருத்தரிப்பு நிலையின் விளக்கங்களை நம்புவதற்கும் பதிலாக சட்டங்களில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்வது கட்டாயமாகிறது.

சரோஜினி நாடிம்பள்ளி & ரிச்சா ஷர்மா

மொழிபெயர்ப்பு கா.வேணி தீண்டாமை ஒழிப்பு முன்னணி

குறிப்பு- சரோஜினி நாடிம்பள்ளி மரபணு, இனப்பெருக்கம் மற்றும் மரபணு சார்ந்த தொழில்நுட்பங்களிலும் வாடகைத் தாய் முறை குறித்தும் வேலைசெய்கிறார் 

ரிச்சா ஷர்மா மரபணு, பாலியல், இனப்பெருக்க நலன்கள் மற்றும் உரிமைகள் சார்ந்து இளைஞர்களோடு வேலை செய்கிறார். 

ஆதாரம் – The Hindu 23/12/2024