கடந்த டிசம்பர் 17 ஆம் தேதியன்று மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத்தை பாஜக அரசு தாக்கல் செய்தது. இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கிடைத்தால்தான், இச்சட்டத்த நிறைவேற்றமுடியும். அன்று பாராளுமன்றத்தில் இருந்த எம்பிக்களின் எண்ணிக்கை 467 அவர்களில் குறைந்தபட்சமாக 307 பேர் ஆதரித்து வாக்களித்தால், அச்சட்டம் நிறைவேறும் என்கிற நிலையில், சுமார் 269 பேர் ஆதரித்தும், 198 பேர் எதிர்த்தும் வாக்களித்திருந்தனர். போதிய வாக்குகள் இல்லாத சூழலில் அச்சட்டம் நிறைவேறவில்லை. இப்போதைக்கு அச்சட்டத்தை பாராளுமன்றத்தின் கூட்டுக்குழுவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். அங்கே விவாதித்து, சில மாற்றங்களை பரிந்துரைப்பார்கள் என்று தெரிகிறது. அதன்பின்னர், அம்மாற்றங்களை ஏற்றுக்கொண்டோ, அல்லது திருத்தங்கள் செய்தோ மீண்டும் மக்களவையில் பாஜக அச்சட்டத்தை தாக்கல் செய்யும். இப்படியொரு சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று பாஜக துடிக்கிறது என்றால், அதற்குப் பின்னால் இருக்கிற அரசியலையும் நோக்கங்களையும் நாம் தெரிந்துகொண்டே ஆகவேண்டும்தானே. வாருங்கள் பார்ப்போம்.
மக்களாட்சி அரசு என்பது பெரும்பான்மை மக்களின் நலன்கருதி ஒரு திட்டத்தை முன்வைத்து விவாதித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால் பாஜக அரசு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொண்டுவருவதன் நோக்கம் என்ன என்பதையும், யாருடைய நலனைக் கருதில்கொண்டு இச்சட்டத்தைக் கொண்டுவருகிறது என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் கடமை அரசுக்கும் மக்கள் செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கும் இருக்கிறது.
நடைமுறையில் இருக்கின்ற தேர்தல் முறையில் இருந்து, எந்த வகையில் மாறுபட்டதாக இந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை அமையும் என்பதை நாம் உற்று கவனிப்பதும் அவசியமாகிறது. இந்தியா முழுவதும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாத சூழலில், இவர்களால் ஒரே கட்டமாக அனைத்துத் தேர்தலையும் நடத்தமுடியும் என்றோ, அல்லது அதனை நடத்துவதற்கு என்ன மாதிரியான திட்டத்தை வைத்திருக்கிறார்கள் என்றும் பார்த்தால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இந்தியா என்பது ஒற்றை ஆட்சியின் கீழ் செயல்படக்கூடிய வகையில் இயல்பாக உருவான ஒற்றை அரசைக் கொண்ட தேசமில்லை. மாறாக, ஒவ்வொரு மாநில அரசுக்கும் அந்தந்த நிலப்பரப்பில் சட்டம் இயற்றும் அதிகாரம் அம்மாநில சட்டசபைக்கு இருக்கிறது. இதனை அரசியலமைப்புச் சட்டத்திலேயே உறுதிசெய்யப்பட்டு அதற்கான வழிவகைகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், சட்டத்தில் மாநில அரசுகளுக்கென்று உரிமைகள் இருக்கின்றபோது, முற்றிலுமாக மாநில உரிமைகளை மறுத்தே வருகிறது பாஜக அரசு.
ஒரு கூட்டாட்சி அரசு உருவாக்குவதற்கு இரண்டு தேவைகள் அவசியமாகின்றன
- ஒன்றிய அரசினை உருவாக்குகிற அதிகாரம் பெற்ற மாநில அரசுகள், தங்களைப் பொறுத்தவரையில் தங்களுடைய நிலப்பரப்பிற்குட்பட்டு முழு சுதந்திரம் பெற்றவையாக இருக்க வேண்டும்
- ஒன்றுக்கும் மேற்பட்ட மாநில அரசுகளை பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான அதிகாரத்திற்கோ அல்லது பிரச்சனைக்கோ மட்டுமே ஒன்றிய அரசு கருத்துசொல்லவேண்டும். அதிலுமே கூட பெரும்பான்மையான மாநில அரசுகளின் கருத்துக்கும் ஒன்றிய அரசு மதிப்பளித்து கட்டுப்பட வேண்டும்
ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை கூட்டாட்சித் தத்துவம் என்பது மேலே குறிப்பிட்டவாறு அமையவில்லை. மாறாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து கற்றுக்கொண்டு, அதன் ஆதிக்க மனோபாவத்தில் இருந்தே இந்தியா, தன்னுடைய மாநில அரசுகளை ஒடுக்கும் முறையை உருவாக்கி அமல்படுத்தி வருகிறது.
உலக அளவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட கூட்டாட்சி அமெரிக்கா தான். அங்கே அந்த ஆட்சிமுறை எப்படி உருவாகி, இறுதி வடிவம் பெற்றது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் போது, இந்திய ஒன்றியத்தையும் நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபோது, அவர்கள் கைக்குள் முதலில் வந்த இடங்களாக சென்னை, பம்பாய், கல்கத்தா போன்ற பகுதிகள் என்றிருந்த போதிலும், அவர்கள் காலப்போக்கில் தங்களுக்கு உட்பட்ட பகுதிகளை நிர்வாக ரீதியாக ஒன்றாக்கி ஒற்றை மத்திய ஆதிக்கத்திலேயே வைத்துக் கொண்டனர்.
ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை. அங்கே அவர்கள் 13 நாடுகளை உருவாக்கினார்கள். அந்த 13 நாடுகளில் ஒருவருக்கொருவர் எவ்வித நிர்வாகத் தொடர்பும் இன்றி, தனித்தனியான அரசுகளாகவே இயங்கி வந்தன. வேடிக்கை என்னவென்றால், அந்த 13 காலனி நாடுகளில் வாழ்ந்தவர்களுமே ஒற்றை ஆங்கில மொழியையே பெரும்பாலும் பேசியவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிரட்டனிலிருந்து குடியேறியவர்கள்.
லண்டனில் இயங்கி வந்த ஆங்கிலேய அரசு, அவர்களிடம் இருந்து அதிகமான வரிகளை விதித்தபோது, அந்த 13 காலனிகளும் தாங்கள் சந்தித்த பொதுப் பிரச்சினையைப் ஒருவருக்கொருவர் இணைந்து பேசின. அவர்கள் அனைவரின் பிரச்சனையும் ஒரேமாதிரியாக இருப்பதாக உணர்ந்த அவர்கள், பிரதிநிதிகளை உருவாக்கி, மேற்கொண்டு விவாதிக்க ஓர் இடத்தில் கூடினர். அந்த அமைப்புதான் ‘பிரதிநிதித்துவ சபை’ என்று அழைக்கப்பட்டது.
பிரிட்டனை எதிர்த்துப் போர் தொடுப்பது என்று அந்த பிரதிநிதித்துவ சபையில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் குழுவின் பெயரால்தான் பின்னர், ‘சுதந்திரப் பிரகடனம்’ என்கிற பெயரில் அமெரிக்க விடுதலையே அறிவிக்கப்பட்டது. இப்படி அவர்கள் 1776 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் நாள் சுதந்திரப் பிரகடனம் செய்து, 13 காலனிகளும் 13 சுதந்திர நாடுகளின் தன்மையைப் பெற்றுவிட்டன.
அதன்பிறகு, உலகெங்கிலும் நிலப்பரப்புத்துவ காலகட்டம் என்பது ஜனநாயகம் தொடங்குவதற்கான அடித்தளமாகவே இருந்திருக்கிறது. உற்பத்தி வளர்ச்சி வரும்போதுதான் சமூக வளர்ச்சியும் அடைந்திருக்கிறது. உற்பத்தி வளர்ச்சிக்கு தடையாக இருந்த பழைய மன்னர்களை வீழ்த்த, மொழி, இனம் போன்றவற்றின் உணர்வு தேவைப்பட்டிருக்கிறது. மொழி உணர்வால் ஒன்றுபட்டவர்கள் தனக்கான தேசிய அரசை அமைத்துக் கொண்டனர். அதன்மூலம் பெரும்பான்மையானவர்களின் அடையாளத்தைக் கொண்டிருக்காதவர்கள் வெறுக்கப்பட்டும், நாட்டைவிட்டு வெளியேற வைப்பதுமாக இருந்துவந்தது. உலகப் போர்களில் யூதர்கள் கொல்லப்பட்டும், அடித்துவிரட்டப்பட்டதும் இப்படியாக உற்பத்தியை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட தேசிய அடையாளங்களால்தான். அதன்பிறகு, அதில் பாதிக்கப்பட்ட அதே யூதர்களால் முன்னெடுக்கப்பட்டு இன்று வரையிலும் தொடரப்பட்டுவரும் பாலஸ்தீன ஒடுக்குமுறையிலும் அதற்கு பெரும்பங்குண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை இப்படியானதொரு ஒற்றை மத, மொழி, இன அடையாளத்தை உருவாக்குவது எவருக்கும் சாத்தியமற்றதாகவே இருந்துவருகிறது.
இத்தகைய சூழலில், அதனை எப்படியாவது இந்தியாவிலும் நிகழ்த்திவிட்டால், என்றைக்கும் அதிகாரத்தைத் தனதாக்கிக் கொள்வது எளிதாகிவிடும் என்று இந்துத்துவ கும்பல் ஏறத்தாழ நூறு ஆண்டுகளாகவே முயன்று வருகிறது. இந்தியா முழுவதும் வாழ்கிற மக்கள், ஒரே மொழி ஒரே கலாச்சாரத்தை பின்பற்றக்கூடிய மக்களாக இல்லாத சூழலில், தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற பாஜக அரசு, மொழி, இனம், கல்வி, கலாச்சாரம் உள்ளிட்டவற்றில் குழப்பத்தை ஏற்படுத்தி, பொய்யான அடையாளங்களை முன்னிறுத்தி, ஒட்டுமொத்த நாட்டையும் ஒடுக்குமுறை செய்வதற்கு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ உதவும் என்று நினைக்கிறார்கள்.
ஒரே நாடு ஒரே கல்வி
ஒரே நாடு ஒரே மொழி
ஒரே நாடு ஒரே கலாச்சாரம்
ஒரே நாடு ஒரே மதம்
என்பதற்கு அடித்தளமாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது ஒற்றை அதிகாரத்தை நோக்கி நம்மை இழுத்துக் கொண்டுசெல்வது, ஜனநாயக அரசை முற்றுமுழுவதுமாகவே பார்ப்பனியமயமாக்கவே உதவும்.
மாநிலங்களுக்கு ஓரளவுக்கேனும் அதிகாரம் இருந்ததால்தான், அந்தந்த மாநிலத்திற்கேற்ப சில முற்போக்கான அரசுகளால் பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டன, மதிய உணவுத் திட்டமும் காலை உணவுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டன, மாணவர்களுக்கு பேருந்து வசதியும் மிதிவண்டியும் கணிணிகளும் வழங்கப்பட்டன, கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டன, மருத்துவக் கல்லூரிகளும் பொறியியல் கல்லூரிகளும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிளும் உருவாக்கப்பட்டன, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி வழங்கப்பட்டது.
கிராமங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையம், நகரங்களில் மருத்துவமனைகள், மாவட்டங்களில் தலைமை மருத்துவமனை, பொது விநியோகம் திட்டத்தின் மூலம் கிராமங்கள் தோறும் நியாய விலை கடை அமைத்து இலவச அரிசி கொடுப்பது, சாலை மேம்பாட்டு வசதி, அணைகள், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, தொழில்துறை உருவாக்குவது, சாதி ஒழிப்புக்காக சமத்துவபுரம் அமைத்தல், சாதி மறுப்புத் திருமணம் செய்பவருக்கு ஊக்கத்தொகை அரசு வேலை, இருமொழிக் கொள்கை என எண்ணற்றத் திட்டங்கள் மாநில அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு செயல்பட்டு இருக்கிறது. இவற்றில் சிலப்பல குறைபாடுகளும் பிரச்சனைகளும் இருக்கலாம். ஆனால் இவ்வளவு திட்டங்களைக் கொண்டுவந்து அமல்படுத்தப்பட்டதன் நோக்கத்தையும், அதனால் பயன்பெற்றவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தையும் நாம் குறைசொல்ல முடியாது.
மாநிலத்தின் தனிப்பிரச்சனைகளை அந்தந்த மாநிலத் தேர்தல்களில் விவாதமாக்கி, அதில் மக்களை ஈர்க்கும் கொள்கைகளை முன்வைப்பவர்களை வெற்றிபெறவைத்து, அவற்றுக்கான தீர்வுகள் அமல்படுத்துவதைப் பார்க்கிற மாநில ஜனநாயக முறையை ஒழித்துக்கட்டி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்கிற முறையின் மூலமாக, ஒரு மாநிலத்திற்கு நேரடியாகத் தொடர்பே இல்லாத பிரச்சனைகளையெல்லாம் முன்வைத்து மட்டுமே பேசுகிற சூழலை உருவாக்குவதுதான் பாஜகவின் இமாலயத் திட்டம்.
மாநில சட்டசபைத் தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் எப்போதும் ஒரே நேரத்தில் நடைபெற்றால், அந்தந்த மாநிலப் பிரச்சனைகள் பேசப்படுவதைத் தாண்டி, பாராளுமன்றத் தேர்தலுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவிடும். பொதுவாகவே இந்தியாவில் இருக்கிற தேர்தல் அமைப்புமுறைகளைப் பொறுத்தவரையில், எந்தவொரு தொகுதியிலும் முதலிடத்தில் வரும் ஒரு வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட அந்த நொடியில், மற்ற அனைவரின் வாக்குகளும் வீணாகத்தான் போகும். அதாவது நாடெங்கிலும் உள்ள அனைத்துத் தொகுதியிலும் இரண்டாவது இடத்தை ஒரு கட்சி பிடித்தாலும், 40% வாக்குகளைப் பெற்றாலும், ஒரேயொரு தொகுதியில் கூட அக்கட்சியால் வெற்றிபெறமுடியாது. அதனாலேயே வெற்றிபெறும் வாய்ப்புள்ள கட்சிக்கே வாக்களிப்போம் என்கிற மனநிலையை இந்த தேர்தல்முறை தொடர்ச்சியாக மக்கள் மனதில் பதியவைத்துக்கொண்டே இருக்கிறது. இந்த சூழலில், இந்தியாவின் அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் ஒன்றாக கட்டாயமாக நடத்தப்பட்டால், எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு கட்சிக்கே வாக்களித்தால், ஆட்சியதிகாரம் முழுமையாக ஒரு கட்சிக்கே கிடைத்து, மக்கள் பணியை ஆற்றமுடியும் என்கிற வாதம் முன்வைக்கப்படும். ஏற்கனவே பல மாநிலத் தேர்தல்களில், ஒன்றிய ஆட்சியைப் போலவே மாநிலத்திலும் அமைந்தால்தான் நிதிஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கும் என்று பாஜக பிரச்சாரம் செய்துவருவதைப் பார்க்கமுடிகிறது.
அத்துடன், ஏதோவொரு மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், அங்கே யாராலும் ஆட்சியமைக்க முடியாத சூழல் உருவாகும். அந்த சூழலில் சில கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கலாம். ஆனால் அதுவும் சாத்தியமில்லாத சூழல் வரும்போதோ, அல்லது கூட்டணியில் மனமுறிவு ஏற்பட்டோ ஆட்சி கவிழலாம். அத்தகைய சூழலில் மறுதேர்தல் ஒன்றே தீர்வாக இருக்கமுடியும். ஆனால், இப்புதிய ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்கிற தேர்தல் முறைப்படி, அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு மேலும் ஐந்தாண்டுகள் இருக்கும் சூழலில், மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தால், மாநிலத்தில் தேர்தல் நடத்தாமல், அடுத்த பாராளுமன்றம் வரையிலுமே மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிடக்கூடும். குடியரசுத் தலைவர் ஆட்சியென்றால், அது நிச்சயமாக ஒன்றிய அரசின் ஆட்சியன்றி வேறில்லை. ஆக, ஒன்றியத்தில் ஆட்சியதிகாரம் பெற்றிருக்கும் ஒரு கட்சியினால், டெப்பாசிட் கூட வாங்க முடியாத ஒரு மாநிலத்திலும் பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்துவிடுவதற்காக வழிவகைகளை இப்புதிய சட்டம் கொடுத்துவிடுகிறது.
ஆக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்கள் அதிகாரம் அற்றவர்களாக மாறிவிடுவார்கள் . அதிகாரம் இல்லாத மக்கள் அடிமையாக்கப்படுவார்கள் அப்படிப்பட்ட ஒரு சூழலை உருவாக்கி, ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவதற்காகவே, பாஜக அரசு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்கிற சட்டத்தைக் கொண்டு வருகிறது.
இதற்கு முன்னர், சிஏஏ, காஷ்மீரை இரண்டாக உடைக்கும் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை நீக்கப்படும் சட்டம், பணமதிப்பிழப்பு, என ஒவ்வொரு சட்டமாகக் கொண்டுவந்து அரசியலமைப்புச் சட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டிருந்த இந்த அரசு, தற்போது இந்த தேசத்தின் ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் அம்பேத்கர் உள்ளிட்ட ஏராளமான நமது முன்னோர்கள் நமக்குப் போராடிப் பெற்றுத்தந்த மாநில மக்கள் உரிமைகளை இந்த ஒற்றைச் சட்டம் ஒரே பாய்ச்சலாக ஒட்டுமொத்தமாக பறித்துக்கொள்ள வந்திருக்கிறது. அதனால், என்ன பாடுபட்டாவது நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இதனை சட்டமாக்காமல் தடுத்தே ஆகவேண்டும்.
– கோபிநாதன், வாணியம்பாடி
கட்டுரையாளர் எளிமையாக விளக்கியிருக்கிறார்..
வாழ்த்துகள்..
உண்மை, நிச்சயமாக தடுக்க வேண்டிய கடமை தங்களின் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட ஒவ்வொரு நா.ம உ களுக்கும் இருக்கிறது என்பதை
அவர்களுக்கே புரிய வைக்கிற நிலையில் உள்ளவர்களைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறோமோ என்ற கவலையைக்கொடுத்து உள்ளார்கள் அந்த 269 எண்ணிக்கை காட்டுகிறது…
அருமையான அவசியமான கட்டுரை. அனைவரும் படிக்கும் படி எளிமையான எழுத்து நடையில் இருக்கிறது.
வாழ்த்துகள்!
உண்மையான விமர்சனம். மக்கள் விழித்து கொள்வதால் எந்த பயனும் இல்லை. நமது அரசியல் கட்சிகள் BJP என்ற கொடுங்கோல் ஆட்சியை ஒழிக்க வேண்டும்.. BJP ஆதரவழித்துள்ள நிதிஷ் JI மற்றும் சந்திரபாபு நாயுடு JI இவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். தமிழகத்தில் BJP க்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் கும்பலை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும்.