அறிவியல்

பிராய்லர் கோழி உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமானதா ?

549 (7)

-ஸ்ரேயா கோஸ்வாமி

தமிழில்: மோசஸ் பிரபு

பிராய்லர் கோழிகள் வணிக ரீதியாக வளர்க்கப்படும் கோழிகள் ஆகும், இது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பரவலாகவும் மலிவாகவும் கிடைக்கும் ஒரு உணவுப் பொருள். இதைப்பற்றிய பல பிரபலமான கட்டுக்கதைகள் உலா வந்துக்கொண்டே இருக்கின்றன. பிராய்லர் கோழிகள் பல காரணங்களால் உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானது என்றும்  அதை உட்கொள்ளக்கூடாது என்றும் அக்கதைகள் வலியுறுத்துகின்றன்து. இந்த கட்டுக்கதைகள் குறித்து சில அறிவியல் உண்மைகளை இங்கே பகிர்கிறேன்.

அசைவ உணவு உண்பவராகவும், சிக்கன் சாப்பிடுபவர்களாகவும் இருப்பவர்கள்,  பல நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பிராய்லர் கோழி ஆரோக்கியமற்றது என்பது போன்ற பல கருத்துக்களை நிச்சயமாகக் கடந்து வந்திருப்பார்கள். குறிப்பாக நாட்டுக்கோழி அல்லது திறந்தவெளியில் உணவையும் தண்ணீரையும் பெறக்கூடிய கோழிகளோடு ஒப்பீடும் போது ப்ராய்லர் கோழிகள் ஆபத்தானவை என்ற செய்தியை நிச்சயம் அறிந்தவராக இருந்திருப்பார்கள். அதனோடு பிராய்லர் கோழிக்கு ‘வளர்ச்சி ஹார்மோன் ஊசிகள்’ கொடுக்கப்படுகின்றன என்றும்,  இந்த பிராய்லர்  கோழியை  ஒருவர்  உட்கொண்டால் அவரின் உடலிலும் வளர்ச்சி ஹார்மோன்கள்  இரத்த ஓட்டத்தில் நுழைந்து ஆரோக்கியத்தை பாதிக்கும் என்றும், பெண் குழந்தைகள் விரைவாக வயதுக்கு வர காரணமாக உள்ளது என்றும், இந்த பிராய்லர்  கோழிகள் கொடுக்கும்  ஊட்டச்சத்து போதுமானதாக இல்லை என்றும்  பல கதைகள் கூறப்படுகின்றன. எனவே முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும் என்று பலர் ப்ராய்லர் கோழிகள் பற்றி பேசுவதை நாம் அறிந்திருப்போம். 

ஆனால் உணவு அறிவியல் உண்மையில் இந்த கருத்துகளை ஆதரிக்கிறதா ? நாம் எப்போதாவது இதுப்பற்றி யோசித்திருக்கிறோமா..?  

ஒரு சமீபத்திய பதிவில், உணவு பற்றிய கட்டுக்கதைகளை அம்பலப்படுத்துபவரும்  எழுத்தாளருமான கிரிஷ் அசோக், பிராய்லர் கோழிக்கு  வழங்கப்படும் வளர்ச்சி ஹார்மோன்கள் மனித ஆரோக்கியத்தை பாதிக்கும்  என்கிற கருத்து அபத்தமானது மற்றும் தவறானது என்பதை பல உதாரணங்களுடன்  விரிவாக விளக்கினார். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) வழிகாட்டுதல்கள்,  அறிக்கைகள் மற்றும் உலகெங்கிலும் நடத்தப்பட்ட பல ஆய்வுகள், பிராய்லர்  கோழிக்கு வளர்ச்சி ஹார்மோன்கள் கொடுக்கப்பட்டாலும், அது மனித ஆரோக்கியத்திற்கு மோசமானதல்ல என்பதை நிரூபித்துள்ளன.

பிராய்லர் கோழி மற்றும் நாட்டுக் கோழியை எப்படி புரிந்துகொள்வது..?

பிராய்லர் கோழி என்பது  இறைச்சிக்காக மட்டுமே கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளாகும். இவை தோராயமாக நான்கு முதல் 14 வாரம் வரை  வளர்க்கப்படுகின்றன. கோழியின் இன வகை மற்றும் அதன் எடையைப் பொறுத்து வளர்க்கப்படும் கால வகைகள் அமையும். பிறகு அவை கறிக் கடைகளுக்கு விற்கப்படுகின்றன அல்லது மனிதர்களின் நுகர்வுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பிராய்லர் கோழிகளின் பின்னணியில் உள்ள நோக்கம் வணிகம்தான் என்றாலும், மக்களுக்கு தரமான கோழி இறைச்சியை வழங்குவதையும் அது உறுதி செய்துள்ளது, இது போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்கும் அதே நேரத்தில், தேவையான எடையும் சுவையும் கொண்டதாகவும் திகழ்கிறது. பிராய்லர் கோழிகள் கூண்டில் அடைக்கப்பட்டு மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில்  வளர்க்கப்படுவதற்கும், வெளியில் அணுக முடியாத அளவிற்கு இருப்பதற்கும் இதுவே முக்கியமான காரணமாகும். 

மறுபுறம், நாட்டுக்கோழிகள், அத்தகைய கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இனப்பெருக்கம் செய்யப்படுவதில்லை. இது குறைந்தப்பட்சம் 6 மாத காலம் வரை வளர்க்கப்படும். அதன் பிறகுதான் இறைச்சிக்காக விற்கப்படும் நாட்டுக்கோழி வளரும் போது ஏராளமான வெளிப்புற தொடர்புகளை கொண்டுள்ளன. 

பிராய்லர் கோழி மற்றும் நாட்டுக்கோழி வளர்க்கப்படும் விதத்தில் உள்ள இந்த வேறுபாடுகள் நாம்பெறும் ஊட்டச்சத்தின் அளவில் பெரிய வேறுபாடுகளுக்கு இட்டுச் செல்கிறதா என்று கேள்வி எழலாம். ஆனால் 2017 ஆம் ஆண்டு உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி ப்ராய்லர் கோழியோடு ஒப்பிடும் போது நாட்டுக்கோழியின் தொடைப்பகுதியில் புரதம் சற்று கூடுதலாக இருக்கிறது என்றும், அதற்கு நாட்டுக்கோழிகள் திறந்தவெளியில் அதிக நேரம் வளர்வதால் இயல்பாகவே உடற்பயிற்சியைப் பெறுகின்றன என்பதே காரணம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மறுபுறம், பிராய்லர் கோழிகள் தொடை மற்றும் பின் கால் பகுதியில் சற்று அதிக கொழுப்பு அளவைக் கொண்டுள்ளன. அவை அவற்றின் சுவைக்கு உதவுகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக, நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் கோழிகளின் ஊட்டச்சத்தின் உள்ளடக்கம் தோராயமாக ஒரே மாதிரியாக இருக்கிறது. இதன் பொருள், பிராய்லர் கோழி ஆரோக்கியமற்றது என்று பரவியிருக்கும் கருத்து எந்த வகையிலும் உண்மையல்ல என்பது தெளிவாகிறது.

பிராய்லர் கோழியில் உள்ள வளர்ச்சி ஹார்மோன்கள்:

பிராய்லர் கோழியானது நாட்டுக்கோழியை விட எந்த வகையிலும் மோசமானதல்ல என்பதால், இதைச் சுற்றியுள்ள மற்ற கட்டுக்கதைகளைப் பற்றி பரிசீலிப்போம். அதாவது ப்ராய்லர் கோழிகள் பெரிதாக வளர்வதற்காக வளர்ச்சி ஹார்மோன்கள் ஊசியின் மூலமாக செலுத்தப்படுகின்றன என்றும், எனவே அவற்றை உண்பதால் நம் உடலும் பாதிக்கப்படும் என்கின்றனர். முதலில் மனித செரிமான அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய எளிய புரிதலை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.  

பிராய்லர் கோழியாக இருந்தாலும் சரி, வேறு எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, நாம் எந்த உணவைச் சாப்பிட்டாலும், அது தானாகவே நம் இரத்த ஓட்டத்தில் கலக்காது. மாறாக, முதலில் உணவு செரிமான அமைப்பில் பிரிக்கப்படுகிறது, அங்கு கல்லீரல், சிறுகுடல் மற்றும் பிற உறுப்புகளும் தேவையான நொதிகளை வெளியிடுகின்றன. உணவு முழுவதுமாக பிரிக்கப்பட்ட பிறகுதான் அது குளுக்கோஸ் மற்றும் பிற உயிரியல் கலவைகள் வடிவில் இரத்த ஓட்டத்தில் நுழைகிறது. அவை புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற மேக்ரோ நியூட்ரியன்ட்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை உருவாக்க ஒருங்கிணைக்கப்படுகின்றன. 

எனவே, பிராய்லர் கோழிகளை வளர்க்கும்போது வளர்ச்சி ஹார்மோன்கள் அல்லது ஆன்டிபயாடிக் மருந்துகள் ஒருவேளை கொடுக்கப்பட்டாலும், அதே கலவைகள் நம் இரத்த ஓட்டத்தில் சேராது. அவை பிரிக்கப்பட்டு நமது உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்படும். மேலும், க்ரிஷ் அசோக் குறிப்பிடுவது போல, பறவையின் வளர்ச்சி ஹார்மோன்களுக்கும் மனித வளர்ச்சி ஹார்மோன்களுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. எனவே வளர்ச்சி ஹார்மோன்கள் கொடுக்கப்பட்ட பிராய்லர் கோழியை ஒருவர் சாப்பிட்டாலும், அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது, ஏனெனில் அந்த ஹார்மோன்கள் அதே வழியில் மனிதர்களுக்கு வேலையும் செய்யாது.

இதையும் தாண்டி, பிராய்லர் கோழி மற்றும் வளர்ச்சி ஹார்மோன் ஊசிகள் பற்றிய இந்த கட்டுக்கதைகள் பற்றி FSSAI(FOOD SAFETY AND STANDARD AYTHORITY OF INDIA)  ஜூலை 2, 2015 அன்று வெளியிட்ட அறிவிப்பில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் செயற்கை மேம்பாட்டாளர்கள் ஆகியவற்றின் பயன்பாடு கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படுகிறது அல்லது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. கோழிகளுக்கு வளர்ச்சி ஹார்மோன்கள் பயன்படுத்துவதில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. உண்மையில், இந்தியாவில் உரிமம் பெற்ற கோழிப்பண்ணையாளர்களுக்கு கோழியை நோயின்றி வைத்திருக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, வளர்ச்சி ஹார்மோன்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. பிற நாடுகளின் கோழிகள் அல்லது பிற இறைச்சிகளை இந்தியாவில் விற்க அனுமதிக்கும் போது கூட, FSSAI அமைப்பு ஏற்றுமதியாளர்களிடம் இந்தியாவின் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்று தெளிவாகக் குறிப்பிடும் சான்றிதழ்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறது. 

எனவே, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பிராய்லர் கோழியில் பறவைகளின் ஆரோக்கியம் மற்றும் மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் வளர்ச்சி ஹார்மோன்கள் உள்ளன என்ற கருத்து சமீபத்திய உணவு அறிவியல் ஆய்வுகள் மற்றும் FSSAI ஆகியவற்றால் முற்றிலும் முறியடிக்கப்பட்டது. உண்மை என்னவென்றால், இந்தியாவில் புரதக் குறைபாடு ஒரு முக்கியப் பிரச்சனையாக உள்ளது, மேலும் பிராய்லர் கோழி எளிதில் கிடைக்க ஏற்ற வகையிலும் மற்ற ஊட்டச்சத்துக்களுக்கு சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. நாட்டில் உணவுப் பாதுகாப்பை அனைவருக்கும் உறுதியளிப்பது கவலையளிக்கும் நிலையில் உள்ள போது, பிராய்லர் கோழி போன்ற உணவுகளைப் பற்றிய கட்டுக்கதைகளை நம்புவது நல்லதல்ல. 

-ஸ்ரேயா கோஸ்வாமி

தமிழில்: மோசஸ் பிரபு