செந்தமிழ், பேச்சுத் தமிழ், கலப்புத் தமிழ் – எதிலே எழுதுவது என்று சென்ற கட்டுரையில் பேசினோம். குறிப்பிட்ட வட்டார உச்சரிப்பு நடையில் எழுதினால் பிற பகுதிகளில் வாசிக்கிறவர்களுக்குப் புரியாமல் போகக்கூடும் என்று கூறியிருந்தது பற்றிச் சில அன்பர்கள் கேள்விகளை முன்வைத்திருக்கிறார்கள். வட்டாரம் சார்ந்த பேச்சு நடையில் சித்தரிப்பது இன்றோர் எழுத்து வடிவமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.
வட்டார மொழியின் சிறப்பையும் தனித்துவத்தையும் வரலாற்றையும் மறுப்பதல்ல அந்தக் கருத்தின் நோக்கம். அந்தச் சிறப்புகளை உயர்த்திப் பிடிப்பதற்காகவென்றே எழுதப்பட்ட கட்டுரைகளும் கதைகளும் வருவதைப் பார்க்கிறோம். அதுவோர் ஈடுபாடு. அப்படி எழுதுகிறபோது, அந்தக் கட்டுரைகளிலோ கதைகளிலோ வரக்கூடிய வட்டார வழக்குச் சொற்களின் பொருளையும், சொற்றொடர்களின் விளக்கங்களையும் தெரிந்துகொள்கிற விருப்பம் பிற வட்டார வாசகர்களுக்கு ஏற்படக்கூடும். அப்படித் தெரிந்துகொள்வதில் ஒரு மகிழ்ச்சியும் உண்டாகக்கூடும்.
அதே வேளையில், குறிப்பிட்ட வரிகள் சரியாகப் புரியவில்லை என்று அடுத்த வரிகளுக்குத் தாவுவார்களானால், தொடர்ந்து வாசிப்பதை நிறுத்திக்கொள்வார்களானால், எழுதியதன் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எழுதியிருப்பதில் உள்ள செய்தியும் கருத்தும் பரவாமல் சுருங்கிவிடும். விரிவான பொது நோக்கத்துடன் எழுதப்படும் ஆக்கங்கள் அப்படிச் சுருங்கிவிடக்கூடாது அல்லவா?
இதை வேறொரு கோணத்திலும் பார்க்கலாம். பொது நோக்கத்துடன் சொல்லப்பட்ட ஒரு கருத்தை உள்வாங்கிக்கொண்ட ஒருவர், தனது வட்டாரம் சார்ந்த மக்களுக்கு அதை எளிமையாகக் கொண்டுசெல்ல விரும்பக்கூடும். அப்போது அவர் அந்த வட்டாரத்தின் தனிச் சிறப்பான பேச்சு நடையில் எழுத முற்படுவார். போராட்ட எழுச்சிக்கான கருத்துகள் இவ்வாறு வட்டார நடையில் பரவுவது, மக்களைப் பெருந்திரளாகத் திரட்டுவதில் பங்களிக்கும். வட்டார மக்கள் முன்னிலையில் அவர்களின் சொல்லாடல்களைப் பயன்படுத்திப் பேசுகிறபோது அவர்கள் நெருக்கமாக உணர்வார்கள். அதே போன்ற விளைவை வட்டார நடை எழுத்தும் ஏற்படுத்தும்.
ஊடக நண்பர் ஒருவர், மேலோட்டமான வாசிப்புக்காக அரசியல் நையாண்டி, திரையுலக வம்புகள் என்று எழுதுகிறபோது பேச்சு நடையையும், ஆழமான விவாதங்களை முன்வைத்து எழுதுகிறபோது இலக்கண நடையையும் கடைப்பிடிக்கிறார். இரண்டு வகைகளிலுமே அவருக்கு வாசகர்கள் இருக்கிறார்கள்.
வட்டார வசீகரங்கள்
ஆக, வட்டாரச் சொற்றொடர்களை இலக்கியச் சுவை கருதி அனைவருக்குமான எழுத்தாக்கத்தில் கையாளுவதற்கும், குறிப்பிட்ட பகுதிவாழ் மக்களுடன் நெருங்குவதற்காகக் கையாளுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. இப்படித்தான் மதுரைத் தமிழின் உரிமையை, நெல்லைத் தமிழின் லயத்தை, கொங்குத் தமிழின் கொஞ்சலை, முகவைத் தமிழின் எளிமையை, குமரித் தமிழின் கூட்டுறவை, நடுநாட்டுத் தமிழின் மாறுபாடுகளைப் பிற வட்டாரங்களின் மக்களும் ரசிக்கிற வாய்ப்புகள் உருவாகின. ஒரு கட்டம் வரையில் “இதெல்லாம் தமிழா” என்று பரிகசிக்கப்பட்ட சென்னைத் தமிழின் தனிச்சிறப்பும் இன்று எடுத்துரைக்கப்படுகிறது. வசீகரிக்கும் இலங்கைத் தமிழ், சிங்கப்பூர்த் தமிழ் நடைகளும் எழுத்தாகின்றன.
வட்டாரத் தமிழிலேயே குறிப்பிட்ட சமூகங்களில் மட்டுமே பேசப்படுகிற சொல்லாடல்களும் புழங்குகின்றன. எழுத எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்தையும், நோக்கத்தையும் பொறுத்து அந்தப் பதங்களையும் பதிவு செய்யலாம். எவ்வளவுக்கு எவ்வளவு அப்படிப்பட்ட பேச்சுகளையும் சொற்களையும் கவனித்து உள்வாங்கியிருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு எழுத்தாக்கத்தின் வெளிப்பாடு உயிரோட்டமாக இருக்கும். குறிப்பாக இந்த உயிரோட்டம் கதை, கவிதை ஆகிய இலக்கியப் புனைவுகளைத் துடிப்போடு வைத்திருக்கும்.
ஒரு கதையில் எழுத்தாளர் சொல்லிக்கொண்டு போவதும் இருக்கும், அதில் வருகிற மனிதர்கள் பேசிக்கொள்வதும் இருக்கும். அப்போது, எழுத்தாளர் கதையைச் சித்தரிக்கிற நடையைக் கூடியவரையில் செந்தமிழிலும் கலப்பின்றியும் வைத்துக்கொண்டு, கதாபாத்திரங்களின் உரையாடலை அவர்களின் பேச்சுத் தமிழில் அமைப்பது பொதுவான வழக்கமாக இருக்கிறது. பிற மொழிகளிலும் இப்படித்தான் இருக்குமென ஊகிக்கலாம்.
ஒரு நீதிமன்றம், மூன்று காட்சிகள்
எடுத்துக்காட்டாக இதோ ஒரு நீதிமன்றக் காட்சி:
விசாரணைக் கூண்டில் நிறுத்தப்பட்ட சங்கிலியை நீதிபதி எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் பார்த்தார். ”என்னப்பா, உம் மேல என்ன குற்றச்சாட்டு வைச்சிருக்காங்கன்னு தெரியுமா,” என்று கேட்டார்.
“தெரியுஞ்சாமி. தகராறு நடந்தப்ப நானுஞ் சேந்து அடிச்சேன்னு கேஸ் போட்டிருக்காய்ங்கெ,” என்று சங்கிலி பதில் சொன்னான்.
“குற்றச்சாட்டை நீ ஒப்புக்கிறியா? நீ அடிச்சது உண்மைதானா,” என்று நீதிபதி தொடர்ந்து கேட்டார்.
“இல்லீய்ங்க. தகராறு நடந்துக்கிட்டிருந்தப்ப அவிய்ங்கெ ஒருத்தனையொருத்தன் அடிச்சிக்கிட்டிருந்தாய்ங்கெ. அந்தப்பக்கமா நா வந்துக்கிட்டிருந்தே(ங்). தெரிஞ்சவிய்ங்களா இருக்காய்ங்களேன்னு கிட்டக்கப் போயி ஏம்பா அடிச்சிக்கிட்டிருக்கீய்ங்கென்னு கேட்டுக்கிட்டுதான் இருந்தே(ங்). அப்ப ஒருத்தன் என்னயும் அடிச்சான்… என்ன எதுக்குடா அடிக்கிறீய்ங்கென்னு கேட்டுக்கிட்டு இருந்தப்ப போலீசுக்காரவுங்க வந்தாய்ங்க. என்னையும் புடிச்சாந்துட்டாய்ங்க…” என்றான் அவன்.
–மேற்படி பத்திகளில் எழுத்தாளர். “விசாரணைக் கூண்டில் நிறுத்தப்பட்ட சங்கிலியை நீதிபதி எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் பார்த்தார்” என்றும், “என்று கேட்டார்” என்றும், “என்று சங்கிலி பதில் சொன்னான்” என்றும், “என்று நீதிபதி தொடர்ந்து கேட்டார்” என்றும், “என்றான் அவன்” என்றும், அந்த நிகழ்வை எழுத்தாளர் சித்தரிக்கிற வரிகள் இலக்கண நடையில் உள்ளன. நீதிபதியின் கேள்விகளும், சங்கிலியின் பதில்களும் அவர்களுடைய பேச்சு நடையில் இருக்கின்றன. நீதிமன்ற நடைமுறையை உணர வைக்கும் இந்த வகைச் சித்தரிப்பைக் கதை, கட்டுரை இரண்டிலுமே கையாளலாம்.
இதையே, ஒருவன் நீதிமன்றத்தில் தான் கண்டதைச் சொல்வது போல எழுதினால் இப்படி அமையும்:
கூண்டுல சங்கிலி ஏறி நின்னானா? அவன ஜட்ஜு எதையும் காட்டிக்காமப் பாத்தாரு. ”ஏம், ஒம் மேல என்னா குத்தம் சொல்லியிருக்காய்ங்கென்னு ஒனக்குத் தெரியுமா,”ன்னு கேட்டாரு. அதுக்கு அவெ(ங்), ““தெரியுஞ்சாமி. தகராறு நடந்தப்ப நானுஞ் சேந்து அடிச்சேன்னு கேஸ் போட்டிருக்காய்ங்கெ,”ன்னு பதில் சொன்னா(ங்). “குத்தத்தை நீ ஒப்புக்கிறியா? நீ அடிச்சது நெசந்தானா,”ன்னு ஜட்ஜு பின்னாலயே கேட்டார். அதுக்கு அவெ(ங்), “இல்லீய்ங்க. தகராறு நடந்துக்கிட்டிருந்தப்ப அவிய்ங்கெ ஒருத்தனையொருத்தன் அடிச்சிக்கிட்டிருந்தாய்ங்கெ. அந்தப்பக்கமா நா வந்துக்கிட்டிருந்தே(ங்). தெரிஞ்சவிய்ங்களா இருக்காய்ங்களேன்னு கிட்டக்கப் போயி ஏம்பா அடிச்சிக்கிட்டிருக்கீய்ங்கென்னு கேட்டுக்கிட்டுதான் இருந்தே(ங்). அப்ப ஒருத்தன் என்னயும் அடிச்சான்… என்ன எதுக்குடா அடிக்கிறீய்ங்கென்னு கேட்டப்ப போலீசுக்காரவுங்க வந்தாய்ங்க. என்னயும் புடிச்சாந்துட்டாய்ங்க…”ன்னா(ங்).
இன்னொரு வகை எடுத்துக்காட்டும் இருக்கிறது:
நீதிமன்ற விசாரணையைப் பேச்சு வழக்கில் சொல்லிக்கொண்டு வருகிற எழுத்தாளர், நீதிபதி வாசித்த தீர்ப்பை எப்படி எழுதுவார்?
எல்லாத் தரப்பையும் ஜட்ஜு விசாரிச்சிட்டு, வக்கீலுகளோட ஆர்கியூமென்டைக் கேட்டுட்டு இப்படித் தீர்ப்புச் சொன்னாரு. “மனுதாரர்கள் எதிர்மனுதாரர்கள் சொன்ன விளக்கங்களையும், வழக்குரைஞர்களின் வாதங்களையும் கேட்டு, சாட்சியங்களையும் ஆதாரங்களையும் நன்கு விசாரித்ததன் அடிப்படையில், நடைபெற்ற மோதலில் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தொடர்பிருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே, குற்றம் சாட்டப்பட்ட சங்கிலியை இந்த நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவிக்கிறது,”ன்னு ஜட்ஜு சொன்னாரு. அதக் கேட்டதும் சங்கிலியோட பொண்டாட்டி அவனைக் கட்டிப்பிடிச்சிக்கிட்டா…
விசாரணை பற்றிய சித்தரிப்பு பேச்சு நடையிலும், தீர்ப்பின் வாசகங்கள் இலக்கண நடையிலும் இருக்கின்றன. நீதிபதி தனது தீர்ப்பை எழுதி வைத்துக்கொண்டு இப்படித்தானே வாசித்திருப்பார்? வழக்கு பற்றிய செய்திகளிலும் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கும். இதுவும் நீதிமன்றச் சூழலுக்கு வாசகர்களை நெருக்கமாகக் கொண்டு செல்லும். அந்த அக்கறையோடு எழுதியவரின் நோக்கம் நிறைவேறும்.
“கட்டுரைத் தொடர் எழுதுகிறபோது ஒவ்வொரு கட்டுரையும் ஒரு சுவாரசிய முடிச்சுடன், புதிருடன் முடியவேண்டுமா? ஒரு கேள்வியைப் போட்டு, அடுத்த கட்டுரையில் அதற்கான பதிலைப் பாப்போம் என்று முடிக்கலாமா?”
– இப்படியொரு கேள்வியும் வாட்ஸ்ஆப் வழியாக வந்திருக்கிறது. அடுத்த கட்டுரையில் அதற்கான பதிலைப் பார்போமே…
– அ.குமரேசன்