அறிவியல்தொழில்நுட்பம்

நுண்ணறிவோடு செயல்படுகிறதா நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI)? – மோசஸ் பிரபு

549 (2)

பாப்பா சின்ஹா

தமிழில்:மோசஸ் பிரபு

நம்மில் பலர் ChatGPT, DALL-E மற்றும் Mid Journey போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்துகிறோம், அந்தக் கருவிகளால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப் பார்த்து வியந்து போகிறோம். ChatGPT உடன் தொடர்புகொள்வது ஒரு உண்மையான மனிதரோடு பேசுவது போல் உணர்வதாக நினைக்கிறோம். நாம் கேட்கும் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கிறது, சிக்கலான தலைப்புகளிலிருந்து கேள்விகள் கேட்டாலும் எளிய வார்த்தைகளில் விளக்குகிறது, கட்டுரைகளை சுருக்கமாக வாசிக்கும் வகையில் கொடுக்கிறது மற்றும் கவிதைகளையும் எழுதுகிறது, ஷேக்ஸ்பியர் எழுதுவது போலவே உரைநடை, கட்டுரைகளையும் எழுதுகிறது. பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை எழுதவும் உதவுகிறது. இது போன்ற பல பயன்பாடுகளை பற்றி அன்றாடம் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு படத்தை உருவாக்க வேண்டுமென்றால் DALL-E மற்றும் Mid Journey ஆகிய செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், எழுத்து வடிவில் நாம் கொடுக்கும் செய்தியை உள்வாங்கி கண்கவர் படங்களை உருவாக்கும் திறன் கொண்டவையாக செயல்படுகின்றன. இதனால் கலைத்திறன் இல்லாதவர்களிடமிருந்து கூட கலைஞர்களை உருவாக்கும் ஆற்றலை AI கொண்டுள்ளது என நினைக்கிறோம். மேலும் செயற்கை நுண்ணறிவுக் (AI) கருவிகள் சட்டம், கணிதம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளிலும் மேம்பட்டுள்ளதாக செய்திக் கட்டுரைகள் வெளியிடப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சி இதழ்களுக்காக ChatGPT உதவியால் எழுதிய முன்னுரைகளை, மனிதர்கள்தான் எழுதினார்கள் என்று விஞ்ஞானிகள் நினைக்கும் அளவிற்கு தெளிவாக இருந்துள்ளது எனக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு குறித்து இடைவிடாத ஊடக விளம்பரம் வந்துகொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் எனவும், வேறு எதிலும் இல்லாத தொழில்நுட்பப் புரட்சியின் மத்தியில் நாம் வாழ்கிறோம் என்ற பொதுவான கருத்தும் இங்கே உருவாக்கப்பட்டு வருகிறது.

AI மனிதர்களுக்கு இணையான நுண்ணறிவு கொண்டுள்ளதா..?

மனிதர்கள் செய்யக்கூடிய பெரும்பாலான பணிகளை மனிதனைப் போன்ற புத்திசாலித்தனத்தோடு ரோபோ போன்ற இயந்திரங்கள் செய்வதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மேலும் அதுபோன்ற கருவிகளை உருவாக்கும் முனைப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறோம். இலட்சக்கணக்கான தொழிற்சாலை வேலைகள் எந்திரமயமாக்கலால் பறிபோகும் எனவும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஒரு செய்திக்கான உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள்(CONTENT CREATOR) உள்ளிட்டவர்கள் மற்றும்  வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், மென்பொருள் (sowftware) துறையில் பணியாற்றுபவர்கள், மருத்துவர்கள் வரையிலான பல்வேறு தொழில் வல்லுநர்களுக்கு இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவிகளால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை மையப்படுத்தி பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் சிறப்பானவை என கூறுவது சரியா..? 

உண்மையில் அவை மனிதர்களைப் போல நுண்ணறிவோடு செயல்படுகிறதா..? 

ChatGPT நாம் கேட்கும் கேள்விகள் அல்லது அதன் தொடர்புகளை முழுமையாகப் புரிந்துகொள்கிறதா..? 

மற்றும் இந்த கருவிகள் அற்புதமான படங்கள் அல்லது கவிதைகளை உருவாக்கும்போது கலைஞர்களைப் போல் சிந்திக்கின்றதா? 

இது போன்ற கேள்விகள் எழுகின்றன. செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் உட்பட பலர் இந்தக் கருவிகள் “நுண்ணறிவின் தீப்பொறிகள்” என்றும் மனிதர்களுக்கு இணையான நுண்ணறிவு மிக்கவை என்றும் கூறிவருகின்றனர். ‘செயற்கை நுண்ணறிவு ஒருமைப்பாடு’(AI SINGULARITY) என்ற நிலையை அடைவதுபற்றி அற்புதமான கூற்றுகள் சொல்லப்படுகின்றன. இது இயந்திரங்களுக்கு இணையாக மட்டுமல்லாமல் மனிதர்களின் நுண்ணறிவை மிஞ்சும் வகையில் செயல்படும் என்கின்றனர்.

மேற்கூறிய இதுபோன்ற மிகைப்படுத்தும் கூற்றுகளால் நாம் ஏமாறக்கூடாது. இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உண்மையில் மனித நுண்ணறிவுக்கு நெருக்கமான எதையும் கொண்டிருக்கவில்லை. AI ஆராய்ச்சியின் தற்போதைய போக்கும் சரி, எதிர்காலத்திலும் சரி, அத்தகைய அறிவார்ந்த அமைப்புகளை உருவாக்க வாய்ப்பில்லை. தற்போது அவை உருவாக்கும் உரை, படங்கள் அல்லது அதன் குறியீட்டைப்(CODE) பார்க்கும்போது,​ ஒன்றைப் பற்றிய புரிதல் அல்லது தேர்ச்சி முழுவதுமாக செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு இல்லை என்று உறுதியாகக் கூறலாம். இந்த வகையான செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், இணையத்தில் பொதுவில் கிடைக்கும் முழு உரை(TEXT) மற்றும் படங்களையும்(IMAGE), ஏற்கனவே சேமித்து வைத்துள்ள பெரிய அளவிலான தரவுகளையும் உட்கொள்வதன் மூலமாக மட்டுமே செயல்படுகிறது. தரவுக்குள் உள்ள புள்ளிவிவர வடிவங்களைக் உள்வாங்கிக்கொண்டு, ஒரு சொல் அல்லது வாக்கியத்தின் ஒரு பகுதிக்குப் பிறகு எந்த வார்த்தை அல்லது சொற்றொடர் வரக்கூடும் என்பதை அனுமானித்து வெளியிடுகிறது. அவை உருவாக்கும் உரை(text) அல்லது படங்கள், ஒருவகையான ரீமிக்ஸ்(REMIX) வடிவம் எனலாம். செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் ஒன்றைப் புரிந்துகொள்கிறது அல்லது அதில் தேர்ச்சி பெற்றிருக்கிறது என்று நாமும் நம்பும்படி திறம்பட மறுவடிவமைப்பு செய்து நம்மை முட்டாள் ஆக்குகிறது.

மேற்கூறிய கூற்றுகளால் இந்தக் கருவிகள் பயனுள்ளவை அல்ல என்றும் அல்லது ஈர்க்கக்கூடியவை அல்ல என்றும் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டியதில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கு உதவுவதில் அவை நமக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை நிச்சயம் மனிதர்களுக்கு இணையான ‘நுண்ணறிவு மிக்கவை’ அல்ல, செயற்கை நுண்ணறிவை முழுவதுமாக நம்புவது தவறான மற்றும் சில நேரங்களில் மோசமான விளைவுகளுக்கும் வழிவகுக்கும். எடுத்துக்காட்டாக, தொலைபேசியில் தட்டச்சு செய்யும் போது,​​​​ நமது தொலைபேசியில் உள்ள தானியங்கு நிரப்புதல் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் திருத்தம் செய்யாமல் தானியங்கு நிரப்புதல் பரிந்துரைகளை முழுமையாக அப்படியே பகிர்ந்தால், தட்டச்சுப் பிழைகள் ஏற்படவும் அல்லது எதிர்பாராத தவறான செய்திகள் அனுப்புவதற்கும் வழிவகுக்கும். இந்த வழிமுறையை முழுமையாக நம்பாமல் அல்லது உண்மையிலேயே அதை புத்திசாலித்தனமாக நினைக்காமல் ஒரு உதவியாகப் பயன்படுத்துகிறோம் அல்லவா. அதே போல் தான் செயற்கை நுண்ணறிவு கருவிகளில் பெரும்பாலானவை இந்த வழிகளில் சிந்திக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். கட்டுரைகள் அல்லது பத்திகளை சுருக்கமாக அல்லது மறுவடிவமைப்பதிலும் தெளிவற்ற மற்றும் சிக்கலான முறையில் எழுதப்பட்ட உரையை எளிதாக்குவதற்கும் ChatGPT பயனுள்ளதாக இருக்கும், ஆனால் இது எந்தவொரு தலைப்பிலும் அதிகாரப்பூர்வமான உறுதியான பதில்களை வழங்காது. அது வெளியிடும் தகவல்களுக்கு ஆதாரமும் இருக்காது. அத்துடன் செய்திக் கட்டுரைகள் மற்றும் ஆய்வுத் தாள்களை எழுதுவதில் மனிதர்களைப் போல் சரியாக சிந்தித்து எழுதாது. கோபிலட்(copilot) போன்ற குறியீட்டை உருவாக்கும் கருவிகள் மிகவும் பயனுள்ள கருவிகள். ஆனால் மென்பொருள் வல்லுநர்கள் யாருமே கவனமாக மதிப்பாய்வு செய்யாமல் உருவாக்கப்பட்ட குறியீட்டை அப்படியே எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்தக் கருவிகள் பற்றி மிகைப்படுத்தப்பட்ட கருத்துகள் பரப்பப்படுகின்றன. மற்றும் செலவுகளைக் குறைத்து அதிக இலாபம் பார்க்கும் இன்றைய வணிக உலகில் இந்தக் கருவிகள் மனிதர்களுக்கு மாற்றாக முழுமையாகவோ அல்லது பகுதியளவோ பயன்படுத்த பெருமுதலாளிகள் முயற்சி செய்கின்றனர். இது மோசமான தரத்திற்கும் சில சமயங்களில் முற்றிலும் தவறான பாதைக்கும் வழிவகுக்கும். மேலும் தவறான தகவலைப் பரப்புவதற்கும் மக்களை மோசமாகக் கையாளுவதற்கும் பயன்படுத்தக்கூடும். உண்மைக்கு மாறான கானொலிகள், போலி அறிவியல் கருத்துக்கள், போன்றவற்றை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. இது போன்ற முயற்சிகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

உயர் தொழில்நுட்பத் திருட்டு:

செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய கலை, இலக்கியம் சார்ந்த படைப்புகளில் நெறிமுறை சார்ந்த மீறல்களும் உள்ளன. AI வெளித்தோற்றத்தில் புதுமையான கலைத்திறன்களை உருவாக்குகிறது. அதே வேளையில், அது ஏற்கனவே இருக்கும் படங்கள் மற்றும் கலைப்படைப்புகளின் மாதிரியிலிருந்துதான் அதை வெளியிடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், இத்தகைய கலை என்பது ஒருவிதமான உயர் தொழில்நுட்பத் திருட்டுக்கு சமம். ஏனெனில் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் மாதிரிகள், படைப்பாற்றல் திறன் கொண்டவை அல்ல. ஏற்கனவே உருவாக்கப்பட்ட படைப்பிலிருந்து எந்த அனுமதியும் இல்லாமல் அதை பயன்படுத்திக்கொள்ளும் ஒருவிதமான தொழில்நுட்பத் திருட்டு என்றுதான் கூற முடியும்.

எதிர்மறையான விளைவுகள்:

நாம் இதுவரை விவாதித்த செயற்கை நுண்ணறிவு பற்றிய தகவல்கள், செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் (GENERATIVE AI) வகைக்குள் அடங்கும். மற்றொரு வகையான செயற்கை நுண்ணறிவு கருவிகளும் உள்ளது. இது புதிதாக எதையும் உருவாக்காமல், முடிவுகள் அல்லது கணிப்புகளைச் செய்யப் பயன்படுத்தப்படும். இந்த வகையான AI நிரல்கள் கடந்த காலத் தரவுகளையும் புள்ளிவிவரத் தொடர்புகளையும் (STASTICAL CORRELATION) பயன்படுத்தி, எதிர்கால விளைவுகளைக் கணிக்கவும் அல்லது விஷயங்களைக் கண்டறிந்து வகைப்படுத்தவும் பயன்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல வணிகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சேவைகளில் இவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் பயன்பாடுகள் குறித்து ஏற்கனவே ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. மக்களுக்குத் தேவையான காப்பீட்டுக் கோரிக்கைகள், மருத்துவம் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் பலன்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் ஆகியவை கிடைக்காமல் செய்யவும் வழிவகுக்கிறது. அமெரிக்காவில் உள்ள சிறுபான்மையினரை சிறையில் அடைப்பதற்கு AI கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. போலியான புள்ளிவிவரத் தொடர்புகளின் அடிப்படையில் சிறுபான்மையின பெற்றோர்களின் உரிமைகள் திரும்பப் பெறப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன. இந்த AI அமைப்புகளின் அடிப்படையில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிப்பது அல்லது சரியான மருத்துவ வசதியை பராமரிப்பது மறுக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் சாதகமான அம்சங்களும் இருந்தாலும் மறுபக்கம் பிரச்சனைக்குரியதாகவும் உள்ளது. இவை கண்டறியப்பட்டு எதிர்க்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் தரவுகள் பெரும்பாலும் அறிவியல் பூர்வமாகக் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதாலும், ஒரு நிகழ்வு குறித்து முடிவுகளை எடுப்பதற்காக இந்த அமைப்புகள் உருவாக்கும் புள்ளியியல் தொடர்புகள் பொதுவெளியில் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதாலும், அவற்றின் பின்னணியில் உள்ள ஆய்வுகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளன. பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களால் செலவுகளைக் குறைக்கவும், வாடிக்கையாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான பலன்களை மறுக்கவும் பயன்படுத்தப்படுத்துகிறது.

சமூக ஊடகத்தில் எந்தத் தலைப்பிலான உள்ளடக்கம் அதிகம் பரவ வேண்டும் என்பதைத் தீர்மானிக்க சமூக ஊடக நிறுவனங்களால் AI அல்காரிதம்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் உள்ளடக்கத்தை மதிப்பீடு செய்யவும், அதாவது எந்தப் பதிவுகள் மற்றும் படங்கள், நாம் வகுத்துள்ள கொள்கைகளை மீறுகின்றன என்பதைக் கண்காணித்து, அவற்றை நீக்க வேண்டும் என்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தேவையற்ற வெறுப்புப் பேச்சுகளைக் மத சாதி வெறிகளைத் தூண்டும் பதிவுகளை கண்டறிவதில், இவை போதிய ஆர்வம் காட்டாது. மாறாக, அரசியல் ரீதியாக நியாயமான விமர்சனப் பதிவுகள் நீக்கப்படும். இது ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படவே அதிக வாய்புள்ளது. சமூக ஊடக செய்திகளை ஒழுங்குப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவை நேரடியாக தணிக்கை செய்யப்படுகின்றன. காசாவில் இஸ்ரேலிய இராணுவம் நடத்தும் இனப்படுகொலை போன்ற மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் செய்திகள் தவிர்க்கப்படும். ஆனால் போலிச் செய்திகளைப் பரப்புவதன் மூலமும், வெறுப்பு நிறைந்த பதிவுகளை உருவாக்குவதன் மூலமும் அதிகார அமைப்புகளுக்கு ஆதரவாகப் பயன்படும். சமூக ஊடகத்தின் ‘தணிக்கை வழிமுறைகள்’ என்ற பெயரில் முன்பு ஏற்படுத்திய பாதிப்புகளைப் பற்றி நாம் ஏற்கனவே நன்கு அறிவோம். அது மேலும் தொடர செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பயன்படுகின்றன.

யதார்த்த உலகில் உடல் ரீதியான வேலைகள் செய்யும்போது, அதில் பல சிக்கலான தன்மை, சீரற்ற தன்மை, மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகள் ஆகியவற்றைக் சந்திக்க நேரிடும். உண்மையில் அது போன்ற கடினமான வேலைகள் செய்வதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. மேலும் இதை பெருமளவு சாதாரண மக்கள் குறைந்த கூலிக்கு செய்கிறார்கள். அதனால்தான் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை தானியக்கமாக்குவதில் (AUTOMATING) முன்னேற்றம் மிகவும் மெதுவாக உள்ளது. குறிப்பிட்ட ஆட்டோமொபைல் உதிரிப் பகுதிகளை இணைப்பது போன்ற ஒரே மாதிரியான திடமான பொருள்களை உள்ளடக்கிய நிலையான தொடர்ச்சியான பணிகளை மட்டுமே ரோபோக்களால் கையாள முடியும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்பட ரோபாக்களால் இயலாது. அதனால்தான் ரோபாக்களைக் கொண்டு இயக்க, ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் என்ற திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மற்றும் அதன் ஆராய்ச்சிக்கான பெரும் அளவு நிதியுதவி செய்த பிறகும் அதுபற்றி பல வருடங்களாக விளம்பரப்படுத்தப்பட்ட பிறகும் கூட, முழு தானியங்கு வாகனம் இன்னும் சாத்தியமாகவில்லை. எதிர்காலத்தில் சாத்தியமாகுமா என்பதும் தெரியவில்லை. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட உடல் ரீதியான வேலைகள் மாற்றப்படுவதற்குப் பதிலாக, பேச்சு, மொழி, மொழிபெயர்ப்பு அல்லது கால் சென்டர் வேலைகள் போன்ற குறிப்பிட்ட மூளை உழைப்புக்கான வேலைகள் AI ஆல் மாற்றப்படுகின்றன என்பது சற்று முரண்பாடாக இருக்கிறது.

இறுதியாக:

மேற்கூறிய செயற்கை நுண்ணறிவு செயல்முறையின் பலவீனங்கள் மூலம் செயற்கை நுண்ணறிவு என்பதே மோசமானது அல்லது பயனற்றது என்ற முடிவுக்கு வர முடியாது. பல செயற்கை நுண்ணறிவு நிரல்கள்(PROGRAMS) நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். நாம் அதன் வரம்புகளை அறிந்து சரியாகப் பயன்படுத்தினால் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு குறித்து அத்தொழிற்துறையினர் மற்றும் ஊடகங்கள் அதீத பெருமித பிம்பங்களை உருவாக்குகிறார்கள். செயற்கை நுண்ணறிவு நிச்சயமாக நமது எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்காது. அதே போல் நமது வேலைகள் அனைத்தையும் பறித்துவிடும் என்றும் மனிதகுலத்தை அழிக்கும் அல்லது அடிமைப்படுத்தும் போன்ற அறிவியல் புனைக்கதைகளும் சொல்லப்படுகின்றன. இது நிச்சயமாக எந்தக் காலத்திலும் நடக்காது. ஆனால் செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகள் போதுமான சோதனை மற்றும் கண்காணிப்பு இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது என்பது மட்டும் உண்மை, அவை வெளிப்படையாக இல்லை. மக்களுக்கான நலத்திட்டங்கள், மருத்துவமனை சேவைகள், காப்பீடு கோரிக்கைகள் போன்ற மக்களுக்கு உரிமையுள்ள சேவைகளை பெறுவதற்கு சிரமத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இத்தகைய தெளிவற்ற முறையில் வெவ்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு, விழிப்புணர்வுடன் கண்காணிக்கப்பட வேண்டும். மற்றும் இதனை ஒழுங்குபடுத்துவதற்கு நாம் அரசாங்கங்களைத் நிர்பந்திக்க வேண்டும்.

PEOPLE DEMOCRACYயில் வெளியான கட்டுரை

பாப்பா சின்ஹா

தமிழில்:மோசஸ் பிரபு