இன்றைய பொழுது எனக்கு இரயில் பயணமாய் கடந்தது. பயணம் நடுவே டீ, காபி, சுண்டல் என்ற சத்தங்களை அவ்வப்போது கேட்டவண்ணம் இருந்தேன்.
நமது இரயில் பயணங்களை நம்பி, பலரின் வாழ்வும் நகர்கிறது. இரயில் வேகத்திலில்லை. ஆமைவேகத்தில்…
இதமான குரலில் எதிர்பாராதவிதமாய் ஒருபாடல்…
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவனென்று போற்றுவோம்
அன்னை வடிவமாக
அன்பின் உருவமாக….
என அப்பாடல் நீண்டது. பாடும் குரல்தேடி தலைநிமிர்கையில் பார்வையற்றா வயதான ஒரு நபர் அங்கு கைகள் நீட்டியபடி வந்தார். அவரின் மனம் இருட்டுக்குள் நின்று இறைவனைத்தேட, கைகளோ மனிதர்களைத்தேடியது… நானும் இன்னும் சில்லறையாகத்தான் இருக்கிறேன் என்பதை உணர்த்திடும்படி இரண்டு்சில்லறைக் காசுகளை அவருக்கு அளித்தேன்.
சிறிது நேரத்தில் அவரைப்போலவே பார்வையின்றி அதே வயது மதிக்கத்தக்க நபர் கல்லமிட்டாய், இஞ்சிமரப்பா என குரல்கொடுக்க, அவரிடம் 20ரூபாய் கொடுத்து 10 ரூபாய்க்கு கல்லமிட்டாய் வாங்கினேன். மீதம் 10 ரூபாயை சரியாக எடுத்துத்தந்தார். அசந்துபோனேன் நான்.
பார்வைற்ற சூழலிலும் வாழவேண்டி இருக்கின்ற நிலையில் தங்களை தகவமைத்துக்கொள்ளப் பழகிவிட்டார்கள்.
இன்னும் சிறுமிகள், சிறுவர்கள், முதியவர்கள் என கைகளில் ஏதோ ஒரு பொருளைவைத்துக்கொண்டு தங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக உழைத்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு அப்போது காக்கா பாட்டிக்கதை நினைவில் வந்துபோனது.
பாட்டி வடைசுட்டக்கதையினை சீனர்கள் வேறுவிதமாய் சொல்லியுள்ளனர்.
இரவலாய் பாட்டியிடம் வடை கேட்காமல் அங்குமிங்கும் கிடக்கும் காய்ந்த விறகுகளை பொறுக்கியெடுத்து கொடுக்கும் அந்தக் காகம். பாட்டிக்கு அடுப்புமூட்ட உதவிய நிலையில் காகம் பாட்டியிடம் உழைப்புக்கான கூலியாய் உரிமையுடன் எனக்கு ஒரு வடையைக்கொடு என்று கேட்கும்…..
எந்த சூழ்நிலையிலும் யாசகமின்று எதையும் உழைத்து பெறவேண்டும் என்பதை கதை உணர்த்தும்.
இங்கும்கூட வெறும் கைகளை மட்டும் நீட்டாமல் பொருள்களை தாங்கிய கைகளோடு உழைப்பை மட்டுமே மூலதனமாய்க் கொண்டு சிலர் வந்தும் போய்க்கொண்டும் இருந்தனர்.
அவர்கள் எந்த இடத்திலும் நம்மை நாடிவந்து நம்தேவைகளை பூர்த்தி செய்யும் உழைப்பாளர்கள். இன்னும் வெளியே ஆயிரமாயிரம் என உலகமெங்கும் நிரம்பிக்கிடப்பவர்கள். நமக்கான உணவு, உடை, இருப்பிடம், கேளிக்கைகள், தேவைகள், விருப்பங்கள் என எல்லாவற்றிலும் அவர்களே நம்முடன் பயணிக்கிறார்கள்.
காலநேரம் பார்க்காத, கஷ்டம் நஷ்டம் அறியாத உழைப்பாளர்களின் வாழ்வு ஏனோ வறுமையும், நோயும், இழப்பும், இழிவும் என பீடிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மட்டுமில்லாமல் வர்க்கமுறையில் கீழினும் கீழாய் கிடக்கும் நிலையில் இதுவே தர்மம், இதுவே கடவுளின் படைப்பு என்று மதங்கள் நியாயம் கற்பிக்கப்பட்ட நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
ஒன்று தெரியுமா?
முதல் உயிரிலிருந்து இன்றைய மனிதர்கள்வரை நீடித்த வாழ்விற்காய் கடுமையாக போராடின. சூழ்நிலைக்கேற்றவாறு சிறு மாற்றங்களை இயற்கையாகவே தகவமைத்துக்கொண்டன. அந்த போராட்டம்தான் உழைப்பு…
வாலுள்ள குரங்குகளின் பெருமளவு எண்ணிக்கை மரங்களில் அதிகரிக்க அங்கு வாழிடம் மற்றும் உணவுப்பற்றாக்குறை ஏற்பட வலிமையான குரங்குகளிடம் போராடமுடியாத குரங்குகள் நிலத்திற்கு இரங்கின. வாழவேண்டி கம்புகளை முன்னங்கால்களில் பற்றி கீழ்நோக்கிய மரக்கிளைகளில் உள்ள பழங்களை அடிக்க முற்பட்டு உணவை பெற்றதும், பற்றாக்குறைக்கு அதே முன்னங்கால்களைக் கொண்டு மண்ணில் புதைந்திருந்த பழக்கொட்டைகள், கிழங்குகளை தோண்டி சாப்பிட முயற்சி செய்தது கைகள் தோன்ற, நிமிர்ந்து நிற்க காரணமாயின. குரங்கு மனிதனாக மாற முக்கியமானதாய் இருந்தது உழைப்பல்லவா!
மால்தஸ் என்பவர் மக்கள் தொகை பெருக்கம் தான் மக்களிடையே இடையறாது நடக்கும் போராட்டங்களுக்கான காரணம்’ என்றும் ‘உணவுப் பற்றாக்குறையும், நோய்களும் தவிர்க்கவியலாமல் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கின்றன’ என்றும் கூறியிருந்தார். அதாவது ஏழைகள் பட்டினியில் வாடுவதும், நோய் வந்து சாவதும் இயற்கையின் (அல்லது இறைவனின்) திருவிளையாடல் என்று ஆளும் வர்க்கங்களின் சுரண்டலை நியாயப்படுத்துவதற்காக மத போதகராக இருந்த மால்துஸ் மக்கள் தொகை பற்றிய தனது கோட்பாட்டை தவறாக முன் வைத்திருந்தார். முதலாளித்துவமும் அதற்கு முந்தைய வர்க்க சமூகங்களும் நிலவிய காலகட்டங்களில் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான மோதல்களும், உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலும் இயல்பான வளர்ச்சிக்கான காரணிகள் என்று கூறுவதுதான் மால்துசின் நோக்கம்.
ஆக எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட அளவில் சரியாக எல்லாம் நடக்கிறது என்பதையும், எதிர்ப்பது கடவுளுக்கு எதிரானது என்பதையும் பல மால்தஸ்க்கள் சொன்னார்கள். எதிர்ப்புகளை தடுத்தார்கள். எல்லாம் படைத்த கடவுளுக்குத்தெரியும் யாரை எப்படி வைக்கவேண்டுமென்று, என்ற நியாயமில்லாத தத்துவங்களை பல மால்தஸ்கள் முன்வைத்து பேசினார்கள்.
நியாயம் கற்பித்தார்கள்.
இன்றும் இந்த மால்தஸ்களின் வகையராக்கள் அரைத்த மாவையே அரைப்பதை பார்க்கமுடிகிறது…
இந்த சூழ்நிலையில் இயற்கை தன்பங்கை செய்தது. டார்வின் என்ற உன்னதமான இயற்கையின் பிள்ளை 1809 இல் பிறந்தது. கடிவாளம் போட்டுக்கொண்டு வாழாத பிள்ளை. இயற்கையோடு விளையாடிய பிள்ளை. வண்டுகளையும், பூச்சிகளையும், தொட்டுப்பார்த்து பரவசப்பட்ட பிள்ளை. பறவைகளையும், விலங்குகளையும் கூர்ந்து கவனித்து அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை இயற்கையின் வளர்ச்சியை அறிவால் ஆராய்ந்து பார்த்த பிள்ளை…
சார்லஸ் சிறுவனாக இருந்தபோது, அவர் பள்ளிக்குச் செல்லாமல், பெரும்பாலும் ஊர் சுற்றப் போய்விடுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்தார். தட்டான், மண்புழுக்கள், பட்டாம்பூச்சி, வண்டுகள், அணில்கள், புறாக்கள் என பல விலங்குகளுடன் தன் பொழுதைக் கழிப்பார். விலங்குகளிடம் அன்பாக இருப்பார். இதனால் தந்தைக்கு சார்லசின் மேல் ஏகக் கோபம். “உனக்குப் படிக்கவே பிடிக்கலை; படிப்பும் ஏறல; நாய் பின்னாடி ஓடுறது; எலி பிடிக்கிறது; இதுதான் உனக்குபிடிச்சது. உனக்குத் தெரிஞ்சது. அவ்வளவுதான். இதனால் நம்ம குடும்ப மானமே போகுது!” எனத் தன் மகனைக் கடித்து கொள்வார் தந்தை. ஆயினும் அதுவே அவருக்கான மிகச்சிறந்த கற்றலாய் அமைந்தது.
இயற்கையோடு ஒன்றியிருந்த டார்வினைப் போல இக்கால குழந்தைகளை கட்டாயம் அவ்வாறே இருக்கச்செய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். கல்விக்கூடங்களும் அதற்கே வழிவகை செய்யவேண்டும். எந்தக்குழந்தை இயற்கையோடு சூழலியலோடு ஒன்றியிருக்கிறதோ அந்தக் குழந்தையே கற்கிறது. அந்தக்குழந்தையே மகிழ்ச்சியை முழுமையாய் அனுபவிக்கிறது. அந்தக்குழந்தையாலே இந்த சமூகத்திற்கான நீண்ட பயனைத் தந்துவிடமுடியும். இதற்கு்மிகச்சிறந்த உதாரணம் நம் சார்லஸ் டார்வின் ஆவார்.
பள்ளிக்கூடங்கள் மக்கு என்று சொன்னாலும்கூட இயற்கைமீதான அவரது ஆர்வமும் ஆராய்ச்சி மனப்பான்மையும் அவரை நாம் என்றைக்கும் கற்கும் ஆசானாய் உயர்த்தியது.
தந்தை ராபர்ட் டார்வினு்க்கு தன்குடும்பத்தாரைப்போல் அவரையும் ஒரு மருத்துவராகப் பார்க்க ஆசைகொண்டார். அதில் டார்வினுக்கு நாட்டமில்லாத நிலையில் கிறித்தவ பாதிரியாராக மாற்ற ஆவல்கொண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்தார். அவர் விருப்பப்படி ஒருமுழுபாதிரியாராகவே மாற்றியும்விட்டார். ஆயினும்
டார்வினின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஒன்று 1831 இல் ஏற்பட்டது.
அதற்கு காரணம் HMS பீகிள் என்கிற கப்பல் பயணம் ஆகும். அந்தக் கப்பல் பயணத்திற்கான முதல் கேப்டன் தற்கொலை செய்துகொள்ள, இரண்டாம் கப்பல் கேப்டனாய் பிட்ஸ்ராய் என்ற முதியவர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஒரு உதவியாளர் தேவைப்பட்டார். அதற்காக டார்வின் பேராசிரியர் ஹென்ஸ்லே மூலம் சம்பளமில்லாப் பணியாளராக டார்வின் அக்கப்பலுக்கு சென்றார்.
பணத்தைவிட பயணத்தில் வெவ்வேறு சூழலில் வாழும் உயிரினங்களைப்பற்றி தெரிந்து கொள்ளமுடியும் என்ற பேரார்வமே அந்த பயணத்தை எந்த எதிர்பார்ப்புமின்றி ஏற்றுக்கொள்ள வாய்ப்பாக இருந்தது.
ஏடுகளைப் புரட்டிக் கற்றவருக்கு நேரடியாகவே இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஆர்வம் மிகுதியாய் இருந்ததே இதற்கு காரணம்…
5 வருடப்பயணத்தில் வெவ்வேறு சூழலில் அதற்கேற்ற தகவமைப்புடன் வெவ்வேறு வகையான உயிரினங்களைப் பார்க்கிறார். அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பிட்டு ஆராய்கிறார்.
டார்வின், ஐந்தாண்டுகளில் பல ஆயிரம் கிலோமீட்டர் கடல்வழியாகவும், 3,200 கிலோமீட்டர் நிலவழியாகவும் பயணித்து நிலஅமைப்பு, தாவர, விலங்குகள் பற்றிய சுமார் 1,700 பக்கங்களுக்கும் மேற்பட்ட குறிப்புகளுடன், 800 பக்கங்கள் கொண்ட நாட்குறிப்புகள், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட எலும்புகள், உயிரின மாதிரிகள், புதைபடிவங்களை சேகரித்திருந்தார்.
டார்வினுக்கு முன்னர் பரிணாம வளர்ச்சியை முன்வைத்த அறிஞர்கள் அனைவரும் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டும், பரிணாமம் நீண்ட-காலப்போக்குடைய விதிகளால் தீர்மானிக்கப்படுவதாகவும் விளக்கினர். ஆனால் டார்வின் இயற்கையில் கிடைத்த சான்றாதாரங்களைக் கொண்டு உயிரினங்களின் தோற்றத்தை முரணின்றி விளக்குவதன் மூலம் பரிணாமக் கொள்கையை வந்தடைந்தார்.
உயிரினங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டதன் மூலம் தமது உடல்கூறுகளில் சிறுசிறு மாற்றத்தைப் பெறுகின்றன. அவை நிலைத்து வாழ அந்த சிறு மாற்றம் அந்த தகவமைப்பு உகந்தது எனில் அது தலைமுறை தலைமுறையாக தனது சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன.
பூமியின் தோற்றமானது 460 கோடியாகும்.360 கோடி ஆண்டுகளுக்கு முன் முதல் உயிரினம் தோன்றியது. சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வரை பூமியில் பெரும்பாலும் நுண்ணுயிர்களே அதிகம் வாழ்ந்தன.
டைனோசர்கள் 5 லிருந்து 6 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி பிறகு அழிந்ததாக அறிவியலாளர் ஓவன் எடுத்துரைத்தார்.
சுமார் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய வால் குரங்குகள், அதன்பிறகு 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வாலில்லா குரங.கு வகைச்சார்ந்த கொரில்லாக்கள், 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிம்பன்சிகள், 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ எபிலிஸ் (ஹோமோ என்றால் நேராக நிற்றல்), 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ எரக்டஸ் என்ற ஆதிமனிதன், அதற்குப் பின்னால் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ சேபியன்ஸ் எனும் மனிதர்கள், 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இன்றுவரையுள்ள ஹோமோ சேபியன் சேபியன்ஸ் வகையை சார்ந்த நாம் என பரிணாம வளர்ச்சி இவ்வாறு வகைப்படுத்துகிறது.
நமக்கும் சிம்பன்சிக்கும் உள்ள மரபணுக்கள் குறியீட்டில் உள்ள வித்தியாசம் வெறும் 0.002 மட்டுமே ஆகும். இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பம் இவ்வாறு பரிணாமக்கொள்கையை உறுதிப்படுத்துகிறது.
30 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த லூசி என்ற பெண்மனிதக்குரங்குதான் நமக்கான தாய் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
நவீன அறிவியலின் படி செல்களிலுள்ள மைட்டோகாண்ட்ரியா மூலம் நமது தாய்வழியை நன்கு அறியமுடியுமெனவும் இன்று கண்டறிந்துள்ளார்கள்.
அதன்படி செய்யப்பட்ட ஆய்வுகள் நமக்கு சொல்வதெல்லாம் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் சாதி மதம் அறியாது நாம் எல்லோருக்குமான ஆதித்தாய் வாழ்ந்தாள் என்பதுதான்….
இப்படி ஒரு மரத்தின் கிளையாய் நாம் அனைவரும் வந்துசேர்ந்தோம் என்ற உண்மையை அறிவியல் ஆய்வுகள் பல நமக்கு சந்தேகத்திற்கு இடமின்றி எடுத்துரைக்கும் சூழலிலும்கூட, சோம்பேறிகள் சிலரின் சுயநலத்தால் பிற்போக்குத்தனத்தால் நாளும் உழைத்து உழைத்து இந்த மண்ணைப் பொன்னாய் மாற்றிய மனிதர்களை அதே உழைப்பைக்கொண்டு, தொழிலைக்கொண்டு சாதிக்குள் அடைத்து நிறுத்தியது கொடுமையல்லவா!
அதற்கு மதங்கள் காவலிருப்பது மடமையல்லவா!
உழைப்பாலே பரிணாமத்தின் உச்சமடைந்த மனிதன் அதே உழைப்பைக்கொண்டு பிளவுப்பட்டுகிடப்பது இழுக்கல்லவா!
உழைப்பின் பயனை ஒருசிலர் மட்டும் அனுபவித்து கொழுத்துபோனதோடு நிற்காமல், உழைப்பவன் நியாயமான கூலிகேட்டதற்காய் கீழத்தஞ்சையில் 44 பேரை உயிருடன் கொளுத்திய கொடுமை பெரும் அநீதியல்லவா!
உலகமெங்குமே உழைப்பவன் அடிமையாய் இருப்பதும், தன் உழைப்புக்கேற்ற கூலியை பெறாமலிருப்பதும், எதற்காக உழைக்கின்றானோ, அத்தகைய நிம்மதியான வாழ்வை அடையாமலிருப்பதும் கண்கூடு….
தொழில்நுட்பக்காலத்தில்கூட மனித மலங்களை அள்ளுகிற, உழைப்புக்கேற்ற எந்த பாதுகாப்புவசதியுமின்றி பிணமாய்சரிகிற, சகமனிதர்களைப்பற்றி சிந்திக்காத கவலைகொள்ளாத மனிதனானவன் பட்டங்கள் பலபெற்று மெத்த….. படித்தவனாயினும் அவன் ஒருபோதும் விலங்குகளுக்கு மேலானவனல்ல…
இறுதியாய் ஒன்று….
இந்த பூமியின் நலனுக்கு
சூரிய வெளிச்சம் மட்டும் போதாது
மனிதனுக்குள் சுயவெளிச்சமும் தேவை…
அந்த சுயவெளிச்சம் வழிபடும் ஜோதியாய் அல்ல
சிந்திக்கும் அறிவாய்…
டார்வின் பற்றி எதற்காகத் தெரிந்துகொள்ள வேண்டும்? இந்தக் கட்டுரை அதற்கான பதிலையும் தருகிறது, அவரைத் தொடர்ந்து நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற தெளிவையும் தருகிறது.
ஆஹா நண்பர் மணைத்துணை நாதன் அவர்களின் கட்டுரை மிக மிக சிறப்பு. வாசிக்கும் யார் ஒருவரும் கவனச் சிதறலின்றி வாசிக்கும் தன்மையிலான கட்டுரை. கையேந்தி வந்தவர் முன் நண்பர் ‘நானும் சில்லரையாக நின்றேன்’ என்கிற இடம் மக்களின் மீதான தீராப் பற்று வெளிப்படுவதை அறியலாம். பரிணாம வளர்ச்சியில் மனிதர்களிடையே ஊடாடி இருக்கும் அரசியலை மிக நேர்த்தியாக கோடிட்டு காட்டிய விதம் மிகவும் அசத்தல். நண்பருக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள். ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கான அத்தனை வசீகரமும் அவருடைய எழுத்தில் வெளிப்பட்டது. நண்பா தொடர்ந்து எழுதுங்கள் நண்பா!!