அரசியல்இந்தியா

தொழிற்சாலைகளில் சங்கம் தேவையா?

549 (3)

– ஶ்ரீஹரன் வெங்கடேசன்

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். காலையில் எழுந்து பல்துலக்கப் பயன்படுத்தும் பல்பொடி முதல், இரவு படுக்கும்போது பயன்படுத்தும் கொசுவர்த்திச் சுருள் வரை, அந்தப் பொருட்கள் அனைத்துமே ஏதோவொரு ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டுகின்றன. பல கைகள் மாறி, நம் கைகளை வந்து அடைகின்றன. இந்த ஆலைகளை நிறுவுவதற்கான முதலீட்டுப் பணத்தைப் போடுபவர்தான் முதலாளி. அப்படியெனில் தொழிலாளி என்பவர் யார்? பொருள் வடிவமைப்பு, தயாரிப்புத் திட்டமிடல், ஆராய்ச்சி  மற்றும் மேம்பாடு போன்ற பல துறைகள், ஒரு பொருளின் உற்பத்திக்கான ஆரம்பகட்ட பணிகளில் பங்காற்றினாலும், அந்த பொருள் முழுமை பெருவது என்பது உற்பத்தியின் போதுதான். ஒரு பொருளின் மதிப்பு என்பது உற்பத்தியின் போதுதான் உருவாகிறது. இங்குதான் தொழிலாளர்களின் பங்கு பிரதானமாக ஆகிறது.

தொழிற்சாலை செயல்படும் விதம்:-

ஒரு தொழிற்சாலையில் ஏன் தொழிற்சங்கம் தேவை என்று தெரிந்துகொள்ள, முதலில் ஒரு தொழிற்சாலை எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து கொள்வது மிக அவசியம். ஒரு கார் தொழிற்சாலையை உதாரணமாக எடுத்துக்கொண்டு, உற்பத்தித் துறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒரு காரை உருவாக்க பல பேரின் மூளை உழைப்பும் உடல் உழைப்பும் சேர்ந்த ‘கூட்டுழைப்பு’ தேவைப்படுகிறது. 19 ஆம் நூற்றண்டின் இறுதிவரை கார் உற்பத்தி எப்படி நடந்தது என்றால், ஒரு காரை நிறுத்தி வைத்து, அதன் மீது பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பை செலுத்துவார்கள். தொழிலாளர்கள் ஒரு காரின் அடிப்பாகத்தை முதலில் கொண்டுவந்து நிறுத்தி, அங்கே நிற்கும் அடிபாகத்தின் மீது தங்களின் உழைப்பை செலுத்தி, அவர்கள் செய்ய வேண்டிய உற்பத்தி செயல்முறையை நிறைவு செய்த பின், அந்த காரை விட்டு நகருவார்கள். பிறகு அடுத்த தொழிலாளர்கள் வருவார்கள், காரின் மீது அவர்களின்  உற்பத்தி செயல்முறையை நிறைவு செய்வார்கள், நகருவார்கள். இப்படியாக ஒரு காருக்குத் தேவையான அனைத்து உற்பத்தி செயல்முறைகளையும் செய்து முடிக்கையில் ஒரு முழுமையான கார் உருவாகிவிடும். சுருங்கச் சொன்னால், கார் நிற்கும், தொழிலாளர்கள் நகருவார்கள். இந்த முறையில் உடலுழைப்பு அதிகம் இருக்கும். ஆனால் சோர்வு அவ்வளவாக தெரியாது. ஏனென்றால் தொழிலாளர்கள் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள், சக தொழிலாளர்களிடம் ஏதாவது பேச முடியும், கொஞ்சம் இளைப்பாறவும் முடியும். ஆனால் இந்த முறையின் மூலம் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில்தான் அமெரிக்காவின் ஹென்றி ஃபோர்டு என்கிற பெருமுதலாளி, ‘நகரும் அசெம்பிளி லைன்’ என்கிற புதிய முறையை அறிமுகப்படுத்தினார். இந்த முறையில் தொழிலாளர்கள் வரிசையாக நின்று கொண்டிருப்பார்கள், மாறாக  பல கார்களை சுமந்து கொண்டிருக்கும் அசெம்பிளி லைன் நகரும். காரை சுமக்கும் அசெம்பிளி லைன், தொழிலாளியின் அருகில் வரும்போது, அத்தொழிலாளிக்கு கொடுக்கப்பட்ட உற்பத்தி செயல்முறைகளை, அவர் அசெம்பிளி லைனில் நகர்ந்த படியே செய்து முடிக்க வேண்டும். அந்த காரின் மீது உற்பத்தி செயல்முறையை நிறைவு செய்தவுடன், பின்னால் வரும் அடுத்த காருக்கு சென்று வேலை செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு ஷிப்ட் முழுக்க (தேநீர், உணவு இடைவேலை போக) அத்தொழிலாளி செய்த வேலையையே திரும்பத்திரும்ப செய்துகொண்டே இருக்க வேண்டும்.  இப்படி அதிக அளவில் பொருட்களை உற்பத்தி செய்வது ‘வெகுஜன உற்பத்தி’ என்று அழைக்கப்படுகிறது. 

முதன்முதலாக, நகரும் அசெம்பிளி லைனை பயன்படுத்தி வெகுஜன உற்பத்தியின் மூலம்  வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட கார் தான் ஃபோர்டு நிறுவனத்தின் புகழ்பெற்ற காரான ‘மாடல்-டி’ (Model-T). ஃபோர்டு நிறுவனத்தின் மகத்தான வெற்றியை பார்த்தபிறகு, பெரும்பாலான பெருநிறுவனங்களும் நகரும் அசெம்பிளி லைனை வெகுஜன உற்பத்தியில் பயன்படுத்த ஆரம்பித்தன.  பழைய முறையை ஒப்பிடுகையில் இப்புதிய முறையில், தொழிலாளர்கள் சில சாதகங்களையும் பல இன்னல்களையும் உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் கூடுதலாக உணர்ந்தனர். முந்தைய முறையில் தொழிலாளர்களுக்கு இருந்த சிறிய அளவு “சுதந்திரம்” கூட, நவீன நகரும் அசெம்பிளி லைன் மூலம் மேற்கொள்ளப்படும் வெகுஜன உற்பத்தியில் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. தொழிலாளியின் வாழ்க்கை என்பது, நகரும் அசெம்பிளி லைனுடன் பின்னிப் பிணைந்து, அதனுடனேயே கட்டுண்டு கிடக்கும் சூழல் உருவாகிவிட்டது. இப்படி,  செய்யும் உற்பத்தி செயல்முறையையே திரும்பத் திரும்ப செய்வதனால், தான் உற்பத்தி செய்யும் பொருளிடமிருந்தும், தன் உழைப்பிலிருந்தும், தன்னிடமிருந்துமே அந்நியப்பட்டு போகிறார் அந்தத் தொழிலாளி. ’நவீன உற்பத்திமுறை’ என்கிற பெயரில், தொழிலாளர்கள் மீது முதலாளிகள் நடத்தும் சுரண்டலை வெகுஜன மக்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம், நகைச்சுவை கலந்து ‘மாடர்ன் டைம்ஸ்’ (Modern Times) என்ற திரைப்படத்தை ‘மக்கள் கலைஞர்’ சார்லி சாப்ளின் எடுத்தார். அப்படம் வெளியாகி பல வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் அப்படத்தில் சித்தரிக்கப்பட்ட ’நவீன உற்பத்திமுறை’, அதன் அடிப்படையில் இருந்து இன்னும் மாறவில்லை. 

எந்தவொரு பொருளை உற்பத்தி செய்யும்  தொழிற்சாலையானாலும், முதல் போடும் முதலாளியும் இருப்பார், உடலுழைப்பை செலுத்தும் தொழிலாளிகளும் இருப்பார்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் நிர்வாகிகள் இருப்பார்கள். நிர்வாகிகள் என்பவர்கள், முதலாளியின் வார்த்தைகளையும், சிந்தனைகளையும் கடைநிலை தொழிலாளி வரை கடத்தி, முதலாளியின் சார்பாக தொழிலாளிகளை வேலை வாங்குபவர்கள். 

முதலாளியின் கணக்கு:-

நகரும் அசெம்பிளி லைனைப் பயன்படுத்தி வெகுஜன உற்பத்தியின் மூலம் எப்படி கார் தயாரிக்கப்படுகிறது என்பதை மேலே பார்த்தோம். இப்போது சில அடிப்படை கணக்குகளைப் பார்ப்போம். ஒரு கார் நிறுவனத்தின் முதலாளி ஒரு வருடத்துக்கு 6,00,000 கார்களை உற்பத்திசெய்ய இலக்கு நிர்ணையிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கணக்கின் எளிமைக்காக, அந்நிறுவணம் ஒரே ஒரு வகையான காரை மட்டுமே தயாரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது இந்த 6,00,000 கார்கள் என்ற உற்பத்தி இலக்கை அடைய வேண்டும் என்றால் வருடத்தின் ஒரு மாதத்துக்கு 50,000 கார்கள், ஒரு நாளின் 24 மணி நேரத்திற்கு 1667 கார்கள், ஒரு மணி நேரத்துக்கு கிட்டத்தட்ட 70 கார்கள் என்ற கணக்கில் கார்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அந்த தொழிற்சாலையில், வளைந்து நெளிந்து செல்லும் அசெம்பிளி லைனின் மொத்த நீளம் 500 மீட்டர் என்று வைத்துக் கொண்டால், அந்த 500 மீட்டர் நீளத்துக்குள்  காரை தயாரிப்பதற்கான அனைத்து உற்பத்தி செயல்முறைகளையும் முடிக்க வேண்டும். அதற்கேற்ப, காரை உருவாக்கத் தேவைப்படும் அனைத்து உற்பத்தி செயல்முறைகளையும் பிரித்துப் பகிர்ந்தளிக்க வேண்டும். இப்படி உற்பத்தி செயல்முறைகளை பிரித்து பகிர்ந்தளிப்பதற்கு ‘லைன் பேலன்சிங்’ (Line balancing) என்று பெயர். தோராயமாக அந்த 500 மீட்டர் நீளம் கொண்ட அசெம்பிளி லைனில் 100 பணிநிலையங்கள்(Work stations) அமைக்கப்பட்டு உற்பத்தி செயல்முறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டால், ஒரு பணிநிலையத்தின் நீளம் 5 மீட்டராக இருக்கும். ஒரு மணி நேரத்தில்(அதாவது 3600 வினாடிகளில்) 70 கார்கள் தயாரிக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு 52 வினாடிக்கும் ஒரு கார் அசெம்பிளி லைனை விட்டு வெளியே வரவேண்டும். இதற்கு ‘டேக்ட் நேரம்’ (Takt time) என்று பெயர். அப்படியெனில் 5 மீட்டர் நீளம் கொண்ட ஒவ்வொரு பணிநிலையத்தையும் ஒரு car 52 வினாடிகளில் கடக்க வேண்டும். அந்த வேகத்தில்தான் ‘நகரும் அசெம்பிளி லைன்’  இயக்கப்படும். அப்படியெனில் ஒவ்வொரு பணிநிலையத்தில் இருக்கும் தொழிலாளியும், 52 வினாடிக்குள் அவருக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி செயல்முறைகளை நிறைவு செய்து அடுத்த காருக்கு செல்ல வேண்டும்.

இப்படித்தான் முதலாளித்துவ போட்டியில் ஒரு முதலாளி நிர்ணையிக்கும் இமாலய இலக்கு, கடைநிலை தொழிலாளியை வந்து அடைகிறது. 52 வினாடிகள்தான் ஒரு பணிநிலையத்தில் அசெம்பிளி லைன் மூலமாக கார் பயணிக்கும் நேரம் என்றால், ஒரு 30 வினாடிக்கான உற்பத்தி செயல்முறைகளை அந்த பணிநிலையத்தில் வேலை செய்யும் தொழிலாளிக்கு அளிக்கலாம். அப்படி அளித்தால் அவர் அந்த காருக்கான உற்பத்தி செயல்முறையை முடித்துவிட்டு, ஆசுவாசமாக அடுத்த கார் வந்தவுடன் அந்த காருக்கான வேலையை செய்ய ஆரம்பிப்பார். ஆனால் அப்படி செய்தால் பணிநிலையங்களின் எண்ணிக்கை கூடும். அதற்கேற்ப அந்த பணிநிலையங்களில் பணிபுரிய கூடுதலாக தொழிலாளர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். இதை முதலாளிகள் விரும்புவதில்லை. அதனால் டேக்ட் நேரம் 52 வினாடிகள் என்றால், மனசாட்சியே இல்லாமல் கிட்டத்தட்ட 50 வினாடிகள் வேலை செய்யும் அளவுக்கு உற்பத்தி செயல்முறைகளை பிரித்துக் கொடுப்பார்கள். இதனால் ஒரு ஷிப்ட் முழுவதும் தொழிலாளி ஓடிக்கொண்டே இருப்பார். இதன் மூலம் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைவாக வைத்துக்கொண்டு, இருக்கும் தொழிலாளிகளை சக்கையாகப் பிழியலாம் என்பதுதான் முதலாளியின் கணக்கு. உற்பத்தி செய்யும் தொழிலாளி விரும்புவதோ அதிக எண்ணிகையிலான தொழிலாளிகள், குறைவான வேலைப்பளு. ஆனால் முதலாளி கொடுப்பதோ குறைந்த எண்ணிகையிலான தொழிலாளிகள், அதிகமான வேலைப்பளு. இதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிநாதம்.

பலவிதமான தொழிலாளர்கள்:-

தற்போதைய சூழலில், பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் மூன்று விதமான பணியாளர்களை முதலாளிகள் நியமிக்கின்றனர்:-

i) நிர்வாகி (Executive)

ii) இளநிலை நிர்வாகி (Junior Executive)

iii) தொழிலாளி (Non-executive)

இதில் ‘தொழிலாளி’ மற்றும் ‘இளநிலை நிர்வாகி’ ஆகியோர் தொழிற்சாலையில் நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுபவர்கள். 

‘தொழிலாளி’ என்பவர் அசெம்பிளி லைன் மூலம் நகரும் பொருட்களின் மீது தன்னுடைய உடலுழைப்பை நேரடியாக செலுத்துபவர்.

இளநிலை நிர்வாகி என்பவர் நேரடியாக உடலுழைப்பை செலுத்த வேண்டாம். ஆனால் ஒரு தொழிற்சாலையின் அசெம்பிளி லைனில் வேலை செய்யும் தொழிலாளர்களை அங்கிருந்தபடியே மேற்பார்வை செய்வார். நிர்வாகி என்பவர் தொழிற்சாலையில் உடலுழைப்பை செலுத்தும் தொழிலாளிகளையும், அவர்களை மேற்பார்வை செய்யும் இளநிலை நிர்வாகிகளையும் நிர்வகிப்பவர். தொழிற்சாலையில் பணிபுரியும் கடைநிலை பொறியாளர் தொடங்கி இயக்குனர் வரை அனைரும் நிர்வாகிகளே. உயர் பதவிகளில் இருக்கும் நிர்வாகிகளின் கீழே கீழ்நிலை நிர்வாகிகள் வேலை செய்வார்கள்.

இளநிலை நிர்வாகிகளும், நிர்வாகிகளும் நிர்வாகத்தின் சார்பாக நியமிக்கப்படுபவர்கள். அப்படியெனில் அவர்கள் நிர்வாகத்தின் ஒரு பகுதி என்றே புரிந்துகொள்ள வேண்டும். 

தொழிலாளிகள் என்பவர்கள் உடலுழைப்பை செலுத்துபவர்கள். அசெம்பிளி லைனில் நின்று வேலை செய்பவர்கள். நிர்வாகத்தால் நியமிக்கப்படுபவர்கள். ஆனால் அவர்கள் நிர்வாகத்தின் ஒரு பகுதி அல்ல. தங்களின் உடலுழைப்பை கட்டாயம் செலுத்தியே ஆக வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் இருக்கும் தொழிலாளர்கள்.

தொழிலாளர்களின் தற்காப்பு ஆயுதம்:-

உடலுழைப்பு இழிவானது, மூளை உழைப்பு (நிர்வகிப்பது) மேன்மையானது என்ற கருத்து, முதலாளிகளால் பொதுபுத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதார்த்தமோ, உடலுழைப்பு இல்லாமல் பொருளுற்பத்தி சாத்தியமே இல்லை என்பதுதான். ஒரு தொழிற்சாலையின் இயக்குனரோ, துணைத் தலைவரோ, அல்லது ஒரு துறைத் தலைவரோ, மேலாளரோ தொழிற்சாலைக்கு ஒரு மாத காலம் வரவில்லை என்றால் உற்பத்தி ஒன்னும் நின்றுவிடாது. தொழிற்சாலையை எவ்வாறு வருங்காலத்தில் கொண்டு செல்வது என்ற திட்டமிடல் தடைபடலாமேயொழிய, அதன் அன்றாட உற்பத்தி தடைப்படாமல் வழக்கம்போல் நடந்து கொண்டுதான் இருக்கும்.

ஆனால் ஒரு ஷிப்டில் வேலை செய்யும் 150 தொழிலாளர்கள் வரவில்லை என்றாலோ அல்லது வேலை செய்ய மறுத்தாலோ உற்பத்தியே நின்றுவிடும். இதன்மூலம், மூளை உழைப்பு ஒதுக்கித்தள்ளப்படவேண்டும் என்று நாம் சொல்லவில்லை. உற்பத்தியில் உடலுழைப்பு பிரதானம் என்பதே நம் வாதம். நிர்வாகிகளைப் போல் நிறைய வாய்ப்புகளோ, சொகுசான வாழ்க்கைமுறையோ, சமூகப் பொருளாதார நிலையோ, அல்லது வேறு வேலைக்கு சுலபமாக மாறும் வாய்ப்போ, தொழிலாளர்களுக்கு இருப்பதில்லை. அப்படியெனில் உடலுழைப்பை செலுத்தும் தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து இருந்தால்தான் அவர்களுக்கு பலம் என்று தெளிவாகப் புரிகிறது. ஒரு தொழிற்சாலையைப் பொறுத்தவரையில் தொழிலாளியின் உழைப்புதான் அடிநாதம். அந்தத் தொழிலாளிக்கான உரிமைகள் மறுக்கப்பட்டால், தன்னுடைய உரிமையைப் பெறும்வரையிலும் உழைப்பை  வழங்காமல் மறுத்து, தனக்கான கோரிக்கையை வைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. ஆனால், ஒரேயொரு தொழிலாளியால் தொழிற்சாலையின் உற்பத்தியை பாதிக்கவைக்கவோ நிறுத்தவோ முடியாது. அந்த ஒரு தொழிலாளியின் உற்பத்தி செயல்முறைகளை மீதம் இருக்கிற தொழிலாளர்களுக்கு பிரித்து அளித்து அந்த வேலையை முதலாளிகளால் முடிக்க முடியும். அந்த ஒரு தொழிலாளியை பணி நீக்கம்கூட செய்துவிட முடியும். ஆனால் ஒரே சமயத்தில் பல தொழிலாளர்கள் உடலுழைப்பை செலுத்தவில்லையென்றால் தொழிற்சாலையின் உற்பத்தியையே அது பாதிக்கும். உற்பத்தி பாதித்தால், முதலாளியின் இலாபத்துக்கு பிரச்சனை. இப்படி தொழிலாளர்கள் அமைப்பாகத் திரள்வதுதான் ‘தொழிற்சங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. தொழிலாளி உற்பத்தியை நிறுத்தி, முதலாளியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ‘கூட்டு பேரம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஒப்பந்த தொழிலாளியும் நிரந்தர தொழிலாளியும்:-

தொழிலாளர்கள்தான் ஒரு தொழிற்சாலையில் பெரும்பாலானவர்கள் என்று மேலே பார்த்தோம். இந்த பெரும்பான்மையான தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக பணியமர்த்தினால் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களின் ‘கூட்டு பேர’ உரிமை வலுவானதாக இருக்கும். அதை வலுவிழக்கச் செய்யும் பொருட்டு, முதலாளிகள் கையாளும் உத்திதான் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணியமர்த்துவது. பட்டயப்படிப்பு (Diploma) படித்த ஏழை எளிய இளைஞர்களை ‘தொழிற்பழகுனர்’ (Apprentice/Trainee) என்ற அடிப்படையில் நியமிக்கின்றனர். அவர்களின் பணிக்காலம் அந்த நிறுவனத்தில் 2 அல்லது 3 வருடங்கள்தான். நன்றாக வேலை செய்து விடுப்புகள் ஏதும் எடுக்காமல் இருந்தால், 2 அல்லது 3 வருடங்களின் முடிவில் ‘பணி நிரந்தரம்’ செய்யப்படுவார்கள் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி தற்காலிகமாகப் பணியமர்த்தப்படுவார்கள். ஆனால் அவர்கள் போடும் மிகக்கடுமையான நிபந்தனைகளை அப்படியே செயல்படுத்தி, 1000 தொழிற்பழகுனர்களில் ஓரிருவரை மட்டுமே நிரந்தரமாக பணியமர்த்துவார்கள். தொழிற்பழகுனர்களின் பணிக்காலமே 2-3 வருடங்கள்தான் என்பதையும், அவர்கள் நிரந்தர தொழிலாளர்கள் இல்லை என்பதையும் அறிந்ததும், தங்கள் பணிக் காலத்தை முழுவதுமாக முடித்துவிட்டுப் போனால் போதும் என்கிற மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். இதே மாதிரியான ஒரு ஒப்பந்த வேலைத்திட்டத்தைத் தான் வலதுசாரி பா.ஜ.க. அரசு, தேச பாதுகாப்பை உறுதி செய்யும் இராணுவத்திலேயே கூட ‘அக்னிவீர்’ என்ற பெயரில் கொண்டு வர முயற்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டரீதியாகவும், ஒப்பந்த தொழிலாளிகளுக்கு சங்கம் அமைப்பதிலோ, கூட்டு பேர நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலோ பல சிக்கல்கள் இருக்கின்றன.

இளநிலை நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் நிர்வாகத்தின் ஒரு பகுதி என்பதால், ‘சங்கம்’ என்ற பேச்சுக்கே அவர்களிடம் வாய்ப்பில்லை.

அப்படியெனில் சங்கம் அமைப்பதற்கோ, சங்கத்தில் சேருவதற்கோ, தொழிலாளர்களிலேயே நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டும்தான் சாத்தியக்கூறுகள் இருக்கிறது. இந்த சூழலில் நிரந்தர தொழிலாளர்களும் சங்கத்தில் சேருவதும் சேராமலிருப்பதும் அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்கிற வகையில் இருப்பதால், அவர்களை சேரவிடாமல் தடுப்பதில் நிர்வாகம் முதன்மைப் பங்காற்றும்.

சங்கத்தால் என்ன பலன்?

தொழிலாளர்களை பல பிரிவுகளாக்கி எப்படியெல்லாம் சங்கம் அமைப்பதை முதலாளிகள் தடுத்து நிறுத்துகிறார்கள் அல்லது கடினமாக்குகிறார்கள் என்பதை மேலே பார்த்தோம். சங்கம் அமைப்பதால் நேரடி/கூடுதல் பயன் நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டும்தான். போனஸ், ஊதிய உயர்வு, ஓய்வு நேரம், உணவு, தின்பண்டங்கள், தேநீர்  போன்ற பல அத்தியாவசியங்களை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சங்கத்தால் கேட்டு வாங்க முடியும். தொழிற்பழகுனர்கள் மற்றும் நிர்வாகிகளால் சங்கம் அமைக்கவோ, நிரந்தரத் தொழிலாளர்கள் உருவாக்கிய சங்கத்தில் சேரவோ முடியாது.

அப்படியெனில் தொழிற்பழகுனர்களுக்கும், கீழ் நிலையில் இருக்கும் பொறியாளர் போன்ற நிர்வாகிகளுக்கும்  என்ன தீர்வு என்ற கேள்வி எழுகிறதல்லவா?

இப்போதைய நிலையில் அவர்களுக்கும் தெளிவான தீர்வு இல்லை என்பதே எதார்த்தம்.

ஆனால் ஒரு தொழிற்சாலையில் நிரந்தரத் தொழிலாளிகள் சங்கம் அமைக்கவில்லை என்றால், தொழிற்பழகுனர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் திண்டாட்டம் இன்னும் அதிகமாகிவிடும்.

பல சமயங்களில் தொழிலாளிகளுக்காக நிர்வாகத்திடம் தொழிற்சங்கம் பேசி வாங்கும் போனஸ், ஊதிய உயர்வு போன்றன, நிர்வாகிகளுக்கும் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

தொழிலாளிகளின் சங்கம் ஒரு தொழிற்சாலையில் இருந்தால், தொழிற்பழகுனர்களாக இருக்கும் இளைஞர்களுக்கும் மன உறுதி அதிகரிக்கும். தொழிற்பழகுனர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்றுவதற்கும் நிரந்தரத் தொழிலாளர்கள் அவர்களது சங்கம் மூலமாக கோரிக்கை வைக்கமுடியும்.

முதலாளி மற்றும் நிர்வாகிகள் இரவு நேரத்தில் குழந்தை குட்டிகளுடன் நன்கு வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் சமயத்தில், தொழிலாளிகள் இயற்கைக்கு மாறாக இரவுப் பணி பார்க்க வேண்டும். மேலும் தொழிலாளிகள் மூன்று ஷிப்ட்களிலும் சுழற்சி முறையில் வேலை செய்யவேண்டும். அதனால் பாதிக்கப்படும் உடல்நிலையை சரி செய்ய வேண்டும். அதற்கான தொகையை சம்பளத்தில் கூடுதலாகக் கேட்டு வாங்க வேண்டும். 

பஞ்சப்படி, ஆயுள் காப்பீடு போன்ற பல உரிமைகளைக் கேட்டு பெறவேண்டும். அதற்கு சங்கம் வேண்டும்.

பெரும்பாலான தொழிற்பேட்டைகளும் உற்பத்தி தொழிற்சாலைகளும், ஊரை விட்டு வெகு தூரத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கும். பணிக்கு குறித்த நேரத்திற்குள் செல்வதற்கு நிறுவனத்தின் பேருந்துகள் கண்டிப்பாக தேவைப்படும். சில வழித்தடங்களில் பேருந்துவசதி இல்லை என்றால் நிர்வாகத்திடம் கேட்டுப் பெறுவதற்கு சங்கம் வேண்டும்.

இப்படி ஒரு தொழிற்சாலை ஒழுங்காக செயல்படுவதற்கே, சங்கம் இருந்தால்தான் அடிப்படை உரிமையையாவது கேட்டுப் பெற முடிகிறது. சங்கம் இல்லாவிட்டால், தொழிலாளர்களே கேட்காததை ஒரு நிர்வாகம் தாமாக முன்வந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுத்ததாக வரலாறே இல்லை.

அதே போல தொழிலாளிகள் தன்னெழுச்சியாக தொழிற்சங்கம் அமைக்கும் வரை முதலாளிகள் எவ்வளவு குடைச்சல் கொடுக்க முடியுமோ கொடுத்துப் பார்ப்பார்கள். அதையும் மீறி தொழிலாளிகள் சங்கம் அமைத்துவிட்டால், நிர்வாகத்திற்கு ஆதரவான ஒரு போட்டிச் சங்கத்தை உருவாக்கி விடுவார்கள்.

அப்போது தொழிலாளர்களின் நலன்களைப் பேசும் தொழிற்சங்கத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது அவசியமாகிவிடும்.

அதே போல வெவ்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் ஒருவருக்கொருவர்  போட்டிபோட்டுக்கொண்டாலும், முதலாளித்துவத்தை பாதுகாக்க தன்னுடைய போட்டியாளர்களுடன் கூட பல்வேறு தேசிய/சர்வதேசிய  கூட்டமைப்புகளில் ஒருங்கிணைந்து இருப்பார்கள். ஆனால் அகில இந்திய  அளவில் ஸ்தாபன வலிமைக்கொண்ட ஒரு தொழிற்சங்கத்தை தங்கள் தொழிற்சாலைக்குள் நுழைய விடாமல் இருக்க அனைத்து வேலைகளையும் முதலாளிகள் செய்வார்கள். மேலும் நிர்வாகத்திற்குத் தேவைப்பட்டால், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களை நியமித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு அகில இந்திய தொழிற்சங்கத்தின் தலைவர் ஒரு தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கு தலைவராக இருக்கக் கூடாது என்று சொல்வார்கள். வெளியிலிருந்து வரும் தொழிற்சங்க தலைவர் அனுபவத்தாலும், அறிவாலும், சட்ட நுணுக்கங்களாலும், சித்தாந்தத் தெளிவாலும், பட்டைத் தீட்டப்பட்டவராக இருப்பார். அதனால் அவரைத் தங்கள் தொழிலாளிகளின் தலைவராக ஆக விடாமல் பார்த்துக் கொள்வார்கள்.

இவ்வளவு போராட்டம் நிறைந்ததுதான் உற்பத்தித் தொழிலாளிகளின் அன்றாட வாழ்க்கை. ‘தொழிற்சங்கம்’ தான் அவர்களைத் தற்காத்துக்கொள்வதற்கு இருக்கிற ஒரே ஆயுதம். அதனால் அந்த ஆயுதத்தை ஏந்துவதற்கான அவர்களது போராட்டத்திற்கு பொதுமக்களாகிய நாம் எப்போதும் ஆதரவாக உடனிருக்க வேண்டும்.