– மோகன், பழவேற்காடு
நந்தன் திரைப்படம் பார்த்த பிறகு, ‘சுதந்திரம் என்றால் என்ன?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்துள்ளது. நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறியது போல் ‘எப்பொழுது ஒரு பெண் தன்னந்தனியாக நடுஇரவில் யாருடைய துணையில்லாமல் சாலையில் நடந்து செல்கிறாளோ அப்போதுதான் நாம் உண்மையான சுதந்திரம் பெற்றோம்’ என அர்த்தம் கொள்வதா?
அல்லது பட்டியலின மக்கள் போட்டியிடும் தனித்தொகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ஆதிக்க சாதிக்கார்களின் குறுக்கீடு இல்லாமல் ஒரு தலித் போட்டியிடுகிறார்களோ அதுதான் உண்மையான சுதந்திரமா..?
அதோடு எப்பொழுது ஒரு பட்டியலின தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் இருக்கையில் அமர்கிறாரோ, அது தான் உண்மையான சுதந்திரமா..? பெயர் பலகையில் அவருடைய பெயர் இடம் பெருகிறதோ, பள்ளிகளில் நடைப்பெறும் சுதந்திர தினவிழா குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளில் பட்டியலினத் தலைவர் சுதந்திரமாக கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்குகிறாரோ, வங்கி கணக்கு முழுவதும் அவரே கையாள்கிறாரோ அன்றைக்குதான் உண்மையான சுதந்திரம் என்று கருத்தில் கொள்ளலாமா..?
இப்படி எனக்குள் பல கேள்விகள் எழுந்துள்ளன.
திரைப்படத்தின் கதை இப்படியாக ஆரம்பிக்கிறது…
புதுக்கோட்டை அருகில் வணங்காமுடி ஊராட்சிமன்றத் தலைவராகத் தொடர்ந்து போட்டியின்றி அல்லது போட்டியிட யாரையும் அனுமதிக்காமல், கட்டப்பஞ்சாயத்து வழியாகவே ஆதிக்க சாதிவெறியும் சூழ்ச்சியும் நிறைந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த நிலையில் அந்த தொகுதி பட்டியலின மக்கள் மட்டுமே போட்டியிடும் தனித்தொகுதியாக மாற்றப்படுகிறது. இதனால் கோப்புலிங்கம் தனது வீட்டில் தோட்ட வேலை செய்யும் கோப்புலிங்கத்தின் அப்பாவிற்கு மூத்திரப்பை மாற்றும் அம்பேத்குமாரை (சசிகுமார்) டம்மியான தலைவராக்கி, தனது பதவியையும் அதிகாரத்தையும் தானே வைத்துக்கொள்கிறார் ஆதிக்க சாதிவெறி பிடித்த கோப்புலிங்கம். இந்நிலையில் காலங்காலமாக அறியாமையில் இருக்கும் தன்னுடைய மக்களுக்கு உரிமைகளை பெற்றுதர வேண்டும் என நினைக்கும் பொழுது, அம்பேத்குமாருக்கு கோப்புலிங்கத்தின் மூலமாக வன்முறையும் சாதிவெறியும் கட்டவிழுத்து விடப்படுகிறது. அதிலிருந்து அம்பேத்குமாரும், அவருடைய சமூகமும் மீண்டதா என்பதே கதை.
சசிக்குமாரின் உடையும் எப்பொழுதும் வெற்றிலை மென்றுக் கொண்டிருக்கும் அவரது உடல் மொழியும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகத் தெரிகிறார். அம்பேத்குமார் என்ற பெயரை உச்சரிக்கக் கூட மனம்வராத ஆதிக்க சிந்தனை கொண்ட சமூகம், கூழ்பானை என்று பெயரிட்டு மகிழ்வது சாதி வெறி பிடித்த மனிதர்களின் மன ஓட்டங்களைக் காட்டுகிறது. தமிழ்சினிமா என்றாலே கதாநாயகி வெள்ளையாகவும் அழகாகவும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்ற பிம்பத்தை உடைத்து கதாநாயகி கருப்பாகவும் கலையாகவும் உரிமைக்காக போராடும் ஒரு வினையூக்கியாகவும் வடிவமைத்திருப்பது இது வழக்கமான தமிழ் சினிமா இல்லை என்று நமக்குச் சொல்கிறது.
தனது சொந்தக்காரனை அவமானப்படுத்த வேண்டுமென்றால் தன்னிடம் வேலை செய்யும் பட்டியிலனத்தைச் சேர்ந்தவரை, அவனுக்கு சமமாக உட்கார வைத்தாலே அவனுக்கு அவமானமாகிவிடும் என நினைப்பது ஆதிக்க சாதியினுடைய மனோபாவத்தைக் காட்டுகிறது. இரவில் கொடியற்றும் ஒத்திகைக் காட்சி முடிந்த பிறகு அடுத்தநாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் அல்லாத கோப்புலிங்கம் கொடியேற்றுவது எவ்வளவு பெரிய தீண்டாமை. இறந்த பிறகுதான் சுடுகாட்டில் நிம்மதி கிடைக்கும் என்பார்கள். ஆனால் சுடுகாடே பிரச்சனை என்றால் என்ன செய்வது. இப்படியாக பட்டியலின மக்களின் வலிகள் படம் நெடுகிலும் பதிவு செய்யப்படுகின்றன.
சமுத்திரக்கனி உடலளவில் குறைபாடு உள்ளாவராகக் காட்டப்பட்ட போதிலும், மனதளவில் மிக தைரியமாக செயல்படும் அதிகாரியாக வருகிறார். ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்டிருக்கும் சசிக்குமாருக்கு தைரியத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கிறார். அரசு அலுவலகத்தில் எந்த சமரசமும் இன்றி உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் வைத்திருக்கும் காட்சியெல்லாம் இயக்குநரின் தைரியத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். அதற்கு தனி அரசியல் உறுதி வேண்டும். ‘இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தனித்து காணப்படுகிறது, இது பகுத்தறிவு மாநிலம், பெரியார் மண், முற்போக்கு மாநிலம்’ என கூறிக் கொண்டாலும் பட்டியலின மக்களுடைய விடுதலையில் இன்னும் நாம் முடங்கித்தான் இருக்கிறோம் என்று அம்பேத்குமார் என்ற கூழ்பானை நமக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறார். படத்தில் வரும் ஆமணக்கு செடியை எத்தனை முறை அழித்தாலும் தொடர்ந்து நான் மரமாவேன் என்று காட்சிப்படுத்தியிருப்பது எல்லாமே அருமை. எத்தனை முறை ஒடுக்கினாலும் நாங்கள் திரும்பத் திரும்ப எழுவோம் என்ற புரிதலை எளிதாக நமக்குக் கடத்துகிறது.
நமக்கான உரிமைகளைப் பெற வேண்டுமென்றால் அதிகாரத்தை அடைவதுதான் அதற்கான வழி என்று படத்தை முடித்திருப்பது சிறப்பு. சசிகுமாரின் கதாபாத்திரம், முதலில் அறியாமையில் இருப்பதும் மெல்ல அடக்குமுறையை சந்திக்கும் போதும் தலைவர் பதவி கிடைத்தவுடன் பேச்சுமொழியில் வித்தியாசம் தெரிவதும் போல் காட்சிப்படித்தியிருப்பது, பிறகு உடனே வெள்ளந்தியாக மாறுவது என சிறிய குறைப்பாடும் இருக்கிறது. மேலும் பட்டியலின மக்கள் என்றாலே அழுக்காக இருப்பார்கள் என காட்சிப்படுத்தியிருப்பது கொஞ்சம் பழைய பொதுப்புத்திக் கண்ணோட்டத்துடன் இருப்பது சற்று நெருடலாக இருந்தது. மற்றபடி இந்தப் படம் அதன் திரையாக்கத்திலும் பிரச்சார நெடியில்லாமல் சிறப்பாக இருந்தது.
நான் வாழும் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் பெண் ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்ற விடவில்லை. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகளின் தலையீட்டிற்குப் பிறகுதான் கொடியேற்றம் நடைபெற்றது. இப்படி இன்னும் பல கிராமங்களில் இந்தக் கொடுமை தொடர்கிறது. இதை ‘முள்கிரிடம்’ என்ற நூலில் முனைவர் பகத்சிங் அவர்கள் பதிவு செய்திருக்கிறார். திரையின் வழியாக இயக்குநர் நந்தன் மேலும் இப்பிரச்சனையைப் பரவலாகக் கொண்டுசென்றிருக்கிறார். சமூக நீதி இன்னும் அடைய வேண்டிய இலக்கு என்னவென்பதைப் பற்றிய உரையாடலை தொடங்கிவிட்டுச் செல்கிறது. நந்தன் கொண்டாட வேண்டிய படம் மட்டுமல்ல விவாதித்து எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய படமும்கூட.
– மோகன், பழவேற்காடு