– ரபீக் ராஜா
மக்களை அரசியல்படுத்துவதே கலையின் முதன்மைப் பணி; கலையின் உச்சம் விடுதலை அரசியலைக் கடத்துவது; கலையின் வெற்றி அந்த அரசியலை வாழ்வியலாக விவாதிப்பது. இத்தனைக்கும் பொருத்தமாக வந்திருக்கும் படம் ‘லப்பர் பந்து’.
எவ்வித் தெறிக்கும் லப்பர் பந்தின் ஒவ்வொரு தடமும் தரையில் ஆழப்பதிந்தால் எப்படி இருக்குமோ அப்படி, வீசுபவன், அடிப்பவன்,தடுப்பவன், பார்வையாளன் அத்தனைபேரும் நம் மனதில் தடம்பதித்து நிற்கின்றனர்.
விறுவிறுப்பான கதையும், செதுக்கப்பட்ட திரைக்கதையும் பிரியாணி என்றால், வசனம் அதில் பக்குவமாய் வெந்து பூரிக்கும் கறித்துண்டு! நாக்கை, வாயை, நெஞ்சை உறுத்தாத காட்சி அமைப்பு மறுநாள் வைத்துச் சப்புக்கொட்டவைக்கும் கருவாட்டுக் குழம்பு!
சாதி ஆதிக்க அரசியல் இறுக்கமாக இருக்கும் இக்காலத்தில், தவிர்க்கமுடியாத உரையாடலை அற்புதமாக நிகழ்த்துகிறது இந்த ‘லப்பர் பந்து’.
இப்படம் தொடாத சமகால அரசியலே இல்லை எனுமளவுக்கு, அரசியலும் அதைச்சுற்றிய உரையாடலும் காட்சிகளாக மிளிர்கின்றன.
போட்டியாளராக இருந்து தன்னுடன் அணிசேரும் வருங்கால மாமனாரின் நம்பிக்கையை முழுதாகப் பெறும் இளைஞன், தங்கள் அணியின் தோல்வியைத் தாங்களே நிர்ணயித்து, சாதிய ஆதிக்க அரசியலுக்குக் கடும்நெருக்கடி தந்து, அதில் வெற்றியும் பெறுகிறான். மாமனார், மருமகன் இருவரின் தன்முனைப்பும் சமூகநலனுக்காகத் தானே அறுபட்டுப்போவது சாதி ஆதிக்கப்போக்கைத் தகர்க்க விழையும் ஓர்மையின் விளைவு. அன்பு – துர்காவை மட்டுமல்ல, சமூகத்தையே நேசிக்கும் அன்பு!
பட்டியலின – பிற்படுத்தப்பட்ட சாதி உரையாடலில், பட்டியலின ஆண், காதல், நட்பு, தொழில், விளையாட்டு எல்லாவற்றிலும் சமூகப்பொறுப்போடு முடிவெடுக்கிறான் என்பதும், தாய், தந்தை, காதலி, நண்பர்கள், சமூகத்திடம் நேசமாகப் பழகுவதுமாகக் காட்டியிருப்பது, ‘நாடகக்காதல்’ பிரச்சாரக் கும்பலுக்கு ஓங்கிவிழும் சரியான அடியாக இருக்கும்.
அன்புவின் நண்பனாக வரும் இளைஞன், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கருப்பையாவிடம் பேசும் ‘ அன்பு உனக்குத் தம்பி மாதிரி! தம்பி இல்ல! ஆனால் நீ எங்களுக்கு அண்ணன் மாதிரி இல்ல; அண்ணன்’ இந்த உரையாடலில், அன்பு, கருப்பையா, நண்பனுக்கு இடையாயான சகோதரத்துவம், நேசத்தின் மகத்துவம் அழகாக வெளிப்படும்! காலத்திற்கும் நிற்கப்போகும் காட்சி இது.
சாதி ஆதிக்கச் சமூகத்தில் நிகழ்த்தப்பட வேண்டிய பன்முக உரையாடல்களில், ‘லப்பர் பந்து’ நடத்தும் இந்த உரையாடல் மிக முக்கியமானது!
பூமாலை! உண்மையில் அவன் உணர்வுகளால், அன்பால் நெருக்கமாகக் கட்டப்பட்ட கதம்பப்பூமாலை தான்! கணவனாக, மகனாக, தந்தையாக, மாமனாராக, களத்தில் விளையாட்டு வீரனாக, படம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் அவன் எவ்வளவு அசலான மனிதன்! 17 வயதில், பட்டியலினப் பெண்ணை ஓடிப்போய்த் திருமணம் செய்து, அதே ஊரின் ‘கெத்து’ என்ற அடையாளத்தோடு நல்ல மகனாக, நல்ல தந்தையாக, நல்ல கணவனாக, பொருளாதாரத் தன்னிறைவை எட்டமுடியாத வாழ்க்கை நடத்தும் பூமாலை, பட்டியலின இளைஞனை எந்தச் சாதிய வெறுப்புமின்றி மருமகனாக ஏற்றுக்கொள்வதாகக் காட்டியிருப்பது, சாதிய இறுக்கச் சமூகத்தில் மிக அவசியமாகக் காட்டவேண்டிய முன்மாதிரியான படைப்பு! அதை வலியத் திணிக்காமல், வெகு இயல்பாகக் கதை ஓட்டத்திலேயே லாவமாகச் சொல்கிறது ‘லப்பர் பந்து’! இவருடைய நண்பனாக வருபவரும், கதையின் இச்சரடுக்கு வலிமையான பின்னலாக இருக்கிறார்!
சாதி ஆதிக்கச் சமூகத்தில் நிகழ்த்தப்பட வேண்டிய பன்முக உரையாடல்களில், ‘லப்பர் பந்து’ நடத்தும் இந்த உரையாடல் மிக முக்கியமானது!
மாட்டுக்கறி அரசியலை, மிக எதார்த்தமாகத் தூக்கி அடிக்கும் ‘லப்பர் பந்து’, மனிதர் – மாடு உறவு, மாட்டுக்கறிக்கடையை உறுத்தலே வராதவாறு காட்சிப்படுத்திய விதம், தமிழ் சினிமாவின் மிகமுக்கியமான அரசியல் காட்சியாகப் பேசப்படும். சங்கிகள் வாயைத் திறக்கமுடியாத நிலையை உண்டாக்கிய காட்சி அமைப்பு!
கிரிக்கெட் அணியில், பட்டியலின இளைஞனோடு இஸ்லாமிய இளைஞனையும் இறுதியில் இணைத்த ‘லப்பர் பந்து’ சாதிமத அரசியல் பவுண்டரிகளைத் தாண்டிப் பறக்கும் அரசியல் பந்து!
உறுதியான இந்த லப்பர் பந்தின் காற்றாக இருப்பவை இக்கதையின் பெண்பாத்திரங்கள்! யசோதாவாக வரும் அம்மா, மகளாக வரும் துர்கா, கிரிக்கெட் விளையாடும் அகிலா, யசோதாவின் மாமியார் , அன்புவின் அம்மா, துர்காவின் தோழி என எல்லாப் பெண்களுமே மிக அழுத்தமாகப் படைக்கப்பட்டிருக்கின்றனர்!
காதலித்துக் கல்யாணம் செய்துகொண்ட பூமாலையின் மீதான நேசம், குடும்பப் பொருளாதாரத்துக்கும் பொறுப்பேற்கும் தலைமை, மாட்டுக்கறி வெட்டும் உழைப்பு, மாமியாரையும் மகளாக அரவணைக்கும் இயல்பு, மகள் மீதான அக்கறை என, யசோதா, தமிழ் சினிமா வரலாற்றில் பேசப்படும் பெண் பாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.
துர்கா… எத்தனை பக்குவமான பெண்! அப்பா அம்மா ஆயா மற்றும் அன்பு எல்லோரிடமும் மதிப்பும் நேசமும் கொண்ட உறுதியான பெண்!
அகிலா! கிரிக்கெட் மைதானத்தில் அகிலா விளையாடப்போகிறார் என்பதை ஊகிக்கமுடியாத பலருக்கும், அவரைக் களமிறக்கி, அடித்து ஆடவிட்டு ஆனந்த அதிர்வலையைத் தந்து துள்ளவைக்கிறது படம்!
நாடகக்காதல் பிரச்சாரத்தை மிக எதார்த்தமாக முறியடிப்பது, மாட்டரசியலை நுணுக்கமாகக் கையாண்டது, பக்குவமான காதலைக் காட்டியது, கணவன் மனைவி உறவை, மாமியார் மருமகள் உறவை அற்புதமாகக் காட்டியது, பெண்பாத்திரங்களை இயல்பாக, பக்குவமாகப் படைத்தது என இயக்குநரைத் தூக்கிவைத்துக் கொண்டாடலாம்!
‘பொட்டுவச்ச தங்கக் குடம்’ என்று அதிர அறிமுகமாகும் பூமாலை, டிராக்டரில் வந்து, கழுத்து நரம்பெல்லாம் பேசும்ப டியாக அறிமுகமாகும் யசோதா, அகிலா கருப்பையா இணை கிரிக்கெட்டில் செய்யும் அதகளம், பூமாலை 96 ரன்னில் அவுட் ஆகும் இறுதிப்போட்டி என படம் முழுவதும் வானவேடிக்கை நிகழ்த்துகிறார் இயக்குநர்!
தினேஷ், ஹரிஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பாலசரவணன், காளிவெங்கட், ஜென்சன் அப்படியே பாத்திரங்களாக மாறியிருக்கின்றனர்!
பக்குவமான, நிதானமான, பொறுப்பான, துடிப்பான, சமூக அக்கறையான ‘அன்பு’ முன்மாதிரியான இளைஞன்!
லப்பர் பந்து மிகச்சரியான நேரத்தில் வெளியாகி இருக்கும் முக்கியமான அரசியல் படைப்பு!