இந்திய சினிமாசினிமா

ஆஸ்கருக்கு எந்தத் திரைப்படத்தை இந்தியா அனுப்பப் போகிறது? 

549

சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில், இந்தியா ஆஸ்கருக்கு எந்தத் திரைப்படத்தை அனுப்பப் போகிறது? – சிவசங்கர்

ஆஸ்கர் விருதில் சிலருக்கு உடன்பாடு இருக்கலாம், அல்லது இல்லாமலும் இருக்கலாம். எனக்கு ‘சிறந்த வெளிநாட்டுப் படங்கள்’ பிரிவில் தேர்வாகும் அனைத்துப் படங்கள் மீதும் தனிப்பட்ட கவனம் உண்டு. ஆங்கிலமல்லாத மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு விருது கொடுக்கும் பிரிவில் கான்ஸ், வெனிஸ், பெர்லின் திரைப்பட விழாக்கள் உள்ளிட்ட மற்ற எத்தனையோ புகழ்பெற்ற படவிழாக்கள் இருந்தாலும், இந்த ஆஸ்கரில்  சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கு விருதென்றால் என்றால் எப்போதுமே தனிக் கவனம் உண்டு.

90+ நாடுகளில் ஆங்கிலமல்லாத பெரும்பாலான மொழிகளில் இருந்து மிகச் சிறந்த படங்களெல்லாம் ஏதோ ஒரு திரைப்பட விழாவில் உயரிய விருதையோ அல்லது சிறந்த நடிகர் , சிறந்த இயக்குனர்  விருதையோ பெற்று  இருக்கலாம்.  அல்லது மக்கள் மத்தியில் நல்ல கவனம் பெற்ற படங்களாகவும் இருக்கலாம். சில நாடுகளில் வசூல் ரீதியில் வெற்றியடைந்த அல்லது பாப்புலர் சினிமாக்களைக் கூட அத்தகைய திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அப்படி எல்லா சிறந்த படங்களில் இருந்தும் ஒவ்வொரு நாடும் தனித்தனியாக ஒரு நாட்டிற்கு ஒரு படத்தை மட்டுமே தேர்வு செய்து ஆஸ்கருக்கு அனுப்புவார்கள். மற்ற விழாக்களில் ஒரே நாட்டைச் சேர்ந்த பல சிறந்த படங்களும் பங்குபெறும். ஆனால் ஆஸ்கரில் அப்படியில்லை. ஆஸ்கரில் வெளிநாட்டு விருதுக்கு அனுப்பப்படும் 90+ படங்களில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒன்று மட்டுமே பங்கு பெரும். ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் இணைந்து கூட்டு தயாரிப்பாக ஒரு படத்தை எடுத்திருந்தால், ஏதேனும் ஒரு நாடு சார்பாக அனுப்புவார்கள். அப்படியாக அனைவரும் அனுப்பியதில் இருந்து 15 சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து, பிறகு அந்த 15 ல் இருந்து ஐந்து படங்களை இறுதிப் பரிந்துரைப் பட்டியலாக அறிவித்து, கடைசியாக ஒரு படம் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள். இது பெரிய டாஸ்க். 

இந்த ஆஸ்கர் விருதுவிழா, முதன்முதலில் மே 16, 1929 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில்தான் நடைபெற்றது. மற்ற நாடுகளைப் போலவே ஆங்கில ஹாலிவுட் படங்களுக்காக முதலில் கொடுக்கப்பட்டு, பிறகு சர்வதேச படங்களுக்கும் அளிக்கப்பட்டது. முதலில் சிறப்பு கௌரவ விருது  Special/Honorary Award (1947–1955) என்கிற பெயரில் வெளிநாட்டுப் படைப்புகளை சிறப்பிக்கும் விதத்தில் ஒரேயொரு படத்தைத் தேர்வுசெய்து அதற்கு மட்டுமே விருது வழங்கினார்கள். பிறகு 1956 இல் வெளிநாட்டுப் படங்களுக்கான விருதுக்காக, சில நாடுகளில் இருந்து 10 – 12 படங்கள் பெறப்பட்டு, அதிலிருந்து ஐந்தைத் தேர்வுசெய்து, இறுதியாக ஒன்றிற்கு விருதுதரும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு இதேவிருது ‘சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான விருது’ என்ற பெயரில் இருந்து, தற்போது  International Features என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான படங்கள் குறிப்பாக ஆங்கிலமல்லாத மொழியைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு நாட்டில் தயாரிக்கப்பட்டு, அந்த நாட்டில் வெளியாகி ஒரு வாரமாவது ஓடியிருக்க வேண்டும். கூடுதலாக மற்ற திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி இருந்தாலும் கூடுதல் சிறப்பு.  முதன்மையாக ஆங்கிலம் அல்லாத உரையாடல்களுடன் இருத்தல் அவசியம். மேற்படி, வேறு என்னென்ன விதிகளும் விதிமுறைகளும் வைத்துள்ளார்கள் என அகாடமி தளத்தைப் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ளலாம். 

சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இந்தியாவின் சாதனைகள் என தேடிப்பார்த்தால் வெகு குறைவே. இங்கு நம்மிடம் பல ஜாம்பவான்கள், திரை ஆளுமைகள், சிறந்த இயக்குனர்கள், மற்றும் திரைக்கலைஞர்கள் இருந்தும் நல்ல திரைப்படங்கள் இருந்தும் இன்றுவரை சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இந்தியா எந்த ஆஸ்கர் விருதையும் வென்றதில்லை. இந்தப் பிரிவில் இந்தியா 1957 லிருந்து படங்களை அனுப்பி வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட  50 படங்களுக்கும் மேல் சமர்ப்பித்துள்ளது, தமிழில் மட்டுமே 10 படங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. தெய்வமகன் தொடங்கி, நாயகன், அஞ்சலி, குருதிப்புனல், இந்தியன், ஜீன்ஸ், ஹே ராம், விசாரணை, கூழாங்கல் வரை அனுப்பப்பட்டிருக்கின்றன. ஆனால் எதுவும் வெற்றி பெறவில்லை. இந்தியாவில் இருந்து அனுப்பிய 3 படங்கள் இதுவரை இறுதிப் பரிந்துரைப்  பட்டியல்வரை வந்திருக்கின்றன. 

அப்படிப் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிடத்தக்க இந்தியத் திரைப்படங்கள்: மதர் இந்தியா (1957) (இந்தியாவின் முதல் பரிந்துரை), சலாம் பாம்பே (1988) மற்றும் லகான் (2001) ஆகியவை. இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு வெற்றிகள் கிடைக்காததற்கு, நாம் எடுக்கும் சினிமா பாணியில் உள்ள வேறுபாடுகள், கலாச்சார சூழல்கள் அல்லது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட படங்களின் போட்டி போன்ற பல்வேறு காரணிகள் பெரும்பாலும் காரணங்களாகக் கூறப்படுகின்றன. இருப்பினும், சில இந்திய சினிமாக்கள் சர்வதேச அரங்கில் பாராட்டைப் பெற்றுள்ளன என்பதும் மறுக்கமுடியாதது. 

சமீபத்தில் நாம் அனுப்பிய குஜராத்தி படம் ஆஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் ஷார்ட்லிஸ்ட் ஆன 15 படங்களில் ஒன்றாக வந்தது. ஆக, இந்தியாவில் இருந்து உலக நாடுகளில் வெளிவரும் சினிமாவிற்கு இணையான படங்களோடு போட்டிபோட வெகுகுறைவான படங்களே உள்ளன. நம்மூர் பாடல்களுக்கு வேண்டுமானால் வெளிநாட்டவர்கள் Vibe ஆகலாம். ஆனால் உலக சினிமாவோடு போட்டி என்றால் திரைப்படம் அதற்கு இணையாக இருக்க வேண்டும். இந்த சர்வதேசப் பிரிவில் இத்தாலியும் பிரான்சும் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளனர். இனிவரும் காலங்களில் மற்ற நாடுகளைப் போல இந்தியாவும் வெற்றி பெரும் என்று நம்புவோம். பொறுத்திருந்து பாப்போம். 

இந்தக் கட்டுரையை எழுதும் இந்த நேரம் வரையிலும் 40 நாடுகளைச் சேர்ந்த படங்கள் ஆஸ்கருக்கு சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பிரிவில் போட்டியிட  அனுப்பப்பட்டு இருக்கின்றன. அதில் நான் 10 படங்களை பார்த்தும் விட்டேன். அனுப்பப்பட்ட படங்களின் தகவலைப் பெற  Wikipedia இணைப்பு கீழே –

 – https://en.wikipedia.org/wiki/List_of_submissions_to_the_97th_Academy_Awards_for_Best_International_Feature_Film 

எல்லா படங்களையும் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 2024-10-02. அதன்பின்பு மொத்த பட்டியலையும் ஆஸ்கர் அறிவிக்கும். சில நேரங்களில் சில படங்களை இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கியும் இருக்கிறது. அதற்கும் சில காரணங்களும் இருக்கும். பின்பு, அந்த மொத்தப் பட்டியலில் இருந்து 15 படங்களின் பட்டியலை மட்டும்   அறிவிப்பார்கள். அதனை அறிவிக்கும் தேதி 2024-12-17. பிறகு அதிலிருந்து ஐந்து படங்கள் இறுதிப் பட்டியலாக அறிவிக்கப்படும் தேதி  2025-01-17. இறுதியாக  விருது விழாவும் வெற்றியாளரை அறிவிக்கும் தேதியும் 2025-03-02. 

ஏன் இப்பொது இந்திய சினிமாக்கள் நாமினேஷன் வரை கூட செல்வதில்லை ? 

Image

ஒவ்வொரு நாடும் வலுவான படங்களை போட்டிக்கு அனுப்பும். அந்த வகையில் அவர்களுக்கு இணையான படம் அவசியம் இருத்தல் வேண்டும். இங்கே வசூலில் வெற்றியடைந்த படத்தை அனுப்புவது வேலைக்கு ஆகாது. அதே நேரத்தில் அங்குள்ள ஆஸ்கர் நடுவர்களுக்கு இந்தத் திரைப்படம் எவ்வகையிலாவது முன்பே சென்றிருக்க  வேண்டும். அவர்கள் பார்வையை கவர்ந்திருக்க வேண்டும். நிச்சயம் இங்கே இந்தியா முழுக்க கவனம் பெற்றால்கூட சிலரால் மட்டுமே உலக அரங்கை எட்ட முடியும். உதாரணத்திற்கு  அனுராக் காஷ்யப் போன்ற இயக்குனர்களின் மூலமோ அல்லது வேறு சிலரின் மூலமோ வெளிநாட்டு நபர்களின் பார்வைக்கு சில படங்கள் படும். அதற்கு முன் நம் பார்வையாளர்களின் ஊக்கமும் சந்தைப்படுத்தலும் கூட இதில் பங்கு வகிக்கும். ஒரு புது முயற்சி எடுத்து உருவாக்கப்படும் படங்களுக்கு வரவேற்பை கொடுப்பதும் முக்கியம். மற்ற நாடுகளில் நடக்கும் திரைப்படவிழாக்களுக்கு படங்களைப் போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

Independent என்றழைக்கப்படும் சுயாதீனத் திரைப்படங்களுக்கு நெதர்லாந்தில் வருடா வருடம் நடக்கும் ரோட்டர்டேம் திரைப்படவிழா உரிய அங்கீகாரம் கொடுக்கும். அங்குதான் கூழாங்கல் வென்றது. அதன்பிறகு அப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பினார்கள். நமக்கே கூட சில சமயம் ரசனை மாறுபடும். நேற்று பிடித்தபடம் இன்றைக்கு பிடிக்காமல் போகாமல் போகலாம். இன்றைக்கு பிடித்தபடம் நாளைக்கு பிடிக்காமல் போகலாம். இப்படி ரசனை மாறுபடுவது எல்லாருக்கும் இயல்பு. அப்படித்தான் ஜூரிகளும் முடிவுகளை எடுப்பார்கள். அதையெல்லாம் மீறி உலக அரங்கில் இன்றளவும் சிலநாட்டுத் திரைப்படங்கள் வென்றுகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இங்கே இந்தியாவில் தேர்வுக்குழு யார் கையில் இருக்கிறது, என்ன மாதிரி படத்தை அவர்கள் அனுப்ப நினைக்கிறார்கள் என்பதெல்லாம் பொறுத்துதான் எல்லாமும் இருக்கிறது .

மற்ற நாடுகளைப் போலவே இங்கும் வணிக சினிமாக்கள், அதிக ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் சினிமாக்கள், வசூல்ரீதியான வெற்றியைப் பெரும் படங்களுமே நிறைய வருகின்றன. அப்படியும் அடித்துப்பிடித்து ஒன்றிரண்டு திரைப்படவிழாக்களின் தரம்வாய்ந்த படங்கள் மேலே வந்தாலும், பார்வையாளர்கள் மத்தியில் இதுபோன்ற படங்கள் முழுதாக கவனம் பெறாமலும் போய்விடுகின்றன. திரைப்பட விழாக்களை கவனத்தில் கொண்டு எடுக்கப்படும் படங்கள், அங்கு மட்டுமே திரையிட வேண்டும் என்கிறார்கள் நம் ஊர்களில் இருக்கும் சிலர். உலக சினிமா திரைப்படவிழாக்கள் எடுப்பதே இதுபோன்ற கலைப்படைப்புகள் இன்னும் நிறைய வரவேண்டும் என்பதால்தான்.

பார்வையாளர்களாகிய நாம் நம் பார்வையை கொஞ்சம் மெருகேற்றினால் படைப்பாளர்கள் தானாக நமக்கான படங்களையும் உருவாக்குவார்கள். உலக அளவில் அங்கீகாரம் பெற கமர்சியல் படங்கள் மட்டுமே கூடாது,  குடும்பக் கதைகளுக்கு எல்லா நாடுகளிலும் வரவேற்பு உண்டு, அதே போல மக்களின் பிரச்சனைகள் குறித்துப் பேசும் படங்களுக்கு முக்கிய கவனம் உண்டு. ‘இவர்களுக்கு இது போதும்’ என எதையுமே வரையறுக்காமல் இன்னும் நிறைய படைப்பாளிகளைக் கண்டறிய திரைப்பட விழாக்கள்தான் நல்ல பாதை. பல கோடிகள் செலவு செய்வது மட்டுமே சிறந்த படத்திற்கான அடையாளம் அல்ல. உதாரணத்திற்கு ஒரே ஒரு வீட்டிற்குள் ஒரே ஒருவர்  மட்டுமே படமெடுத்து அதை வெளியிட்டு வெற்றி பெற்ற இயக்குனர்கள் கூட உலகில்  இருக்கிறார்கள். அந்த வகையில் உலக சினிமாக்களோடு போட்டிபோட்டு எடுக்க எப்படிப்பட்ட படங்கள் வேண்டும் என்பதை ஒருவர் ஒரே ஒருமுறை ஏதாவது ஒரு உலக திரைப்பட விழாவை நேரில் சென்று பார்த்து வந்தாலே போதும். தானாக ஒரு  உத்வேகம்  கிடைத்து, அதை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள். 

இந்தியர்கள் ஒருவர்கூட இந்த ஆஸ்கர் விருது வாங்கவில்லையா என்றால், வாங்கி இருக்கிறார்கள். அதுகுறித்து தனிப்பெரும் கட்டுரையே எழுதலாம். டாக்குமென்டரியிலும், குறும்படத்திலும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட படங்களிலும், பாடல்களிலும் வாங்கியுள்ளார்கள். AR ரஹ்மான் வாங்கிய இசைக்கான விருதை பலரும் அறிவர். 

சரி மீண்டும் சர்வதேசப் படங்களுக்கு வருவோம்!!

இந்த வருடம் எப்படியும் All We Imagine as Light என்கிற படத்தை இந்தியா ஆஸ்கருக்கு அனுப்பிவிடும் என்றும், உறுதியாக இம்முறை நாம் நாமினேஷன் பட்டியல்வரை வந்து வெற்றி கூட பெற வாய்ப்பிருக்கிறது  என்றும் எதிர்பார்த்தோம்.  ஆனால், நேற்று முன்தினம் ஒரு செய்தி நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. அப்படத்தின் பிரான்ஸ் தயாரிப்பாளர்களான இருவர், All We Imagine as Light படத்தை அவர்கள் நாட்டின் சார்பாக அனுப்ப நான்கு படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அப்படி நடந்துவிட்டால், ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து எந்தப் படத்தை அனுப்புவார்கள்? நமக்கு சாதகமாக இருந்த ஒரு படமும் போய்விட்டதா? என்கிற கேள்விகள் வருகின்றன.

ஒருவேளை, பிரான்ஸ் அப்படத்தை அனுப்பாமல் போனால், இந்தியா மூலமும் அனுப்பப்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன்பு சில நாடுகளில் அப்படி நடந்தும் இருக்கிறது. உதாரணத்திற்கு Klondike  என்கிற உக்ரைன் படமொன்று சிறந்த War Drama படம். அது முன்பு வேறொரு நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியில் உக்ரைன் சார்பாகவே அனுப்பப்பட்டது.

இதில் இப்போது புதிதாக ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. All We Imagine as Light படத்தின்   தயாரிப்பாளர்கள், அப்படத்தை இந்தியா சார்பில் அனுப்பத் தயாராக இருப்பதாக இந்தியத் திரைப்படக் கழகத்திடம் உறுதிப்படுத்தியிருக்கின்றனர் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது.  ஏற்கனவே சொன்னது மாதிரி ஒரு படம் ஒரு நாட்டில் வெளியாகி 7 நாட்களாவது ஓடியிருக்க வேண்டும். ஆனால் கூட்டுத் தயாரிப்பில் உருவான காரணத்தினால், முன்பே அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உட்பட பெரும்பாலான முக்கிய நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்குகொண்டது இத்திரைப்படம். மேலும் சில மாதங்களுக்கு முன்பே, இத்திரைப்படம் மற்ற நாடுகளில் விநியோக ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தாலும், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதிலிருந்து இந்தியாவில் எந்த விநியோக ஒப்பந்தத்தையும் பெறவில்லை.  ஆனால் இப்போது அதற்கும் ஒரு தீர்வாக ‘ஆல் வி இமேஜின் ஏஸ் லைட்’ படத்தை ‘பாகுபலி புகழ்’ ராணா டகுபதிக்கு சொந்த பேனரான ஸ்பிரிட் மீடியாவால் வாங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இங்கே வெளியாகி, அதிகாரப்பூர்வ ஆஸ்கர் நுழைவுத் தகுதியைப் பெற முயற்சி செய்வதற்கான சரியான நேரமிது. அதனால், விரைவில் இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளிவரும்  என்று எதிர்பார்க்கலாம். அப்படியாக இப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்பினால், முன்பே கூறியதுபோல படம் இறுதிப்பட்டியலில் உறுதியாக வந்துவிடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வெற்றியும் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவா? என்றால், “ஆமாம்” எனலாம். கேன்ஸில் கூட பல வருடங்களாக இந்தியப்படம் கலந்துகொள்வது என்பதே கேள்விக்குறியாக இருந்தபோது, இந்தப்படம் விருதையும் வாங்கியுள்ளதால் எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும். மும்பையில் இருக்கும் இரண்டு பெண்களின் கதையைச் சொல்கிறது. மற்றபடி விரிவான கதையென்ன என்பதை திரைப்படம் வெளியானவுடன்தான் பேசலாம். 

2015 ல் துருக்கி படத்தை பிரான்ஸ் அனுப்பியது. Mustang என்ற படம் அட்டகாசமாய் இருக்கும். எத்தனையோ ஈரான் படங்களும் ஒரு சில நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்த படங்களும் டாக்குமென்டரி வாயிலாக வேறு நாடுகள் மூலம் அனுப்பப்பட்டும் கவனத்தை பெற்றுள்ளன. இப்படி பல நாடுகளில் நடந்திருக்கிறது. இப்போது இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஒருவேளை நாம் நினைத்த படம் அனுப்பப்படாமல் போனால், அதைத் தாண்டி வேறென்ன படங்களை அனுப்பலாம்? என்றால், எனது பரிந்துரையாக லாப்பட்டா லேடீஸ், தி ஷேம்லெஸ் (பிரெஞ்சு வெளியீடு),  சந்தியா சூரி இயக்கிய சந்தோஷ், ஆடுஜீவிதம், கொட்டுக்காளி,  கிஸ் வேகன், ய மேட்ச் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.  

இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியா எந்தப் படத்தை அனுப்ப இருக்கிறது என்று தெரிந்துவிடும். பார்ப்போம்.

இதுவரை ஆஸ்கரில் சிறந்த படம் மற்றும் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் என்ற இரு விருதுகளை ஒரே படமான பாரசைட் மட்டுமே வென்றுள்ளது. அந்தளவிற்கு தகுதியான இந்தியப்படம் வெகு விரைவில் வரவும் வாழ்த்துகளைத் தெரிவித்து காத்திருப்போம்.

வாய்ப்புள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் உள்ளுர் படங்களைத் தாண்டி, உலக சினிமாக்களையும் பாருங்கள், Parasite இயக்குனர் சொன்னது போல இரண்டு வரி சப்டைட்டிலைக் கடந்துவிட்டால் உலகில் எத்தனையோ நல்ல திரைப்படங்களை ரசிக்கலாம்.  குறிப்பாக, ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ஆஸ்கரில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுப் படங்களை மட்டும் தேர்வு செய்து  வருடத்திற்கு ஒரு 30 லிருந்து 50 வரை பார்க்க முயற்சி செய்யுங்கள். 

இதுவரை 40 படங்கள் 97 ஆவது ஆஸ்கருக்கு அனுப்பி இருக்கிறார்கள். அனுப்பிய படங்கள் எப்படி இருக்கின்றன? இதற்கு முன்பு இந்த நாடுகளில் இருந்து எத்தனை முறை அனுப்பியுள்ளனர்? வெற்றி வாய்ப்பு எவ்வளவு? நாமினேஷன் பட்டியல், இன்ன பிற கூடுதல் தகவல், மற்றும் படத்தைப் பற்றிய என் அபிப்ராயம் என்ன என்பதையெல்லாம்  இனிவரும் நாட்களில் பார்க்கலாம்.

அதுசரி,

எந்தப் படத்தை  இந்தியா ஆஸ்கருக்கு அனுப்பும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

எந்தப் படத்டை அனுப்பினால் சரியாக  இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள், கேட்போம்.

– சிவசங்கர்