Zee தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான ‘ரகு தாத்தா’ திரைப்படம் பெண்ணியம் பேசிய தமிழ்த்திரையுல வரலாற்றில் முக்கியமான திரைப்படம்.
இயக்குநர் சுமன் இயக்கிய ரகு தாத்தா திரைப்படம் பெண் அடிமைத்தனத்தையும் இந்தித் திணிப்பையும் சாடுகிறது. இந்தியக் குடும்பங்களில் பெண்களின் காலை கவ்வும் கலாச்சாரப் பூச்சியை இயக்குநர் நகைச்சுவை உணர்வுடன் திரையில் காட்சிப்படுத்தியுள்ளார்.
தான் பிறந்த குடும்பமானது, திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்துவதால் பெண்கள் வேறுவழியின்றி திருமணம் செய்துகொள்கின்றனர். வழக்கமான வட்டத்துக்குள் சிக்காத சுதந்திரத்திற்காக கலகம் செய்யும் பெண்கள்கூட தவிர்க்கமுடியாத சூழலில் மோசமான திருமண வாழ்க்கைக்கு பலியாகின்றனர். முற்போக்கான ஆணைத் திருமணம் செய்து கொண்டால் நாம் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று நம்புகின்றனர். இவ்வாறு நம்பக் கூடியவள்தான் கயல்விழி. முற்போக்கு, பெண்ணியம் என்று வாயால் மட்டும் வடை சுட்டுக்கொண்டு, அகத்தில் ஆணாதிக்க அழுக்கைத் தூக்கி சுமக்கும் கதாபாத்திரமே மாப்பிள்ளை செல்வன். அவனிடம் சிக்கிக் கொண்ட கயல்விழியின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் திரைக்கதை.
பெண்கள் சத்தமாக சிரித்தால் தவறு, சாலையில் தனியாக நடந்து சென்றால் தவறு, ஆண்கள் வரும்போது நாற்காலியில் அமர்ந்தால் தவறு, ஏன் தனக்கு விருப்பப்பட்ட உணவு உண்டால் கூட தவறு என்று பெண்களுக்கு போடப்பட்ட கட்டுப்பாட்டை அடுக்கிக் கொண்டே போகலாம். பெண்ணடிமைத்தனத்தை தக்கவைப்பதற்கு இச்சமூகம், பழமொழியும் உருவாக்கி வைத்துள்ளது.
‘உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு’, ’பெண் புத்தி பின் புத்தி’ என்றெல்லாம் பழமொழியை உருவாக்கி காலங் காலங்காலமாக குடும்பமும் சமூகமும் பெண்ணைத் தனக்கேற்றாற்போல் வடிவமைத்து வருகின்றன. ஒரு நாளில் பல நூறு முறை ’பொண்ணா அடக்கமா இரு’ என்பதைக் குடும்பங்கள் பெண்களிடம் வலியுறுத்துகின்றன. “பொண்ணா அடக்கமா எல்லாம் இருக்க முடியாது” என்று கயழ்விழியின் அழுத்தமான வாதம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமேயான சாட்டையடி.
நவீன காலத்தில் பெண்களின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாதவர்கள் பெண்சக்திக்கு விரோதமான கருத்துகளை பிரச்சாரம் செய்து வருகின்றனர். “முன்பு போல் இப்போது இல்லை, பெண்கள் முன்னேறிவிட்டனர்”, “அவர்களால் ஆண்களுக்குத் தான் பிரச்சனை”, “பெண்களின் முன்னேற்றத்தை கண்டு ஆண்கள் பெருமைப்படுகிறார்களே அன்றி அவர்களுக்கு தடையாக இருப்பதில்லை”, “ஆண்களின் வாழ்க்கையை பெண்கள் நாசமாக்குகின்றனர்” என்றெல்லாம் வாதங்களும், பொய்யான பிரச்சாரங்களும் பெண் விரோத சக்திகளால் மேற்கொள்ளப்படுகின்றன. அப்பிரச்சாரங்களும் பொய்யானவையே, இன்னும் சொல்லப் போனால் வஞ்சகத்தன்மையும் உடையவை என்பதை ரகு தாத்தா படம் இடித்துரைக்கிறது.
பெண் என்பவள் திருமணத்திற்கானவளாகவே வளர்க்கப்படுகிறாள். பிராய்லர் கோழியை எப்படி கூண்டுக்குள் அடைத்து கூண்டுக்குள்ளேயே தண்ணீர், சாப்பாடு எல்லாம் கொடுத்து வளர்க்கிறார்களோ, அதேபோல பெண்களையும் பாரம்பரிய சிறைக்குள் குடும்பங்கள் வளர்க்கின்றன. பிராய்லர் கோழிக்கு போடப்பட்ட கூண்டு கண்ணுக்கு தெரிகிறது. ஆனால் பெண்களுக்கு இடப்பட்ட்ட கலாச்சார கூண்டு நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. பாதுகாத்து வளர்த்த பிராய்லர் கோழியை கறிக்காக வெட்டுகிறார்கள். பாரம்பரிய சிறைக்குள் கட்டிக் காத்தவர்களை தாலியைக் கட்டி, அவர்களின் கனவுகளுக்கு சுருக்கு வைக்கிறார்கள். கயல்விழி கதாப்பாத்திரம், தனக்கு விருப்பமில்லாத திருமணத்தை மறுக்கும் உரிமையைக் கூட இச்சமூகம் பெண்களுக்கு விட்டு வைக்கவில்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார். தன் அடையாளத்தை விழுங்கக் காத்திருக்கும் திருமண வாழ்க்கையிலிருந்து தப்பிக்க கயல்விழி போன்ற படித்த கலகக்காரிகளுக்கே சிரமமாக இருக்கையில் கிராமப்புற மற்றும் சிறுநகரங்களில் வாழும் பெண்களுக்கு விருப்பமில்லாத திருமண வாழ்க்கையிலிருந்து தப்பிப்பது எளிதில் சாத்தியப்படக் கூடியதா? என்பதை விவாதத்துக்குள்ளாக்க வேண்டும்.
காலமும், சூழலும் மாற்றங் காண்பதால் படித்த பெண்கள் அதிகரித்துள்ளனர். ஆனால் படிப்பும் இங்கு கல்யாண சந்தையில் பெண்களை விற்பதற்காகத்தான். அந்தளவிற்கு தான் சமூகம் வளர்ந்துள்ளது. பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் ஆண்களின் விருப்பத்திற்கேற்ப தான். ஆண்களை விட பெண்கள் குறைவாகத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வேலைக்கு செல்ல வேண்டும் போன்ற ஆணாதிக்க கட்டுப்பாடுகளை இயக்குநர் திரையில் காட்சிப்படுத்தியுள்ளார்.
பெண்களுக்கு ஆதரவாக மேடையிலும், பொது இடங்களிலும் பேசக் கூடிய ஆண்கள் தன் வீட்டில் ஆணாதிக்கத்தை பாதுகாக்கும் அரணாக இருக்கிறார்கள். இவ்வாறான ஆண்கள் பேசும் பெண்ணியக் கருத்துகளுக்கு காது கொடுக்கும் சமூகம், தனக்கான உரிமையை ஒரு பெண் முன்வந்து பேசினாலோ, எழுதினாலோ அங்கீகரிக்கப்பதில்லை என்பதையும் ரகு தாத்தா திரைப்படம் சுட்டிக் காட்டுகிறது.
பெண்களின் விடுதலை பற்றி பேசும் போது பலர் கலாச்சார விடுதலையுடன் சுருக்கிவிடுகிறார்கள். ஆனால் ஒரு பெண்ணிற்கு முழுமையான விடுதலை யாதெனில் பொருளாதார மற்றும் அரசியல் விடுதலை. இவ்விரண்டும் சாத்தியமென்றால் கலாச்சார விடுதலை எளிதில் சாத்தியம். ரகு தாத்தா படத்தில் அரசியல் விடுதலையை முன்னிருத்தியது பாராட்டுக்குரியது. ஆனால் அரசியல் விடுதலையின் முக்கியத்துவத்தை திரையில் கூர்மைப்படுத்த தவறிவிட்டார் இயக்குநர். இருப்பினும் இவ்வாறான திரைப்படங்கள் இந்திய சமூகத்தில் தேவைப்படுகின்றன.
பெண் விடுதலை பெண்களுடன் சுருங்கக் கூடியதல்ல. பெண் விடுதலையே ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலை. பெண் முழுமையாக விடுதலையடைந்தால் மட்டுமே அவளை மையமாக வைத்து பின்னப்பட்ட சாதிய மதவாத வர்க்க ஒடுக்குமுறையும் களையும். உறுதியான பொதுவுடைமை சமூகத்தை கட்டமைப்பதற்கு பெண் விடுதலையை ஒருங்கிணைந்து சாத்தியப்படுத்துவோம்.
– கு.சௌமியா