அரசியல்சமூகம்

“மகாவிஷ்ணு” எப்படி நுழைந்தார்?

549 (2)

“ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்”. சிலம்பின் மகா வாக்கியம். அரசின் கொடுங்கோன்மையை எதிர்த்து ஒற்றை ஆளாய், அரசனை நேருக்குநேர் எதிர்கொண்டு, ‘தன் கணவன் கள்வன் அல்லன்’ என்று ஐயம் திரிபற நிரூபிக்கிறாள் கண்ணகி.
வெகுண்ட கண்ணகி, ஊர் எரிக்க தலைப்படவும், மதுராபதி நேரில் வந்து, கண்ணகியின் முற்பிறவி பற்றி எடுத்து இயம்பி, இப்பிறவியில் கோவலன் கொல்லப்பட, அவனது ஊழ்வினையே காரணம் என்று கண்ணகியை ஆற்றுப்படுத்துகிறது.

அரச வன்முறையை எதிர்த்து அரசைச் சாய்த்த கண்ணகியின், ஏக்கம், அழுகை, இழப்பை, ஊழ்வினை எனும் கருதுகோளால்,, சிலம்பு நியாயப்படுத்துகிறது. ஆக ‘மதுரை எரிந்ததும் முன்வினைப் பயனே” என்று முடித்துவிட்டு, அரசநீதி தொடர்கிறது இன்று வரை!

வாழ்வின் விடைதெரியாத கேள்விகளான, பிறப்பு, இறப்பு, எதிர்பாராத நோய், எதிர்ப்பாராத மரணம், உயிர் உடல் சார்பு, மறுமை போன்றவற்றிற்கு, இறை, ஊழ், கர்மவினை, வினைப்பயன் போன்ற ஆசுவாச விடைகளைக் கண்டடைந்த சமூகம், பின் நாட்களில் அவற்றை நிறுவனமயமாக்கி, இனக்குழு, சமயம், சிந்தனைப் பள்ளி என்று வளர்த்தது. இது இப்போது கூடுதல் சிக்கலாக மாறிவிட்டிருக்கிறது.

ஆனால் வினைப்பயன் என்ற கருதுகோள், மனிதனைத் தற்காலிகமாக மட்டுப்படுத்தும், அமைதிப்படுத்தும், திசைதிருப்பும் ஆயுதமாக இருக்கிறதே தவிர, மனித இயக்கத்தை, சிந்தனையை, அறிவை, வசதிவாய்ப்புத் தேடலை, புதிய கண்டுபிடிப்புகளை அதனால் நிறுத்த முடியவில்லை.

எல்லாமே விதியின் படி தான் என்று பரப்புவோரும், பிறருடைய செயல்பாடுகளைக் குறித்து, பதறிப் பேசத்தான் செய்கிறார்கள்.

எல்லாமே விதியின் படி தான் என்று பரப்புவோரும், பிறருடைய செயல்பாடுகளைக் குறித்து, பதறிப் பேசத்தான் செய்கிறார்கள்.

ஆனால் இந்தப் பாவ புண்ணிய, கர்ம வினை கருதுகோள்கள் மனிதனுடைய எழுச்சியை மடைமாற்றுவதில் வெற்றி பெற்றே வந்துள்ளன. இன்றுவரை எளிய மனிதர்களின் இந்த நம்பிக்கையை, தன் ஆயுதமாக்கிக் கொள்ளும் சுரண்டும் வர்க்கம், காலந்தோறும் இறுகி, இளகி, வளைந்து, நிமிர்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. எளிய மனிதர்கள் இந்தப் பெரும்போட்டியில் ஓட வேண்டி இருப்பதால், தெரிந்தோ தெரியாமலோ சுரண்டல் வர்க்கத்திற்குத் தங்கள் ஒப்புகையை வழங்கி, தங்களது இடத்தை உறுதிப்படுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள். எப்போது இந்த ஓட்டம் முடிவுக்கு வரும் ?


அண்மையில், மகாவிஷ்ணு என்ற இளைஞர் சென்னையில் சில பள்ளிகளில், ஆன்மீகச் சொற்பொழிவு என்ற பெயரில் ஒழுக்கம், கர்மவினை, பாவ புண்ணியம் போன்ற கருதுகோள்களைச் சிறுபிள்ளைத்தனமாக உளறிக்கொட்டி மாட்டி இருக்கிறார். இப்போது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவலில் இருக்கிறார். பாவ புண்ணிய கருத்துகளுக்காக வழக்கா? என்றால் இல்லை. அந்தப் பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் மீதான கடுஞ்சொற்பிரயோகத்திற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். துடுக்குத்தனமாக உளறிக்கொட்டி, திமிர் காட்டிய அவரைச் சமூக ஊடகங்களும், செய்தி ஊடகங்களும் ‘பெரிய சாமியாராக’ ஆக்க உழைத்துக் கொண்டிருக்கின்றன.

கல்வி அமைச்சரும் ‘என் ஏரியாவில் வந்து பேசி இருக்க உன்னை விடமாட்டேன்’ என்று வேட்டியை மடித்துக்கட்டிப் பேசி இருக்கிறார்.

தலைமை ஆசிரியர் இடமாற்றம், மாற்றுத்திறனாளி ஆசிரியருக்குப் பாராட்டு, இது ஆன்மீக மண்ணா? பெரியார் மண்ணா? என்ற விவாதம் போன்ற பரபரப்பான சூழலில், முதன்மை விவகாரம் எது? எவை முதன்மையாகப் பேசப்பட வேண்டும்? என்ற புரிதலுக்கு வருவதும், அதைப் பரப்புரை செய்வதுமே வருங்காலத்தில் பயனளிக்கும்.

  1. மகாவிஷ்ணு போன்றோர் எப்படி பள்ளிகளுக்குள் செல்ல முடிந்தது?
  2. ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் பணிச்சுமை என்ன?
  3. ஆசிரியர், தலைமை ஆசிரியர்களின் அரசியல் புரிதல் என்ன?
  4. என்ஜிஓக்களை அரசு ஏன் அனுமதிக்கிறது?
  5. அதிகார மட்டத்தின் தலையீடு எவ்வளவு? எப்படிக் கண்காணிப்பது?
  6. மதம், பண்பாடு, ஆன்மீகம் போன்ற சமூக நிறுவனங்களை எதுவரை கல்வி புலச் சூழலில் அனுமதிப்பது? என்ற வரையறை ஏன் இல்லை?
  7. பணிச்சுமைக்கு தீர்வு என்ன?
  8. கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் – மாணவர் உறவு, உளவியல் ஆலோசனை மையங்களின் தேவை இவை பற்றி விரிவான விவாதம் ஏன் இல்லை?
  9. போதைப்பொருள் புழக்கம் ஏன் இந்த அளவுக்கு அதிகரித்து இருக்கிறது?
  10. எல்லாவற்றுக்கும் மேலாக தனியார்மயக் கல்விக்கும், இந்த மாதிரியான நிகழ்வுகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?

இவற்றையெல்லாம் ஆழமாக விவாதித்தால், கல்வித் துறையும், அதிகாரிகளுமே முதன்மைப் பிரச்சனைகளாக இருப்பது தெரியும்.

‘கல்வியில் மாற்று என்பதை விட மாற்றுக் கல்வி’ என்பதைப் பேச வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.

‘நன்னடத்தை போதனை’ என்பது இந்திய நிலப்பரப்பின் தீரா நோய்! ‘போதனைகளினால் எதையுமே பெரிதாக மாற்ற விட இயலாது’ என்பது வெள்ளிடைமலை. ‘பெரிய பெரிய கொடூரங்களுக்கு, சிறு குற்றங்கள் தேவலை’ என்கிற அளவில் தான் ‘நன்னடத்தை போதனை’ தொழிற்படும். முதலாளிகள், லாபம் பெறுவதற்கு இந்த நன்னடத்தை அறப் போதனைதான், நாற்றங்காலாக இருக்கிறது என்பதே எதார்த்தம். அரச அறத்திற்கு ஏற்ற இந்தக் கல்வி முறையில் ஒட்டுமொத்தச் சமூகமே சீரழிந்து கொண்டிருக்கிறது. ‘கல்வியில் மாற்று என்பதை விட மாற்றுக் கல்வி’ என்பதைப் பேச வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. ‘தேசியக் கல்விக் கொள்கை’ வழியாகப் பிற்போக்குத்தனத்தைத் திணிக்கும், மைய அரசின் கொடுங்கோன்மைக்கு எதிராக, எதுவும் செய்ய முடியாத மாநில அரசு, முதலாளிகளுடன் சமரசம் செய்து, ஏதோ ஒரு வகையில் மைய அரசின் தனியார் மயத்திற்குத் துணை போவதைச் சுட்டாமல் இந்த விவாதத்தை விவாதிக்க முடியாது.

உணவுத் திட்டங்களில் என்ஜிஓக்கள்! இல்லந்தோறும் கல்வியில் என்ஜிஓக்கள் என்று நகர்கிற அரசு, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் , அருகமைப் பள்ளிகளை உருவாக்குதல், தாய்மொழிவழிக் கல்வியை உறுதிப்படுத்துதல், தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்துதல், கண்காணித்தல், சாதி மத அதிகாரத்தை கல்வி நிலையங்களுக்குள் தடை செய்தல் என்று செய்ய வேண்டிய எத்தனையோ செயல்களை செய்யமுனைவதே இல்லை

இவற்றைச் செய்யாமல், மகாவிஷ்ணு மீதான நடவடிக்கை மட்டும் எதை மாற்றப்போகிறது?

இந்த விவகாரம் நமக்கு வெளிப்படையாகச் சில விசயங்களைக் காட்டுகிறது!

அவை, கல்வி நிறுவனங்கள் வியாபாரத் தலங்கலாக மாறிவிட்டன. சாதி மத நடைமுறைகள் கல்விக்கூடங்களில் பெருகிவிட்டன. வலதுசாரிகள் அநேக வழிகளில் பள்ளி, கல்லூரிகளில் நுழைந்துவிட்டனர்! அதிகாரிகள் மட்டத்தில் ஆதாய, அதிகாரப் போக்கு வெளிப்படையாகக் கோலோச்சுகிறது! கல்விமுறையில் அடிப்படைக் கல்வி பின்தள்ளப்பட்டு, மதிப்பெண், போட்டித்தேர்வுகளுக்கான கல்விமுறையாக மாறிவிட்டது! ஆன்மீகம் என்ற பெயரில், மதவாதக் கருத்துகளும், பண்பாடு என்ற பெயரில் சாதி ஏற்றத்தாழ்வு நடைமுறைகளும் பள்ளிகளுக்குள் புகுந்துவிட்டன. மாணவர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர்! ஆசிரியர்கள் நிலைமை எல்லாவகையிலும் படுமோசம்!

அரசு , “கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்குதல், மத நடவடிக்கைகளைக் கையாளுதல்/ கட்டுப்படுத்துதல்/ கண்காணித்தல்’ குறித்த, சட்டங்களை உரிய ஆய்வுகளின் அடிப்படையில், சிறுபான்மையினரைக் கவனத்தில் கொண்டு உடனடியாகக் கொண்டுவர வேண்டும். இவை உடனடித் தேவைகள்! ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு அறிவியல் கல்வியை வழங்கவும், சமூகப்பொறுப்பை வளர்க்கும் பயிற்சியை வழங்குவதும் அவசியமாகும்.

பள்ளிக் கட்டமைப்புகள் மேம்படுத்தல், பெற்றோர் ஆசிரியர் மாணவர் உறவை மேம்படுத்த சமூக அளவில் குழுக்களை அமைத்தல், அறிவியல் சூழலியல் சிந்தனைகளை வளர்த்தல், சமூகத்தைச் சீர்குலைக்கும் பரப்புரைகளைத் தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், இவ்விவகாரத்திற்குத் தீர்வை எட்டமுடியாது!

‘இலவசக்கல்வி, எல்லோருக்கும் வேலை’ என்று நகர வேண்டிய அரசு, போட்டிகளை ஊக்குவிக்கிறது. இந்தப்போட்டிச் சூழலே, மகாவிஷ்ணுக்கள், இவரை அனுமதிக்கும் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆதரிக்கும் பெற்றோர் போன்றோர் வளர ஆதரிக்கிறது.

– ரபீக் ராஜா.

3 Comments

  • அரசு , (“கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர்களை நீக்குதல், மத நடவடிக்கைகளைக் கையாளுதல்/ கட்டுப்படுத்துதல்/ கண்காணித்தல்’ குறித்த, சட்டங்களை உரிய ஆய்வுகளின் அடிப்படையில், சிறுபான்மையினரைக் கவனத்தில் கொண்டு உடனடியாகக் கொண்டுவர வேண்டும். இவை உடனடித் தேவைகள்!) ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு அறிவியல் கல்வியை வழங்கவும், சமூகப்பொறுப்பை வளர்க்கும் பயிற்சியை வழங்குவதும் அவசியமாகும்./

    தேவைதான், அவசியம்தான். அதற்கு அடிப்படையான அறிவியல் பார்வையும் சமூக பார்வையும் முதலில் அரசுக்கு, மீண்டும் சொல்கிறேன், அரசுக்கு இருக்க வேண்டும். ஆளும் அரசும் அதன் அமைச்சர்களும் குறைந்த பட்சம் தமது கட்சியின் கொள்கை கோட்பாடு அறியாதவர்களாக அல்லது அவற்றில் இருந்து நழுவி செல்வோராக இருப்பின் அறிவியல் கல்விக்கும் சமூக பொறுப்புக்கு ம் எங்கே இடம்? யார் யாருக்கு உபதேசம் செய்வது என்ற கேள்விதான்.
    இப்போது நடந்த விவகாரத்தில் ஆர் எஸ் எஸ் சக்திகள் ஓரளவு வெற்றி பெற்றார்கள் என்று நான் சொல்வேன். ஒட்டுமொத்த தொண்டு அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் அனைத்தையும் பள்ளிகளில் தடை செய்வதன் மூலம் அறிவியல் இயக்கம் போன்ற அறிவியல் பார்வையும் சமூக பார்வையும் கொண்ட இயக்கங்களும் இனிமேல் பள்ளிகளில் நுழைய முடியாது. இது ஆர் எஸ் எஸ் போன்ற வலதுசாரி அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றிதான்.

    குறிப்பிட்ட நபரை மின்னல் வேகத்தில் கைது செய்து சிறையில் அடைத்த அரசு dust ஐ அடக்கி விட்டது. அவ்வளவுதான். அறிவியல் பார்வையும் சமூக பார்வையும் அற்ற அரசும்
    உயர் அதிகாரிகள் கூட்டமும் வலதுசாரி இந்துத்துவா சக்திகளுக்கு அடி பணிந்து போனதன் அடையாளம் இது என்றுதான் நான் சொல்வேன். முதுகெலும்பு இருக்கும் அரசு எனில் எந்தெந்த அமைப்புகளை பள்ளிகளில் அனுமதிக்கலாம், எவற்றை அனுமதிக்க கூடாது என்று ஆய்வு செய்து ஆணை இட்டிருக்க வேண்டும். அதை செய்யவில்லை. அதன் மூலம் வலதுசாரி இந்துத்துவா அமைப்புகளின் கோபத்துக்கு ஆளாகாமல் தப்பி உள்ளார்கள். இதுவும் திராவிட மாடலின் ஒரு அம்சம் என்று போகலாம்.

  • நல்ல கட்டுரை.
    அரசிற்கு அறிவியல் பார்வை தேவை. மேலும் அரசு முழுமையான மக்கள் நல அரசாக இல்லாமல், ஏதோ கம்பெனி போல் நடத்துவதாலயே இப்படியான சம்பவங்கள் நடக்கிறது.

Comments are closed.