இந்திய சினிமாசினிமா

ஜமா கலைஞர்களுக்குள் உண்டான உளவியல் ஊடாட்டம்

jama-review

-வெண்ணிற இரவுகள் கார்த்திக்

தெருக்கூத்துக் கலை என்பது தமிழர்களின் ஆதி கலை. நம் வாழ்வின் ஊடாக வந்து கலைஞனின் உடல்மொழியைக்கூட மாற்றும் கலை. அதன் வாழ்வியலை நெருக்கமாகப் பதிவு செய்கிறது “ஜமா”. திருவண்ணாமலையைச் சுற்றிய கூத்துக் கலைஞர்களின் வாழ்வியல் பின்னணியில் கலை, கலைக்கான விருப்பம், நட்பு, போட்டி, பொறாமை, அவமானம், இருப்பு என்று பல பரிமாணங்களில் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு கலைஞன் உச்சத்தை அடையும்போது கலையும் அவனும் ஒன்றாகிப் போவார்கள். கூத்துக் கலை என்பது மக்களே நேரடியாக நிகழ்த்தும் நிகழ்த்துக் கலை. இரத்தமும் சதையுமாகக் கலைஞர்களைக் காணும்போது வீரமோ, சோகமோ, துக்கமோ நம்முள் படிந்துபோகும். அப்படியே அந்தக் கலை பார்ப்பவர் கண்முன் நிற்கும்.

கலையும் கலைஞனும் சேரும் புள்ளி அலாதியானது, அது ஒரு மாயாஜாலத்தைப் போன்றது. சில கூத்துக்கள் நேரில் பார்க்கும்போது மாய எதார்த்த உலகத்துக்குள் நாம் சஞ்சரிப்பது அதனால்தான். இது உடலுழைப்புள்ள கலைகள் அனைத்துக்கும் பொருந்தும். கூத்துக் கலையின் நீட்சிதான் நவீன நாடகங்கள். உடல் உழைப்புச் செலுத்தி நம் கண்முன் நிகழும் நிகழ்த்துக் கலைகள் நம்மை ஆட்படுத்துவது அதனால்தான்.

வெறும் முகத்தில் காட்டும் நடிப்பல்ல, உடல் முழுவதும் அந்தப் பாத்திரமாகவே மாறிப்போகும் கலைஞர்கள் வாழ்வில் ஒப்பனை கலைத்த பின்பும் அந்தப் பாத்திரத்தின் மிச்ச சொச்சங்கள் ஒட்டிக்கொள்ளும்.

கூத்தில் திரௌபதி வேடமிடும் படத்தின் நாயகனுக்குப் பெண்மை ஒட்டிக்கொள்கிறது, திருமணத்துக்குப் பெண் கிடைக்கவில்லை. அவர் பெயரோ கல்யாணம். பாத்திரங்களின் பெயர் அனைத்தும் கதைக்குப் பொருத்தமாக வைக்கப்பட்டுள்ளது. கல்யாணத்துடைய தந்தையின் பெயர் இளவரசன், அந்த ஜமாவைத் தொடங்கியவர். ஜமாவைக் கைப்பற்றும் தாண்டவம் படத்தில் கலையில் தாண்டவமாடக்கூடிய பாத்திரம். கூத்திலும், படத்திலும் திறமையிலும், துரோகத்திலும், குரோதத்திலும், கலையின் உச்சத்தில் உணர்தலிலும் தாண்டவமாடும் பாத்திரம்.

அறிவியலின்படி புலிகளின் தோற்றுவாயாகப் பூனை இனத்தைச் சொல்வார்கள். இன்றிருக்கும் சினிமா, நாடகம் அனைத்துக்கும் தோற்றுவாய் கூத்து.

“பூனை” என்றொரு பாத்திரம் இளவரசன், தாண்டவத்துக்கு எல்லாம் கூத்துக் கலையைச் சொல்லித்தந்தவர் பூனை. அறிவியலின்படி புலிகளின் தோற்றுவாயாகப் பூனை இனத்தைச் சொல்வார்கள். இன்றிருக்கும் சினிமா, நாடகம் அனைத்துக்கும் தோற்றுவாய் கூத்து. படத்திலும் பூனையின் வழித்தோன்றல்கள்தான் இளவரசன், தாண்டவம், கல்யாணம். பூனை என்ற பெயர் அந்தப் பாத்திரத்துக்கு அப்படிப் பொருந்திப்போகிறது.

இளவரசன், தாண்டவம், கல்யாணம் மூன்று பாத்திரங்களும் ஒரு கூத்துக் கலைஞனின் வெவ்வேறு முகபாவனைகள். அவமானம், குரோதம், ஏமாற்றுதல், ஆணவம் எனும்போது அந்தக் கலைஞனின் முகத்தில் தாண்டவத்தின் முகம் தெரிகிறது. திறமை, கோபம், அவமானப்படுத்துதல், ஏமாறுதல் என்னும்போது அந்தக் கலைஞனின் முகம் இளவரசனாக மாறுகிறது. அவமானப்படுத்தல், இருத்தல், பழிவாங்குதல், கலையுடன் ஒன்றுபட்டு உச்சத்தைத் தொடுதல் என்னும்போது அந்தக் கலைஞன் முகத்தில் கல்யாணம் முகம் தெரிகிறது.

ஒரு கலைஞனின் வெவ்வேறு உணர்வுகளை வெவ்வேறு பாத்திரமாக இயக்குநர் படைத்திருக்கிறார். ஒரு மூன்று தலை இராவணன் போன்ற ஒரு கூத்துக்கலைஞன் நம் கண்முன் நிற்கிறான்.

பூனையின் நீட்சிதான் இளவரசன். இளவரசன் திறமையானவர், கோபக்காரர். இளவரசனிடமிருந்து ஜமாவை ஏமாற்றி வாங்குகிறார் தாண்டவம். அதை மீட்டெடுக்கிறார் இளவரசனின் மகன் கல்யாணம்.

கல்யாணம் தாண்டவத்தை எப்படிப் பழிவாங்குகிறார் என்பது கலையின் உச்சம். ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனைக் கலை மூலமாகவே பழிவாங்குவதும் வெற்றி கொள்வதும் கலையின் உச்சம்.

இவர்கள் ஜமாவில் பெரும்பாலும் மகாபாரதக் கதைகளே கூத்தாகப் போடுவதாகக் காட்டப்படுகிறது. அர்ஜுனன் வேடமே நாயகன், ராஜபாட்டை என்று கூத்தில் சொல்வார்களே அதுதான் அர்ஜுனன் வேடம். அந்த வேடம் இளவரசனிடமிருந்து தாண்டவத்துக்குப் போகிறது. ஜமாவிலிருந்து வெளியேறும் இளவரசன் குடித்துக் குடித்தே செத்துப்போகிறார். ஒரு முழுமையடையாத கலைஞனாக இறந்துபோகிறார். அவர் முன்கோபமே அவரை முழுமை அடையாத கலைஞனாக ஆக்குகிறது.

தாண்டவம் ஆணவத்தால் தாண்டவமாடுகிறார், அவரிடம் ஜமா உள்ளது அவரே வாத்தியார். விரக்தியில் இளவரசன் குடித்தாரென்றால் ஆணவத்தில் தாண்டவம் குடிக்கிறார். இளவரசனுக்கு முன்கோபமென்றால் தாண்டவத்துக்கு ஆணவம். கலைக்காக வந்த கல்யாணத்தை இளவரசி மேலிருக்கும் வெறுப்பில் அவமானப்படுத்துகிறார், பெண்கள் வேடமே கல்யாணத்துக்குக் கொடுத்து கல்யாணத்தின் ராஜபாட்டை கனவைச் சிதைக்கிறார்.

இளவரசனுக்கும், தாண்டவத்துக்கும் கலையைத் தாண்டி அதிகாரம் தேவைப்படுகிறது. அதிகாரத்திலிருந்து ஒரு படி கீழிறங்கினாலும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. ஒரு முறை ராஜபாட்டை வேடமணிந்துவிட்டால் ராஜபாட்டை தான். அதற்குக் கீழ் இறங்கிவருவதில்லை. அதுவே அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக உள்ளது. இளவரசன் தன் கலையிலோ, மரணத்திலோ உச்சத்தை அடையவில்லை, முழுமையடையவில்லை. தாண்டவம் தன் கலையில் இறுதிக்காட்சிக்கு முந்தைய காட்சியில் உச்சமடைகிறார்.

அன்று அர்ஜுனன் வேடமிடப்போகும் கல்யாணத்தை குந்தி வேடமிடச் சொல்கிறார் தாண்டவம். எப்போதுமே அர்ஜுனன் வேடமிடும் தாண்டவம் கர்ணன் வேடமிடுகிறார். எப்போதுமே திரௌபதி வேடமிடும் கல்யாணம் அன்று குந்தி வேடமிடுகிறார். நாடகத்தின் ஊடே கர்ணன் இறந்த காட்சியில் குந்தியின் நடிப்பைப் பார்த்து கலங்கிப்போகிறார் கர்ணனான தாண்டவம்.

தாண்டவம் ஏன் கர்ணனாக இருக்க வேண்டும். கர்ணன் கொடை வள்ளல், தன்னுடைய வாத்தியார் பொறுப்பை, ஜமாவை, ராஜபாட் பாத்திரங்களை கல்யாணத்துக்கு அப்படியே கொடுக்கிறார் என்று புரிந்துகொள்ள முடியும். தன்னுடைய அத்தனை அதிகாரத்தையும், அகங்காரத்தையும் கல்யாணத்தின் கலையின் முன் காலடியில் போட்டுவிட்டு மடிகிறார் தாண்டவம். எந்தத் தாண்டவமும் கலைக்குக் கீழே தான் வரும். கலையின் மொத்த உருவமாக கல்யாணமும் அதற்குக் கீழே தான் தாண்டவமும் என்னும் காட்சி உணர்ச்சிப் பெருக்கான காட்சி.

அதுவரை முழுமையடையாத தாண்டவம், தான் சாவதற்கு முன் முழுமையடைகிறார். அனைத்து மனித உணர்வுகளை ஊடுருவுவதற்கென ஆற்றல் கொண்டவன் கலைஞன். உலகிலேயே மோசமான விடயங்களை செய்துகொண்டிருக்கும்போதே ஆகச்சிறப்பான விடயங்களை உணரக்கூடியவனும் கலைஞன். அப்படி மோசமான மனிதராகவும் ஆகச்சிறப்பான கலைஞனாகவும் தாண்டவம். தன்னுடைய மரணத்துக்கு முன் வாழ்வை உணர்ந்த மனிதராக மாறுகிறார், கல்யாணத்தின் கலையே தாண்டவத்தை மாற்றுகிறது, முழு கலைஞனாக மாற்றுகிறது.

கல்யாணம் கலையில் “காந்தம்” என்றால் தாண்டவம் “இரும்பு”. கல்யாணம் இரும்பாக இருந்து தன் கலையின் ஆற்றலால் காந்தமாகிப்போகிறார், கல்யாணம் கலையின் உச்சம் அடையும்போது காந்தமாகிறார், பக்கத்திலிருக்கும் தாண்டவத்தையும் முழு காந்தமாக ஆக்குகிறார், கலைஞனாக மாற்றுகிறார். அந்த உணர்தலை படம் கடத்துகிறது.

அதற்கு அடுத்துவரும் காட்சி உச்சபட்ச காட்சி. ஜமாவை இப்படி புரிந்துகொள்ளலாம்: முழுமையடையாமல் இறந்து போகும் கலைஞன், மரணப்படுக்கையில் முழுமையடையும் கலைஞன், கலையின் ஊடாக உச்சத்தை, ஆழத்தை, முழுமையை உணரும் கலைஞன். இந்த மூன்று கலைஞர்களுக்கான உளவியல் ஊடாட்டமே ஜமா.

படத்தில் வரும் ஜெகதாம்பா என்னும் கல்யாணத்தின் காதலி ஆகச்சிறப்பான பாத்திரம். அவள் யார் ஆண் மகன் என்று சொல்லும் காட்சி பெண்ணியத்தின் புதிய பரிமாணம். அப்படி ஒரு காதலைப் பார்ப்பது அரிது. அந்தக் காதலைத் தாண்டி கல்யாணத்துக்குக் கலையின் உச்சம் புரிகிறது, அந்த உணர்தலைத் தன்னை அடக்கிய கலைஞன் தாண்டவத்துக்கு உணர்த்த முடிகிறதே தவிர தனக்காக இருக்கும் ஜெகதாவுக்கு உணர்த்த முடியவில்லை. இது கலைஞர்களுக்கு உண்டான சங்கேத மொழி. கலை காதலைத் தாண்டிவிட்டதை வேறு படங்கள் உணர்த்தியிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. உச்சத்தைத் தொட்டிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் நாயகனாக நடித்து இயக்கியிருக்கிற பாரி இளவழகன், தாண்டவமாக வரும் சேத்தன், ஜெகதாம்பாளாக வரும் அம்மு அபிராமி, இளவரசனாக வரும் கிருஷ்ணா தயாள், கல்யாணம் அம்மாவாக நடிக்கும் மணிமேகலை, பூனையாக நடிக்கும் வசந்த் மாரிமுத்து, தாண்டவம் மனைவியாக நடிக்கும் சத்யா மருதாணி அனைவரின் நடிப்பும் சிறப்பு. இளையராஜாவின் இசை படத்துக்குப் பலம்.

மொத்தத்தில் ஜமா கலைஞர்களுக்குள் உண்டான உளவியல் ஊடாட்டம். இது கூத்துக்கலையைத் தாண்டி எந்த ஒரு கலைஞனும் தன்னை பொருத்திப்பார்க்கக் கூடும்.