அரசியல்இந்தியா

இந்திய ஒலிம்பிக்கை அம்பானிகள் கைப்பற்றுவதைத் தடுத்தே ஆகவேண்டும் .!

549 (1)

பவன் குல்கர்னி

தமிழில்: மோசஸ் பிரபு

33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் கடந்த  ஜூலை 26 முதல் ஆகஸ்ட்-11 வரை நடைபெற்றது. சுமார் 204 நாடுகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் சார்பாக 117 பேர் பங்கேற்றனர். மொத்தம் 1 வெள்ளி மற்றும் 5 வெங்கலம் உள்ளிட்ட 6 பதக்கங்களை இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர், 

2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா முயற்சி செய்ய உள்ளதாக ஒருவர் அறிவிப்பை வெளியிட்டார். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியோ அல்லது ஒலிம்பிக் விளையாட்டின் மூத்த வீரரோ அல்ல, மாறாக இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி தான் அவ்வாறு கூறியது.

நாட்டின் மிக முக்கியமான பொருளாதாரச் சொத்துகளாகத் திகழும் எண்ணெய் மற்றும் தொலைத்தொடர்பு துறை முதல் செய்தி மற்றும் பொழுதுபோக்குத் துறையின் பெரும்பகுதி வரை தனது  கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், அம்பானியின் கார்ப்பரேட் சாம்ராஜ்ய நிறுவனமான ரிலையன்ஸ், இந்திய ஒலிம்பிக்கின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் முயற்சியில் சில ஆண்டுகளாக தீவிரமான முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது.

இந்திய விளையாட்டு வீரர்கள், இரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு விருந்தளிப்பதற்கும், இந்தியாவின் கலாச்சாரப் பெருமைகளை உலகிற்குக் எடுத்துக்காட்டப் போவதாகக் கூறியும் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் தருணத்தில் ‘இந்தியா  இல்லம்’ என்ற பெயரில் ஒரு அரங்கத்தை உருவாக்கினார்கள். இது ரிலையன்ஸ் அறக்கட்டளையால் நிதியளிக்கப்பட்டு, அதன் தலைவர் நீதா அம்பானியால் திறந்து வைக்கப்பட்டது. பொதுவாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இடம் பெற்றிருந்தவர்கள் ஏதேனும் ஒரு விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களாக இருக்கிறார்கள். நீதா அம்பானி மட்டும்தான் இந்தியாவிலிருந்து அந்தக் கமிட்டியில் இடம்பெற்றிருந்தவர்களிலேயே  எந்த விளையாட்டுப் பின்னணியும் இல்லாதவராக இருக்கிறார்.

1000685233

“உலக விளையாட்டின் இதயம்” என அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகளை ஒலிம்பிக் குழுதான் ஒருங்கிணைக்கிறது. ஒலிம்பிக் இணையதளத்தில் 111 உறுப்பினர்களின், சாதனைகள் அடங்கிய சுயவிவரப் பக்கம் பட்டியலிடப்பட்டுள்ளது.  மற்ற அனைத்து உறுப்பினர்களின் பக்கங்களிலும் ‘விளையாட்டு பயிற்சி’ மற்றும் ‘விளையாட்டு தொடர்பான வாழ்க்கை’ பற்றிய  இரண்டு பிரிவுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் நீதா அம்பானிக்கு எந்தப் பங்கும் இல்லாததால் தனித்து தெரிகிறது.  

‘விளையாட்டு நிர்வாகிகள்’ என்ற பிரிவில், மற்ற உறுப்பினர்கள் தங்கள் தலைமைப் பண்புகள் குறித்தும் பல்வேறு தேசிய-சர்வதேச விளையாட்டுக் கூட்டமைப்புகளில் பங்கேற்றது பற்றியும் தேசிய ஒலிம்பிக் சங்கங்களின் உறுப்பினர்களாக செயல்பட்டது உள்ளிட்டவற்றையும் தங்கள் பக்கத்தில் சாதனைகளாகப் பட்டியலிட்டிருக்கிறார்கள். ஆனால் விளையாட்டு நிர்வாகப் பிரிவில் நீதா அம்பானியின் சாதனைகள் பற்றிய விளக்கமாக ரிலையன்ஸ் விளம்பரம் மட்டும்தான் ஒலிம்பிக்கின் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது உள்ளது. அதைத் தாண்டி, வேறு எந்த விளையாட்டு அனுபவமும் இல்லாதவராக இருக்கிறார். இந்திய ஒலிம்பிக்கை ஆக்கிரமித்திருக்கும் கார்ப்பரேட் நலனுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. “விளையாட்டு நிர்வாகத்தில் எந்த அனுபவமும் இல்லாமல்” அவர் இந்தத் துறையில் “மிக முக்கிய பொறுப்பிற்கு உயர்த்தப்பட்டுள்ளார்” என்று மல்யுத்தம் மற்றும் ஜூடோவில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள  பத்திரிகையாளரான லெஸ்லி சேவியர் புகார் கூறியுள்ளார்.

தேசிய விளையாட்டு அமைப்புகளை நிர்வகிப்பதில் அனுபவம்வாய்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்களை சர்வதேச ஒலிம்பிக் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று பல நாடுகள் விரும்புகின்றன, ஏனெனில் அந்தப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு நாட்டின் விளையாட்டு மற்றும் விளையாட்டு கலாச்சாரம் பற்றிய நுணுக்கமான புரிதல் தேவைப்படுகிறது,” என்று அவர் கூறினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி போன்ற பெரிய அமைப்பின் உயர்பொறுப்பில் “விளையாட்டுப் பின்னணியே இல்லாத ஒரு நபர் இடம்பெறுவது இதற்கு முன்பு நடைபெறாதது”. அவரது தலைமையின் கீழ் இந்திய விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கையாள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. அவரது நிர்வாகத் திறமை எங்கேயும் பிரதிபலிக்கவில்லை. 

1000685237

பாரிசில் நிலவும் வெப்ப அலையிலிருந்து தற்காத்துக்கொள்ள கார்பன் தடயத்தைக் குறைப்பதற்காக  குளிர்சாதன பெட்டிகளுக்கு மாற்றாக கீழ்தள குளிர் செயல்முறை மற்றும் உள்ளமைக்கப்பட்ட மின்காப்பு(INSULATION) மூலம் ஒலிம்பிக் நடைபெறும் பகுதியை குளிர்ச்சியாக வைத்திருக்க முடியவில்லை.

“அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரிட்டன், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் தங்களது விளையாட்டு வீரர்களின் அறைகளில் முதல்நாள் முதலே போர்ட்டபிள் ஏசிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்திருந்தன. ஆனால் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 117 விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு அமைச்சகம் 40 போர்ட்டபிள் ஏசி யூனிட்களை அனுப்புவதற்கே இந்திய ஒலிம்பிக் நிர்வாகம் அலட்சியமாக நடந்துகொண்டது. இந்திய விளையாட்டு வீரர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக சிரமப்பட்டனர். அவர்களுக்கு வெப்பநிலையைச் சமாளிப்பது மிகக் கடினமாக இருந்தது. இவை இந்தியாவுடைய  ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் ஒலிம்பிக் சங்கம் ஆகிய அமைப்புகளால் எளிதாகக் கையாளப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள்” ஆனால் அதைச் செய்யவில்லை என்று பத்திரிக்கையாளர் சேவியர் குற்றம்சாட்டியுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் சங்கம் 2016 ஆம் ஆண்டு  நீதா அம்பானியை முதன்முதலில் கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுத்த பிறகு, 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக அவரை மீண்டும் தேர்வுசெய்தது. இந்தத் தேர்தல்கள் எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் நடந்திருக்க வேண்டும். 

“ஆனால் இந்தியாவில் உயர்மட்ட விளையாட்டுக் கூட்டமைப்புகள் பெரும்பாலானவை அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படுகின்றன. இந்திய ஒலிம்பிக் சங்கம் நேரடியாக  அரசியல்வாதியின் தலைமையில் இல்லை என்றாலும், அதற்குள் நிறைய அரசியல் தலையீடுகள் உள்ளன. இதில் ஆளும் கட்சிக்கு வெளிப்படையாகவே ஆதரவு அளிக்கும் நிலைபாடு உள்ளவர்கள் அதிகம் இடம் பெற்றிருப்பார்கள். இந்திய ஒலிம்பிக் சங்கம் விளையாட்டு அமைச்சகத்துடன் மிகவும் நெருக்கமாக செயல்படுகிறது” 

என்று அவர் மேலும் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.

மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பு

இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் PT உஷா தலைமை தாங்குகிறார்.  அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 14 தங்கப் பதக்கங்கள் மற்றும் 7 வெள்ளிப் பதக்கங்கள் உள்ளிட்ட 23 பதக்கங்களை வென்றவர். 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஒரு நொடிக்கும் குறைவான வினாடியில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டவர். அவரது திறமைக்காக இன்றளவும் சிறப்பாக நினைவுகூறப்படுகிறார். 2022 ஆம் ஆண்டில் பாஜகவால் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பாலியல் அத்துமீறலுக்காக பாஜகவின் அமைச்சர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியதற்காக அவர்களை நோக்கி, “போராடுவது ஒழுக்கக்கேடான செயல்” என பி.டி.உஷா கண்டித்தார். இதனால் ​​இந்திய ஒலிம்பிக்கின் சாதனையாளராக அறியப்பட்ட பி.டி.உஷா, நாடு முழுவதும் தனக்கிருந்த மரியாதையைக் கெடுத்துக்கொண்டார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WRI) அப்போதைய தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் திட்டமிட்ட பாலியல் வரம்பு மீறல்கள் நடத்தப்பட்டபோதும், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போராட்டம் நடத்தியும் பெரிய பாதிப்பு இல்லாமல் பிரிஜ் பூஷன் இயல்பாக வலம் வந்தார். பிரிஜ் பூஷனின் உதவியாளர் சஞ்சய் சிங் மல்யுத்த அமைப்புக்குத் தலைவராக பொறுபேற்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக கண்ணீருடன் சாக்ஷி மாலிக் அறிவித்தார். 

1000685232

“காலாவதியான மருந்துகள் அடங்கிய தொகுப்பை கடந்த 2023 டிசம்பர் மாதம் ஏன் பயன்படுத்தினீர்கள்” என்று தேசிய ஊக்க மருந்து அமைப்பிடம்  பஜ்ரங் பூனியா  கேள்வி எழுப்பினார். இதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. எனவே தேர்வுக்கான பரிசோதனை நடைபெறும்போது பஜ்ரங் பூனியா சிறுநீர் மாதிரியை அனுப்பாமல் “என் கேள்விக்கு பதில் வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே உலக மல்யுத்த அமைப்பு பரிசோதனைக்கு ஒத்துழைப்பு தராததால் ஒலிம்பிக்கில் போட்டியிட  வாய்ப்பில்லாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இருப்பினும், வினேஷ் போகட், பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் தொடர்ந்து விளையாடினார். 57 கிலோ எடையுடன் இருந்த அவர் 53 கிலோ பிரிவில் மல்யுத்தம் செய்ய விரும்பினார். ஆனால் பிரிஜ் பூஷனின் கூட்டாளியின் தலைமையிலான மல்யுத்த அமைப்பு , அவருக்கு வாய்ப்பை மறுத்து, 50 கிலோ பிரிவில் மல்யுத்தம் செய்ய வேண்டும் அல்லது போட்டியில் இருந்து வெளியேற வேண்டுமென்று  கட்டாயப்படுத்தியது.

வினேஷ் போகாட் தனது எடையை 50 ஆகக் குறைத்து, கால் இறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளை வெல்வதற்கு முன்பு, இதுவரை தோற்கடிக்கப்படாத ஜப்பானிய சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவருமான யுய் சசாகியோடு மல்யுத்தம் செய்து வெற்றி பெற்றார். அவரை வெற்றிக்கொண்ட முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஆனால் 50 கிலோவுக்கு மேல் 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி, வினேஷ் போகாட் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். எடை குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளும் போது, அவரது பயிற்சியாளர் “அவள் இறந்துவிடுவாளோ” என்று பயந்தார். அந்த அளவிற்கு கடுமையாக முயற்சி செய்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் “நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்” என்று வினேஷ் போகாட்டிற்கு உறுதியளிக்கும் விதமாக தனது அறிக்கையில், நீதா அம்பானி குறிப்பிட்டிருந்தார். ஆனால், இது உண்மையான ஆறுதலாகத் தெரியாமல் போனதற்கு காரணம் இல்லாமல் இல்லை. விவசாயச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள், டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் அம்பானி என்கிற பெயருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். பின்னர் எதிர்ப்புத் தெரிவித்த மல்யுத்த வீரர்களை ஒடுக்குவதற்கு காவல்துறையினர் பயன்படுத்தப்பட்டனர். இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால், நீதா அம்பானிக்கு உண்மையான அக்கறை இருந்திருக்குமா என்ற கேள்வி இயல்பாக எழுவதில் ஆச்சர்யம் இல்லை.

தனது தகுதிநீக்கத்திற்கு எதிரான மேல்முறையீட்டில் விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தின் (சிஏஎஸ்) தீர்ப்பு வெளிவந்ததும், 100 கிராம் கூடுதலானதற்கு வினேஷ் போகட் மற்றும் அவரது பயிற்சியாளரே காரணமென்று குற்றஞ்சாட்டி கடுமையாகப் பேசினார் பி.டி.உஷா. ஆனால் 2008ல் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் உட்பட பலரும், “அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும்” வெளிப்படுத்தினார்கள். வினேஷ் போகட்டுக்கு எதிராகப் பின்னப்பட்டுள்ள ‘நாசவேலை’ குறித்த கேள்விகளை எழுப்பினார்கள். நீதா அம்பானி இந்திய ஒலிம்பிக்கில் எந்த அனுபவமும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு நீதா அம்பானி தேர்ந்தெடுக்கப்பட்டாலும், “விளையாட்டுகளில் அனுபவம் இல்லாத ஒருவர் அத்தகைய பொறுப்புக்கு வருவதை எதைக் காட்டுகிறது என்றால், இந்தியாவின் வாக்களிக்கும் ஜனநாயகக் கலாச்சாரத்தை ஆக்கப்பூர்வமாக இத்தகைய தேர்வுகள் பிரதிபலிக்கவில்லை” என்பதைத்தான்.

பாரபட்சமான நிலை

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான வயாகாம் 18, ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான பிரத்யேக உரிமையைப் பெற்றுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் நீதா அம்பானி இடம் பெற்றிருப்பதால், அதைப் பயன்படுத்தி இந்த உரிமங்களைப் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷனின் உரிமைகள் ஒன்றிய அரசாங்கத்தால் முறையாக பாதுகாக்கப்படவில்லை. எனவே டிடி டிஷ் மீது துணை உரிம ஒப்பந்தம் மூலமாக மட்டுமே பார்வையாளருக்கு வாங்கி அமைக்க ரூ.2000 வரை செலவாகும். இதனால் அரசு அலைவரிசையால் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாமல் போனது. இது, தங்கள் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்த விரும்பும் இந்திய ரசிகர்களை வயாகாம் 18 இன் OTT இயங்குதளமான ஜியோ சினிமா அல்லது அதன் ஸ்போர்ட்ஸ் 18 அலைவரிசைக்கு சந்தாதாரராக இணையும்படி மறைமுகமாக கட்டாயப்படுத்தியது. 

அம்பானியின் வயாகாம் 18 ஆனது இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றுள்ளது, ஐபிஎல்-இன் மும்பை இந்தியன்ஸ் என்ற ஒரு அணியையும் சொந்தமாக வைத்திருக்கிறது. அத்துடன், ஐபிஎல்-க்கு நிகரான ஐஎஸ்எஸ் (ISL – INDIAN SUPER LEAGUE) என்கிற கால்பந்து போட்டிக்கான பிரத்யேக ஒளிபரப்பு உரிமைகளும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளன. இதை நடத்துவதே நீதா அம்பானி இயக்குநராக இருக்கும் FDFS (FOOTBALL SPORTS DEVELOPMENT LIMITED) என்ற கால்பந்து அமைப்புதான். பொதுவாக “இந்தியாவில் தொழில்முறை விளையாட்டு அமைப்புகள் அமெரிக்க மாதிரியைப் பின்பற்றுகின்றன, இது முற்றிலும் பெருநிறுவன மற்றும் இலாப நோக்குடையது. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளை பொறுத்தவரை அமெரிக்காவில் கூட இந்த அளவு கார்ப்பரேட்மயம் இல்லை, தேசிய உணர்வுகள் முதல் புவிசார் அரசியல் செல்வாக்கு வரை  ஒலிம்பிக்கில் பல தாக்கங்கள் உள்ளன.

பெருநிறுவனமயமாக்கல் நிதிப் பற்றாகுறையின் சிக்கலை தீர்க்காது

‘நிதியில்லாத இந்திய விளையாட்டுகளுக்குப் பெருநிறுவனங்கள் பணத்தை செலவு செய்யும்’ என்ற அடிப்படையில் சிலர் இந்திய ஒலிம்பிக்கில் நடைபெறும் பெருநிறுவனமயமாக்கலை  வரவேற்கிறார்கள். நிதி ஒதுக்கீடு குறித்த தவறான புரிதலின் அடிப்படையில் இந்தக்கருத்து நிலவுகிறது. சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சிக்காக அரசாங்கத்தால் நியாயமான முறையில் நிதியளிக்கப்படுகிறது. அதாவது, கெலோ இந்தியா திட்டம் உட்பட வரி செலுத்துவோர் மூலமாகவும் ஜிண்டாலின் JSW வழங்கும் விளையாட்டு சிறப்புத் திட்டத்தின் மூலமாகவும் இந்த நிதி ஒதுக்கீடு நடைபெறுகிறது. சில தனியார் நிறுவனங்களால் இதற்கு கூடுதல் ஆதரவும் கிடைக்கிறது. ஆனால் இந்த திட்டங்களின் மூலமாக ‘சர்வதேச அளவில் ஜூனியர் பிரிவில் ஏற்கனவே திறனை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது’.

பெரும்பான்மையான எண்ணிக்கையில் இருக்கிற சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் அடிமட்டத்தில் உள்ள மக்கள் பங்கேற்கும் பகுதிகளுக்கு நிதியளிக்க மறுப்பதுதான் இங்கே உள்ள முக்கியப் பிரச்சனையாகும். அங்குதான் தினசரி விளையாடும் பழக்கத்திலிருந்து, குழந்தைகள் தங்கள் விளையாட்டுத் திறன்களைக் கண்டறிந்து சர்வதேச அளவில் போட்டியிட வேண்டுமென்ற இலட்சியங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். நிதி உதவி இல்லாத அல்லது கிடைக்காத காரணத்தால், அடுத்த கட்டத்திற்கு செல்லும் விளையாட்டு வீரர்களாக மாறுவதற்கு வாய்ப்பில்லாமல் ஆர்வம் கொண்ட பெரும்பாலான இளைஞர்கள் இளம் வயதிலியே அவ்விளையாட்டுகளை கைவிட வேண்டிய சூழல் தொடர்ந்து ஏற்படுகிறது. பெருநிறுவனங்கள் வழங்கும் நிதியுதவி, இந்த விளையாட்டுத் துறையில் உள்ள அடிப்படையான சிக்கலைத் தீர்க்க முன்வராது. ஏனெனில் இந்த ஏழை-நடுத்தர மக்கள் பங்கேற்கும் விளையாட்டுகளில் முதலீடு செய்வதால் அவர்களுக்கு எந்த இலாபமும் இல்லை. நாட்டின் பல திறமையாளர்கள் பெரும்பகுதியினர் இதனால் வீணாகின்றனர்.

விளையாட்டுகளில் பெருநிறுவனமயமாக்கல் ஆதிக்கம் அதிகரித்தே வருகிறது. இந்திய ஒலிம்பிக் அம்பானியால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மற்றொரு தாக்கம் ஏழை நடுத்தர மக்கள் விளையாடுவதற்கான பொது இடங்கள் கூட குறைந்து கொண்டே வருகின்றன. பெருநகரங்களில், பொது விளையாட்டு மைதானங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மறைந்து வருகின்றன. ஏழை-நடுத்தர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பயன்படுத்தும் பொதுப்பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவை தனியார்மயமாக்கப்பட்டு பணமாக்கப்படுகின்றன. ஏழை நடுத்தரக் குடும்பத்தினர் பணம் செலுத்த முடியாத நிலையில், விளையாடும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நமது சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானோர் உழைக்கும் மக்களிலிருந்து வந்திருந்தாலும், விளையாட்டு பெருமளவு  மேட்டுக்குடியினரின் சலுகையாக மாறி வருகிறது.

வெகுமக்களுக்கான விளையாட்டு கலாச்சாரம் தேவை

1896 ஆம் ஆண்டு நவீன ஒலிம்பிக் போட்டிகள் ஏதேன்ஸ் நகரத்தில் துவங்கியது, மொத்தம் 14 அணிகள் 241 விளையாட்டு வீர்ர்கள் இதில் பங்கேற்றனர். நிலபிரபுத்துவம் மற்றும் வளர்ந்துவந்த முதலாளித்துவ வர்க்கத்தினரால் ‘ஜென்டில்மேன்களின் விளையாட்டு’ என்றுதான்  அது வர்ணிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு வர்க்க அடிப்படையிலான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்களை, அதாவது ஊதியம் பெற்று விளையாட்டுத் துறையில் முறையாக பணியாற்றுபவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, விளையாட்டுத்துறை சாராதவர்களுக்கு ஒதுக்கும் வேலை மறைமுகமாக செயல்படுத்தப்பட்டது. ஊதியம் இல்லாமல், பரந்த வெகுமக்களால் விளையாடுவதற்கும் பயிற்சி செய்வதற்கும் சரியான உணவை உட்கொள்வதற்கும் நேரத்தையும் பணத்தையும் பெற முடியாத சூழல் உருவானது. 

சோவியத் ரஷ்யாவின் பங்களிப்பு

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் சோவியத் ரஷ்யா, தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாய வர்க்கத்தினை  சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் அரங்கிற்கு முதன் முதலில் அனுப்பியது. சோவியத்துகள் அடித்தட்டு மக்களும் பங்கேற்கும் விதமான விளையாட்டு கொள்கையைக் கொண்டிருந்தனர். அதாவது, நாட்டின் திறமையான விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை உயர்த்த முக்கோணத்தின் அடிதளத்தை விரிவுபடுத்துவதன் மூலம் அடிமட்ட அளவில் உள்ள வெகுமக்களின் பங்கேற்பையும் பயிற்சியையும் அதிகரிப்பதன் மூலமாகவும் இந்த வெற்றி சாத்தியமானது. சோவியத் ரஷ்யா குறுகிய காலமே ஒலிம்பிக் போட்டியில் விளையாடியது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட போதிலும், சோவியத் யூனியன் இன்னும் அதிக பதக்கம் வாங்கிய  நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.  கிட்டத்தட்ட இதுவரை 19 ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு 1000க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளது. அதாவது 54 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தற்போது ஒருங்கிணைந்த ஒரு நாடாக இல்லாத சோவியத் ரஷ்யா இரண்டாவது இடத்தில் தொடர்ந்து இன்றும் நீடிக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மட்டுமின்றி தொழிற்சாலைகள், அலுவலகங்கள், அரசுக்கு சொந்தமான கூட்டுப் பண்ணைகள் ஆகியவற்றிலும் பயிற்சி மற்றும் போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்தியது. இதற்காக பிரத்யேகமாக ‘உடல்சார்ந்த கலாச்சாரக்குழு’ என்று அழைக்கப்படும் ஒரு வெகுமக்கள் விளையாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்கியதன் மூலம் இந்த வெற்றி சாத்தியமானது. இதற்கு அரசிற்கு மகத்தான பொதுச்செலவு தேவைப்பட்டது. வலுவான தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் சிறந்த வீரர்களை உருவாக்க பெரிதும் உதவினார்கள். 

1000685236

இந்தியாவின் நிலை…

இந்தியா விளையாட்டு மேம்பாட்டிற்காக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.01 சதவீதம் மட்டும்தான் ஒதுக்குகிறது.  நவதாராளவாத சீர்திருத்தங்களுக்கு உட்பட்டுள்ள உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போலவே, இந்திய அரசும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பங்கேற்கும் நோக்கத்தோடு விளையாட்டுத் துறைக்கு போதிய செலவினங்களை மேற்கொள்ளத் தயாராக இல்லை. ஏனெனில் அது மக்களின் நலன்களை மையமாகக் கொண்டு, போதுமான நிதியைப் பயன்படுத்தும் திறனை இழந்துவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வழியாகக் கிடைக்கும் நிதியில் பெரும்பான்மையாக உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கு பதிலாக, அவர்களை கையேந்தச் செய்யும் சூழலை உருவாக்கியுள்ளது. விளையாட்டை, அதிலும் குறிப்பாக இந்திய ஒலிம்பிக்கை இந்திய அரசு கார்ப்பரேட்மயமாக்கும் பாதைக்கு உதவி வருகிறது. இது ஏழை-நடுத்தர வெகுமக்களின் விளையாட்டுகளுக்கு போதிய கவனம் செலுத்துவதை  கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில் திறமையான விளையாட்டு வீரர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் பொருட்களுக்கான வர்த்தக முத்திரையை குத்துவதற்குப் பயன்படுத்துவது மேலும் தொடரத்தான் போகிறது. இந்த ஆபத்திலிருந்து விளையாட்டில் உள்ள கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு எதிரான கருத்துக்கள் போராட்டங்கள் வலுப்பெற வேண்டும். 

-பவன் குல்கர்னி

தமிழில்: மோசஸ் பிரபு

2-9-2024 செப்டம்பர் மாதம் பீப்புள் டெமாகிரேசியில் வெளியான கட்டுரை