மோசஸ் பிரபு
டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்-5 நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. தற்போதைய திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள சர்வப்பள்ளி கிராமத்தில் 1888ல் பிறந்து சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாக உயர்ந்து பிறகு ஜனாதிபதியானவர்.
அதோடு 1948ல் இந்தியாவின் பல்கலைக்கழக கல்விக்காக அமைக்கப்பட்ட முதல் கல்விக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
பொதுவாக ஆசிரியர் தினம் பள்ளிகளில் தான் அதிகம் கொண்டாடப்படுகிறது. ஆனால் அதில் இராதாகிருஷ்ணன் பற்றிய செய்திகளோ அவர் எழுத்துக்களோ வியந்து போற்றப்படக்கூடிய வகையில் அக்கொண்டாட்டம் இருக்காது.
ஏனெனில் அப்படியெதுவும் அவர் செய்யவில்லை என்ற உண்மையும் பள்ளிக்கல்விக்கும் அவருக்குமான உறவு மிகக்குறைவு என்பதும் முக்கிய காரணம்.
கல்வி குறித்து இவரது கருத்துக்கள் பாராட்டும் அளவிற்கு எதுவுமில்லை… இவரை கல்வியாளர் என்பதை விட தத்துவவாதி என பலரும் புகழ்கிறார்கள்….
இவரது தத்துவம்
தான் என்ன..?
தத்துவத்தின் வரலாறே கருத்து முதல் வாதத்திற்கும்
பொருள்முதல்வாதத்திற்கும்
இடையிலான போராட்டம் தான். இதில் இவர் நால்வர்ணங்களை உயர்த்தி பிடிக்கும் பகவத் கீதையை புகழ்வது, உபநிடதங்களை பிரச்சாரம் செய்வது, போன்ற கருத்துமுதல்வாத தத்துவத்தைத்தான் பிற்பற்றினார்.
இந்து மத பிரச்சாரம் செய்யக்கூடியவராகத்தான் இருந்தார்.
தத்துவவாதி என்பதைவிட மதப்பிரச்சாரகர் என சொல்லலாம் இவர் எழுதிய புத்தகங்களில் சில
1)பகவத் கீதை விளக்க உரை
2)இந்துக்களின் வாழ்க்கை நோக்கு
3)சமயமும் கலாச்சாரமும்
4)இந்தியச் சமயங்கள்
என மதங்கள் தொடர்பான புத்தகங்கள் தான் அதிகம்.
இவரது மாணவரான திரு. தேவி பிரசாத் சட்டபோத்யாய இவரின் தத்துவ கோளாறுகளை விமர்சிக்கிறார்.
திரு. இராதாகிருஷ்ணன் விஞ்ஞானத்தை, அறிவியலை விமர்சன பார்வையில் அனுகி பழமையை போற்றி புகழ்கிறார். இவர் எழுதிய புத்தகத்தை வாசிப்பதன் மூலம் இதை அறியலாம்…
இன்றைய ஆர்எஸ்எஸ் அமைப்பை போல் பிற மத வெறுப்பு இவரிடம் இல்லை எனினும் அன்றைய காங்கிரஸை போலவே
இவரையும் மென் இந்துத்துவ அணுகுமுறை கொண்டவர் என அழைக்கலாம்…
இவரை கொண்டாடுபவர்கள் ஏன் இவரை கொண்டாட வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்து விடைகளை தேட துவங்கினாலே இவர் மீது உருவாக்கப்பட்டிருக்கும் புனித பிம்பங்கள் அவிழ்ந்து விடும்….
இவர் வாழ்ந்த காலத்தில் ஒரு பக்கம் சுதந்திர போராட்டமும், இன்னொரு பக்கம் ஜாதிய பாகுபாடுகளும் அதற்கு எதிரான சமூக நீதி போராட்டங்களும் அரசியல் தளத்தில் அதிகரித்திருந்தது அதற்கு எதிரான இவரது பங்களிப்பு குறிப்பிடும்படியாக எதுவுமில்லை.
இவர் அறிவுத் திருட்டில் ஈடுபட்டதாக இவர் மாணவர் ஒருவரே இவர் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
1922 மற்றும் 1923 ஆகிய ஆண்டுகளில் கல்கத்தா பல்கலைக்கழத்தில் பிரேம்சந்த் ராய்சந்த் மாணவர் திட்டத்துக்கு இரண்டு பாகங்களாக ‘இந்தியன் சைக்காலஜி ஆஃப் பெர்செப்ஷன்’ எனும் தலைப்பில் ஆய்வறிக்கையை தாம் சமர்ப்பித்து இருந்ததாகவும், அந்த ஆய்வறிக்கையின் மதிப்பீட்டாளர்களில் ஒருவராக இருந்த ராதாகிருஷ்ணன், தாம் இயற்றிய இந்திய தத்துவவியல் எனும் நூலின் இரண்டாம் பாகத்தில் தனது ஆய்வறிக்கைகையில் எழுதியிருந்த சில பாகங்கள் திருடப்பட்டு, காப்புரிமை விதிகளை மீறி பயன்படுத்தி இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு இன்று வரை மர்மமான முறையிலயே இருக்கிறது….
இப்படி எந்த வகையிலும் பின்பற்ற முடியாத ஒருவரின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக ஏன் கொண்டாட வேண்டும்..??
இவர் போற்றிப்புகழும் பகவத் கீதையும் இந்து மத தத்துவங்களும் தான் ஜாதிய பாகுபாடுகளை நியாயபடுத்துவதும் அனைவருக்கும் கல்வி கிடைப்பதை தடுக்கவும் செய்தது. அந்த தத்துவத்தினால் ஈர்க்கப்பட்ட பிராமணர்கள் தான் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் கல்வி பயிலக்கூடாது என எதிர்த்து வந்தனர்.
அந்த பெரும் கொடுமகளை எதிர்த்து 1850களில் மகாராஷ்டிராவில் போராடியவர்கள் தான் ஜோதிராவ் புலேவும், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் புலேவும்.
அனைவருக்கும் கல்வியை மறுக்கும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் சமத்துவத்தை ஏற்காத மனுவாத தத்துவம் எனும் பிராமணிய சித்தாந்தத்திற்கு எதிராக கடுமையாக இருவருமே போராடினார்கள். பார்ப்பனர்களால் பல தாக்குதல்களையும் அவமானங்களையும் சந்தித்தார்கள் அப்படி போராடியதன் மூலம் கிடைக்க பெற்றதுதான் பெண் கல்வி…
எந்த தத்துவம் அனைவரும் கல்வி பெற தடையாக இருந்ததோ அதை போற்றி புகழ்ந்தவர் தான் திரு. இராதாகிருஷ்ணன் அதை எதிர்த்தவர்கள் தான் ஜோதிராவ், சாவித்திரிபாய் உண்மையாகவே வரலாற்றை நேர்மையாக அனுகுபவர்கள் ஜனவரி-3 சாவித்திரிபாய் பிறந்த தினத்தையோ அல்லது ஜோதிராவ் பிறந்த தினத்தையோ தான் ஆசிரியர் தினமாக கொண்டாடியிருக்க வேண்டும்.
1962ல் ஜனாதிபதியான
திரு. இராதாகிருஷ்ணன் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அன்றைய பிரதமர் நேருவின் மூலம் தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாட வைத்தார்….
எப்படி சிறந்த வில் வித்தகரான பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதற்காக ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிய ஆதிக்க ஜாதியை சேர்ந்த துரோணாச்சார்யார் தான் சிறந்த பயிற்சியாளராக இந்திய அரசு இன்று வரை அங்கீகரித்து அவர் பெயரில் விருது கொடுக்கிறதோ
அதே போல்
சிறந்த ஆசிரியருக்கு பொருத்தமில்லாத இராதாகிருஷ்ணனையும் அங்கிகரிக்கிறது….
1938ல் தமிழகத்தில் இராஜாஜி உயர்நிலைப் பள்ளிகளில் கட்டாய இந்தி திணிப்பை மேற்கொண்ட போது அதை எதிர்த்து குரல் கொடுத்தார் திரு. இராதாகிருஷ்ணன் அந்த நன்றிக்காக இத்தனை ஆண்டுகள் அவர் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடிவிட்டோம்
இனியும் அவசியமா என்ற கேள்வியெழுப்பி நாம் நன்றி செலுத்த மறந்த ஜோதிராவ் அல்லது சாவித்ரிபாய் புலே ஆகியோரின் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக இனியாவது கொண்டாட தொடங்குவோம்.
அரசிற்கும் இக்கோரிக்கையை முன் வைப்போம். ஏற்கனவே 2014ல் பாஜக அரசு ஆசிரியர் தினத்தை குரு உத்சேவ் என பெயர் மாற்றி சுற்றரிக்கை அனுப்பி கடும் எதிர்ப்பிற்கு பிறகு பின் வாங்கியது. அந்நேரத்தில் சில இந்துத்துவா அமைப்புகள் பாரதீய ஜன சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராக இருந்த தீனதயாள் உபாத்யாவின் பிறந்த தினமான செப்-25 ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பியது. இந்நிலைமைவிட அது இன்னும் கொடுமையில் போய் முடியும் எனவே அவர்கள் முந்தும் முன் நாம் இவ்விவாதத்தை முன்னெடுப்போம்.
சிறந்த ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த சாவித்திரிபாய் புலே பிறந்த தினத்தை ஜனவரி-3 ஆசிரியர் தினமாக கொண்டாட தொடர்ந்து வலியுறுத்துவோம்…