அரசியல்

இந்துத்துவத்தின் பேயாட்டமும் இஸ்லாமியர்களின் இருண்ட காலமும்…

delhi-riots

நடுநிசி! கும்மென்ற இருள். தெருவெங்கும் அடரிருள். பேரிருளைக் காரிருளே மூடியிருந்தது. ஓலம். மயான ஓலம். அமானுஷ்ய இரவு. திறக்கத் திறக்க நீளிரவு. நகம் நீண்ட கரங்களில் சூலம் ஏந்திய பிசாசுகள், கத்திகள் தாங்கிய பேய்கள், துப்பாக்கிகள் தூக்கிய காட்டேரிகளோடு, குறிகளிலும், வாலிலும் நெருப்பேந்திய குரங்களும் ஊரை சர்வநாசம் செய்தன. இளரத்தம் கேட்கும் குறளைப் பேய்களோடு, கொல்லிவாய்ப் பிசாசுகளும் வெறிகொண்டு அலைந்தன. ஊரே கருப்பாக, குருதிவாடை நிறைந்திருந்தது. ஒய்யார அரசன் வெறியடங்காக் கண்களுடன் நிர்மலமாகக் கொலுமண்டபத்தில் வீற்றிருந்தான். ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் ஊரைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.

இப்படியான ஒரு தீக்கனாவோடு தான் பிப் 23, இந்ரபிரஸ்தத்தில் விடிந்திருக்க வேண்டும்.

“கோலி மாரோ” எனக் கொக்கரித்துக்கொண்டே, சங் பரிவாரங்கள் இஸ்லாமியர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள்.

மறைந்திருந்து தாக்கினார்கள் ; முகமூடியணிந்து தாக்கினார்கள்; ஊடுருவித் தாக்கினார்கள்; வெளிப்படையாகத் தாக்கினார்கள். இப்போது அறிவித்துவிட்டுத் தாக்கியிருக்கிறார்கள்.

அப்பாவி இஸ்லாமியர்களைச் சுட்டும், குத்திக்கிழித்தும், அடித்துத் துவைத்தும் அவர்களின் உடைமைகளைக் குறிவைத்துச் சூறையாடியும், இறை இல்லங்களை இடித்தும் வெறியாட்டம் ஆடியிருக்கிறது சங் கும்பல்.

குழந்தைகள், பெண்களை அச்சுறுத்தியும், ஆண்களை, முதியவர்களைக் கொன்றும், காவலர் ஒருவரையும் தங்கள் வெறியாட்டத்துக்கு இரையாக்கி இருக்கிறது சங் வெறிகும்பல்.

கருணாமூர்த்தியின் சபர்மதியில் நின்ற ஈரம் கூட காயாமல், ஆயுத ஒப்பந்தம் செய்த அமெரிக்க நாட்டாமைக்கு, “பாருங்கள், நாங்கள் இஸ்லாமியர்களை எப்படி ஒடுக்குகிறோம்” என்று தங்கள் பராக்கிரமம் காட்டியிருக்கிறார்கள். அதற்கேற்றாற் போல, “இஸ்லாமியத் தீவிரவாதத்தை இந்தியாவுடன் இணைந்து முறியடிப்போம்” என்று தன் இனவெறிவாத வாயைத் திறந்து கொட்டியிருக்கிறார் அந்தப் பாகிஸ்தான் நண்பரான ட்ரம்ப்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவெறிப்பேச்சைத் தொடர்ந்து உமிழும் பாஜக தன் இறுதி யுத்தத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்திவருகிறது. நாடாளுமன்றத்தைத் தமது ஏகபோக வெறியாட்டத்துக்கு, ஒப்புகை வழங்கும் மன்றமாக மாற்றிக்கொண்ட பாஜக, நீதிமன்றங்களையும், ஊடகங்களையும் கைப்பற்றி வெளிப்படையாகவே யுத்தத்தை நடத்துகிறது. யுத்த தர்மத்தைக் கடைப்பிடிக்கும் வழக்கமே இல்லாத வம்சம் அது. எதிர்ப்பட்டோரை எல்லாம் காவு வாங்கும் காவிக்கூட்டம், இஸ்லாமியர்களை வெளிப்படையாகவே துவம்சம் செய்யக் களமிறங்குகிறது.

மந்திர உச்சாடணங்களால் வெறியூட்டப்பட்ட கூட்டம் இஸ்லாமியர்களை எரியூட்டுகிறது. அமைப்பாக்கப்பட்டு, பயிற்சிபெற்ற கூட்டம், இஸ்லாமியர்களைக் கொல்ல வீதிகளில் இறங்கியிருக்கிறது.
இது அகண்ட பாரதக் கனவின் பிள்ளைகள், இந்தியத் தாயின் பூர்வீகக் குடிகள் மீது தொடுத்திருக்கும் போர்.

மேவங்கத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இச்சட்டத்தால் சிறுபான்மையினருக்குப் பாதிப்பு வராது ; எந்த ஜைன், புத்த, சீக்கிய, கிறிஸ்தவர்களுக்கும் பாதிப்பில்லை” என்று இஸ்லாமியர்களைச் சிறுபான்மை பட்டியலில் இருந்தே நீக்குகிறார். எனவே தான் சொல்கிறோம், இது இஸ்லாமியர்கள் மீது சங் கும்பல் தொடுக்கும் வெளிப்படையான போர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதமேதுமின்றி இக்கருப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிய பாஜக, இந்தக் கூட்டத்தொடரின் முதல்நாளில், டெல்லி பிப் 23 தாக்குதலைப் பற்றிப் பேச அனுமதிக்காமல், அவையை ஒத்திவைத்திருக்கிறது.

மக்களவையில் மோடியைக் கட்டித்தழுவி ஆரவார அரசியல் செய்த ராகுல் இன்று இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலைக் கண்டு களமிறங்கவில்லை. சோனியாகாந்தியோ, கையாளாகாமல் கைபிசைந்து கொண்டிருக்க, இடதுசாரிகள் தவிர்த்த, ஒட்டுமொத்த இந்தியக் கட்சிகளும், “பெரும்பான்மை சிறுபான்மையை ஒடுக்கக்கூடாது” எனக் கண்டிப்பதில் சுரத்தில்லாமல் இருக்கின்றன. நாடாளுமன்ற பெரும்பான்மைவாதக் கட்சிகள் தானே!

ஊழல் ஒழிப்புப் பிதாமகரும், நடுத்தரவர்க்க நாடாளுமன்றவாத புனிதப்பசுவான அர்விந்த் கெஜ்ரிவால், இஸ்லாமியர் மீதான கும்பல் தாக்குதலை ஓங்கிக் கண்டிக்க, தன் இயல்பிலேயே முடியாமல், நீதிமன்ற ஆணைக்குட்பட்டும் மாறாமல், தன் புனிதப்பசுத் தன்மையைக் காட்டிக்கொண்டிருக்கிறார்.

எளிய மக்கள் நிராயுதபாணிகளாகத் தங்கள் குடியுரிமைக்காக, நீதிமன்றங்களை நம்பாமல் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். அமைதிவழியில் தங்கள் போராட்டங்களைத் தொடரும் அவர்களை, ஓங்கி அடித்துச் சுட்டுக்கொன்று போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் முனைப்புக்காட்டி முன்னேறுகிறது பாசிச அரசு.

ஊடகங்களைக் கைப்பற்றி, நீதிமன்றங்களை வளைத்து, நாடாளுமன்றத்தை வைத்து, 370 நீக்கம், பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் என இந்தியாவை உலுக்கி ஆள, ஒத்திகை பார்த்த பாஜக , மக்களிடம் நாட்டை ஆளும் உரிமைக்காக வாக்குப்பிச்சை எடுத்த பாஜக, இன்று மக்களை குடியுரிமைக்காக வீதியில் இறங்கிக் கெஞ்சுபிச்சை எடுக்க வைத்துள்ளது.

நாடுமுழுவதும் NRC உறுதி என, அரற்றிய பாஜக, பீகாரில் NRCக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றத் துணைபோய், NRC எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்யவும் முயற்சிக்கிறது.

தன் பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க வக்கற்ற, புத்தியற்ற, திறனற்ற பாஜக அரசின் நோக்கம் இவற்றிலிருந்து மக்களைத் திசைதிருப்புவது மட்டுமன்று. முரட்டுக் கூட்டம் எதற்கும் துணிந்துவிட்டது. ரவிசங்கர் பிரசாத், “இடதுசாரிகள் எங்களுக்குத் தத்துவ வகுப்பெடுக்கத் தேவையில்லை. முடிந்தால் வென்று காட்டுங்கள்” என வெளிப்படையாகவே பேசுகிறார். காங்கிரஸ் எனும் மென்இந்துத்வக் கட்சியால், பாஜகவை முறியடிக்க முடியவே முடியாது.

தொழிற்சங்கங்களைக் கட்டி, மக்களைத் திரட்டும் சித்தாந்த வல்லமையும், நடைமுறை தந்திரமும் தெரிந்த இடதுசாரிகள் சித்தாந்த நேர்மையோடும், உள்ளார்ந்த தீரத்தோடும் களமிறங்க வேண்டும். பாஜக வகுத்துத்தரும் பாதையில் எதிர்வினை ஆற்றாமல், குட்டி முதலாளித்துவக் கட்சிகளின் பின் செல்லாமல், மக்களைத் திரட்டி பாஜக எனும் மக்கள் விரோதக் கட்சியை முற்றாக ஒழிக்க வேண்டும்.

பேயாட்டத்தின் உச்சநிலையில் தான் பேயை ஓட்டவும் முடியும். செவ்விளம்பரிதி, இருளைக் கிழித்து அழிக்க கிளம்பட்டும். ஓயாத ஓலமிடும் இருந்து, ஓநாய்களை விரட்டட்டும். இருண்டகாலம் முடிவுக்கு வரட்டும்.

ரபீக் ராஜா