உலக சினிமாசினிமா

பாரசைட் (Parasite = ஒட்டுண்ணி)

Maattru Parasite

2020 ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம்,சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த கதை,மற்றும் சிறந்த இயக்குனர் என நான்கு விருதுகளை பெற்றுள்ளது. முதலில் இந்த திரைப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

படம் ஒரு வித கிரைம் திரில்லர் வகையில், வட கொரிய தென் கொரிய நாட்டின் அரசியல் நிலைப்பாட்டையும், உழைக்கும் மக்களை முதலாளித்துவம் எப்படி வைத்துள்ளது என்பதையும் அதன் பின்னணி சம நிலை இல்லாமல் இருக்கும் ஏழை பணக்கார வர்க்க அரசியலையும் மிக நுட்பமாக சொல்லி இருப்பது படத்தின் மிக பெரிய பலம்.

படத்தின் தலைப்பு படத்தின் கதையின் மையத்தை வெளிப்படையாக சொல்கிறது (Parasite = ஒட்டுண்ணி) ஆம் உண்மையில் இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் கொரிய நாட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் (வட கொரியா பக்கமும் போகாமல் தென் கொரியா பக்கமும் போகாமலும், இரண்டு நாடும் இணைய விடாமல் அமெரிக்க செய்யும் தந்திரத்தில் மயங்கி) வாழ்வை ஒரு ஒட்டுண்ணி போல நகர்த்தி வருகின்றனர். இதுவே படத்தின் கதையின் நகர்வு.

படத்தின் கதை தென் கொரியா நாட்டில் நடக்கிறது. அவர்களிடம் எப்போதும் தனது சொந்த சகோதர நாடான வட கொரிய நம் மீது போர் புரியும் என்கிற ஒரு அட்ச உணர்வை முதலாளித்துவ நாடான அமெரிக்க தென் கொரிய நாட்டின் மக்கள் மனதில் விதைத்து இருப்பதை படத்தில் அந்த மக்களின் உணர்வுகளில் புரிந்துகொள்ள முடிகிறது.

படத்தின் கதை

கிம் என்கிற ஒரு உழைக்கும் வர்க்க குடும்பம் அன்றாட வாழ்க்கையை சமாளிப்பதற்கும்,ஒரு வேளை உணவு கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்க அங்கே, பார்க் என்கிற ஒரு கோடீஸ்வர வீட்டில் வேலைக்கு சேர ஒரு திட்டம் தீட்டி கிம் இன் மொத்த குடும்பமும் (மகன்,மகள், அம்மா,அப்பா) பார்க் வீட்டில் வேலைக்கு சேர்கிறார்கள்.

வாழ்வின் அடிமட்ட நிலையில் இருக்கும் கிம் குடும்பம், ஒரு பாயிண்ட் இண்டர்நெட் மொபைலில் கிடைக்காமல், வீட்டின் ஜன்னலை சாத்தாமல் விட்டால் மொத்த மழை நீரும் வீட்டையே மூழ்கி விடும் நிலையில், விடு முழுக்க மூட்டை பூச்சிகள், கொசுக்கள் நிரம்பி இருக்க, தங்கள் வீட்டின் வெளியே எப்போதும் யாரேனும் ஒருவன் சிறுநீர் கழிக்கும் விதத்தில் பொருளாதார நிலையில் பின் தங்கி இருப்பதே கிம் இன் குடும்ப நிலை.

அதே ஊரில் சில தெருக்கள் தள்ளி தான் பார்க் வீடு உள்ளது, மிகவும் பாதுகாப்பு மிக்க கண்காணிப்பு கேமரா வைத்து, எப்போதும் முழு இண்டர்நெட் சேவைகள் உள்ள மிக பெரிய ஒரு விடாகவும், கண்ணாடிகள் நிரம்பிய சொகுசு விடாக மழைநீர் ஒரு துளியும் வீட்டில் நிக்காமல் மிக அழகாக (பார்க்,அவர் மனைவி,அவர்கள் மகள், மற்றும் ஒரு சிறு பையன்) என மகிழ்ச்சி நிரப்பி வாழ்ந்து வருகிறார்கள்.

கிம் வீட்டிலும் அதே 4பேர் தான், பார்க் வீட்டிலும் அதே 4 பேர் தான். ஆனால் சமூகத்தில் ஒரு ஊரில் உள்ள இரு வேறு சமாநிலையற்ற ஒரு வர்க்க வேறுபாடுகள் நிறைந்து உள்ளது. இந்த சூழலை படத்தில் போக்கில் கிம் வீட்டில் இருப்பவர்கள் எப்போதும் பார்க் வீட்டை நோக்கி போனாலும் கேமராக்கள்,சாலைகள் என மேல்நோக்கியே செல்வதை மிக நுட்பமாக படத்தில் காட்சி படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் கிம் போன்ற உழைக்கும் மக்கள் மேல்நோக்கி சொல்ல குருட்டு யுக்திகள் மட்டும் போதாது ,நமது பொருளாதார நிலையும் மாற வேண்டும் என்ற உணர்வுகளை பார்க் வீட்டில் இருந்து கிம் குடும்பம் வெளியேற்றப்படும் போது அதை கிம் குடும்பம் உணரும் காட்சில் படத்தில் அட்டகாசமாக காட்சி படுத்தி உள்ளார் இயக்குனர். மழைநீர் எப்போதும் கீழ்நோக்கி தான் வரும் அதற்காக அதை தடுத்து நிறுத்த முடியாது நாம் தான் மேட்டை நோக்கி செல்ல வேண்டும், ஆனால் அந்த மேடு சமமாக இருக்க வேண்டும் என்பதை உணரவும் வேண்டும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அரசியல் உணர்வை அழகாக சொல்கிறார்.

பார்க் வீட்டில், ஒரு ரகசிய கிழ்தளத்தில் ஒரு வீடு இருக்கும். அதை ஏன் காட்டுகிறார்கள் என்பதன் பின்னணியில் மிக பெரிய அரசியல் நிகழ்வே உள்ளது. ஆம் உலக நாடுகளில் பெரும்பாலும் போர் சூழல்கள் நிறைந்த நகரங்களில் கட்டப்படும் உயர்தர பணக்காரர்கள் கட்டும் வீடுகளில் அடி தளத்தில் எப்போதும் ரகசிய வீடுகள் வைத்தே கட்டுகிறார்கள். காரணம் மற்ற நாடுகள் நம் மீது தாக்குதல் செலுத்தினால் அல்லது போர் போன்ற நடவடிக்கைகள் நடைபெறும் போது தங்கள் உயிர்களை பாதுகாத்து கொள்ள அவ்வாறான ரகசிய அடித்தளம் உள்ள வீடுகள் கட்டுகிறார்கள்.

இதில் பயன் அடிப்பவர்கள் செல்வம் செழித்த பணக்கார குடும்பங்கள் மட்டுமே, ஆனால் உழைக்கும் வர்க்க மக்கள் ஏன் இவர்கள் இரு நாடு போர் நடத்தி கொள்கிறார்கள், நாம் என்ன செய்யவேண்டும், நம் உயிரை எப்படி பாதுகாத்து கொள்வது என எதுவும் தெரியாமல் அப்பாவியாக மக்கள் இருந்தும் இறந்தும் இருக்கிறார்கள். இது தான் அந்த இரகசிய அடித்தளத்தின் பின் உள்ள அரசியல்.

படத்தில் கிம் மின் விடு முழுக்க மழையில் மூழ்கி விடும் அப்போது தன்னை போல வீடுகள் இழந்த மக்கள் எல்லாம் ஒரு பெரிய ஜிம்மில் படுத்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது இந்த மக்களிடம் இருக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் முடியாது, நமக்காக யாராவது ஒரு திட்டத்தை சொல்லவும் முடியாமல் , நாம் எதையும் செய்யாமல் இப்படியே இருக்கும் போது, எங்கள் சிறுவர்களை எல்லாம் உங்கள் நாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் நாம் என்ன தான் திட்டம் திட்டுவது என்ற ஒரு மனநிலையில் பேசுவது எல்லாம், சொந்த நாட்டில் அகதிகளாக இருக்கும் நிலையை வெளிப்படுத்துகிறது. இங்கு நாம் எல்லாம் சிரிகிறோம், ஆனால் அதற்கு காரணம் இல்லை. அதுவே உண்மை.

பார்க் வீட்டின் அடித்தளத்தில் ஏற்கனவே கிம் மின் குடும்பத்திற்கு முன் வேலை செய்த பெண்ணின் மூளை வளர்ச்சி குறைந்த கணவர் அங்கு 4 வருடமாக இரகசியமாக வைத்து பார்த்து வருகிறார். இதை புதிதாக பார்க் வீட்டில் வேலைக்கு சேர்ந்த கிம் குடும்பம் தெரிந்துகொள்ள அவர்களுக்குள் சில சமரசங்களும்,சில மோதல்களையும் கொண்டு அடி ஆழத்தில் காற்றாடைத்த ஒரு பந்தை வைக்கும் போது அது மேல் நோக்கி வந்தே தீரும் அதன் வேகம் சற்று எதிர்பாராத சீற்றம் கொள்ளும் என்பது போல உளவியல் ரீதியாக ஒரு சைக்கோ நிலைக்கு தள்ளப்பட்டு கொலையில் முடிகிறது.

படத்தில் நிறைய காட்சிகள் எதிர்பாராத விதமாக புதிய யுக்திகள் நிறைய உள்ளது, அவை எல்லாம் சொல்லி நான் அதன் சுவாரஸ்யத்தை குறைக்க விரும்பவில்லை, படத்திற்கு அப்பார் உள்ள அரசியல் உண்மையும், மக்களின் எதார்த்த சூழ்நிலைய காட்சி படுத்தியதற்கு மிக சரியான ஆஸ்கர் விருது தேர்வாக தான் நான் பார்க்கிறேன். பலர் இங்கு இந்த படத்தில் என்ன இருக்கு என்று சொல்கிறார்கள் அவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும்.நான் அறிந்த மனநிலையில் இருந்து பார்க்கிற போது கீழ் மட்ட வர்க்க நிலையில் உள்ள மக்கள் மேல் எழும்பி வர தனிநபர் சாகசம் என்றும் நிலையடையாது, அது ஒரு கூட்டு முயற்சியின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். படத்தின் இறுதி காட்சியில் கிம்மின் மகன் ஒரு திட்டம் சொல்வான்.

அப்பா நான் இந்த முறை ஒரு திட்டத்தை உருவாக்கினேன். அது ஒரு அடிப்படை திட்டம், நான் நிறைய பணம் சம்பாதிக்க போகிறேன். பல்கலைக்கழகம் சென்று கற்று, ஒரு வாழ்க்கையை அமைத்து, நிறைய பணம் சாம்பாதிப்பேன். பிறகு நாம் ஆசைப்பட்ட அந்த வீட்டை நான் வாங்குவேன் என்று சொல்லி படத்தின் இறுதியில் அந்த வீட்டை கிம்மின் விடாக மாற்றுகிறான். ஆனால் இது கிம் போன்ற ஒரு தனிநபர் குடும்பத்தின் முயற்சியில் பொருளாதார சூழலில் முன்னேறிவிடுகிற வாய்ப்பை காட்சி படுத்தி இருந்தாலும் அங்கு எப்போதும் அச்சத்தில் கிம் போல பல குடும்பங்கள் நிலைமை அந்த ஊரில்( நாட்டில்) கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும் படத்தில் இன்னோரு நுட்பமான நிகழ்வு கிம் குடும்பத்தின் மேல் இருந்து வரும் (ஸ்மெல்), படத்தில் பல காட்சிகளில் பார்க் குடும்பம் இந்த ஸ்மெல் அருவருப்பு தருவதாக உணர்கிறார்கள். பார்க் உடலுறவு கொள்ளும் போது கிம் மீது வரும் ஸ்மெல் பற்றிய ஒரு உரையாடல் கிம்மை மிகவும் கஷ்டம் நிறைந்த ஒருவித கோபம் நிறைந்த நிலைக்கு செல்ல வைக்கிறது. அதுவே இறுதி காட்சியில் கிம் பார்க்கை கொலைசெய்யும் அளவிற்கு நகர்த்துகிறது. இங்கு பார்க் போன்ற உயர்தர வர்க்கம் subway, drainage போன்றவற்றை கடக்கும் போது உணரும் அந்த ஸ்மெல்க்கு நாமும் ஒரு காரணம் என்பதை ஒருபோதும் உணராமல் இருக்கிறாரால் என்பதை நுட்பமாக படம் பேசுகிறது.

இப்படி படத்தில் மேலும் நிறைய விஷயங்கள் என்னை வியக்கவே வைத்தது, உண்மையில் எனக்கு படம் ரொம்ப பிடிச்சு போயிடுச்சு, படம் முழுக்க மனிதர்களும், கேமராக்களை மேல்நோக்கி சென்று கொண்டே இருக்கும் படி இருந்தது, ஆனால் எவ்வளவு மேலே சென்றாலும் கீழே உள்ள அடிப்படையை மாற்றாமல் இருந்தால் நீர் பள்ளத்தை நிரப்பும் என்பதே நிதர்சனம்.

இந்த படம் நிறைய விஷயங்களை பல கோணங்களில் யோசிக்க முடியும் என்பதை உணர்த்தியதே படத்தின் மிக பெரிய வெற்றி. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். இதில் நகைச்சுவையான வட கொரியா தென்கொரியா விஷயத்தில் அமெரிக்க பலன் அடையும் எனில் எப்போதும் ஒரு வித அட்ச சூழலில் வாழும் மக்கள் ஒரு நாள் கிளர்த்தெழுவார்கள் என்பது உறுதி.

அன்புடன்
நவீன்குட்டி