தேசமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இது வரை இல்லாத வகையில் இஸ்லாமிய சமூகம் பதட்டமும், பீதியும் அடைந்துள்ளது. எதிர் காலம் குறித்த கேள்வி அம்மக்களை பல்லாயிரக்கணக்கில் தெருவிற்குக் கொண்டு வந்துள்ளது. இது நாள் வரை வீடுகளில் முடங்கிக் கிடந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைய தினம் தெருவில் இறங்கி விண்ணதிர முழக்கம் எழுப்பி வருவதை தேசமே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.
பகல் பொழுதில் மட்டுமல்லாமல் நள்ளிரவிலும் ஆண்களும், பெண்களும், ஏன் குழந்தைகளும் கூட நடு வீதியில் போராட்டக் களத்தில் உள்ளனர். சஹீன் பாக்கில் இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டம் சின்னஞ் சிறு குழந்தையின் தியாகத்தின் பின்னரும் கூட சிறு தொய்வு கூட இல்லாமல் தொடர்கிறது.
தற்போது தமிழகமும் கூட கொதி நிலையில். சஹீன்பாக் போன்ற தளராத தொடர் போராட்டத்தை நோக்கி நகர்ந்து வருவது ஆச்சரியமான ஒன்று. அனைத்திற்கும் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. என்ற மூன்று அரக்கர்கள் ஏற்படுத்திய கலக்கமே காரணம்.
குடியுரிமை திருத்தச் சட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) டிசம்பர் 11 ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டம் மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.மசோதா நகலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னதாக வழங்கி, விரிவான ஆய்வுக்கும், விவாதத்திற்கும் வாய்ப்பளிக்காமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டதன் சூட்சுமம் தற்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
உரிய விவாதத்திற்கு வாய்ப்பளிக்கவும், தங்களின் திருத்தங்களின் மீது விவாதத்திற்கு வாய்ப்பளிக்கவும் எதிர் கட்சி உறுப்பினர்கள் கோரிய போது மறுக்கப்பட்டது. தங்கள் கூட்டணி மற்றும் ஆதரவு அளிக்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சி தலைமைகளும் உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக் கொண்டு கையை உயர்த்தி ஆதரவு அளிக்க வேண்டுமென்று திட்டமிட்டே இந்த அவசர கோலத்தில் அச்சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இந்த திருத்தத்தின படி 2014 டிசம்பர் 31 ம் தேதிக்கு முன்னர் ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவிற்குள் வந்து தங்கியுள்ள முஸ்லீம்களைத் தவிர்த்து, இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் 5 வருடங்களுக்கு குறையாமல் இந்தியாவில் வசித்திருந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதியுள்ளவர்கள்.முன்னதாக இருந்த 11 வருடம் என்பது 5 வருடமாகக் குறைக்கப்படுகிறது.
அண்டை நாடாக இல்லாத ஆப்கானிஸ்தான் இந்த பட்டியலில் இடம்பெறும் போது அண்டை நாடுகளான இலங்கை, மியான்மர், பூடான் ஆகியவை இதில் இடம் பெறாமல் வேண்டுமென்றெ தவிர்க்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து பவுத்த இனவாத அரசின் தாக்குதலால் உயிருக்குப் பயந்து இந்தியாவுக்குள் வந்து அகதிகளாக தங்கியுள்ள லட்சக்கணக்கான இந்து தமிழர்களுக்கோ, பூட்டானிலிருந்து பவுத்தர்களின் துன்புறுத்தல் காரணமாக வந்து இந்தியாவில் தங்கியுள்ள கிறிஸ்தவர்களுக்கோ, மியான்மரிலிருந்து பவுத்த பயங்கராவாதத்தால் தாக்குதலுக்கு உள்ளாகி இந்தியாவிற்குள் வந்து தங்கியுள்ள ரொஹிங்கியா முஸ்லீம்களுக்கோ இந்த சட்ட திருத்தத்தின் படி குடியுரிமை கிடைக்காது. இச்சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3 நாடுகளுக்கிடையேயான ஒரே ஒற்றுமை அனைத்தும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் என்பது மட்டுமே. இச்சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் அமைச்சர் அமித்சா நாடாளுமன்றத்தில் டிசம்பர் 9ல் பேசும் போது இதை ஒட்டி தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி) நாடு தழுவிய முறையில் தயாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த சட்டத் திருத்தம் நமது அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு எதிரானது.நமது அரசியல் சட்டம் நமது நாட்டை மதசார்பற்ற அரசாகப் பிரகடனப்படுத்துகிறது. நமது அரசியல் சட்டத்தின் முகப்புரையில் உள்ளபடி மதம், மொழி, இனம், கலாச்சார அடிப்படையில் மக்கள் மத்தியில் பாரபட்சம் காட்ட இயலாது. அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 14 ன் படி வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது இது.
எனவே இச்சட்டமும், இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தயாரிக்கப்படவுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடும்(என்.பி.ஆர்), அதன் அடிப்படையில் தயாரிக்கப்படவுள்ள சி.ஏ.ஏ. ஆகியவை அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறுகளுக்கு முரணானதாகவும், மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி, முஸ்லீம்களை மட்டும் தனிமைப்படுத்தி சொந்த நாட்டிலேயே அதிகளாக்கும் வெறுப்பரசியல் உள்நோக்கம் கொண்டதும் ஆகும்.
சங்பரிவார அரசியல் அஜன்டாநாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. ஜி.டி.பி. மிகவும் தாழ் நிலையில் உள்ளது. பண வீக்கமும், விலைவாசியும் கடுமையாக உயர்ந்து வருகின்றன. வேலையின்மை வரலாறு காணாத வகையில் பெருகி வருகிறது. அரசின் கஜானா காலியாக உள்ளது. நாட்டில் உள்ள பொருளாதார வல்லுனர்கள் எல்லாம் இத்தகைய நிலையை எடுத்துக் கூறி அரசு பொருளாதாரத்தைச் சீர் செய்ய அவசர நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தி வரும் நிலையில் அதைப் பற்றி அக்கரை கொள்ளாமல் இந்த வெறுப்பு அரசியல் நடவடிக்கை ஏன் என்ற கேள்வியே பலரது மனதிலும் எழுகிறது.
பிரதமர் மோடியே கூறியுள்ளபடி அவர் முதலில் ஒரு ஆர்.எஸ்.உஸ். ஊழியர்.இரண்டாவது தான் பிரதமர். எனவேஆர்.எஸ்.எஸ். கட்டளை தான் அவருக்கு முதன்மையானதே ஒழிய வாக்களித்த மக்களின் நலமல்ல. ஆர்.எஸ்.எஸ் தலைவராகவும், அதன் சித்தாந்த குருவாகவும் இருந்த கோல்வால்கர் ஏற்கனவே பிரகடனப்படுத்திய படி பாரத தேசம் என்பது இந்துக்களின் தேசம். ஹிந்து இனத்தை தனது இதயத்தின் அருகாமையில் வைத்து எவர் பெருமைப் படுத்துகிறாரோ, இந்து தேசத்தை உருவாக்க செயல்படுகிறாரோ, இந்த குறிக்கோளை அடைய கடுமையாக பாடுபடுகிறாரோ அவர் தான் தேசிய உணர்வு கொண்ட தேச பக்தன். மற்றவர்கள் அனைவரும் தேச துரோகிகளும், எதிரிகளும் ஆவர். தங்களது வேற்றுமைகளைக் கைவிட்டு இந்து மதத்தை தழுவி, இந்த தேசத்தின் மொழியையும், கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்பவர்களுக்குத் தான் இத்தேசத்தில் இடம் உண்டு.
தனது இன, மத, கலாச்சார வேற்றுமைகளைக் கொண்டிருப்பது வரை அவர்கள் வெளிநாட்டவர் தான் இதைத்தான் தங்களது முந்தைய ஆட்சியில் ஆர்.எஸ்.ஸின் அரசியல் கட்சியான பா.ஜ.க. அமலாக்க முயற்சித்தாலும், பெரும்பான்மை இல்லாததால் சாத்தியமாகவில்லை. தற்போது மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை மாநிலங்களவையில் தனது கையசைவுக்கு அடி பணியும் கட்சிகளின் ஆதரவு உள்ளதால் இந்த முயற்சியில் இறங்கயுள்ளது மோடி அரசு.
ஏன்.ஆர்.சி முஸ்லீம்களுக்கு மட்டுமே எதிரானதா?
சி.ஏ.ஏ நிறைவேற்றப்பட்டதை அடுத்து தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) தயாரிக்கப்படவுள்ளது.இது 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தயாரிக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எனும் சென்சஸ் அல்ல. மாறாக ஒவ்வொரு குடி மகனின் முழு விபரங்களையும், அதற்கான அடிப்படை ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்வதாகும். இவ்வாறு பதிவு செய்யப்படும் போது ஒருவர் தனது பிறந்த நாள், பிறந்த இடம், தனது பெற்றோர் பிறந்த நாள், பெற்றோர் பிறந்த இடம் உள்பட தாம் பிறப்புரிமை அடிப்படையில் இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் அடிப்படையில் பதிவு செய்யப்படும்.
ஆவணங்கள் இல்லையெனில் சந்தேக நபராக பதிவு செய்யப்படுவர்.சந்தேகமற்ற நபர்கள் மட்டுமே என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடியுரிமை பதிவேட்டில் பதிவு செய்யப்படுவர். மற்றவர்கள் சந்தேகத்திற்குரிய நபர் என்ற அடிப்படையில் குடியுரிமை அற்றவராகக் கருதப்பட்டு, தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவர்.இப்படிப்பட்ட நடைமுறை இல்லை என்பதாக தற்போது மோடியும், அமித்சாவும் சத்தியம் செய்தாலும் இந்த நடைமுறை தொடர்கிறது என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தவரே அமித்சா தான். இது தான் தற்போது நாடு தழுவிய எதிர்ப்பையும், போராட்டங்களையும் நடத்த காரணமாகவுள்ளது.
ஏற்கனவே தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிக்கப்பட்ட அசாமில் குடியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்ட19 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் இந்துக்கள். குடியுரிமை அற்றவர்கள் என அறிவிக்கப்பட்ட பிரபல முஸ்லீம்களில் முன்னாள் குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அகமது குடும்பமும், கார்கில் போர் வீரர் சனாவுல்லகானும் அடங்குவர். எனவே தான் இந்த பிரச்சனை என்பது முஸ்லீம்களை குறி வைத்து கொண்டு வரப்பட்டாலும், அது இந்துக்கள் உட்பட அனைத்து மக்களையும் அலைக்கழிக்கும் என்பதை தற்போது உணர்ந்துள்ளனர்.
எனவே தான் முஸ்லீம் வெறுப்பு அரசியல் காரணமாகக் கொண்டு வரப்பட்ட முத்தலாக் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்றவை வந்தபோது அமைதியாக இருந்த மக்கள் தற்போது கொதித்து எழுந்துள்ளனர்.
முன் கையெடுத்த கேரள அரசு இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட உடன் அதற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்பட பல் வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதில் கேரளம் முன் கையெடுத்தது. கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் முன் முயற்சியால் கேரளத்தில் முதன் முறையாக சி.ஏ.ஏ வுக்கு எதிராக கேரள ஆளும் கட்சியான இடது ஜனநாயக முன்னணி தலைவர்களும், எதிர் கட்சியான ஐக்கிய முன்னணி தலைவர்களும் கலந்து கொண்ட பிரமாண்ட எதிர்ப்பு பேரணி நடைபெற்றது ஒரு புதிய வரலாறு. அதில்கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் சி.ஏ.ஏ., என்.பி.ஆர், என்.ஆர்.சி யை கேரள அரசு ஏற்றுக் கொள்ளாது என்றும், அமலாக்காது என்றும் அறிவித்தார்.
இந்தியாவிலேயே இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட முதல் முதலமைச்சர் பினராய் விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து கேரள சட்டமன்றத்தின் விசேச கூட்டத்தைக் கூட்டி சி.ஏ.ஏ., என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அடுத்து அரசியல் சட்டத்தை காப்போம் என்று அறிவிக்கும் வகையில் கேரள இடது ஜனநாயக முன்னணி குடியரசு தினமான ஜனவரி 26 ல் கேரள மாநிலம் காசர்கோட்டிலிருந்து களியக்காவிளை வரை ஒரு பிரமாண்டமான மனித சங்கிலியை நடத்தி வரலாறு படைத்தது.
இதில் அனைத்து பகுதி மக்களும் மத, அரசியல் வேறுபாடின்றி கலந்தனர்.இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களுக்கும் கேரள மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது போல் தங்கள் மாநிலத்திலும் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டி கடிதம் எழுதினார். சி.ஏ.ஏ.ககு ஆதரவாக ஓட்டு போட்ட கட்சிகளைச் சார்ந்த முதலமைச்சர்கள் உட்பட 13 முதலமைச்சர்கள் என்.ஆர்.சி யை அமலாக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். கேரளத்தைப் போல் பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், புதுச் சேரி சட்டமன்றங்களும் சி.ஏ.ஏ.ககு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. எனவே சி.ஏ.ஏ.., என்.பி.ஆர்., என்.ஆர்.சி க்கு எதிரான போர் களத்தில்அவரை ஒரு தளபதியாக கேரள மக்கள் காண்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் குலசேகரத்தில் நடைபெற்ற ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய மலப்புரத்தைச் சார்ந்த ஒரு முஸ்லீம் மத குரு சி.ஏ.ஏ.ஐ எதிர்க்கும் திராணியுள்ள ஆண் மகன் பினராய் விஜயன் என்றும், பினராய் விஜயன் இருப்பது வரை கேரளத்தில் உள்ள முஸ்லீம்களுக்கு சி.ஏ.ஏ. குறித்தோ, பாஜக வின் வெறுப்பு அரசியல் குறித்தோ எந்த பயமும் இல்லை என்று பிரகடனப்படுத்தினார். கூடியிருந்த ஆண்களும், பெண்களும் ஆர்ப்பரித்து அங்கீகரித்தனர்.
வடகிழக்கிலிருந்து வண்ணாரப் பேட்டை வரை
சி.ஏ.ஏ நிறைவேற்றப்பட்டவுடன் முதல் எதிர்ப்பு வட கிழக்கு மாநிலங்களில் கிளம்பியது. குறிப்பாக அசாம் ஒப்பந்ததிற்கு மாறாக இச்சட்டம் உள்ளது என்பது அம்மக்களை கோபப்படுத்தியது.போராட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் அசாம் பயணம் ரத்தாகியது. பிரதமர் மோடியும் தனது அசாம் பயணத்தை ரத்து செய்தார். அசாமில் நடைபெற்ற போராட்டத்தில் 5 பேர் துப்பாக்கி சூட்டிற்கு பலியாயினர். பின்னர் அசாமின் பா.ஜ.க முதலமைச்சரே சி.ஏ.ஏ. ஐ அசாமில் அமாக்கப்போவதில்லை என்று அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் களத்தில் இறங்கினர்.
டில்லி பல்கலைக்கழகம், ஜாமியாமிலியா பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக்கழகம், ஐஐடி, ஐஐஎம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டாடா இன்ஸிடிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ், டெல்ஹி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ், செயின்ட் ஸ்டீபன்ஸ் உட்பட பல பிரபல கல்விக் கூடங்களிலும், இந்தியா முழுவதிலும் உள்ள கல்வி கூடங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஜாமியா மிலியாவில் மத்திய அரசின் பொறுப்பிலுள்ள காவல்துறையினர் மாணவிகள் மீது நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்கள் கண்டனத்துக்குரியது. அமைதியாக நூலகத்தில் நூல்கள் வாசித்துக் கொண்டிருந்த மாணவிகள் தாக்கப்பட்ட ஒளிப் பதிவு தற்போது வெளியாகி கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜே.என்.யூ வில் காவல்துறையினரும், முகமுடி அணிந்த பா.ஜ.க குண்டர்களும் நடத்திய தாக்குதல்களும் கண்டனதுக்குரியவை. பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களிலும் போராட்டக்காரர்கள்மீது கடும் அடக்குமுறை ஏவப்பட்டது. உ.பி.துப்பாக்கி சூட்டில் 21 பேரும், கர்நாடகத்தில் 2 பேரும் கொல்லப்பட்டனர். உடையை அடையாளமாக மோடி கூறிய பின்னர் முஸ்லீம்கள் குறிவைத்துத் தாக்கப்படும் கொடுமை நடக்கிறது.
தமிழகத்திலும் பெருமளவில் முஸ்லீம்கள் போராட்டக் களத்தில் உள்ளனர். பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதா அல்லது தெருக்களில் இறங்கி ஆண்களுக்கு சமமாக நின்று போராடுவதா என்பதை எதிர் கொள்ளும் பிரச்சனைகளே தீர்மானிக்கின்றன. தங்களது எதிர்காலமும், தங்கள் எதிர்கால சந்ததிகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் போது அவர்கள் தெருக்களில் இறங்கிப் போராடுகின்றனர். தமிழகம் முழுவதிலும் நடைபெற்ற போராட்டங்கள் சமூக அமைப்புகளின் அடையாளங்களையும், முழக்கங்களையும் விலக்கி, பொதுவான தேசிய கொடியடனும் பொதுவான கோசங்களுடன் அமைந்தன.
ஏதிர்கட்சிகளும், மதசார்பற்ற சமூக ஆர்வலர்களும் அவர்களோடு இணைகினறனர்.இது ஒரு சமூகத்தின் போராட்டமாக மாறாமல் அவர்களைத் தனிமைப்படுத்தி தாக்கி, முறியடிக்க முடியாத சூழலை ஏற்படுத்துகிறது.எதிர்கட்சிகள் தமிழக முதல்வருக்கு பிற மாநிலங்கள் அறிவித்ததைப் போல் தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி ஆகியவற்றை அமலாக்க மாட்டோம் என அறிவிக்கவும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் கோருகிறார்கள். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் இந்த கோரிக்கைளுக்காக அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடத்தப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30ல் தமிழக ஒற்றுமை மேடை சார்பில் தமிழகம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தற்போது எதிர்கட்சிகள் 2 கோடி கையெழுத்துக்கள் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளன. சஹீன்பாக்கைப் போல் வண்ணார்ப்பேட்டையில் தொடர் போராட்டம் நடைபெற்றபோது காவல்துறை தாக்குதல் நடத்தி முறியடிக்க முயற்சித்தது. ஆனால் போராட்டம் மாநிலம் முழுவதும் ஆக்ரோசமாக பெருகி விட்டது.
இந்த சங்பரிவார திட்டத்திற்கு எதிரான போராட்டம் மேலும் வலுப் பெற வேணடும். அதற்கு எதிரான நிலையை எடுக்கச் செய்ய தமிழக அதிமுக அரசுக்கு மேலும் அதிக அழுத்தம் தர வேண்டும். இந்தபோராட்டம் வெறும் இஸ்லாமியர்களுக்கானது அல்ல. இதனால்இந்துக்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்படுவர். தனது குடியுரிமையை நிலை நாட்ட அனைவரும் கடும் அலைச்சலுக்கும், மன உழைச்சலுக்குத் உள்ளாக வேண்டி வரும்.
நீட் தேர்வு முதல், பப்ளிக் கமிசன் தேர்வு வரை பணமே தீர்மானிக்கும் நிலையில் தான் தமிழகம் உள்ள நிலையில் குடியுரிமை பெறவும் பணம் பிரதான காரணியாக மாறும் ஆபத்து உள்ளது. ஏழைகள் தான் கடைசியில் நட்டாற்றில் நிற்பர்.அதில் இந்து, முஸ்லீம் வேறுபாடில்லை. எனவேஇப்போராட்டத்தை ஒட்டு மொத்த சமூகத்தின் போராட்டமாக வளர்த்த வேண்டும். குடியுரிமை எனும் வாழ்வுரிமைக்கு மட்டுமன்றி தாக்குதலுக்கு உள்ளாகும் வாழ்வாதாரப் பிரச்சனைக்குமான தொடர் போராட்டமாக வளர வேண்டும். இதில்அரசியல் பேதம், மத அடையாளம் உள்பட உள்ள வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணையவேண்டும். அதுவே தீர்வுக்கு இட்டுச் சென்று வெற்றியை வெகுமதியாகத் தரும்.
எஸ்.நூர்முகம்மது