சினிமாதமிழ் சினிமா

ஷாஜகான் முதல் சர்கார் வரை……..!

108611582

இ.பா.சிந்தன்

சர்க்கார் திரைப்படம் வெளியான அன்று,  ஒருவேலையாக ஜெர்மனியின் அதிகப் பிரபலமில்லாத ஊரில் தங்கியிருந்தேன். ஊரின் பெயரை இங்கே குறிப்பிடாமல் இருப்பதற்குக் காரணம், எனது அடுத்த கட்டுரையின் தலைப்பே அதுதான். அதனால் அதுவரை சொல்லாமல் இருக்கலாம்னு தான் இங்கே குறிப்பிடவில்லை. அந்த ஊரில் நான் தங்கியிருந்த ஓட்டலுக்குப் பக்கத்தில் ஒரு திரையரங்கில் சர்(க்)கார் ஒரேயொரு காட்சி போடப்போவதாகத தகவல் காதுக்கு வந்து சேர்ந்தது. சரி, இந்த சாக்கில் அந்த ஊரில் இருக்கும் தமிழ்ப்பேசும் நல்லுலகத்தில் இருந்து யாராவது நண்பர்கள் கிடைப்பார்களா என்று பார்ப்பதற்காக படம்பார்க்கக் கெளம்பினேன். இதுசும்மா வெளியே சொல்லும் காரணம் தான். நம்பிடாதீங்க. அதைவிட உண்மையான வேறுவொரு காரணம் இருக்கிறது.

இரவு 10.30க்கு படம் என்றார்கள். சரியான நேரத்திற்குச் சென்று, டிக்கெட்டும் வாங்கி மூன்றாவது வரிசையில் சீட்டையும் பிடித்து உட்கார்ந்துவிட்டேன். ஆனால் 11 மணியாகியும் படம் போட்டபாடில்லை. சுற்றிலும் உள்ள மனிதர்களை கவனித்து ஏதேனும் ஒரு குழுவிற்குள் நுழைந்து நட்பாகலாம் என்று நினைத்தேன். ஆனால் சர்க்கார் என்ற தமிழ்ப்படம் பார்க்கவந்திருந்த 20களிலான வயதுடைய இளந்தமிழர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் அவர்களுக்குள் ஜெர்மன் மொழியில் தான் பேசிக்கொண்டிருந்தனர். இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த 50களும் அதற்கு மேற்பட்டவர்களும் மட்டும் யாழ்ப்பாணத் தமிழில் கதைத்துக் கொண்டிருந்தனர். திரைப்படம் போடுவதற்கு ஆகிற தாமத்தில், நான் முதல் நாள் படம் பார்க்க வந்ததன் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அந்த முக்கியக் காரணத்தை அசைபோடத் துவங்கிவிட்டேன்.

சிறுவயது முதலே நான் மிகப்பெரிய சினிமா பைத்தியம். நான் சிறுவனாக இருந்தபோது, அப்பாவுக்கு மாதாமாதம் சம்பளம் கிடைக்கும் 10ஆம் தேதியை ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன். சம்பளம் வாங்கும் அன்றைய தேதியில் சினிமா பார்ப்பது எங்கள் வழக்கம். எல்லா மாதங்களும் இல்லையென்றாலும் பெரும்பாலான மாதங்கள் இதுதான் நடைமுறை. அப்பாவின் சைக்கிளில் முன்கம்பியில் எனக்காகவே அமைக்கப்பட்ட இருக்கை இருக்கும். அதில் நானும், பின் கேரியரில் அம்மாவும் உட்கார்ந்து, வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டருக்கு குடும்பத்தோடு சம்பள நாளில் இரவுக் காட்சிக்கு படம் பார்க்க செல்வது வழக்கம். அன்னைக்கென்று பார்த்து சில மாதங்களில் டிக்கெட் கிடைக்காமலும் போகும். அப்போதும் விடமாட்டேனே. அடம்பிடித்தாவது கொஞ்சம் தள்ளியிருக்கும் ராயல் தியேட்டருக்கு போவோம். அந்த திரையரங்கம் தான் இப்போது ஏஜிஎஸ் ஆக உருமாறியிருக்கிறது. அப்போதிலிருந்தே சினிமா மீதான காதல் எக்கச்சக்கம்.

சிறுவயதில் ஏதோவொரு படத்திற்கு போனால் போதும் என்கிற மனநிலையில் இருந்து, எல்லா படத்தையும் பார்க்க வேண்டும் என்கிற என்ணம் உருவாக ஆரம்பித்தது. அதாவது, பள்ளியில் நண்பர்களிடையே பேசுபொருளாக இருக்கும் எந்தத் திரைப்படத்தையும் பார்த்தாக வேண்டும் என்கிற ஆவல் வரும். ஆனால், எல்லா படத்தையும் பார்க்க எனக்கு அனுமதி இல்லை என்பதே போகப்போகத் தான் புரியத் துவங்கியது. ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் வெளியான காலத்தில் அதுகுறித்துதான் எங்கேயும் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் அந்த படத்தில் ரம்பாவின் குட்டைப்பாவாடை காரணமாக திரையரங்கம் கூட்டிச்செல்ல வீட்டில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. உள்ளத்தை அள்ளித்தா படம் பார்க்காத வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று அப்போது நொந்துபோயிருக்கிறேன் என இப்போது நினைத்தால் கொஞ்சம் வெட்கவெட்கமாத்தான் இருக்கிறது.

இப்படியாக நான் பார்க்காத படங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதாக மனவருத்தமும் அடைந்திருந்தேன். இது ஒருபுறமென்றால், வீட்டில் தொலைக்காட்சி இல்லாத காரணத்தால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய திரைப்படங்களையும் பார்க்காமல், நான் பார்க்காத படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. சில ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதோவொரு நண்பன் வீட்டுக்கு சென்று படம் பார்த்துவிடுவேன். ஆனால் அது எல்லா ஞாயிறுக்கும் சாத்தியமாகியிருக்கவில்லை. எல்லா நண்பர்களின் பெற்றோரும் எளிதாக என்னை அனுமதித்ததுமில்லை. அப்போதெல்லாம் பார்க்காத படங்களின் பட்டியலை ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்தேன். ஒரு படம் வெளியாகிற அன்றே பார்த்துவிட்டால், பார்க்காத படங்களின் எண்ணிக்கை உயரவே உயராதே என்கிற நாசாவுக்கே தெரியாத அரிய விசயத்தைக் கண்டுபிடித்தேன். எதிர்காலத்தில் எப்போதாவது வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும், எந்தத் திரைப்படம் வெளியானாலும், முதல் நாளிலேயே பார்த்துவிட வேண்டும் என்கிற கனவை வளர்த்து வைத்திருந்தேன்.

பள்ளிப் பருவத்திலேயே வறுமையின் பிடியில் எங்கள் குடும்பம் சிக்கித்தவித்த காரணத்தால், வாடகை கொடுக்க முடியாமல் வில்லிவாக்கத்திலிருந்து சற்று வெளியே குறைந்த வாடகை உள்ள ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது. ‘கம்மாட்டிப்படம்’ என்கிற மலையாளப் படத்தில் சாதியாலும் வர்க்கத்தாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி கொச்சி நகரிலிருந்து மெதுமெதுவாக விரட்டியடிக்கப்பட்டனர் என்பதைக் காட்டியிருப்பார்களோ, அப்படித்தான் எங்கள் வாழ்க்கையும் இருந்தது. எனது தாத்தாவுக்கு தாத்தா குடும்பம் கூட வெள்ளைக்கார ஆட்சியின் காலத்திலேயே சென்னையின் மையப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். பல நூற்றாண்டுகளாக சென்னையில் வாழ்ந்த எங்களை, நகரமயமாக்கல் மெதுமெதுவாக துரத்தி சென்னையின் எல்லைவரை கொண்டுவந்து விட்டது. சொந்தமாக வீடிருந்தால் ஓரளவுக்குத் தப்பிக்கலாம். எந்தவொரு நகரத்திலும் ஏற்படும் புதிய வளர்ச்சியின் முதல் தாக்குதலே சொந்தமாக வீடில்லாதவர்களின் மீதாகத்தான் இருக்கும். ஒரு நகரம் உருவாகிறபோது, அங்கே ஒரு புதிய சாலை வந்தால்கூட, வாடகை உயரும். புதிய தெருவிளக்கு வந்தால், வாடகை உயரும். புதிய பொதுத் தண்ணீர் குழாயோ தண்ணீர் டேங்கோ வந்தால்கூட வாடகை உயரும். அவ்வளவு ஏன், ஒரு சூப்பர்மார்க்கெட் வந்தால்கூட, வாடகை உயரும். இப்படித்தான் எதற்கெடுத்தாலும் வாடகைக்கு இருப்போர் தான் முதன்முதலில் இலக்காகிப்போவார்கள். அப்படி உயரும் வாடகையைத் தரமுடியாதவர்கள் நிச்சயமாக ஊரைவிட்டே காலிசெய்து வாடகைக் குறைவாக இருக்கும் அடுத்த ஊரை நோக்கி நகரவேண்டிவரும். சில காலம் கழித்து அந்த புதிய ஊரிலும் புதிய வளர்ச்சி வரும்போது, அங்கேயும் வாடகை உயரும். பின்னர் அங்கேயிருந்தும் பெட்டிபடுக்கைகளை தூக்கிக்கொண்டு ஓடவேண்டியிருக்கும். வீட்டை காலிசெய்து போவது என்பது அத்தனை எளிதானதல்ல. பெட்டிபடுக்கைகள் அதிகமாக இல்லையென்றாலும், சேர்த்து வைத்த நண்பர்கள், படித்த பள்ளி, அக்கம்பக்கத்து பழக்கவழக்கம், விளையாடும் இடங்கள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு புதிய ஊரில் புதியதாகத் தேடவேண்டும். அப்படியாக வில்லிவாக்கத்திலிருந்து கொளத்தூர் வந்து சேர்ந்தோம். இதற்குப் பின்னிருக்கும் அரசியல் எல்லாம் அப்போது எனக்குப் புரிந்திருக்கவில்லை.

என்னுடைய கவலையெல்லாம் நாதமுனி, ராயல் திரையரங்கங்கள் போல புதிதாகக் குடியேறியிருக்கும் கொளத்தூரில் ஏதும் இருக்குமா, இருந்தால் எவ்வளவு தூரத்தில் இருக்கும், டிக்கெட் விலை என்னவாக இருக்கும், படம் வெளியான முதல்நாளிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பதைச் சுற்றியே இருந்தது. திரையரங்கங்களின் பெயர்களைக் கண்டறிவது அவ்வளவு கடினமான காரியமல்ல. ஒவ்வொரு தெரு முனையிலோ அல்லது டீக்கடை அருகிலோ அவ்வப்போது திரையரங்கங்களின் பெயருடன்கூடிய திரைப்படப் போஸ்டர்கள் ஒட்டியிருப்பார்கள். அப்படியொரு போஸ்டரின் மூலமாக கங்கா திரையரங்கம் என்ற ஒன்று இருப்பதைத் தெரிந்துகொண்டதும் தான் மனசு அமைதியானது. பொடிநடையாக வழியெங்கும் பலரிடமும் கேட்டுக்கேட்டே கொளத்தூர் கங்கா திரையரங்கம் போய்ச் சேர்ந்தேன். படம் பார்க்கவெல்லாம் அல்ல, வெளியிலிருந்து பார்த்தால் திரையரங்கம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ள மட்டும்தான். அங்கே போனதும் மற்றொரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதில் வெறும் கங்கா மட்டுமல்ல, யமுனா மற்றும் காவேரி என மூன்று திரையரங்கங்கள் ஒரே இடத்தில் இருந்தன. அதன் பின் சில ஆண்டுகள் கங்கா, காவேரி, யமுனா திரையரங்கங்களில் பல படங்களைப் பார்த்திருக்கிறேன். இருப்பினும் முதல் நாள் படம் பார்க்கிற வாய்ப்பு எப்போதும் கிடைத்துவிடுவதில்லை.

இதற்கிடையே நகரத்தின் வளர்ச்சி கொளத்தூருக்கும் விரிவடையத் துவங்கியிருந்தது. வறுமையான குடும்ப சூழலும் மாறாத காரணத்தால், சென்னையைவிட்டு மேலும் அதிகதூரம் செல்ல வேண்டியிருந்தது. அம்பத்தூருக்கும் புழலுக்கும் இடையில் இருக்கும் சூரப்பட்டு என்கிற ஊரெல்லாம் இந்திய வரைபடத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்ட தருணம் அது. சூரப்பட்டு மற்றும் சண்முகபுரம் என இருவேறு சாதியினர் வாழும் இரண்டு கிராமங்களுக்கு நடுவில் சும்மாகிடந்த காலி இடத்தில் புதிதாக ப்ளாட் போட்டு உருவாக்கப்பட்ட ஒரு ஊரில் தான் நாங்கள் வாடகைக்குச் சென்றோம். சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்ததாலும், இரண்டு சாதிப் பாரிம்பரியத்தையும் மறுத்த சாதிமறுப்பு இடதுசாரிக் குடும்பமாக எங்கள் குடும்பம் இருந்ததாலும், இடதுசாரி சிபிஎம் கட்சித் தோழர்களே எங்களின் குடும்பத்தின் விரிவடைந்த உறவுகளாக இருந்ததாலும், சாதி எங்களுடைய வாழ்க்கைக்குள் பெரியளவுக்கு ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆனால் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு சாதிமறுப்பைப் பேசும் குடும்பத்தினரை இந்த சமூகம் ஒடுக்கப்பட்ட சாதியாகவே பார்க்கிறது என்பதை அச்சிறு வயதில் நான் புரிந்துகொள்ளவில்லை என்பதும் கூட ஆதிக்கத்தை உணராமல் போனதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். அதுவெல்லாம் பிற்காலத்தில் பல தத்துவங்களைப் படிக்கையில் புரிந்துகொண்டது. ஆக வீடுமாறியதும், அச்சிறுவயதில் முதன்முதலாக ஊர்களுக்கு இடையிலிருக்கும் சாதிப்பகைமைகள், சாதி ஒடுக்குமுறைகள், என பலவற்றையும் பார்த்துத் தெரிந்துகொள்ளமுடிந்தது. கிரிக்கெட் வெளியாடுவதாக இருந்தாலும், தேர்தல் அரசியலாக இருந்தாலும், நிலம் வாங்கல் மற்றும் விற்பனை இடைத்தரகு வேலையாக இருந்தாலும் சாதி ஆதிக்கத்தின் பலத்தை நேரடியாகப் பார்க்கமுடிந்தது.

சரி, வில்லிவாக்கத்தில் நாதமுனி-ராயல், கொளத்தூரில் கங்கா-யமுனா-காவேரி என்பதுபோல, இந்த சூரப்பட்டிலும் ஏதும் திரையரங்கம் இருக்கிறதா என்று விசாரிக்கத் துவங்கினேன். ஆனால் நடந்துபோகும் தூரத்தில் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. ஐந்து கிலோமீட்டர் ஒருபக்கம் போனால், அம்பத்தூர் ராக்கி-முருகன்-கண்ணன் திரையரங்கங்களும், அதைவிட கொஞ்சம் அதிக தூரம் இன்னொருபக்கம் போனால், செங்குன்றம் நடராஜாவும் இருப்பது தெரியவந்தது. புதிய படங்களை ஓரளவுக்கு அதிக பயணதூரமின்றி பார்க்க வேண்டுமென்றால் அம்பத்தூர் ராக்கியும், குறைந்த கட்டணத்தில் அதிக தூரம் பயணித்து பார்க்கவேண்டுமென்றால் செங்குன்றம் நடராஜாவும் தான் என்பது போகப்போகப் புரிந்தது. ஒரு திரைப்படம் வெளியாகி சில மாதங்கள் கழித்து இரண்டாவது முறையாக வெளியாகிற போது சின்ன திரையரங்கங்களில் குறைந்த கட்டணத்தில் பார்க்கலாம். அப்படியான திரையரங்காக அம்பத்தூர் கண்ணன் திரையரங்கம் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. பாலாவின் சேதுவெல்லாம் அங்கே அப்படிப்பார்த்தது தான். இருப்பினும் படம் வெளியாகிற அன்றே பார்த்துவிட வேண்டும் என்கிற என் ஆசை அப்படியே தான் இருந்தது.

கல்லூரி படிக்கிறபோது ஒருசில படங்களுக்கு முதல் நாளே பார்க்கும் ஆசை அதிகமாக நிறைவேற ஆரம்பித்திருந்தது. அதற்கு அஜித் மற்றும் விஜய்க்கு தான் நன்றி சொல்லவேண்டும். இன்னும் சொல்லப் போனால், அவர்களின் அதிதீவிர இரசிகர்களுக்குத் தான் நான் பெரிய நன்றியைச் சொல்ல வேண்டும். இந்த அதிதீவிர ரசிகர்கள் இருக்கிறார்களே, அவர்களுடைய தலைவரின் படம் வெளியாகிறதென்றால், எவ்வளவு செலவு செய்தும் நம்மை படத்திற்கு அழைத்துப் போய்விடுவார்கள். கொளத்தூரில் இருக்கும்போது கிடைத்த தோழியொருத்தி விஜய் இரசிகராக இருந்ததால், பல விஜய் படங்களையும் பார்க்கமுடிந்தது.

கல்லூரிக்கு உள்ளே ஒரு அதிதீவிர அஜித் ரசிகனும், கல்லூரிக்கு வெளியே மற்றொரு அஜித் ரசிகனும் நண்பர்களாக எனக்குக் கிடைத்தனர். அவர்களால் பெரும்பாலான அஜித் படங்களை முதல் நாளிலேயே திரையரங்கில் பார்த்துவந்தேன். குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் விஜயைப் பிடிக்கும் நண்பர் வட்டத்துடனும் நெருக்கமாக இருந்தேன். அதனால் சில வேளைகளில் விஜய் படங்களையும் முதல்நாளே பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அப்படியாக ஒருநாள் ஒரு அஜித் ரசிக நண்பருடன் படத்திற்கு போயிருந்தேன். அது ஜனா என்று நினைக்கிறேன். அங்கே திரையரங்கம் வாசலில் யாரோ ஒரு சிறுவன் படத்திற்கு டிக்கெட் வாங்க கொஞ்சம் காசு குறைவாக வைத்திருந்தான் என்பதைப் பார்த்ததும், ‘தல படத்துக்கு காசில்லாம ஒருத்தன் வீடு திரும்புவதா’ எனக் கொந்தளித்து, நாங்கள் வீடுதிரும்புவதற்கு ஷேர் ஆட்டோவுக்கு வைத்திருந்த காசை எடுத்து அந்த சிறுவனுக்குக் கொடுத்துவிட்டான். ஜனா மாதிரியான மெகா காவியப் படத்தையும் பார்த்துவிட்டு, கால் கடுக்க நடந்தும் வீட்டுக்கு வரவேண்டிய கொடுமையைக் கூட, அந்த முதல்நாள் படம் பார்க்கும் ஆவலில் சகித்துக்கொண்ட பெரிய தியாகி நான் என்பதை வரலாற்றில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நகரம் எங்களைத் துரத்திக்கொண்டே இருந்ததை கொஞ்சம் தாமதமாகத் தான் கவனித்தோம். இப்படியே ஓடிக்கொண்டிருந்தால், வீடில்லாதவர்கள் நாட்டைவிட்டே போவதைத் தவிர வேறு வழியில்லையோ என்று தான் தோன்றியது. எப்பாடுபட்டாவது, எவ்வளவு கடன்வாங்கியாவது, யார் கைகால்களில் விழுந்தாவது, எத்தனை வங்கிவாசலை மிதித்தாவது சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிவிடவேண்டும் என்கிற கனவை என் அப்பா ஆழமாக உருவாக்கிக்கொண்டுவிட்டார். கனவு காண்பது ஏழைகளுக்கு எளிதானதுதான். ஆனால் அதை நிறைவேற்றுவதெல்லாம் கனவிலும் அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. இழப்பதற்கு எதுவுமில்லாதவன் தான் போராட வருவான் என்பதைப் போல, எதுவுமில்லாத நாங்கள் மிகக்கடுமையாகப் போராடினோம். படித்து முடிப்பதற்கான எங்கள் போராட்டக் கதையை தனி நூலாகவே எழுதலாம். முட்டிமோதி, படித்து, வேலைக்குச் சென்று நாலு காசு சம்பாதிக்கும் நிலைக்கு வந்தபோதுதான் சொந்த வீடு வாங்கும் கனவு நிஜமாகும் என்கிற என் அப்பாவின் நம்பிக்கை எனக்கும் வந்தது. பல தலைமுறைகளாக சென்னைவாசியாக வாழ்ந்துவந்த நாங்கள், சென்னையின் மையப்பகுதியிலிருந்து வில்லிவாக்கம், கொளத்தூர், சூரப்பட்டு என கொஞ்சம் கொஞ்சமாக ஓடியோடி இறுதியில் கள்ளிக்குப்பத்தில் தான் புதிய சொந்த வீட்டோடு எங்கள் ஓட்டம் நின்றது எனச்சொல்லலாம். அதில் அப்பாவின் உழைப்பு அபாரமானது.

வேலைக்குப் போகத் துவங்கியதும் கிட்டத்தட்ட பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில் புதிய ஊரில் கிடைத்த புதிய நண்பர்களுடன் இரவுக்காட்சிகள் பார்ப்பது வாடிக்கையாகிப் போனது. சிலப்பல அஜித், விஜய் இரசிக நண்பர்களை அழைத்துச் செல்வதை கடந்தகாலதிற்கான நன்றிக்கடனாகவே செய்தேன். ஆனாலும் பெரிய நடிகர்களின் படத்தை மட்டும் முதல் நாள் பார்ப்பதை தவிர்த்தே வந்தேன். அதற்கு டிக்கெட் விலையும் மிகமுக்கியக் காரணம். சம்பாதிக்க ஆரம்பிக்கும்போது பணத்தின் அருமை நன்றாகவே தெரிய ஆரம்பித்தது. டிக்கெட் விலை குறைவாக இருக்கும் என்பதால், சின்ன பட்ஜெட் படங்களை மட்டும் முதல் நாளே பார்ப்பது எங்கள் வழக்கம். குண்டக்க மண்டக்க என்கிற ஆஸ்கர் படத்தைக் கூட முதல் நாளே பார்த்தேன் என்றால் எனது சினிமா பார்க்கும் ஆர்வத்தை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

அரசியல் தத்துவங்கள் மூளைக்குள் ஏறயேற முன்புபோல மாஸ் மசாலா படங்களின் காட்சிகளுக்கு கைத்தட்டி கூச்சலிடமுடியவில்லை என்பதை உணர்ந்தேன். அதுவும் காலப்போக்கில் முதல் நாள் படம் பார்க்கும் ஆர்வத்தையும் வெகுவாகக் குறைத்திருந்தது. ஆனால் பொதுவாக சினிமா பார்க்கும் வெறித்தனம் மட்டும் குறையாமல் இருந்தது. நல்ல சினிமா எந்த மொழியில் எடுத்தாலும் பார்க்கலாம் என்கிற ஞானோதயத்தை சில நண்பர்களிடம் இருந்தும் அரசியல் செயல்பாடுகளில் மூலமும் கற்றது பெரும்பயனாக அமைந்தது. தமிழ் சினிமாவையும் தாண்டி உலகெங்கிலும் வெளியாகிற நல்ல படங்களை தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்ததும், எனது இரசனை வேறு தளத்திற்குச் சென்றுவிட்டிருந்தது.

இப்படிப் பழங்கதையை எல்லாம் நினைத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன், பல ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய் படம் ஒன்றினை முதல் நாளே பார்ப்பதற்குக் காத்திருந்த அவ்வேளையில். ஒருவழியாக இரவு 11.15க்கு படம் துவங்கியது. விஜயின் அறிமுகக்காட்சியில் திரையரங்கமே அதிரும் வகையில் பலரும் உரக்கக் குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர். “தமிழண்டா, தலைவண்டா, ஜெயிப்பாண்டா” என்கிற வார்த்தைகளும் அக்கூச்சலில் கலந்திருந்தன. 17 ஆண்டுகளுக்கு முன்னர் 2001 தீபாவளிக்கு வெளியான ஷாஜகான் படத்திற்கு நான் கிழித்துப் பறக்கவிடாத பேப்பர்களா என மனதில் நினைத்துக்கொண்டேன்.

இவர்களும் ஒருநாள் நிஜ உலகிற்கு வருவார்கள் என்று நினைத்துக்கொண்டே, படத்தைப் பார்க்க முயற்சித்துக்கொண்டிருந்தேன்…

 படம் எப்படி இருக்கிறது என்றா கேட்கிறீர்கள்?

“Corporates are the real bloody criminals who control and corrupt governments” அம்புட்டுதான்.