– பாரதி பிரபு
வடசென்னை என்ற திரைப்படம் அதனுடைய தலைப்பிலேயே ஒரு குறிப்பிட்ட நிலம் சார்ந்த மக்களின் வாழ்வியலை பதிவு செய்கின்ற திரைப்படமாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறது. வடசென்னை என்பது தமிழகத்திலுள்ள பல முக்கிய நகரங்களுள் ஒன்றென சாதாரணமாக கருதிவிட முடியாது. உதாரணமாக மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற மாநகரங்களைப் போன்ற ஒன்றாகவும் இதை சுருக்கிவிட முடியாது.
வடசென்னை என்பது பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கிய மிகப்பெரிய நகரம். இதனை பிற நகரங்களோடு அவ்வளவு சாதாரணமாக ஒப்பிட்டுவிட முடியாது. காரணம் சென்னை மாகாணத்தின் மூளையாக – உயிராக உருவாக்கப்பட்டதுதான் வடசென்னை.
வடசென்னை என்றாலே நெருக்கடி, வரையறையற்ற குற்றங்கள், கொச்சை மொழி, நாகரிகமற்ற மனிதர்கள் வாழ்கின்ற பகுதி என்பவை பார்ப்பனிய சினிமாவில் கதாநாயகர்களாகவும், காமெடியர்களாகவும் வில்லன்களாகவும் தலைக்காட்டிய காலத்தில் உருவாக்கப்பட்ட முரண்பாடுடைய கருதுகோள் என்பது ஆய்வாளர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று.
கபாலி என்பவன் வடசென்னையின் ரவுடி என்றும் கைக்கூலி என்றும் பார்ப்பனிய படைப்பு சிந்தாந்தங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவன் என்பதை உணர்ந்தே இயக்குநர் ரஞ்சித்தின் “கபாலி” திரைப்படத்தின் பெயர் உருவாக்கப்பட்டது. அதில் ‘சூப்பர் ஸ்டார்’ என்று கருதப்படுகின்ற ரஜினிகாந்தை வைத்து மாற்று சினிமாவிற்கான கதவினை திறந்து வைத்தார் ரஞ்சித்.
நிகழ்கால சினிமாவின் எந்தவொரு அறிவுமற்று சாதிவெறியின் நவீன முகமாகவும் ரஞ்சித், சுசீந்திரன், கோபி நயினார், மாரி செல்வராஜ் போன்ற படைப்பாளர்களின் மீது எத்தகைய கவனமும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்தான் “வடசென்னை”.
இத்திரைப்படத்தில் கதை புதிதல்ல, வடசென்னை மக்களின் எத்தகைய வாழ்வியலையும் உள்வாங்கிக் கொள்ளாமல் அயோத்திதாசப் பண்டிதரின் நண்பரும் பொதுவுடைமைத் தலைவருமான சிங்காரவேலரின் பெயரைப் பயன்படுத்தி தலித்துகளின் மீதும் மீனவச் சமூகத்தின் மீதும் மிகப்பெரிய கருத்தியல் வன்கொடுமையையும் படைப்பு சார்ந்த பலாத்காரத்தையும் நிகழ்த்திக்காட்டி இருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
முற்போக்கு சிந்தனையோடு இச்சமூகத்தை சமத்துவத்தை நோக்கி வழிநடத்தக் கூடிய சென்னை 28, மெட்ராஸ், ஜீவா, மாவீரன் கிட்டு, கபாலி, அறம், காலா, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் உருவாகிய இக்காலக்கட்டத்தில் எவ்வித ‘அறிவு நேர்மையுமற்று’ வடசென்னையை மிகச்சிறந்த நடிகர் தனுஷை வைத்து உருவாக்கியிருப்பது, வருத்தமான ஒன்று.
வடசென்னை மக்கள் மீது பிறர் கொண்டிருந்த கருத்துருவாக்கத்தை தூள்தூளாக ஆக்கியவர் இயக்குநர் ரஞ்சித். சென்னை சார்ந்த ஒரு படைப்பாளுமையின் அறிவாளுமையாக அறத்தை உருவாக்கியவர் இயக்குநர் கோபி நயினார். இவர்கள் கட்டமைத்த / மீட்டுருவாக்கம் செய்த கருத்துக்களை திட்டமிட்டே சிதைத்த தமிழகத்தின் மிகமோசமான படைப்பாளிகளில் ஒருவராகத்தான் இன்று இயக்குநர் வெற்றிமாறன் அம்மணப்படுகிறார்.
தலித்துகளும் மீனவர்களும் இணைந்து உருவாக்கிய உழைப்பின் வெளிப்பாடாகத்தான் நாம் சென்னை மாநகரத்தை பார்க்க வேண்டியுள்ளது. மகாராஷ்டிரத்திலுள்ள ‘கோரகான்’ நினைவுத் தூணைப் போலத்தான் நமது தலைமைச் செயலகத்தின் முன்புள்ள இராணுவ வீரர்களின் நினைவு மையமும் அமைந்திருக்கிறது. சென்னையிலுள்ள இரயில் பாதைகள், சாலைகள், தலைமைச் செயலகக் கட்டிடம், சென்னையின் அலங்காரங்களாகத் திகழ்கின்ற பிரிட்டிஷ் கால கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், விளையாட்டு மைதானங்கள், ஐஸ்ஹவுஸ் உள்ளிட்ட செந்நிறக் கட்டிடங்கள் அனைத்திலும் தலித்துளின் – மீனவர்களின் இரத்தமும் சதையும் கலந்திருக்கிறது.
இப்படி தலித்துகளால் உருவாக்கப்பட்ட சென்னை மாநகரம்தான் உலகத்திலேயே இங்கிலாந்தின் இலண்டன் நகரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட மிக முக்கியமான நகரமாகும். பிரிட்டிஷ் காலத்தில் கறுப்பர் நகரமென்று போற்றப்பட்ட சென்னை மாநகரம் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சென்னையில் குடியேறியவர்களால் படகு போக்குவரத்துடைய அடையாறு, கூவமாறு என்ற இருபெரும் ஆறுகள் நாற்றமுடைய ஆறுகளாக, அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் நாசமாகிப் போனது. முதலாளிகளிடம் மிகமுக்கிய தொழில்களெல்லாம் கைமாறியது. அந்தச் சூழலில்தான் அவர்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தலித்துகளின் பூர்வக்குடிகளில் ஒரு சிலரை பிரிட்டிஷ் ஆட்சி துப்பாக்கி ஏந்தச் செய்தது. சுதந்திர இந்தியாவின் சென்னை முதலாளிகள் கத்தியை ஏந்தச் செய்தார்கள்.
இந்த மக்களுக்கு எதிராக காங்கிரஸ் அரசும், திராவிட அரசும், பார்ப்பனியம் உருவாக்கிய கருத்துருவாக்கம்தான் வடசென்னை மக்கள் வன்முறையாளர்கள், நாகரிகமற்றவர்கள், கொச்சை மொழி பேசுபவர்கள்… போன்றதெல்லாம்.
வடசென்னையில் ஒரெயொரு இளைஞன்தான் ராஜீவ்காந்தி இறந்த காலகட்டத்தில் படித்திருக்கிறான் என்றவொரு காட்சியைக் காட்டிய, வக்கிரம் நிறைந்த அந்த படைப்பாளனுக்கு எடுத்துக் கூற விரும்புவது வடசென்னையின் கன்னிகாபுரத்தில் மட்டும் நீங்கள் கணக்கெடுத்துப் பாருங்கள் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் நிறைந்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தை ஊடகங்கள் கொண்டாடலாம். “வெற்றித் திரைப்படம்” என்று உங்களுக்குள் ஒருவரை ஒருவர் புகழ்ந்துக் கொள்ளலாம். ஆனால் வடசென்னை மக்களுக்கு தெரியும் உண்மை.
‘ஒரு படைப்பாளன் கார்பரேட்டுகளின் கைக்கூலியாக, சாதிய சனாதானத்தின் முகமாக, வரலாற்றை திரிப்பவராக இருக்கும்போதுதான் “வடசென்னை” போன்ற திரைப்படத்தை உருவாக்க முடியும்.