அரசியல்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . ! – 5

Hindu Nationalists Rss Eu Far Right

– அ.மார்க்ஸ்.

“இந்தோனேசிய முஸ்லிம்களும் தென்னிந்திய முஸ்லிம்களும்தான் நல்ல முஸ்லிம்கள்” – RSSஇறுதியாக முஸ்லிம்கள் குறித்த ஆர்.எஸ்.எஸ் அணுகல்முறை பற்றி ஆன்டர்சன் சொல்வதைக் காணலாம்.

கோல்வால்கர் முஸ்லிம் ஆட்சியைப் பற்றி, “ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனம்” எனக் குறிப்பிடுவது வழக்கம். நரேந்திரமோடி இன்னும் ஒருபடி மேலே போய், “ஆயிரத்து இருநூறு ஆண்டுகால அடிமைத்தனம்” எனக் கூறத் தயங்குவதில்லை. முஸ்லிம்களின் ஆட்சி சிந்துப் பகுதியில் கி.பி 800 க்குப் பிறகும், டெல்லியில் கி.பி 1000 முதலும் நடைபெற்றது. வரலாற்றாசிரியர்கள் யாரும் பிரிட்டிஷ் ஆட்சியைச் சொல்வதைப் போல முஸ்லிம் ஆட்சிகளை “காலனிய ஆட்சி” எனக் குறிப்பிடுவதில்லை. பிரிட்டிஷாரைப் போல முஸ்லிம் அரசர்கள் இங்கிருந்து அடித்த கொள்ளைகளை தங்கள் நாட்டுக்குக் கடத்திக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இந்த நாட்டினராகவே வாழ்ந்தனர். அவர்களில் பலர் ரஜபுத்திரப் பெண்களை மணந்து கொள்ளவும் செய்தனர். ஆனால் 1200 ஆண்டுகால அடிமைத்தனம் எனச் சொல்லும்போது முஸ்லிம் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகள் இரண்டையுமே காலனி ஆட்சி எனப் பொருள்படுவதைச் சுட்டிக் காட்டும் அஷுடோஷ் வார்ணே அது எப்படிச் சரியாகும் எனக் கேட்கிறார்.

“ஆர்.எஸ்.எஸ் பிரசாரக்குகளோ யாருமோ அப்படியெல்லாம் பேசுவதில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்கும் முஸ்லிம்களின் ஆட்சிக்கும் உள்ளதாக நீங்கள் குறிப்பிடும் இந்த வேறுபாட்டை அவர்களும் ஏற்பார்கள் என்றே நம்புகிறேன்” என்பதாகவே ஆன்டர்சனின் பதில் அமைகிறது. முஸ்லிம்கள் பெரும்பாலும் இந்தியாவில் பிறந்தவர்கள் எனச் சொல்லித்தானே தியோரஸ் அவர்களை இந்தியர்களாக ஏற்றுக் கொண்டார் என்றும் ஆன்டர்சன் குறிப்பிடுகிறார். “ஆனால் மோடி கோல்வால்கர் கருத்திலேயேதானே நிற்கிறார், தியோரஸ் கருத்துக்கு வரவில்லையே” என வார்ணே மீண்டும் கேட்கும்போது, “அது ஒரு generic பிரச்சினை. ஆர்.எஸ்.எஸ்சில் சேர வரும் முஸ்லிம்களும் கூட வரலாற்று ரீதியான இந்தியப் பண்பாட்டை ஏற்க வேண்டும் என அவர்கள் கருதுகிறார்கள்” என ஆன்டர்சன் பதிலளிக்கிறார்.

ஆனால் ‘வரலாற்று ரீதியான இந்தியப் பண்பாடு’ என்பதில் இசை, கட்டிடக் கலை, கவிதை என முஸ்லிம்களின் பங்களிப்புகள் எவ்வளவோ உண்டுதானே என வார்ணே கேட்கும்போது, “ஆனால் தென்னிந்திய முஸ்லிம்களையும், இந்தோனேசிய முஸ்லிம்களையும்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நல்ல முஸ்லிம்களாகக் கருதுகிறார்கள்” என ஆன்டர்சன் பதிலளிக்கிறார். இந்தோனேசியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையக இருந்தபோதிலும் அவர்கள் நாட்டில் இராமாயணம் தேசியக் காவியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாம். தென்னிந்திய முஸ்லிம்கள் நல்லவர்கள் எனச் சொல்வதற்குக் காரணம் அவர்கள் உருது பேசாமல் தத்தம் தாய்மொழிகளைப் பேசுகிறார்களாம். ஆனால் உருது ஒன்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய மொழி அல்லவே, அது இந்திய மொழிதானே என வார்ணே கேட்கிறபோது, “ஆம்” என்பதோடு நிறுத்திக் கொள்கிறார் ஆன்டர்சன்.

சரி இருக்கட்டும். இந்திய முஸ்லிம்கள் எல்லோரையும் தியோரஸ் பெருந்தன்மையோடு இந்தியர்கள் என ஏற்றுக் கொண்டு அவர்களை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அமைப்புகளில் சேருங்கள் என்றார். ஆனால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி. மாநிலத்தில் 19 சதம் மக்கள் முஸ்லிம்களாக இருந்தும் அவர்களில் ஒருவரைக் கூட வேட்பாளர்களாக நிறுத்தவில்லையே எனக் கேட்கிறபோது, “அவர்களைக் கேட்டால் முஸ்லிம்களை நிறுத்தினால் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லை எனப் பதில் வருகிறது” எனச் சமாளிக்கும் ஆன்டர்சன், “என்ன இருந்தாலும் அவர்கள் கருத்தில் மாற்றம் ஏற்பட்டிக்கும் சூழலில் இன்னும் அதிக அளவில் முஸ்லிம் பிரச்சினைகளில் அவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்பது உண்மைதான்” என ஏற்றுக் கொள்கிறார்.

பசுவின் பெயராலும் பிற காரணங்கள் சொல்லியும் முஸ்லிம்கள் ஆங்காங்கு கொல்லப்படுவதை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க வினர் ஏற்றுக் கொள்வதில்லை என ஆன்டர்சன் தன் நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் அப்படி முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு சிறைக்குச் சென்றவர்கள் பிணையில் வெளியே வரும்போது மோடி அமைச்சரவையில் உள்ளவர்கள் அவர்களை மாலையிட்டு வரவேற்பதையும், மோடி அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் எப்படி விளக்குவது? இப்படியான கொலைகளுக்கு எதிராக, ரொம்ப நாட்களுக்குப் பிறகு, மோடி ஏதோ கடமைக்குப் பேசினார் என்பது உண்மையே. ஆனால் தலித்கள் அவ்வாறு கொல்லப்படும்போது அவர் உணர்ச்சிவயப்பட்டுப் பேசுகிற அளவு முஸ்லிம்கள் கொல்லப்படும்போது பேசுவதில்லையே என ஆன்டர்சனுக்கு வார்ணே கிடுக்கிப்பிடி போடும்போது,

“நான் அதை யோசித்ததில்லை. என் புத்தகத்திலும் அது குறித்து என் நூலில் எதுவும் எழுதவுமில்லை. நான் அதைப்பற்றி முறையாக யோசித்துச் சொல்கிறேன்” – என முடித்துக் கொள்கிறார் ஆன்டர்சன்.

இறுதிக் கேள்வியாக வார்ணே கேட்பது: “ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க முதலியன முன்னோக்கி நடைபோடுவதற்கு நீங்கள் எவற்றை முக்கிய சவால்களாக நினைக்கிறீர்கள்?”

ஆன்டர்சன்: “மூன்று சவால்களை அவர்கள் எதிர்கொண்டுள்ளார்கள் என நினைக்கிறேன். ‘இந்துத்துவாவவிற்கும்’ ‘இந்துயிசத்திற்குமான’ மோதல் ஒன்று. அடுத்து பசு முதலியவற்றின் பெயர்களால் நடத்தப்படும் கொலைகளை அவர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பது. இந்திய அரசியல் பொருளாதாரத்தில் உள்ள நகர்ப்புற – கிராமப்புறப் பிளவை அவர்கள் எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பது மூன்றாவது சவால். கிராமப் புறங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.’

_____________
பின் குறிப்பு
———————-
நேர்காணல் இத்துடன் முடிகிறது. ஆன்டர்சனுக்கும் ஆர்.எஸ்.எஸ்சுக்குமான உறவு என்பது ஒரு ஆய்வாளருக்கும் அவரது ஆய்வுப் பொருளுக்குமான நெருக்கத்தைக் காட்டிலும் அதிகமானது என்பது விளங்குகிறது. சுமார் ஐம்பதாண்டுகாலம் அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருடன் நெருக்கமாக இருந்துள்ளார். தொடக்க காலம் முதல் இன்றுவரை பாசிஸ்டுகள் மற்றும் சியோனிஸ்டுகளுடன் நேரடியான தொடர்பு கொண்டுள்ள இயக்கம் ஆர். எஸ். எஸ் என்பது ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதே போல Lynching என்பதெல்லாம் அந்த அமைப்பிற்குப் புதிய விடயங்கள் அல்ல. காந்தியைக் கொன்றவர்கள் அவர்கள். ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்ட மிகப் பெரிய மதக் கலவரங்களுக்குக் காரணமானவர்கள். கார்பொரேட்களுக்கும் அவர்களுக்கும் இன்று ஏற்பட்டுள்ள உறவு ஏதோ ஆன்டர்சன் முன்வைப்பதுபோல கால மாற்றத்தின் ஊடாக எற்பட்ட தவிர்க்க இயலாத ஒன்று அல்ல. கால மாற்றம் இதில் ஒரு பங்கு வகித்தாலும் கார்பொரேட் களுக்கும் பாசிசத்திற்குமான நெருக்கமான உறவு ட்தவிர்க்க இயலாதது என்கிற கண்ணோட்டத்திலிருந்தும் இது அணுகப்பட வேண்டும்.

முறையான ஆய்வு முறை இயலுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகவும் இவரது நூல் அமையவில்லை என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டி உள்ளதையும் இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறியுள்ளேன்..

ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிசத் தன்மையுடைய அமைப்பு என்பதைப் பல மேலை ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. அவற்றுக்கு மத்தியில் கல்வியாளர் ஒருவரின் ‘ஆய்வின் ஊடாக’ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சில பிரச்சினைகளும் குறைபாடுகளும் உடைய ஒரு தேசிய இயக்கம்தான் அது எனக் காட்டிக் கொள்ள இந்த நேர்காணல் அவர்களுக்கு உதவலாம்.

இந்த நேர்காணலைப் பொருத்த மட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சில உள் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளவும், தந்திரோபாய ரீதியாக இவ்வமைப்பு மேற்கொண்டுள்ள சில அணுகல்முறை மாற்றங்களை மேலோட்டமாகப் புரிந்து கொள்வதற்கும் இது நமக்கு உதவும். அவ்வளவே.

முற்றும்.