அரசியல்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . ! – 4

Hindu Nationalists Rss Eu Far Right

– அ.மார்க்ஸ்

பெண்கள், இட ஒதுக்கீடு, தீண்டாமை முதலியன குறித்த ஆர்.எஸ்.எஸ் அணுகல் முறைகள்

தான் ஏற்பு வழங்கியுள்ள இணை அமைப்புகளிடையே மாற்றுக் கருத்துக்கள் உருவாகும்போது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அதை எப்படிக் கையாள்கிறது? எடுத்துக்காட்டாக சுதேசி ஜாக்ரான் மஞ்ச் வெளிநாட்டு மூலதனம் கூடாது என்கிறது. பா.ஜ.க அரசு வெளிநாட்டு மூலதனத்திற்குச் சலுகை அளித்து வரவேற்கிறது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் என்ன செய்யும்?

இரண்டுக்கும் இடையே சமரசம் (balance) பண்ணுவதுதான் அதன் நிலை என்கிறார் ஆன்டர்சன். ஒரு இடைத்தரகாக இருந்து சமரசம் செய்ய முடியவில்லை என்றால் பிரச்சினையைத் தீர்க்காமல் ஒத்திப்போடுவதே அதன் அணுகல்முறையாக இருக்கிறது. வெளிநாட்டு மூலதன இறக்குமதியை சுதேசி உற்பத்திக்குக் கேடு என ஆர்.எஸ்.எஸ் கூறிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி என்றெல்லாம் அப்படியான இறக்குமதிக்குச் சமாதானம் சொன்னபோது அது அடக்கி வாசிக்க (tone down) ஆரம்பித்தது என்பதைச் சொல்லும் ஆன்டர்சன், வாஜ்பாயி காலத்தில் எதிர்த்த அளவு மோடியின் மூலதன இறக்குமதியை மோகன் பகவத் கண்டு கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

மோடியைப் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் முழுக் காரணமாக இருந்தது என்பதைக் குறிப்பிடும் ஆன்டர்சன், எனினும் இன்று அந்நிய மூலதனம், அந்நிய வணிகம் ஆகியவற்றிற்கு மோடி அரசு அளிக்கும் அபரிமிதமான ஊக்குவிப்பைச் சற்று அவநம்பிக்கையோடு (skeptical) பார்த்துக் கொண்டுள்ளது என்கிறார். ஆனாலும் பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி முதலியன தமது ஆதரவுத் தளமாக உள்ள சிறு வணிகர்களைப் பெரிதும் பாதித்தபோதும் கூட அது ஒன்றும் வெளிப்படையாகக் கண்டிக்கவோ தீர்மானம் இயற்றவில்லை என்பதையும் ஆன்டர்சன் சுட்டிக் காட்டுகிறார்.

ஆட்சி மொழி, இட ஒதுக்கீடு ஆகிய பிரச்சினைகளிலும் தன் இறுக்கமான நிலைபாடுகளை ஆர்.எஸ்.எஸ் வேறு வழியின்றி தளர்த்திக் கொள்கிறது.

எடுத்துக்காட்டாக இந்தி மொழி ஆதரவு என்பது அதன் ஆதாரமான கொள்கைகளில் ஒன்று. ஆனால் ஆர்.எஸ். எஸ் அமைப்பு இப்போது அதன் தொடக்க காலத்தில் இருந்ததுபோல மத்திய இந்தியாவில் மட்டுமே அது கால் பதித்திருக்கவில்லை. தெற்கிலும் கிழக்கிலும் அது இப்போது பரவியுள்ளது. எனவே அது இந்தியை முன்னைப் போல தீவிரமாக ஆதரிக்க முடியாது. ஆதரிப்பதும் இல்லை. தான் நடத்தும் பள்ளிகளில் இந்தி ஒரு பாடமாக இருந்த போதும் அவரவர் தாய்மொழியில்தான் அங்கு பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன.

மத்தியதர வர்க்கத்தின் ஆதரவு ஆர்.எஸ்.எஸ்சுக்கு அவசியம் தேவை.. அந்த வர்க்கத்தின் ஆங்கில மோகத்தையும் அது அறியும். அதோடு இன்றைய உலகமயச் சூழலில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக சமகால உலகில் அதிகாரம் பெறுவதற்கு எந்த நாட்டிற்கும் ஆங்கிலம் முக்கியத் தேவையாக உள்ளது. இந்தியா உலக அரசியலில் முக்கியத்துவம் பெற வேண்டும் என நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் எப்படி ஆங்கிலத்தைப் புறக்கணிக்கும் என வினவுகிறார் ஆன்டர்சன். எனவே இனி ஆர்.எஸ்.எஸ் தனது இந்தி ஆதரவையும் ஆங்கில வெறுப்பையும் அடக்கியே வாசிக்கும். எனினும் இதெல்லாம் ஒரு தந்திரோபாய நடவடிக்கைதானே ஒழிய அது தன் மொழிக் கொள்கையை அடிப்படையில் மாற்றியுள்ளது என்பதாக ஆன்டர்சனால் உறுதியாகச் சொல்லவும் முடியவில்லை.

பெண்ணுரிமை குறித்த ஆர்.எஸ்.எஸ்சின் அணுகல்முறையைப் பொருத்தமட்டில் கோல்வால்கர் தாய், மனைவி என்னும் இரு நிலைகளையே பெண்களுக்கான உன்னதப் பாத்திரங்களாக அவர் முன்வைத்தார். ஜான்சி ராணி போன்றோரை அந்நியர்களை எதிர்த்த வகையில் ஒரு வீரப் பெண்மணியாக உயர்த்தியபோதும் அப்படியான ஒரு வீரப் பெண்ணுருவை பெண்களுக்கான லட்சிய வடிவமாக அது முவைக்கவில்லை . குடும்ப வாழ்க்கையையே அவர்கள் உன்னதப்படுத்தியபோதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குள்ளும் கூட விவாகரத்தான சில பெண்கள் இருப்பதைத் தான் பார்த்துள்ளதாக ஆன்டர்சன் குறிப்பிடுகிறார்.

தலித்கள் மற்றும் முஸ்லிம்கள் குறித்த ஆர்.எஸ்.எஸ் அணுகல்முறைகள் பற்றிய விவாதம் இந்த உரையாடலின் இறுதிப் பகுதியாக அமைகிறது. முதலில் இட ஒதுக்கீடு மற்றும் தலித்கள் குறித்த ஆர்.எஸ்.எஸ் அணுகல் முறைகளாக ஆன்டர்சென் சொல்பவற்றைப் பார்ப்போம்.

இட ஒதுக்கீட்டைப் பொருத்தமட்டில் 2015ல் கூட பிஹார் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் ஒரு பக்கம் நடந்துகொண்டிருந்த போதே தற்போதைய சர்சங்சலக் மோகன் பகவத் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலன்னை செய்ய வேண்டும் எனக் கூறியதை மறந்துவிட முடியாது. இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற நிலைபாட்டை அது நீண்ட காலமாகவே கொண்டுள்ளது. எனினும் இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக எழுந்த அரசியல் எழுச்சியைக் கண்டவுடன் அது பின்வாங்கியது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மோகன் பகவத்தின் கூற்று பா.ஜ.கவைப் பாதித்துள்ளதையும் அது உணர்ந்தது. எனவே இப்போது இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அவர்கள் இப்போது பேசுவது இல்லை.

இந்து ஒற்றுமையைக் கட்டமைக்கும் முயற்சியில் தலித்களை இந்துக்களுடன் ஒருங்கிணைப்பதற்கு அவர்களை சமஸ்கிருதமயமாக்கி மேலுயர்த்துவது என்கிற நிலைபாட்டை கோல்வால்க்கர் கொண்டிருந்தார். ஆனால் தியோரஸ் ஆர்.எஸ்.எஸ் அணுகல்முறைகளில் மேற்கொண்ட மாற்றங்களில் கோல்வால்கரின் சமஸ்கிருதமயமாக்குதல் என்கிற இந்தக் கருத்தை கைவிட்டதும் ஒன்று. சாதிமுறையையே அவர் தாக்கிப் பேசத் தொடங்கினார். சமஸ்கிருதமயமாக்கல் என்கிற கருத்தை இப்போது ஆர்.எஸ்.எஸ் பேசுவதில்லை என்கிறார் ஆன்டர்சன்.

தலித்களும் பிற்படுத்தப்பட்டோரும் பிரச்சாரக்குகள் ஆகும்போது சர்சங்சலக்காகவும் ஒரு தலித் நியமிக்கப்படுவதற்கான நாள் தொலைவில் இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை அவர்கள் எதிர்த்தனர். அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்து இயற்றிய இந்துச் சட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ் கடுமையாக எதிர்த்தது. அம்பேத்கர் இந்து மதத்தைக் கைவிட்டு பௌத்த மதத்திற்குச் சென்றார். அவரைப் பற்றிய ஆர்.எஸ்.எஸ் சின் மதிப்பீடு என்ன எனக் கேட்கும்போது அப்போதெல்லாம் அவர்கள் அம்பேத்கரைப் பற்றி என்ன விமர்சனங்களை வைத்திருந்தாலும் இப்போது அவரை ஒரு ‘ஹீரோ’ வாக ஏற்கின்றனர் எனக் குறிப்பிடும் ஆன்டர்சன் அம்பேத்கரின் மதமாற்றத்தையும் இந்துமதத்தின் மீதான அவரது கடும் விமர்சனங்களையும் ஆர்.எஸ்.எஸ் எப்படிப் பார்க்கிறது என்கிற கேள்விக்கான நேரடியான பதிலைத் தவிர்க்கிறார்.

இனி ஆர்.எஸ்..எஸ் எதிர்கொள்ளும் பிரச்சினை “இந்துத்துவா” விற்கும் “இந்துயிசத்திற்கும்” உள்ள முரணை எப்படிக் களைவது என்பதுதான் என்கிறார் ஆன்டர்சன். அவர் கருத்துப்படி “இந்துத்துவா” என்பது இந்துக்களை சாதி, மொழி, தீண்டாமை முதலான வேறுபாடுகளில்லாமல் இந்து என்கிற ஒரே அடையாளத்தைக் கொண்டவர்களாக ஆக்கும் இலட்சியம். “இந்துயிசம்” என்பது சாதி, தீண்டாமை, மொழி முதலான வேறுபாடுகளுடன் கூடிய நடைமுறை இந்துமதம். ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான தாருண் விஜய் ஒருமுறை தலித்களை ஒரு இந்துக் கோவிலுக்குள் கூட்டிச் சென்றபோது அவரை அங்குள்ள இந்துக்கள் அடித்தனர் எனவும் அப்போது சங்கப் பரிவாரத்தினர் தாருண் விஜய்க்கு முழு ஆதரவு அளித்தார்கள் என்றும் சொல்கிறார். இந்துதுயிசத்தை எதிர்த்துக் கொண்டு இந்துத்துவாவை அவர்கள் கட்டமைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ் எதிர் கொண்டுள்ள சவால் என முடிக்கிறார்.

(அடுத்த கட்டுரையுடன் நிறைவடையும். அடுத்து முஸ்லிம்கள் குறித்த ஆர்.எஸ்.எஸ் அணுகல்முறை)

தொடரும்