– அ.மார்க்ஸ்
சாவர்க்கர் கூட இது இந்துக்களுக்கான நாடு மட்டுமல்ல, முஸ்லிம்கள் உட்பட இங்கு பிறந்த எல்லோருக்குமே இந்த நாடு உரியது என்கிற கருத்தை நோக்கி வந்தார் என ஆன்டர்சன் சொன்னதை வார்ணே உடனடியாக மறுக்கிறார்.
சாவர்க்கரைப் பொருத்தமட்டில் இந்துக்கள் /இந்தியர்கள் என்பன ஒரே பொருளைக் குறிக்கும் இரு சொற்கள். இந்தியாவில் பிறந்திருந்தாலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்தியர்கள் இல்லை. ஏனெனில் இந்தியர்களை வரையறுக்க அவர் அளிக்கும் மூன்று அத்தியாவசியமான பண்புகளில் இரண்டு மட்டுமே இந்தச் சிறுபான்மைச் சமூகத்தினர்களுக்குப் பொருந்தும். “பூமி” (அதாவது இந்திய மண்ணில் பிறப்பு), “பித்ரு பூமி” (தந்தையர் நாடு எனும் பாரம்பரியம்), “புண்ய பூமி” (அவர்களின் மதம் தோன்றிய மண்) என்பனதான் இந்த மூன்று நிபந்தனைகள்.
சிறுபான்மை மக்கள் இந்திய மண்ணில் பிறந்திருக்கலாம். அவர்களின் தந்தை, தாத்தா, பாட்டிகளும் கூட இங்கேயே பிறந்திருக்கலாம். ஆனால் அவர்களின் புண்ணிய பூமி இந்தியாவில் இல்லையே. முஸ்லிம்களுக்கு அது மெக்கா, கிறிஸ்தவர்களுக்கு அது ஜெருசலேம் அல்லது ஏதோ ஒரு மேற்கு நாடு. எனவே முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மூன்றாவது நிபந்தனையைப் பூர்த்தி செய்யாததால் அவர்கள் இந்தியர்கள் அல்ல. ஆனால் சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள் ஆகியோர் இந்துக்களாக இல்லாவிட்டாலும் அவர்கள் இந்தியர்கள் என்பதுதான் சாவர்க்கரின் கோட்பாடு. ஏனெனில் குருநானக், மகாவீரர், புத்த பகவன் ஆகியோர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். நீங்கள் பிறந்திருந்தால் மட்டும் போதாது. உங்கள் மதமும் இங்கு பிறந்ததாக இருக்க வேண்டும். ஃப்ரான்ஸ் அல்லது அமெரிக்கா போல புவி சார்ந்த அடிப்படை (territorial idea) இருந்தால் மட்டுமே இந்தியாவில் பிறந்த முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இந்தியர்களாக ஏற்க முடியும். சாவர்க்கரின் இந்த மத அடிப்படையிலான தேசியத்தை நிராகரித்து புவியியல் அடிப்படையிலான தேசியத்தை (territorial nationalism) முன் வைத்துத் திரிந்ததால்தானே காந்தியைச் சுட்டுக் கொல்ல சாவர்க்கர் கோட்சே கையில் கைத்துப்பாக்கியைக் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பினார். அப்படி இருக்கையில் இந்தியாவில் பிறந்த முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் இந்தியர்களாகவே முன்வைத்த தியோரஸ் எப்படி அதை விளக்கினார்?
ஆன்டர்சனின் பதில் சுற்றி வளைத்துக் குழப்பி அமைகிறது. சாவர்க்கர் ஒரு நாத்திகர். அவர் மத நம்பிக்கை உடையவர் அல்ல எனத் தன் பதிலைத் தொடங்குகிறார் அவர். தேசத்தின் நிபந்தனையாக பண்பாட்டு அடையாளங்களை சாவர்க்கர் முன் வைத்தார். ஒவ்வொரு தேசத்திற்கெனவும் சில குறியீடுகள், பாரம்பரியங்கள், மரபுகள், வரலாறுகள், கதைகள், புனைவுகள் உண்டு அவற்றோடு அவர்கள் ஐக்கியமாவார்கள், அவற்றோடு அவர்கள் அடையாளப்படுத்திக் கொள்வார்கள். எப்படியோ ஆர்.எஸ்.எஸ் இயக்கம் புவிசார்ந்த தேசியத்தை நோக்கியதுதான். எனினும் பண்பாட்டு வரையறை முற்றாகக் கைவிடப்பட்டது என்பதல்ல. இறுதியாக இப்படி முடிக்கிறார் ஆன்டர்சன்: “எனினும் தியோரசைப் பொருத்த மட்டில் இந்தியாவில் பிறந்த எல்லோரும், அல்லது கிட்டத்தட்ட எல்லோரும் இந்துக்கள்தான். அவர்தான் முதன் முதலில் இந்தியாவில் பிறந்த எல்லோரையும் ‘இந்து’ என சங்கப் பாரம்பரியத்தில் முதன் முதல் அழைத்தவர் தியோரஸ்தான். இப்போதைய சர்சங்சலக் மோகன் பகவத்தும் கூட முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எல்லோரையும் இந்துக்கள் என்றுதானே சொல்கிறார்”
இது குறித்துப் பின்னர் விவாதிப்போம். இப்போது ஆன்டர்சனைத் தொடர்வோம். தியோரஸ் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் புகுத்திய வரவேற்கத்தக்க மாற்றங்களைத் தொடர்ந்து பட்டியலிடுகிறார் ஆன்டர்சன். கோல்வால்கர் எந்தச் சந்தர்ப்பத்திலும் சாதிமுறைக்கு எதிராகப் பேசியதே இல்லை. ஆனால் தியோரஸ் சாதிமுறையையும் தீண்டாமையையும் எதிர்த்தார் எனவும் மூன்றாண்டு பயிற்சிக்குப் பின் சங்க உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் பார்ப்பனர் அல்லாதோரும் கூட சங்கத்தின் உயர் நிலையாகிய பிரச்சாரக் பொறுப்புக்கு வர முடியும் என முதலில் அவர்தான் சொன்னார் எனவும் குறிப்பிடுகிறார். ஆன்டர்சன்.
உரையாடல் இப்போது இனொரு திசைக்குத் திரும்புகிறது. “ஆளுமை உருவாக்கம்” (charitra nirmaan – character building) என்பதை நோக்கமாக அறிவித்துத் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அரசதிகாரத்தை நோக்கித் திரும்பிய பரிணாம மாற்றம் குறித்துக் கேட்கிறார் வார்ணே.
ஷாகாக்களில் தினசரிப் பயிற்சி அளிப்பதன் ஊடாக உறுப்பினர்களின் ஆளுமை உருவாக்கம் என்கிற நோக்கத்துடன்தான் இயக்கம் தொடங்கப்பட்டது. ஆளுமை உருவாக்கமே சமூக மாற்றத்துக்கு இட்டுச் செல்லும் என நம்பப்பட்டது. என்றாலும் காலப்போக்கில் அமைப்பில் ஏற்பட்ட அளவு மாற்றம் ஒரு பண்பு மாற்றத்திற்கு வித்திட்டது. தொழிற்சங்கம், விவசாயிகளின் அமைப்பு, பெண்கள் அமைப்பு, ஸ்வதேசி ஜார்கன் மஞ்ச், ஏராளமான கல்வி நிலையங்கள் என வளர்ந்தபோது அரசதிகாரத்தில் தலையிடுவது என நோக்கம் மாறியது. விசுவ இந்து பரிஷத் போன்ற முற்றிலும் மதப் பிரச்சினைகளுக்காக உருவாக்கப்பட்ட இயக்கங்களும்கூட அரசை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏனெனில் இந்திய அமைப்பில் அரசும் மதங்களும் பிரிக்கப்பட்டு எல்லாமே அரசை மையமாகக் கொண்டுதானே இயங்குகின்றன. எல்லா அம்சங்களிலும் அரசின் இருப்பை உணர வேண்டியுள்ளபோது தேவைப்படும் மாற்றத்தை உருவாக்க அரசின் மீது செல்வாக்குச் செலுத்துவது இன்றியமையாததல்லவா? எல்லாப் பிரச்சினைகளுக்காகவும் தனித்தனி அமைப்புகள் என உருவான போது ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்குரிய நிலைபாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. சுதேசி ஜாக்ரான் மஞ்ச் என சுதேசித் தொழில் உற்பத்தை குறித்தும் பேச வேண்டி உள்ளது, மஸ்தூர் சங்கின் மூலம் தொழிலாளர் கோரிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டி இருக்கிறதல்லவா?
பாரதீய மஸ்தூர் சங் வெளிநாட்டு நேரடி மூலதனத்தை (FDI) எதிர்க்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்சின் இன்னொரு இணையேற்பு அமைப்பாகிய பா.ஜ.க 1990 க்குப் பின் FDI வேண்டும் என்கிறது. மோடி ஆட்சியில் அது ஒரு உச்சகட்டத்தையும் எட்டியுள்ளது. பெருந் தொழில்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துதல் முதலியவற்றிலும் நிலைபாடுகள் எடுக்க வேண்டி உள்ளது. பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இந்தியாவின் விதியை மாற்றும் பெருங்குறிக்கோளைக் கொண்ட அமைப்பான ஆர்.எஸ்.எஸ் எல்லவற்றைக் குறித்தும் அணுகுமுறைகளை வகுத்துக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது. ஆளுமை உருவாக்கம் முக்கியமானதுதான். ஆனால் எல்லாவற்றிலும் கொள்கைத் தலையீடு செய்தல், அரசைக் கையாளுதல் என்பனவும் இன்று முக்கியமாகிவிட்டனவே.
(வெளிநாட்டு முதலீடு, நிலம் கையக்ப்படுத்துதல், தீண்டாமை, இட ஒதுக்கீடு, பெண் விடுதலை முதலான பிரச்சினைகளில் இணை அமைப்புகளிடையே கருத்து மாறுபாடுகள் தோன்றும்போது ஆர்.எஸ்.எஸ் அதை எப்படிக் கையாள்கிறது என்கிற சுவாரஸ்யமான கேள்விக்கான பதிலை அடுத்த கட்டுரைத் தொடரில் காண்போம்).
தொடரும்