அரசியல்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . ! – 2

Hindu Nationalists Rss Eu Far Right

– அ.மார்க்ஸ்.

ஆர்.எஸ்.எஸ் சின் அமைப்பு வடிவம்

‘ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்’கின் (RSS) இணைப்பு அமைப்பாக (affiliated organization) முதன் முதலில் தொடங்கப்பட்டது மகளிருக்கான ‘ராஷ்ட்ரீய சேவிகா சங்’ தான். இது 1930 களில் தொடங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் 1925ல் தொடங்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். காந்தி கொலைக்குப் பின் ஒரே சமயத்தில் காங்கிரசிலும் ஆர்.எஸ்.எஸ் சிலும் உறுப்பினராக இருக்க இயலாது என்கிற நிலையைக் காங்கிரஸ் எடுத்தபோது, 1950 களின் தொடக்கத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் கட்சியாக ‘பாரதீய ஜனசங் கட்சி’ தொடங்கப்பட்டது. முதலில் சியாமா சரண் முகர்ஜியும், பின் தீனதயாள் உபாத்யாவும் அதற்குத் தலைவர்களாக இருந்தனர்.

1950 களின் இறுதியிலும் 1960 களின் தொடக்கத்திலும் முதலில் தொழிலாளர்களுக்கான ‘பாரதீய மஸ்தூர் சங்’ கும் (BMS) பின் மாணவர்களுக்கான ‘அகில இந்திய வித்யார்த்தி பரிஷத்’தும் (ABVP) தொடங்கப்பட்டன. மஸ்தூர் சங்கிற்கு தாதோபந்த் தெங்காடி தலைவராக இருந்தார். 1970 களில்தான் ஆய்வைத் தொடங்கியபோது டெல்லி பல்கலைக் கழகத்தில் ABVP வலுவாக இருந்தது என்கிறார் ஆன்டர்சன்.

இவ்வாறு இணையேற்பு (affiliation) வழங்கப்பட்ட அமைப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘பிரசாரக்’ பொறுப்பாக இருப்பார். ‘பிரச்சாரக்’ என்பது சர்சங் சலக்கிற்கு அடுத்த நிலையில் உள்ள உயர் பதவி. இவர்கள் சங்கின் முழுநேர ஊழியர்கள். தற்போது 6000 பிரசாரக்குகள் உள்ளனர். முழு நேர ஊழியர்களான இவர்கள் தம் குடும்பத்துடனான உறவுகளை முறித்துக் கொள்ள வேண்டும். சொந்தமாகப் பொருள் சேர்க்கக் கூடாது. அவர்கள் சங்கத்துக்குத் தம்மை ஒப்புக் கொடுத்தவர்கள் (‘in a sense they are wedded to Sangh’). அவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிற இறுக்கமான விதி இல்லாத போதும் பெரும்பாலோர் திருமணம் செய்து கொள்வதில்லை.

இந்தப் பிரசாரக்களே சங்கத்தின் ஆதாரமான பணிகளைச் செய்பவர்கள். இணையேற்பு வழங்கப்பட்ட அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு பிரசாரக் தலைமையில் இயங்கும். ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட இறுக்கமான குடும்பமாக ஆர்.எஸ்.எஸ் அமைந்திருப்பதற்கு இதெல்லாம் ஒரு காரணம் என்கிறார் ஆன்டர்சன். தொடக்கத்தில் பிரச்சாரக்காக வரக் கூடியவர்கள் பிராமணர்களாகவே இருக்க வேண்டும் என்கிற விதி இருந்தது. மதுக்கர் தாத்தரேய தியோரஸ் சர்சங் சலக்காக வந்த பின் அந்த விதி தளர்த்தப்பட்டது. இப்போது பிற்படுத்தப்பட்டவர்களும் பிரச்சாரக்காக ஆகலாம். பிறபடுத்தப்பட்டவரான மோடி கூட அப்படி ஒரு பிரச்சாரக்காக இருந்தவர்தான்.

தற்போது ‘ஸ்திரீ’கள் அதிகாரம் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘ஸ்ரீ சக்தி’ அமைப்பு உட்பட அங்கீகரிக்கப்பட்ட (formal) இணை அமைப்புகளின் எண்ணிக்கை இப்போது மொத்தம் 36. எனினும் அங்கீகாரம் பெறுவதற்காக இப்போது மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் காத்திருக்கின்றன. அவை மிகவும் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு, போதிய முதிர்ச்சி (maturity) அடைந்துவிட்டதாக உரிய ஆய்வுகளின் அடிப்படையில் தெரிந்தால் அதன்பின் அவற்றிற்கு இணையேற்பு வழங்கப்படும்.

பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் நேரடியாக இணையேற்பு அளிக்கப்பட்டவை அல்ல. அது விசுவ இந்து பரிஷத்தின் இணையமைப்பு. விசுவ இந்து பரிஷத் ஆர்.எஸ்.எஸ்சின் இணை அமைப்பு. ஆக ஆர்.எஸ்.எஸ், அதனால் இணையேற்பு வழங்கப்பட்ட அமைப்புகள், அவை ஒவ்வொன்றுக்கும் உள்ள இணை (affiliated) அமைப்புகள், இவை எல்லாம் தவிர ஆங்காங்கு இவர்களின் கொள்கைகளை ஏற்று நடவடிக்கைகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள்…. இதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் குடும்பம் என நாம் விளங்கிக் கொள்கிறோம். கடும் கண்டனத்துக்குள்ளாகும் வன்முறைகள் இந்த அமைப்புகளின் ஊடாகச் மேற்கொள்ளப்படும்போது அவை எங்கள் அமைப்பு இல்லை எனச் சொல்லிப் புன்னகைப்பதற்கு இப்படியான வடிவம் வாய்ப்பளிப்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்..

ஆர்.எஸ்.எஸ் – ல் சர்சங்சலக் உட்பட யாரும் வாக்களித்து ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்படுவதில்லை என்பது அறியத்தக்கது. அப்போது சர்சங்சலக்காக இருப்பவர் தன் இறுதிக் காலத்தில் அடுத்தவரைத் தேர்வு செய்து அறிவிப்பார். அதை அனைவரும் ஏற்க வேண்டும். எடுத்துக்காட்டாக முதல் சர்சங்சலக்காக இருந்தவர் ஹெட்கேவர். அவர் இறக்கும் தருவாயில் கோல்வால்கரின் பெயரை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்து விட்டு இறந்தார். கோல்வால்க்கரைக் காட்டிலும் மூத்தவர்கள் இருந்தபோதும் எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டனர். கோல்வால்கர் பெரிய அளவில் சங்கத்தை வளர்த்து அதன் இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றார். அவர்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலேயே அதிக காலம், 30 ஆண்டுகளுக்கும் மேல் சர்சங் சலக்காக இருந்தார்.

அவர் எழுதிய நூல்கள் இரண்டு எனச் சொல்வார்கள். ஒன்று அவரது “சிந்தனைக் கொத்து”- Bunch of Thoughts. அது ஒரு நூலாகத் திட்டமிட்டு எழுதப்பட்டதல்ல. கோல்வால்கர் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்புத்தான் அது. இன்னொன்று We or Our Nationhood Defined. இந்த நூல் அவரால் எழுதப்பட்டதல்ல என்பதை ஆன்டர்சன் முன்வைக்கிறார். இதுவரை அது அவரால் எழுதப்பட்டதாகவே அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அது அவரால் எழுதப்பட்டதல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கூட அவர்களின் அணிகளுக்குத் தெரியாது எனவும், ஆனாலும் தன்னைப்போன்ற ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட ஒன்று எனவும் கூறும் ஆன்டர்சன் கோல்வால்கரின் பெயரில் உலவும் இந்த நூல் “சிறுபான்மை மக்களைக் கடுமையாகப் பார்க்கக் கூடிய ஒன்று” என ஏற்றுக் கொள்கிறார்.

இதுவரை சர்சங்சலக்குகளாக நியமிக்கப்பட்ட அனைவரும், ஒருவரைத் தவிர பார்ப்பனர்களே. விதிவிலக்காக நியமிக்கப்பட்டவர் ராஜேந்திரசிங்.

கோல்வால்கருடனா உரையாடலின் ஊடாகவே தாம் ‘இந்துத்துவா’ என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டதாக ஆன்டர்சன் குறிப்பிடுகிறார். கோல்வால்கர் ஒரு ஆன்மீகவாதி (spiritual), மதவாதி (religious) அல்ல என்கிறார் ஆன்டர்சன். எந்த மதச் சடங்குகளையும் அவர் மேற்கொண்டது இல்லை. சாவர்க்கரும் அப்படித்தான் என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். அவரை நாத்திகர் என்று கூடச் சொல்வதுண்டு.

கோல்வால்கரைப் பொருத்தவரையில் ஒரு தேசம் என்கிற வடிவில் இந்தியாவே வாழும் தெய்வம். தனது சிந்தனைக் கொத்திலும் இதே சொற்களில் இதை அவர் பதிவு செய்துள்ளார். இக்கருத்து 19ம் நூற்றாண்டு ஐரோப்பிய கற்பனாவாத தேசியவாதிகளின் சிந்தனையிலிருந்து பெறப்பட்ட ஒன்று. 1900 த்தின் தொடக்கத்தில் இப்படியாகத் தேசத்தையே கடவுளாகப் பார்க்கும் ஐரோப்பிய சிந்தனையில் இந்திய தேசியவாதிகளும் பெரிய அளவில் ஈர்க்கப்பட்டிருந்தனர். மாஜினி போன்றோரைக் கொண்டாடி நமது பாரதி போன்றவர்கள் ‘மாஜினியின் வீர உரை’ பாடியதை நாம் மறந்துவிட முடியாது. கரிபால்டி பற்றியும் அப்படி இங்கு உரையாடல்கள் இருந்ததை அறிவோம். இந்த ஐரோப்பிய தேசியவாதிகளைப் பொருத்தமட்டில் தமது ஆக உன்னத வழிபாட்டுக்குரிய அடிப்படை அலகு தேசம்தான். மதங்கள் சொல்லும் கடவுளுக்கு அந்த இடம் இல்லை. பாரதி பாடிய ‘பாரததேவி மகா பஞ்சகம்’, சுப்பிரமணிய சிவா ‘பாரதமாதா கோவில்’ கட்ட மேற்கொண்ட முயற்சிகள் முதலியன இத்துடன் இணைத்துப் பார்க்கத் தக்கன.

இந்த இடத்தில் ஆன்டர்சன் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஒரு மத அமைப்பு அல்ல (not a religious organization) என்கிறார். அதனால்தான் கோல்வால்கருக்கு அடுத்து சர்சங்சலக்காக வந்த தியோரஸ் 1979-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை முஸ்லிம்களுக்கும் திறந்துவிட்டார் என்கிறார். தியோரசின் பார்வையில் இங்குள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான். எனவே அவர்கள் அந்நிய நாட்டினர் (foreigners) அல்ல. இப்படி தியோரசின் பார்வை மதம் சார்ந்த அடையாளத்திலிருந்து புவியியல் அடிப்படையிலான தேசியத்தை நோக்கி (territorial idea) நகர்ந்தது என்கிறார் ஆன்டர்சன். ஒரு சிறிய அளவில் சாவர்க்கரும்கூட அந்த நிலையை நோக்கி நகர்ந்ததாகவும் ஆன்டர்சன் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் அஷுடோஷ் வார்ணே இடையீடு செய்து ஆன்டர்சனின் கருத்தை மறுக்கிறார்.

தொடரும்