அரசியல்

நக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…

Nakkheeran Gopal C

– தேன்சிட்டு

சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிய செய்தி ஒன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரச் செய்தது. அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியின் பேராசிரியை ஒருவர், தனக்குக்கீழ் படித்து வரும் மாணவிகளை, பல்கலைக்கழக பெருந்தலைகளின் அந்தரங்க லீலைகளுக்கு அடிபணியுமாறு மூளைச்சலவை செய்ததுதான் அது.

இதுதொடர்பாக வெளியான ஆடியோ ஒன்றுதான் ஒட்டுமொத்த பரபரப்புக்கும் காரணம். அதில், “சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்துபோனால் யுனிவெர்சிட்டி ரேங்க் வரைக்கும் வாங்கிடலாம். வாழ்க்கையில செட்டில் ஆகிடலாம். கவர்னர் மாளிகை வரைக்கும் நமக்கு லின்க் இருக்கு. கவர்னர் – தாத்தா இல்லை” போன்ற சிலவற்றைக் கூறி பேராசிரியை நிர்மலா தேவி நான்கு மாணவிகளை தன்பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்.

வாட்ஸ்அப் மூலம் பரவவிடப்பட்ட இந்த ஆடியோ சில செய்தி ஊடகங்களின் வாயிலாக பிரேக்கிங் நியூஸ் ஆனது. ஆனால், இந்த செய்தி வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பே ஆடியோ குறித்த ஆதாரத்தை கட்டுரையாக வெளியிட்டிருந்தது நக்கீரன் இதழ்.

பிரேக்கிங் நியூஸ்கள் மறந்து விட்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் முழுமையான ஆதாரங்களின் மீதான தேடலிலும் அந்த இதழ் ஈடுபட்டு வந்திருக்கிறது. தொடர்ச்சியாக வெளிவந்த அப்டேட்களில் கவர்னர் இந்தக் குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டிருப்பது பற்றி விளக்கமாகக் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நான்கு முறை கவர்னரைச் சந்தித்தேன்.. வாக்குமூலம் தந்த நிர்மலாதேவிக்கு ஆபத்து’ என்கிற செய்தியை வெளியிட்டது நக்கீரன் இதழ்.

இந்த செய்தியைக் குறிப்பிட்டுதான் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபாலை சென்னை விமானநிலையத்தில் வைத்து கைது செய்தது தனிப்படை போலீஸ். முதலில் விசாரணை என்று அழைத்துச் சென்றவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதுதான், சட்டப்பிரிவு 124ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

குடியரசுத் தலைவரையோ, ஆளுநரையோ பணி செய்யவிடாமல் தடுத்தாலோ அச்சுறுத்தினாலோ அரசியலமைப்புச் சட்டம் 124ன் படி தண்டனை விதிக்கலாம். ஏழாண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். முக்கியமாக ஜாமீனில் வெளிவர முடியாது. ஆனால், இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய எந்தவிதமான முகாந்திரமும் இல்லாத நிலையில், வழக்கையே ரத்துசெய்து தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி கோபிநாத்.

சட்டத்தின் பேராலான இந்த உயர்பதவியில் இருப்பவரை அடித்தாலோ, மிரட்டினாலோ இந்த சட்டத்தைப் பிரயோகிக்கலாம். குறிப்பாக, இருவருக்கும் இடையில் பார்வைத் தொடர்பு இருந்திருக்க வேண்டும். அதேபோல், மக்கள் பணி செய்து கொண்டிருந்தபோது அதைத் தடுக்கும் விதமாக செயல்பட்டால் வழக்குப் பதியலாம். இந்த இரண்டுமே நடக்கவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் எந்தப் பணி தடைப்பட்டது? இல்லையென்றால், ஆளுநர் பணியே செய்யவில்லையா?  ஆளுநர் அந்தக் கட்டுரையை வாசித்தாரா? அப்படி குற்றம் செய்யாதவராக இருந்தால் அவதூறு வழக்குப் பதியலாமே? அதைச் செய்யாவிடில் அவர் குற்றம் செய்திருக்கிறாரா? என்றவாறு நீதிமன்றத்தில் வாதங்கள் நீண்டிருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக,

“முப்படைகளின் தலைவரான குடியரசுத்தலைவரும், ஆயுதம் தாங்கிய போலீஸாரின் பாதுகாப்பில் வலம்வரும் கவர்னரும் செய்யும் பணியை சாமான்யர் ஒருவரால் தடுத்துவிட முடியுமா?

என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு ரத்தாகி விடுதலையான நக்கீரன் ஆசிரியர் கோபால், “கருத்துரிமையின் பக்கம் நீதித்துறை நின்றதால் எங்களுக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிட்டது அத்தனை எளிதில் கடந்துவிட முடியாதது.

மேலும், வழக்கு விசாரணையின்போது அங்கு சென்றிருந்த இந்து முன்னாள் ஆசிரியர் என்.ராம் அவர்களின் வாதம் முக்கியத்துவம் வாய்ந்தது.

“நக்கீரன் இதழில் வெளியான சர்ச்சைக்குரியதாக கூறப்படும் கட்டுரைக்கும், தேசதுரோக வழக்குக்கான அரசியல் சட்டப்பிரிவு 124க்கும் சம்பந்தமே இல்லை. இந்தியாவிலேயே இந்தப் பிரிவில் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை; இதில் எந்த முகாந்திரமும் இல்லை”.

இந்த வழக்கில் நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்ய கோர்ட் உத்தரவிட்டால் அது நாட்டுக்கே தவறான முன்னுதாரணமாகிவிடும். அதற்கு சென்னை கோர்ட் காரணமாகி விடக்கூடாது. பத்திரிகையில் வரும் கட்டுரைகளுக்கு 19 (1) ஏ சட்டப்பிரிவு பாதுகாப்பு தருகிறது. மேலும், பத்திரிகையில் வரும் படங்களுக்காகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. ஆளுநர் பதவியை தேவையின்றி இதில் இழுத்துள்ளனர். ஆக, இந்தப் பிரிவு பதியப்பட்டிருப்பது கூடாது”.

என அழுத்தமாக தெரிவித்திருந்தார்.

இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் செயல்பாடுகள் அதிக கவனம் பெற்றன. ஒரு வழக்கறிஞராக தன்னை அனுமதிக்க வேண்டும் என்று தர்ணாவில் இறங்கியதால் அவரும் கைது செய்யப்பட்டார். அதேபோல், திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது, ஜனநாயகம் மற்றும் கருத்துரிமையைக் காக்க காத்திரமாக தோள்கொடுக்க நாங்கள் இருக்கிறோம் என்பதையே உணர்த்துகிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜனநாயகம் மற்றும் கருத்துரிமையின் குரல்வளையை நெறிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தும் பாசிசத் தனத்தைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. மாநில அரசும் முகமூடி அணிந்து கொண்டு பினாமித்தனமான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, பத்திரிகைத் துறையினரே அதிகப்படியான இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சி விவாதமோ, பொதுமேடைப் பேச்சோ, கட்டுரைகளோ, எழுத்து சார்ந்த உரையாடலோ எதுவாகினும் மத்திய ஆட்சியாளர்களுக்கு ஒவ்வாத எதையும் ஒடுக்குவதிலேயே கவனமாக இருக்கின்றனர். நேரடியாகவே மிரட்டல்கள் விடப்படுகின்றன. பத்திரிகைத்துறையில் வேலை செய்யும் பெண்கள் குறித்து அவதூறுகள் பரப்பப்படுகின்றன. ஆளுநரே செய்தி சேகரிக்கும் பெண் நிருபரின் கன்னத்தைச் செல்லமாக தட்டுகிறார். கேள்வி கேட்கும் நிருபர்கள் ஆண்டி இந்தியன்கள் ஆக்கப்படுகின்றனர். உச்சகட்டமாக நக்கீரன் கோபாலின் மீதான கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதன் தீவிரம் உணர்ந்த பத்திரிகை நண்பர்களும் முக்கியத்துவம் தந்து முதன்மை செய்தியாக்கியது கரங்கள் ஒன்றிணைந்திருக்க வேண்டியதன் அவசியம் உணர்ந்ததன் வெளிப்பாடே.