அரசியல்

இந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல்

Secularism India

– சுசீந்திரா

உலகின் பல கூட்டாட்சி நாடுகளில் எல்லாம் நிதி வளங்களைத் திரட்டுதல் மற்றும் பகிர்ந்தளித்தல் பல முறைகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்திய நாட்டில் அது ‘நிதி ஆணையத்தின்’ மூலமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கலந்தாலோசிக்கப்பட்டு செயல் படுத்தப்படுகிறது. அதன்படி அண்மையில் கூடிய 15-ஆவது நிதி ஆணையத்தின் ‘குறிப்பு விதிமுறைகள்’ (கூநுசுஆளு டீகு சுநுகுநுசுநுசூஊநு) நமது மாநில அரசுகளுக்கிடையே நியாயமான மற்றும் சமமான முறையில் நாட்டு வளங்களை பகிர்ந்து அளிப்பதற்கு பதிலாக அதன் மீது ஒரு தாக்குதலை நடத்தவல்லதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டிருக்கும் மாநிலங்களுக்கிடையே பகிரப்படும் நிதி ஆதாரங்களைப் பற்றிய கூறுகளே பெரும் முக்கியத்துவம் வாய்ந்த பேசு பொருளாகிறது. அந்த விதிமுறைகள் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி அளித்துள்ள மாநில சுயாட்சியின் மீதும் நிதி உரிமைகளின் மீதும் தாக்குதல் நடத்தக் கூடியது.

ஒற்றுமைக்கு முக்கியம் கூட்டாட்சியே

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்றாவது பிரிவிலேயே சொல்லப்பட்டுள்ள ‘இந்தியாவின் ஒற்றுமை மற்றும் கூட்டாட்சி’ என்பதும் அட்டவணை 7-ல் குறிப்பிடப்பட்டுள்ளது போல, ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்ய வேண்டிய மனிதவள மேம்பாடு, வருமான வளர்ச்சி, வாழ்வாதாரங்கள், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்றும் வளங்கள் நீடித்திருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது மத்திய/ மாநில அரசுகளின் கடமையாகும். ஆனால், நமது மத்திய அரசாங்கத்தின் தற்போதைய நிதிக் கொள்கையானது, மாநில அரசுகள் இந்த வளங்களை உருவாக்கிக்கொள்ளும் அல்லது பெருக்கிக்கொள்ளும் வகையிலோ இல்லை. அவ்வகையில் இந்திய கூட்டாட்சியில் ஒரு சமச்சீரற்ற போக்கு நிலவுகிறது.
நாட்டின் வளங்களை அதிக அளவில் உருவாக்கிக் கொள்ளும் திறனுடையதாகச் சொல்லப்படும் மத்திய அரசு, அதற்கான வளர்ச்சி செலவினங்களுக்கான வருவாய் திறன்களை மட்டும் உருவாக்கிக்கொள்ள இயலவில்லை என்பது நடைமுறை முரண். மேலும், இது போன்ற சிக்கல்களைக் களையவே மாநில அரசின் கூட்டாட்சியுடன் சேர்ந்து செயல்பட ஒரு இணைப்பு பாலமாக உருவாக்கப்பட்ட அமைப்பே ‘நிதி ஆணையம்’. ஆகையால், நிதி ஆணையத்தின் முக்கிய வேலையே நிபந்தனையற்ற வகையில் வளங்களை மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிப்பதே.

ஏற்கனவே, பணமதிப்பு இழப்பு நடவடிக்கையாலும் ஜி.எஸ்.டி வரி விதிப்பினாலும் மாநில அரசுகள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், தற்போதைய நிதிக் கொள்கையானது மாநில அரசுகள் தங்களது வளங்களை பெருக்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும். ஆனால், 15 – ஆவது நிதி ஆணையம் அதனை கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை.

13 ஆவது நிதி ஆணையத்தில் மாநில அரசானது 32 சதவீத வரிப் பங்கினை மத்திய அரசுக்கு செலுத்தியது. 14- ஆவது நிதி ஆணையத்தில் மாநில அரசானது 42 சதவீத வரிப் பங்கினை மத்திய அரசுக்குச் செலுத்திட கோரப்பட்டது. இதில் திட்ட வருவாய் செலவினம், அதாவது மாநில அரசின் திட்டங்களுக்கான திட்ட நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது. அது போக மொத்த வருவாய் செலவினத்திற்காக மட்டுமே இந்த 42 சதவீதம் செலுத்த வேண்டிய தேவையை அது உருவாக்கியது. இது மட்டுமல்லாமல் 50 சதவீதம் ஜி.எஸ்.டி வரிப் பங்கினையும் மாநில அரசு மத்திய அரசுக்குச் செலுத்திட வேண்டியுள்ளது. எனில், மாநில அரசு எந்த நிதியைக் கொண்டு மாநில திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலும்? என்பதும் அதற்கான நிதி ஆதாரம் போதுமானதாக இல்லாத போது எந்தவொரு நலத் திட்டமும் மக்களுக்கு பயன் அளிக்கமால் வெறும் காதிதத்தோடு நின்றுவிடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மக்கள்தொகை வேறுபாடுகளும் நிதிப் பகிர்வும்

தேசிய மக்கள் தொகை கொள்கை என்னும் பெயரில்; 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து இன்னும் நிதி வரையறைகளை தீர்மானம் செய்வது என்பது அடிப்படையில் தென் மாநிலங்களை மட்டுமல்லாது வட மாநிலங்களையும் மிகவும் பாதிக்கும். ஏனெனில் நமது நாட்டின் மக்கள் தொகை என்பது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. நிதி ஆணையத்தின் குறிப்பாணை என்ன சொல்கிறதென்றால், மாநிலங்களுக்கிடையே பகிரப்படும் நிதி ஆதாரமானது ஒரு கிடைமட்ட பகிர்வை (அதாவது மத்திய, மாநில அரசுக்கு இடையிலும் சரி, மாநிலங்களுக்கிடையேயும் சரி, சரிசமமான நிதிப் பகிர்வு) ஏற்கவும் மறுக்கவும் ஒப்புதல் அளிக்கிறது. அதுவே ஒரு சிறந்த அளவுகோல் ஆகும். ஆனால், இந்திய ஒன்றியமோ இதுவரையில் ஒரு செங்குத்து பகிர்வைத் தான் மாநிலங்களிடையே செய்து வருகிறது. அதாவது மத்தியில் என்ன நிர்மானிக்கப் படுகிறதோ அது தான் மாநிலங்களைச் சென்றடையும். இதனால் மாநிலங்கள் எப்போதும் மத்திய அரசை சார்ந்து தான் இயங்க வேண்டிய கட்டாய சூழலை மத்திய அரசு திணிக்கும்.

மேலும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் சார்ந்த எந்தவொரு திட்டத்திற்கும் அடிப்படை மக்கள்தொகை என்னும் போது அது மாநிலத்திற்கு மாநிலம் மாறும் என்னும் போது எல்லா மாநிலங்களுக்கும் ஒரே அளவுகோலை எப்படி நிர்ணியிக்க முடியும்? நாட்டு மக்களின் உழைக்கும் திறனும் மூத்த குடிமகன்களுக்கான பாதுகாப்பின் தேவையும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், நமது மத்திய நிதி ஆணையம் ஆளும் அரசின் நலனுக்காக மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை மாநில அரசுகளின் மீது வலிந்து திணிக்கப் பார்க்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒப்பிடத்தக்க, அதாவது அதிக வரிச்சுமை ஏற்படாமல் இருக்க பொது சேவைகள் மற்றும் வரிவிதிப்பை உத்திரவாதப் படுத்துகிறது.

அதற்காகத்தான் வருவாய் பற்றாக்குறை மானியம் என்று ஒரு நிதி சேவையையும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளது. ஆனால், நடைமுறையில் எந்த ஒப்பீடும் செய்யப்படுவதில்லை. மாறாக சுமத்தப்படும் வரியை ‘விதி’ என ஏற்க வேண்டியுள்ளது. இந்த உரிமையின் மீதும் மத்திய நிதி ஆணையம் தாக்குதல் நடத்துகிறது. அதாவது மத்திய நிதி ஆணையம் நினைத்தால் வருவாய் பற்றாக்குறை மானியத்தின் மீதும் ஆய்வு நடத்துமாம். என்றால், அதனையும் தேவை ஏற்படின் நிறுத்தும் ஏற்பாட்டிற்கு இது வழிவகுக்கும். இது அடிப்படையில் கூட்டாட்சி தத்துவத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல் மற்றும் கூட்டாட்சி விதி மீறல்.

சித்தாந்தத்துடன் கூடிய நிதித் திட்டம் வேண்டும்

மத்திய நிதி ஆணையம், குறிப்பிடும் ‘செயல் திறன் அடிப்படையிலான நிதி பகிர்வு மற்றும் நிதி ஊக்குவிப்பு என்று சொல்வது மாநில அரசின் தினசரி நடவடிக்கையில் அதீதமாக தலையிடுவது போலாகும். மேலும் கல்வி, சுகாதாரம், வன மேலாண்மை, பொது விநியோகம், விவசாய உற்பத்தி போன்ற பல நலத் திட்டங்களை மக்களிடம் நேரிடையாக கொண்டு சேர்த்திடும் அரசு மாநில அரசு; எனில் அதன் சுதந்திரத்தில் தலையிடுவது என்பது கூட்டாட்சி விதி மீறல். இம்மாதிரியான நடைமுறைகளை மத்திய நிதி ஆணையம் ;ஜனரஞ்சகமான நடவடிக்கை’ என்று குறிப்பிடுகிறது. ஆனால் உண்மையில், சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் அடிப்படைத் தேவையான உணவுப் பகிர்தல் போன்றவற்றிகாக மேற்கொள்ளப்படும் திட்டங்களைத் தான் நாம் ‘ஜனரஞ்சகமான நடவடிக்கை’ என்று குறிப்பிட வேண்டும். மாநில அரசின் நிதிப் பொறுப்பின் மீது மத்திய அரசும் நிதி ஆணையமும் சேர்ந்து தொடுக்கும் தாக்குதல் இது.
உதாரணமாக, கேரளா அரசின் மனித வள மேம்பாட்டிற்கு மிக முக்கிய காரணம் அது மக்கள் வளர்ச்சியின் மீது அதன் மூலதனத்தை செலுத்தியதே ஆகும். உண்மையில் ஒரு அரசு பொது செலவுகளுக்கான நிதி பற்றாக்குறையை சரிசெய்ய அதிக வரியை மக்கள் மீது விதிக்கும். ஆனால், கேரளாவில், அந்த நடவடிக்கை இல்லாமலேயே மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்திட முடிந்தது. அதற்கு கேரள அரசு மேற்கொண்ட வளங்களை பாதுகாக்கும் திட்டங்களும் அடிகோலியது எனலாம்.
மத்திய நிதி ஆணையம் ஒன்றைக் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது, மாநில அரசின் நலம் சார்ந்த உறுதித் தன்மையுடன் கூடிய நிதிப் பகிர்வை மேற்கொள்ளாமல், ஏதோ போகிற போக்கில் மீதமிருக்கிற நிதி மற்றும் வளங்களைப் பகிர்தல் என்ற அணுகுமுறையை கைவிட வேண்டும்.

நிதி வாதம்

மத்திய நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை மறுஆய்வுக் குழு ஒரு பரிந்துரையை அளித்துள்ளது. அது மத்திய அரசிடமிருந்து மாநில அரசின் கடன் வாங்கும் உரிமையை 3 சதவீதத்திலிருந்து 1.7 சதவீதம் ஆக குறைக்கச் சொல்கிறது. மாநில அரசுகளுக்கு கடன் வழங்கவும் சில விதிகளை வகுக்க வேண்டும் எனவும் அது அறிவுறுத்துகிறது. இதுபோல 15- ஆவது நிதி ஆணையத்தின் ‘குறிப்பு விதிமுறைகளின்’ பல கூறுகள் மாநில அரசின் நிதி உரிமைகளின் மீதும், நிதி கூட்டாச்சியின் மீதும் ஒரு பெரும் தாக்குதலையும் விதி மீறலையும் ஏற்படுத்துகிறது. இது தொடராமல் இருக்கவும் எதிர்காலத்தில் மாநில சுயாட்சியும் இந்திய கூட்டாச்சித் தத்துவமும் பாதுகாக்கப்பட மாநில அரசுகள் ஒன்றிணைந்து கரங்களை உயர்த்த வேண்டிய தருணமிது. அதுவே 15 ஆவது நிதி ஆணையத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மாநில அரசின் நலனுக்கானதாக அமைய வழிவகுக்கும்.

(நாளிதழில் வெளியான கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோரின் கட்டுரையில் இருந்து)