– ஸ்ரீரசா
கே.ராமச்சந்திரன் என்கிற ராம் (37 வயது), ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞனாக அறிமுகமாகிறான். நரையின் ரேகைகள் ஓடிய தாடி மீசை. நெடிய ஆகிருதியாக வளர்ந்த உடம்பு. அவன் புகைப்படக்கலை பயிற்றுவிக்கும் ஆசிரியனும் கூட. இப்படித்தான் அறிமுகமாகிறான். பள்ளி, கல்லூரிப் பருவத்து மாணவ, மாணவியர். அவர்களில் ஒரு மாணவியோடு, அவள் கார் ஓட்ட, இவன் பயணம். வரும் வழியில் தஞ்சாவூர். அவன் அவளிடம் தஞ்சை பற்றிய நினைவுகளை அதி உற்சாகத்தோடும் பரபரப்போடும் பகிர்கிறான். பழைய பேருந்து நிலையம், உணவகங்கள், இருந்த தன் வீடு.. அப்புறம் வண்டி மெதுவாக அவன் பயின்ற பள்ளிக்கு நகர்கிறது. அங்கே வாசலில் உட்கார்ந்துள்ள காவல்காரர். இவன் படித்தபோது இருந்த அதே காவல்காரர். இவருக்குமான பாசப் பரிமாறல்கள். இவன். பள்ளிக்குள் சென்று அவன் நினைவுகளை மீண்டும் தடவிப் பார்க்கிறான். அந்த நினைவுளோடு, மீண்டும் பயணம் தொடர்கிறது. தன்னுடம் இன்றும் தொடர்பில் உள்ள நண்பர்களை அழைக்கிறான். அவர்கள் தற்போதைய நவீனத் தொடர்பகங்களாக உள்ள 1996 ஆம் ஆண்டு அவனோடு பயின்ற மாணவர்களின் வாட்ஸ் அப் குரூப்பைப் பற்றிச் சொல்கின்றனர். இவனையும் அதனோடு இணைக்கின்றனர். அவர்களில் ஒருவன் பத்தாம் வகுப்புப் பயின்ற ஆண்டியல் மாணவ மாணவியர் இணைந்து எடுத்த புகைப்படத்தை அனுப்புகிறான். படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கிறான். இவனுக்குள் நினைவுகள் சுழலத் துவங்குகின்றன. அவர்கள் அனைவரும் திட்டமிட்டு மார்ச் 7, ஒன்றாகச் சந்திக்கத் திட்டமிடுகின்றனர். சந்திக்கின்றனர். மகிழ்கின்றனர். ராமின் நண்பன் ஒருவரின் வருகையை அறிவிக்கிறான். அது ராமுள் உணர்வுகளை மீண்டும் கிளர்த்துகிறது. அவனது பத்தாம் வகுப்புப் பள்ளிப் பருவத்து நினைவுகள் காட்சிகளாய் விரிகின்றன. மாணவர்களுக்கே உரிய இயல்பான, மகிழ்வும், கேலியும், கிண்டலும் கலந்த நிகழ்வுகளினூடே, இனம் புரியாத அன்பின் விதைகள், ராம் என்கிற ராமச்சந்திரனுக்குள்ளும், ஜானு என்கிற ஜானகிக்குள்ளும் துளிர்க்கின்றன. மனசின் துடிப்புகளோடு வேர்விட்டுப் படர்கின்றன.
பத்தாம் வகுப்பு விடுப்பு முடிந்து 11 ஆம் வகுப்புத் துவங்கும் போது, ராம் திடீரென மாயமாகிறான். தேடும் அவள் கண்கள் தேடிக் கொண்டேயிருக்கின்றன. நண்பர்கள் சென்று விசாரித்து, ராமின் அப்பா கடன் வலையில் மாட்டிக் கொண்டதையும், அவர்களின் வீடு விற்பனைக்கு வந்ததையும், திடீரென இரவில் சொல்லி அவனது அம்மாவையும், அவனையும் அழைத்துக் கொண்டு அவர்கள் சென்னை சென்றதையும் சொல்கின்றனர்.
இப்போது 96 ஒன்று கூடுகை நிகழ்வுக்கு சிங்கப்பூரிலிருந்து, ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவான ஜானு வருகிறாள். இவனுள் மீண்டும் அதே பத்தாம் வகுப்புப் படபடப்பு. அவன் கையில் பலூனுடன் ஒதுங்கி நிற்கிறான். இவள் சென்று அவன் முன் நிற்கிறாள். அவனது இதயத் துடிப்பு எகிறுகிறது. இவள் கைவைத்துப் பார்க்கிறான். பத்தாம் வகுப்பில் அவளது பிறந்த நாளன்று எகிறி அவன் மயங்கி விழுந்தது போன்றே இப்போதும் மயங்கிச் சரிகிறான்.
இப்போதும் அவர்களுக்குள் விட்டுப் போன இடத்திலிருந்து, அன்பு தளும்புகிறது. நண்பர்களோ, இருவருக்குள் ஏதும் நடந்துவிடுமோ எனப் பயப்படுகின்றனர்.
நிகழ்வு முடிந்து, அவள் மறுநாள் காலையே அவள் கிளம்ப வேண்டும் என்கிறாள். அவளை ஓட்டலில் விடுவதற்காக அவன் காரில் கூட்டிச் செல்கிறான். இருவருக்குள்ளும் அன்பின் உரையாடல் துவங்குகிறது. இந்த 22 ஆண்டுகளின் ஒவ்வொரு பக்கங்களும் அவிழ்ந்து விழுகின்றன. அவர்களின் இந்த இரவு முழுக்க ஆயுளுக்கும் வாழ்ந்தபோன்ற அன்பின் கணங்கள் துளித்துளியாக அவிழ்கின்றன.
இருவருக்குமிடையிலான உடலிணைவு நடந்துவிடுமோ என்று பதறுகிற, அல்லது மரபார்ந்த மனங்களைக் கிளறுவதை அதன் நுனி வரை சென்று இயக்குநர் தம் வித்தகத்தை நிகழ்த்துகிறார். அவளது இறுதித் தொடுகையில் மனித அன்பின் அத்தனையும் கரைந்துருகிக் கொட்டுகிறது. விடியலில் அவள் விமானமேறிப் பறக்கிறாள், இவன் அன்பின் சுழலுக்குள் அமிழ்கிறான். இந்த ஓர் இரவின் நினைவுகளும், நிஜங்களுமான சம்பவக் கோர்வைகள் படத்துக்கு அழகிய மென் கவித்துவத்தை வழங்குகின்றன.
கதை நாயகன், நாயகி ஆகியோரின் சாதியப் பின்புலங்கள் எவையும் பேசப்படவில்லை. இத்தகைய அன்புகளும் நிகழத்தான் செய்கின்றன.
96 என்பது பாலியல் உலகில் 69 என்கிற உடற்குறியீடாகவே பயன்படுத்தப்படும் எண்ணாகும். இதில் அது 96 ஆகத் தலைகீழாகியுள்ளது. பெண்ணின் வெளிகள் இந்தப் படத்தில் விரிகின்றன. மரபார்ந்த கற்பு குறித்த கற்பிதங்கள் வலுவான ஒப்புக்கொள்ளத்தக்க காட்சி, கதை நகர்வுகளால் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. உடலிணைவைத் தாண்டிய மன இணைவுகள், மனிதாய நாகரிகத் தொடுதல்கள் வாழ்வின் ஊடும் பாவுமாக ஊடாடிக் கிடக்கின்ற கவித்துவங்களின் தொகுதியாக இந்தப் படம் மலர்ந்துள்ளது.
ஒரு கற்பனையான கவித்துவம் என இதை எடுத்துக் கொண்டாலும், அல்லது நேரக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளதென எடுத்துக் கொண்டாலும், அவர்களுக்குள் அன்பு முகிழ்த்து வளர்கிற சூழலின் சமூகச் சிக்கல்கள் போன்ற கேள்விகளை வேறொரு தளத்திலிருந்து தள்ளி வைத்துவிட்டு, முதலில் முகிழ்க்கிற அன்பின் நொடியிலிருந்து அதனைப் பார்த்தால், இந்தப் படத்தின் உரையாடல் களம் அங்கிருந்தே துவங்குகிறது.
பரியேறும் பெருமாளில் ஜோவுக்கும் பரியனுக்குமிடையில் முகிழ்க்கிற அன்பை வெளிப்படுத்த இயலாத சாதிச்சமூக யதார்த்தங்கள் குறுக்கே நிற்கிற களம் நோக்கிய உரையாடல் நிகழ்த்தப்படுகிறதென்றால், இங்கே மறைமுகமான, நேரடித்தாக்கம் இல்லாத கடன் முதலான பொருளியல் காரணிகள் குறுக்கே மாயத் திரையாய் வீழ்கின்றன.
வாழ்வு சாகாமல் உயிர்த்திருக்கும் மனிதர்களை, அப்படியே நிலையாக நிறுத்தி வைப்பதில்லை. அது தன் போக்கில் அவர்களை நகர்த்திச் செல்கிறது. ஆனால் ஓடும் நதி ஓடிக் கொண்டே அடி மண்ணின் வாசத்தை மேலும் மேலும் கரைத்துத் தன்னை மணம்வீசச் செய்வது போல, முதலன்பெனும் அடிமண் மனிதர்களோடு மேலும் மேலும் கரைந்து கலந்து கொண்டே ஓடிக் கொண்டிருக்கும்.
கால தேச எல்லைகள் கடந்த பின்னும் அன்பின் பூக்கள் கருகுவதில்லை. பரியனுக்கும் ஜோவுக்குமான அன்பு இரண்டு தேநீர்க் கோப்பைகளுக்கிடையில் கிடந்து சிரிப்பதைப் போல, இங்கே ராமுக்கும் ஜானுவுக்குமிடையிலான அன்பு காலங்களின் சுழிப்புகளுக்கிடையில் மலர்ந்து சிரிக்கிறது.
அவன் அன்பு சுமந்து அலைகிறான். அவளும் சுமந்தலைந்தபடியே உயிர்த்திருக்கிறாள்.
மணமான பெண், உலகத்தில் பார்வையில் அந்நியனான ஒருவனோடு, ஓர் இரவு, தனித்திருத்தல், தனித்தலைதல், அவனோடு குளியலறை, படுக்கையறை, சமையலறை, அவனது வீடு, அருகமர்தல், உரிமை பாராட்டுதல், அன்போடு கடிதல், அன்பின் சொல்லாடல்களை அன்போடு அன்புக்காக மட்டுமே நிகழ்த்துதல் என்று ஒவ்வொரு நொடியும், பெண், குடும்பம், நட்பு, அன்பு, உறவு, இணைதல் குறித்த மரபான மனங்களின் சுவர்கள் இற்று விழுகின்றன.
அன்பின் வனவாசத்துக்கும் பின்னால் அன்பின் மனவாசம் அவர்களிடம் வசந்தம் தூவுகிறது. அவரவர் அவரவர் நலம் விழைகிறார்கள். வாழ்வின் யதார்த்தங்களை அனுமதித்துக் கொண்டே அன்பு பயணப்படுகிறது.
படம் தன்னைத்தாண்டி, பாப்பவர் மனங்களிலும் நிகழ்கிறது. யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே கண்ணனோடு நான் ஆட என்கிற ஜானுவின் குரல், வசந்தங்களை மலர்த்துகிறது.
கதைநாயகனின் இளம் பருவ தோற்றமாக நடித்துள்ள பிரபல நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர், அதேபோல இளம் வயது பள்ளிப்பருவ ஜானகியாக நடித்துள்ள கௌரி இருவரிடமும் கச்சிதமான நடிப்பை இயக்குநர் வெளிப்படுத்தச் செய்துள்ளார். விஜய் சேதுபதிக்கும், திரிஷாவுக்கும் இந்தப் படம் தங்களின் காலப் பெட்டகத்துக்குள் வைத்திருக்க வேண்டிய போற்றத்தக்க நினைவின் நிகழ்பொருளாய் இருக்கும். ஜனகராஜ் நெடுநாளைக்குப் பின்னால் அவளது வழக்கமான கத்தல்கள் இல்லாமல் நெகிழ்வான காவல்காரராக நடித்துள்ளார். நட்பு வட்டாரமாக வரும் ஆடுகளம் முருகதாஸூம், தேவ தர்ஷினியும் படத்திற்கு போதுமான நகையின் தருணங்களை இயல்பாக அள்ளித் தருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற பழம் பாடல் வரிகளை இந்தப் படத்தில் வெகு நேர்த்தியாக இசையமைப்பாளர் கோவிந்த மேனன் பயன்படுத்தியுள்ளார். படத்தின் பாடல்களை விட கதையின் நகர்வுக்கு இவை அழகான அன்பின் துணையாக அமைகின்றன. பாடல்கள் படத்தின் அன்புநிலையைச் சிதைக்காவண்ணம், தளிர்த்த மரத்தின் இலைகள் போலப் பசுமை போர்த்திய தென்றலின் அசைவோடேயே ஒலிக்கின்றன.
படத்தின் இயக்குனர் பிரேம் குமார் எளிமையான கதைக்கருவை, அழகான வசந்தங்களின் பூத்துக் குலுங்கல்களாக மலர்த்தியுள்ளார். ஒளிப்பதிவும் உறுத்தாத இயல்பின் தரம். சரியான நகர்வு. திட்டமிட்டு காட்சிகளை நகர்த்தி நம்மையும் படத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார். ஆர்ப்பாட்டமற்ற மெல்லிய நகர்வுகளின் ஊடாக, இந்தப் படம் மரபார்ந்த குடும்ப வெளிகளையும் தாண்டிய அன்பின் உரையாடல்களை அர்த்தபூர்வமாக நிகழ்த்துகிறது.
பாக்கியராஜ் இயக்கத்தில் 1981-ல் வெளி வந்த அந்த 7 நாட்களும், அதற்கும் ஸ்ரீதர் இயக்கத்தில் 1962-ல் வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயமும் நம்முள் நிலழாடுவதை இந்தப் படம் பார்க்கும் போது தவிர்க்க முடியவில்லை. நெஞ்சிலோர் ஆலயத்தின் கதைநாயகி வழியாக நிகழ்த்தப்படும் சொல்லாடல்களும், அந்த 7 நாட்கள் நாயகியின் வழியாக நிகழ்த்தப்படும் பெண் குறித்த படிமச் சொல்லாடல்களும் 96-நாயகியின் வழியாக இற்று வீழ்கின்றன. காலம் ஆண் பெண் அன்புநிலை குறித்த, உறவு நிலை குறித்த புதிய சொல்லாடல்களைக் கோருகிறது. புதிய சொல்லாடல்களை நிகழ்த்துகிறது. நவீன வாழ்வில் பெண்ணின் சிறகடிப்பு வெளி, மெது மெதுவாகவேறும் விரிகிறது.
தமிழ் சினிமா தன் திரையின் மொழிகளைக் கண்டடைந்து கொண்டிருக்கும் நவீனத்தின் காலம் இது.