அரசியல்

யமஹா தொழிலாளர்களின் நியாயமான போராட்டம் . . . . . . . . !

Yamaha

– தேன்சிட்டு

இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி ஒன்று, இந்தியாவில் உள்ள ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் 56 ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிபோக இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டது. இந்த எண்ணிக்கை வெறும் தொடக்கம் மட்டுமே.. அடுத்த மூன்று ஆண்டுகளில் இது 3 லட்சத்தைத் தாண்டும் என ஐடி தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விரக்தியுடன் தெரிவித்திருந்தனர்.

அதை உறுதிசெய்யும் விதமாக, அதற்கடுத்த ஆண்டே சென்னை கிண்டியில் உள்ள வெரிசான் நிறுவனம், அதில் பணிபுரியும் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்தது. ஒருவேளை இந்தத் தகவல்களால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தால் அழைத்துச்செல்ல ஆம்புலன்சுகளும், ஆர்ப்பாட்டத்தில் இறங்கினால் அடித்துவிரட்ட பவுன்சர்கள் என சொல்லப்படும் அடியாட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். லே ஆஃப் என வெளிப்படையாக சொல்லாமல், இதை ரெட்ரெட்ச்மெண்ட் (Retrenchment) என்றே அந்த நிறுவனம் சொல்லிக்கொண்டது.

இந்த இரண்டு செய்திகளிலும் மிகமுக்கியமானதாக பார்க்க வேண்டியது, பன்னாட்டு ஐடி நிறுவனங்களில் ஊழியர்களுக்கான வேலை பாதுகாப்புச் சட்டம் இல்லை என்பதுதான். குறிப்பாக, இதுபோன்ற நிறுவனங்கள் இந்தச் சட்டத்தைப் போராடிப் பெற்றுத்தரும் தொழிற்சங்கங்கள் அமைக்கவும் அனுமதிப்பதில்லை. ஐடி நிறுவனங்களில்தான் இந்த நிலை என்றால், தொழில்துறை நிறுவனங்களும் அதே பாணியைக் கையாளத் தொடங்கிவிட்டன.

சென்னை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரகடத்தில் ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கு 850 நிரந்தரப் பணியாளர்களும், 2,500 ஒப்பந்தப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் உள்ள அடிப்படை வசதிகளின்மை, சம்பள உயர்வு மற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர் ஊழியர்கள். ஆனால், நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளாததால், சி.ஐ.டி.யூ. உடன் இணைந்து தொழிற்சங்கம் அமைக்கும் பணியைத் தொடங்கினர் யமஹா ஊழியர்கள்.

இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரிம் புகாரளித்திருந்த நிலையில், ஆலை நிர்வாகத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். ஆனால், நான்கு நாட்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள நிர்வாகம் முன்வரவில்லை. அதேபோல், ஊழியர்கள் அமைத்திருந்த தொழிற்சங்க நிர்வாகிகள் இருவருக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆலை நிர்வாகத்தின் இந்த அச்சுறுத்தலையும் மீறி அவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவே, இதைப் பொறுத்துக்கொள்ளாத நிர்வாகம் அவர்களை பணிநீக்கம் செய்தது.

இதனால் கொதிப்படைந்த ஊழியர்கள் 600-க்கும் மேற்பட்டோர் ஆலைக்குள்ளேயே போராட்டத்தைத் தொடங்கி ஆறு நாட்களாக நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், காஞ்சிபுரம் சிவில் நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் முறையீடு செய்த யமஹா நிர்வாகம், ஆலையிலிருந்து 200 மீட்டர் சுற்றளவில் போராட்டங்கள் நடத்தக்கூடாது என்ற ஆணையை வாங்கிவந்து பல் இழிக்கிறது. அதற்கேற்றாற்போல், காவல்துறையும் அராஜகமான முறையில் ஊழியர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கி, சிலரைக் கைதுசெய்தும் அழைத்துச் சென்றிருக்கிறது.

இதனிடையே, திருபெரும்புதூரில் இயங்கிவரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இதேபோல் தொழிற்சங்கம் அமைத்து செயல்பட்டதைக் காரணம்காட்டி, ஒரு பெண் உள்பட இருவரை பணிநீக்கம் செய்திருக்கிறது நிர்வாகம். அதேபோல், 120 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் வேலைக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறது. இதனால், கோபமடைந்த தொழிலாளர்கள், வேலை உரிமையை மையப்படுத்தி அங்கும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, போதுமான ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதும், ஏளனம் செய்வதும் தனியார் தொழில்துறை நிறுவனங்களுக்கு புதிதல்ல. ஆனால், சங்கமைத்து, அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக போராடி வருவது சமீபகாலத்தில் இதுவே முதன்முறை. காவல்துறையின் அடக்குமுறையில் இருந்து மீள, ஊழியர்கள் சங்கிலிகளாக இணைந்து போராடியிருக்கின்றனர்.

அவர்களது ஒற்றுமைக்கும், உரிமை வேட்கைக்கும் லால் சலாம் சொல்லி, போராட்டம் வெல்லட்டும் என வாழ்த்து முழங்குவோம்.