-ஸ்ரீரசா
ஸ்டீபன் வில்லியம் ஹாவ்கிங் (Stephen William Hawking, (ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) , ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர்.கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகப் பணியாற்றினார்.
இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) ஆகும். ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்புகள், கருந்துளை (black holes)களுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகளில் உள்ளடங்கியுள்ளன. கருந்துளையினுள் ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப் பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன வென்றும், அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும், இவரது ஆராய்ச்சிகள் காட்டின. இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.
21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவேயுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப் பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இத்த சிறந்த படைப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவர் எழுதிய அறிவியல் நூல்களான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time)தமிழ் பெயர்ப்பு, The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந் நூல்கள் பலரையும் கவர்ந்தன. ஸ்டீபன் ஹாக்கிங் தமது பெயரைக் காப்புரிமை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண மக்களுக்காக அவர் எழுதிய நூல்கள்-
காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time) (பன்டம் பதிப்பு,1988)
கருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays) (பண்டம் புக்ஸ், 1993)
பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design)
ஜனவரி 8, 2007 ல் இவருடைய 65 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அன்று, தான் விண்வெளிப் பயணம் (செலவு) செய்யப் போவதாக அறிவித்தார். பில்லியனர் ரிச்சர்டு பிரான்சன் அவர்களுடைய செலவில் வர்ஜின் காலாக்டிக் விண்வெளிச் போக்குவரத்துச் சேவையின் துணையால் 2009 ஆண்டு ஈர்ப்பற்ற வெளியில் நிலவுருண்டையை சுற்றி வர இருப்பதாகக் கூறினார். என்றாவது ஒருநாள் விண்வெளிக்குப் பயணம் செய்துவிடும் நம்பிக்கையோடு இருந்தார்.
ஆனால் எதிர்பாரா விதமாக இன்று தமது மூளையின் இயக்கத்தை முழுமையாக நிறுத்திக் கொண்டார். ஆனால் அவரது அறிவியல் கருத்துகள், அறிவியல் உலகிற்கு மிகுந்த அசைவூக்கமுள்ள, உயிர்த்துடிப்புள்ள கருத்துகளாக என்றும் உயிர்ப்புடன் நிலவும். ஸ்டீபன் ஹாங்கிங்சைப் புறந்தள்ளிவிட்டு அறிவியலை எவரும் கற்க முடியாது.
ஒரு வேளை, அறிவியல் மரணமடையும் காலத்தில்தான் ஸ்டீபன் ஹாங்கிங்சின் உண்மையான மரணம் நிகழும்.