-ரகுராம் நாராயணன்
ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும் பல ஆளுமைகள் வரலாற்றில் வாழ்ந்து தன்னுடைய மக்களுக்கோ அல்லது எவ்வித பேதமுமின்றி அனைத்து மக்களுக்கோ ஏதாவதொரு வகையில் தன்னால் இயன்றளவு நன்மைகள் பல செய்து மறைந்துள்ளனர். அத்தகைய ஆளுமைகளை இன்றும் நம் நினைவில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். மேலை நாடுகளில் வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய ஆய்வில் ஓரளவேனும் நடுநிலையோடு சீர் தூக்கி மதிப்பிடுவதைக் காண முடிகிறது. இந்திய போன்ற பல இனங்கள், மதங்கள், சாதிகள், மொழிகள் உள்ள நாட்டில் நாம் பல ஆளுமைகளைப் பெற்றுள்ளோம். காந்தி, அம்பேத்கர், பெரியார், நேரு, பகத் சிங் என்று பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் ஜனநாயகம், மதச்சார்பின்மை, முற்போக்கு , பகுத்தறிவு எனப் பல மாண்புகளை நமக்கு வழங்கிச் சென்றுள்ளனர். பிற நாடுகளைப் போன்று நம் நாட்டில், நாம் வரலாற்று ஆளுமைகளைச் சொந்த விருப்பு வெறுப்பின்றி, நடு நிலையோடு அணுகும் பரந்துபட்ட பார்வை இல்லை என்று சொல்வதைவிட, அத்தகைய பார்வை தொடர்ந்து திட்டமிட்டு மறுக்கப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி துவங்கி இன்று நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் வரை பல ஆளுமைகள் மதச்சார்பின்மை, மூடநம்பிக்கைக்கு எதிராக, முற்போக்கு சிந்தனைகள், வரலாற்று ஆராய்ச்சி, பத்திரிக்கையாளர் எனப் பல துறைகளில், பல தளங்களில் செயல்பட்டு வந்த பலரை நாம் தொடர்ந்து இழந்து வருகின்றோம். இவர்கள் அனைவரும் ஒன்று போலவே கொல்லப்பட்டனர். பல முறை பொது நிகழ்வில் பகிரங்கமாகவே கொலை மிரட்டலுக்கும், தாக்குதலுக்கும் ஆளானார்கள்.
2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி தன் மனைவி உமா பன்சாரே அவர்களுடன் காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோழர் கோவிந்த பன்சாரே அவர்கள், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் சுடப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி பிப்ரவரி 20 ஆம் தேதி மருத்துவ மனையில் உயிரிழந்தார். தோழர் கோவிந்த பன்சாரே அவர்கள், மகாராஷ்ட்ரா மாநிலத்தின் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராகவும், தொழிற்சங்கத் தலைவராகவும், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முற்போக்கு கருத்துகளை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்ற முற்போக்குவாதியாகவும் செயல்பட்டு வந்தார். அது மட்டுமின்றி மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மிக முக்கிய வரலாற்று ஆளுமையான, மகாராஷ்ட்ரா மாநிலத்தை உருவாக்கியவரான சத்திரபதி சிவாஜியின் வாழ்க்கையையும், ஆட்சி முறையையும், அரசு அமைப்பையும் மார்க்சிய வழியில் நின்று ஆராய்ந்து பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். அதை ஆடிப்படையாகக் கொண்டு யார் சிவாஜி?(Who was Shivaji?) என்னும் புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சத்திரபதி சிவாஜி, மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பெரும் பகுதியை ஆண்ட மன்னர். மற்ற மன்னர்களைப் போலன்றி, தன்னுடைய அரசை தன்னுடைய சக போராளிகளின் துணையுடன் தானாகவே உருவாக்கினார். அவருக்குப் பின்னர் தோன்றிய வரலாற்று அறிஞர்கள், உயர் சாதியினர், சம காலத்தில் இயங்கி வருகின்ற அரசியல் தலைவர்கள் தங்களுடைய நிலையையும், இருப்பையும் தக்கவைத்துக் கொள்ள சிவாஜியை தம்முடையவர்களா வரித்துக் கொள்வதில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அதில் குறிப்பிட்டளவு வெற்றியும் பெற்றுள்ளனர்.
உயர் சாதியினர், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் தொடர்ந்து வரலாற்றைத் திரித்து, ஏழை எளிய மக்களுக்கும், தலித்துகளுக்கும், மதச் சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமியருக்கு எதிராக சிவாஜி என்னும் ஆளுமையையும், அவரது பேர் புகழையும் பயன்படுத்துகின்றனர். சிவாஜியை வெறும் இந்து மன்னர் என்ற குறுகிய வட்டத்தில் சுருக்கி வந்துள்ள நிலையை உடைத்து, உண்மையான சிவாஜியை மீட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் அயராது தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அதன் பயனாக எழுதப்பட்டதே யார் சிவாஜி? என்னும் புத்தகம்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில், அரசியல், நாடகம், திரைப்படம், நாட்டார் கதைகள், நாட்டார் பாடல்கள் என எல்லாவற்றிலும் நிறைந்திருக்கின்ற ஆளுமை சத்திரபதி சிவாஜி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, நிலப் பிரபுத்துவ சமூக கட்டமைப்பு காலத்தின் பிரதிநிதி, மகாராஷ்ட்ரா மாநிலத்தை ஆண்ட மன்னர், மக்களாட்சி சமூக கட்டமைப்பு காலகட்டத்திலும் போற்றப்பட்டு வருகின்றார். இது எவ்வாறு சாத்தியம்? எனும் கேள்விகளுக்கு மார்க்சிய வழியிலிருந்து ஆராய்ந்து தனது புத்தகத்தில் விவரித்துள்ளார்.
சிவாஜியைப் பற்றி மூன்று விதமான கண்ணோட்டங்கள் நிலவி வருகிறது. ஒன்று ஜேம்ஸ் கிராண்ட் டஃப் போன்றவர்கள் எழுதிய மகாராஷ்ட்ரா மாநிலத்தின் வரலாற்றின் மூலம் இந்திய மன்னர் என்ற வகையில் ஒரு கண்ணோட்டமும், இரண்டாவதாக 1900 காலகட்டங்களில் உருவாகிய இந்திய தேசியவாதிகள், குறிப்பாக உயர் சாதி இந்துக்கள் சிவாஜியை இந்து மன்னர் என்ற கண்ணோட்டத்திலும் முன்வைத்தனர், இறுதியாக மகாத்மா ஜோதிபா பூலே அவர்கள் சிவாஜியை சூத்திர மன்னர் என்ற பார்வையில் அணுகினார். இத்தகைய கண்ணோட்டத்திலிருந்து விலகி முழுவதுமாக மார்க்சிய வழியில் நின்று ஆராய்ந்து, தோழர் கோவிந்த் பன்சாரே அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிகழ்த்திய சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு யார் சிவாஜி? என்னும் புத்தகத்தை எழுதினர்.
சிவாஜி மற்ற மன்னர்களிடமிருந்து எவ்வாறு வேறுபட்டுத் தனித்து நின்று செயல்பட்டார் என்பதையும் விவரித்துள்ளார். குறிப்பாக சிவாஜி விவசாயிகளுக்கு எவ்வாறு ஆதரவாக எந்தெந்த வகையில் செயல்பட்டார், விவசாயிகளிடமிருந்து தேஷ்முக், குல்கர்னி, பட்டீல், தேஷ்பாண்டே போன்ற நிலச் சுவான்தார்கள் இன்றி, அரசு அதிகாரிகளின் மூலமாக நேரடியாக வரி வசூல் செய்யும் முறையை அறிமுகப்படுத்தினார். வறட்சி, பருவ மழை பொய்க்கும் காலங்களில் வரிச் சலுகை அல்லது முற்றிலுமாக வரி வசூல் தள்ளுபடி செய்தும் உத்திரவு பிறப்பித்துள்ளார். மேலும் தன்னுடைய ராணுவ படையினரின் மூலம் எக்காரணத்தைக் கொண்டும் விவசாயிகளின் விளைச்சலுக்கோ, விளை நிலத்திற்க்கோ சேதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் கண்ணடிப்புடனும் செயல்பட்டுள்ளார். சிவாஜியின் இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் சிவாஜியின் லட்சியமான சுய ராஜ்ஜியம் அமைக்கும் பணியில் விவசாயிகள் பலர் தங்களை இணைத்துக்கொண்டனர். சிவாஜி “பார்ப்பனர்களையும் பசுக்களையும் பாதுகாத்த இந்து மன்னர்” என்னும் அடைமொழி புழக்கத்தில் உள்ளது.
சிவாஜி பார்ப்பனர்களை பாதுகாத்த இந்து மன்னர் என்றால், மிர்சா ராஜா உடனான போரில் சிவாஜி தோற்க வேண்டி சுமார் 400 பிராமணர்கள் 3 மாத காலம் தொடர்ந்து ஏன் மிகப்பெரிய யாகம் நடத்த வேண்டும்?
என தகுந்த ஆதாரங்களுடன் நிராகரித்துள்ளார்.
ஒரு தலைவரையோ அல்லது ஆளுமையையோ நாம் மதிப்பிடும் போது, அவர்கள் வாழ்ந்த காலத்தின் அரசியல், சமூக பொருளாதார கட்டமைப்பைக் கருத்தில் கொண்டே அவர்களை மதிப்பிட வேண்டும்.
ஆளும் வர்க்கம், தங்களுடைய இருப்பையும், அதிகாரத்தையும் நிலைநிருத்திக் கொள்ள, ஆளுமைகளைச் சமகால அரசியல் மற்றும் சமூக அமைப்பிற்குள் திணிக்க வரலாற்று நிகழ்வுகளைத் தொடர்ந்து திரித்துக் கூறுகின்றனர்.
அதன் மூலம் அத்தகைய ஆளுமைகளின் கொள்கை மற்றும் லட்சியங்களுக்கு நேரெதிரான செயல்களிலும் ஆளும் வர்க்கம் தொடர்ந்து ஈடுபடுகிறது. சிவாஜி விவசாயிகள் பாதிப்படைந்து விடக்கூடாத வகையில் செயல்பட்டு வந்த சிவாஜியின் பெயரைச் சொல்லிக்கொண்டு அரசியல் நடத்தும் மகாராஷ்ட்ரா மாநில தலைவர்கள், அதே மாநிலத்தைச் சேர்ந்த விதர்பா மாவட்ட விவசாயிகளுக்காக என்னென்ன செய்தார்கள்? சிவாஜி கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்து வந்த போதிலும், ஒருநாளும் வேற்று மதித்தவரை இரண்டாம் தர குடிமக்களாக ஒருபோதும் நடத்தியதில்லை. மற்ற மதத்தவரையும் சரிசமமாக நடுத்த வேண்டும், என்பதை அவருடைய கடிதத்தின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். இன்று சிவாஜியின் பெயரை, கூறிக்கொண்டு மற்ற மதத்தவரை குறிப்பாக இஸ்லாமியரை ஒடுக்கும் போக்கை பரவலாக காண முடிகிறது.
சிவாஜி தன்னுடைய அமைச்சரவையிலும், இராணுவத்திலும் தலித்துகளுக்கு உயரிய இடத்தை வழங்கியிருந்தார். சிவாஜியின் இச்செயலை இன்று நாம் காணமுடிவதில்லை. இவ்வாறு பல உதாரணங்களை நம் முன் வைத்துச் செல்கிறார் தோழர் பன்சாரே.
வரலாற்று ஆளுமைகளை இவ்வாறு சீர்துக்கி ஆராய்வது, ஆளும் வர்க்கத்திற்கு குறிப்பாக பாசிச பிற்போக்கு கருத்துக்களை கொண்டுள்ள இந்துத்துவா போன்ற அடிப்படைவாதிகளின் இருப்பிற்கு என்றுமே அச்சுறுத்தல் தான்.
தகுந்த ஆராய்ச்சியின் மூலம் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு அடிப்படைவாதிகளிடமிருந்து தர்க்க ரீதியிலான எதிர்க் கருத்துக்களை என்றுமே எதிர் பார்க்கமுடியாது என்பதை காந்தி படுகொலையிலிருந்து கௌரி லங்கேஷ் படுகொலை வரை மீண்டும் மீண்டும் நம் சமூகத்திற்கு தொடர்ந்து நினைவுபடுத்தி வருகிறார்கள்.
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் போன்றோர்களின் கருத்துக்களை மீண்டும் மீண்டும் உரக்க ஒலிப்பது நமது கடமை. அடிப்படைவாதிகளால் என்றென்றுமே கருத்துக்களை ஒருபோதும் கொல்லவும் முடியாது, வெல்லவும் முடியாது.