அறிவியல்வரலாறு

இப்போது பரிணாமம் நிகழவில்லையா . . . . . . ?

20141022b0dnc5riuaalopf

– அருண் பகத்.

எந்த உயிரும் நேரடியாக பூமியில் தோன்றவில்லை, ஒற்றை செல் சிற்றுயிரிலிருந்து காலப்போக்கில் ஒவ்வொரு வகை உயிரும் பரிணாமம் அடைந்தது என்பது டார்வின் முன்வைக்கும் பரிணாமம் குறித்தான கோட்பாடு. இக்கோட்பாடு இன்னும் 100 சதவீதம் நிறுவப்படவில்லையெனினும், உயிரின போக்குகளை புரிந்துக் கொள்வதன் மூலம் இக்கோட்பாடு உலகளாவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

உயிரின வளர்ச்சி ஏணிப்படி குறித்து பரிணாமம் குறித்தான கோட்பாடு சொல்வது என்னவென்றால்..

  • ஒற்றை செல் உயிர்களிலிருந்து புழு வகை உயிர்கள் தோன்றின..
  • புழு வகை உயிர்களிலிருந்து மீன்கள் தோன்றின..
  • மீன்களிலிருந்து ஊர்வன வகைகள் தோன்றின..
  • ஊர்வன வகைகளில் ஒரு பிரிவு பாலூட்டிகளாக பரிணாமம் அடைந்தன..
  • பாலூட்டிகளில் ஒரு பிரிவு குரங்குகளாக பரிணாமம் அடைந்து , அந்தக் குரங்கில் ஒரு பிரிவிலிருந்து மனிதன் பரிணமித்தான்.

என்று கூறுகிறது டார்வினின் பரிணாமத் தத்துவம்.

ஆனால் , பரிணாமம் என்ற ஒன்று நடைபெறவே இல்லை என்று கூறுபவர்களும் உண்டு. அவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி அப்படி ஒரு உயிர் வகைகளிலிருந்து தான் மற்றொன்று தோன்றியதென்றால்..

இப்போது ஏன் புழு வகைகளிலிருந்து மீன்கள் தோன்றவில்லை ? இப்போது ஏன் மீன்களிலிருந்து ஊர்வன வகைகள் பரிணமிக்கவில்லை ? இப்போதும் அது நடந்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா ? அது ஏன் நடைபெறவில்லை என்ற அவர்களது கேள்வி பரிசீலிக்கப்பட்டு பதில் கூறப்பட வேண்டியதே..

அந்த கேள்விக்கு பதிலை இயற்கையே கூறி விட்டது. இதோ நிலத்திற்கு வந்து வாழ முயற்சிக்கும் இந்த மீன் தான் அந்தக் கேள்விக்கான விடை , இந்த மீனால் நிலத்திற்கு வந்து சுவாசிக்க முடிகிறது , தனது துடுப்புகளின் உதவியோடு நிலத்தில் நடைபோட முடிகிறது , நிலத்தில் வெகு நேரம் இருக்க முடிகிறது. இந்த மீனின் சந்ததிகள் இபப்டி நிலத்திற்கு வருவதை தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தால் , அவைகள் அடுத்தக் கட்டமாக amphipians ஆக பரிணாமம் அடையும். அதாவது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரினமாக இந்த மீனின் சந்ததிகள் பரிணாமம் அடையும்.

அதற்கு அடுத்தக் கட்டமாக அவைகள் ஊர்வனவாக பரிணாமம் அடையும். அவைகளின் துடுப்புகள் கால்களாக மாறும்,  பின் துடுப்பு வாலாக மாறும். பல மில்லியன் வருடங்களுக்கு முன் இது தான் நடந்தது.

ஆனால் , இங்கு நாம் இன்னொரு கோணத்திலும் பேச வேண்டும்.. இந்த மீன் amphipians ஆகவோ, ஊர்வனவாகவோ பரிணாமம் அடையாமலும் போகலாம். ஏனெனில் , பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு நிலத்திற்கு புலம் பெயர்ந்த மீன்கள் நிலத்தில் சுதந்திரமாக வளர ஆரம்பித்தன, அப்போது நிலத்தில் தாவரங்களைத் தவிர வேறு உயிர்கள் இருந்திருக்கவில்லை.

ஆனால் , தற்போது இந்த மீன்கள் நிலத்தில் வாழ முயற்சித்து , நிலத்தில் போதிய வலிமை பெறும் முன்னரே பாலூட்டிகளால் கொல்லப்படலாம் , ஊர்வன வகைகளால் கொல்லப்படலாம் , இதனையடுத்து இதன் அடுத்த சந்திகள் நிலத்திற்கு வரும் முயற்சியை கைவிட்டு விடலாம்.

பல மில்லியன் வருடங்களுக்கு முன் நடந்த பரிணாம நிகழ்ச்சி தற்போது ஏன் நடைபெறுவதில்லை என இப்போது புரிகிறதா? ஆம், தற்போது நிலம் amphipians களாலும், ஊர்வன வகைகளாலும், பாலூட்டிகளாலும் நிரம்பியிருக்கிறது.  இச்சூழலில், சில மீன்களால் நிலத்திற்கு வந்து பரிணாமம் அடைய முடியாது. கடலுக்குள் இருக்கும் புழு வகைகளால் தற்போது ஏன் மீன்களாக பரிணாமம் அடைய முடிவதில்லை என்றக் கேள்விக்கும் இது தான் பதில்.

சரி, அப்படியென்றால் ஊர்வன வகைகளிலிருந்து பாலூட்டிகள் பரிணாமம் அடைவதற்கு என்ன தடை அது ஏன் நிகழவில்லை என்றக் கேள்வி முன்வைக்கப்படுகிறது .

அதற்கான விடை என்னவென்றால்..

ஊர்வன வகைகளில் டைனோசார்கள் தோன்றி , அவைகள் பல்வேறு விதமான டைனோசார்களாக வளர்ச்சியடைந்து , அதில் ஒரு வகையிலிருந்து தான் பாலுட்டிகள் தோன்றின. டைனோசார் இனம் முற்றிலும் அழிந்து விட்ட நிலையில் , இனி ஊர்வன வகைகளிலிருந்து பாலூட்டிகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

அடுத்ததாக ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது.

சரி, தற்போது ஏன் குரங்கு பிரிவில் ஏதேனுமொன்று , மனிதனாக பரிணாமம் அடைவதில்லை , அதில் என்னத் தடை ? என்று கேட்கிறார்கள் பரிணாம மறுப்பாளர்கள்.

அதற்கான விடை என்னவெனில்..


ஒரு குரங்கு பிரிவிலிருந்து, மனிதன் பரிணாமம் அடைந்தே ஆக வேண்டுமென்பது.. இயற்கையின் நியதியோ, விருப்பமோ அல்ல. அது ஒரு தற்செயல் நிகழ்வு, ஒரு விபத்து என்றுக் கூட சொல்லலாம். கிழக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தால் மரத்திலிருந்து தரையிறங்கிய ஒரு குரங்குப் பிரிவு காலப் போக்கில் மனிதனாக பரிணாமம் அடைந்தது.


இதே விபத்து,  இதே தற்செயல் நிகழ்வு மீண்டும் நடந்து தான் ஆக வேண்டுமென்பதில்லை, ஏனெனில் அது ஒரு நியதி அல்ல, அது ஒரு தற்செயல் நிகழ்வு.மற்ற உயிர்கள் தற்போது ஏன் பரிணாமம் அடைவதில்லை என்றக் கேள்விக்கும் இந்த பதில் பொருந்தும். ஆம் , பரிணாமம் என்பது முன்கூட்டிய தீர்மானிக்கப்பட்ட நியதி அல்ல . ஒவ்வொரு உயிரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் போது , அது வேறு திறன்களை வளர்த்துக் கொண்டு புதிய உயிராக மாறுகிறது . இது தான் பரிணாமம்.

தற்போதும் பரிணாமம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது , அது முன்னர் நடந்த அதே பாதையில் தான் இருக்க வேண்டுமென்பது இல்லை. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப வேறு வேறு விதங்களில் அனைத்து உயிர்களும் பரிணாமம் அடைந்துக் கொண்டு தான் இருக்கிறது.

மனிதர்களும் பரிணாமம் அடைந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். சுமார் 2 லட்சம் வருடங்களுக்கு முந்தைய நமது ஆதி பாட்டன்களும் , பாட்டிகளும்.. 7 அடி உயரமும் , அசாத்திய உடல் பலமும் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால், நமது உயரம் சராசரியாக ஐந்தரை அடி முதல் 6 அடி வரை இருக்கிறது , அவர்களுக்கு இருந்த உடல் பலம் நமக்கு இல்லை.


இது தான் பரிணாமம் , ஏன் இந்த மாற்றம் ? ஏனெனில் 2 லட்சம் வருடங்களுக்கு முந்தைய மனிதர்களைப் போல் ஓநாய்களுடனும் , சிறுத்தைப் புலிகளுடனும் , மம்மூத் யானைகளுடனும் சண்டை போட வேண்டிய அவசியம் நமக்கில்லை. ஆனால் , நமது ஆதி பாட்டன்களையும் , பாட்டிகளையும் விட நமது மூளைத் திறன் மிகவும் வளர்ச்சியடைந்தது. ஏனெனில் , இப்போது நமக்கு அறிவுத் திறனே மிக அவசியம்.


ஆம் , தேவையிலிருந்து திறனும் , அந்த திறனினால் உயிரினத் தன்மையில் மாற்றமும் ஏற்படுகிறது. இதுவே பரிணாமம்.