தொடர்கள்

மத்திய கிழக்கின் வரலாறு – 2 (ஒட்டோமன் பேரரசு)

Middle East - Ottoman Empire

ஓட்டோமன் பேரரசின் வரலாறு:

13-ஆம் நூற்றாண்டு துவங்கி 1923வரை மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து ஆண்டு வந்தது ஓட்டோமன் பேரரசு. ஒட்டோமன் ஆட்சியாளர்கள் துருக்கியின் செல்சுக் பழங்குடி இனத்தவர்கள் ஆவர். பெரும்பாலான துருக்கி பழங்குடியினர், சீனாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். இன்று உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 200 மில்லியன் மக்கள் துருக்கி மொழி பேசுகின்றனர். மத்திய ஆசியாவின் பெரும்பகுதி மக்கள் துருக்கி மொழி பேசுகின்றனர். ஐரோப்பா அளவிற்கு பெரிதான உர்குஸ் என்கிற சீனாவின் மாகாணம் முழுக்க துருக்கி மொழிதான் பேசப்படுகிறது.

ஒட்டோமனை பொருத்தவரையில் விவசாயம்தான் பொருளாதாரத்திற்கான ஒரே தொழிலாக இருந்தது. புதிய தொழிற்நுட்பங்களோ, நவீன முதலாளித்துவ உற்பத்திமுறைகளோ அங்கே இருந்திருக்கவில்லை. எகிப்து, சிரியா, ஈராக் உள்ளிட்ட பல நாடுகளில் அடிமைகளாக இருந்த இராணுவவீரர்கள் மமலுக் என்கிற குழுவினர் அடிமைசாதியாகவே நடத்தப்பட்டனர். இராணுவத்தில் அவர்களது எண்ணிக்கை அதிகமானதும் அவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆட்சியைப்பிடித்தனர். மமலுக்களுடன் போரிட்டு, அவர்கள் ஆட்சிசெய்துகொண்டிருந்த பகுதிகளையும் தன்னுடைய எல்லைக்குள் இணைத்துக்கொண்டது ஒட்டோமன் பேரரசு. ஆக பெரும்பாலான அரபுலக நாடுகளும் ஒட்டோமன் பேரரசின்கீழ் கொண்டுவரப்பட்டன.

ஒட்டோமன் பேரரசு மிகப்பலமாக இருந்தகாலகட்டத்தில், மேற்கு ஐரோப்பில் பலம்வாய்ந்த நாடாக இருந்தது ஆஸ்திரியாதான். ஐரோப்பாவையும் ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் ஒட்டோமன் பேரரசு, ஆஸ்திரியாவின் வியன்னாவரை நுழைந்துவிட்டது. ஒருவேளை அன்றே ஆஸ்திரியா வீழ்த்தப்பட்டிருந்தால், இன்று நாம் பார்க்கிற ஐரோப்பாவே வேறுமாதிரி இருந்திருக்கலாம். ஐரோப்பாவின் மக்கள்தொகையில் முக்கால்வாசிப்பேர் இசுலாமியர்களாகக்கூட மாறியிருக்கக்கூடும். ஒட்டோமனுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே மிகநீண்ட போர்கள் நடந்துகொண்டே இருந்தன. ஒட்டோமன் பேரரசு மூன்று கண்டங்களில் பரவியிருந்தது. மிகவும் பலம்வாய்ந்த கப்பற்படையைக் கொண்டிருந்தது. அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து முதல் ஏமன் வரையிலும் ஒருபுறமும், மத்திய ஆசியாவின் பெரும்பகுதியிலும், ஒட்டோமன் ஆட்சி பரவியிருந்தது. பல்கேரியா, ஹங்கேரி, கிரேக்கம், ரோமேனியா, போஸ்னியா போன்ற பல நாடுகளும் ஒட்டோமன் பேரரசுடன் பல்வேறு போர்களில் தோற்றுப்போயிருந்தன.

18ஆம் நூற்றாண்டில் ரஷியாவின் ஜார் அரசு, இராணுவ ஏகாதிபத்தியமாக வளர்ந்து விரிவடைந்துகொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில்தான் ரஷியாவின் எல்லைப்பகுதிகளில் இருந்த நிலங்களை ஒட்டோமன் இழக்கத்துவங்கியது. 1840 முதல் 1856 வரை நடந்த கிரிமியா போரில் ஒட்டோமனின் தோல்விக்குப்பின்னர், ஜார் ரஷியாவை ஏற்றுக்கொண்டது கிரிமியா. அதனைத் தொடர்ந்து மத்திய ஆசியாவில் ஜார் ரஷியா தனது எல்லையை விரிவாக்கிக்கொண்டே வந்தது. ஒட்டோமனின் பகுதிகளோ குறைந்துகொண்டே வந்தன.

ஒருபக்கம் ஜார் ரஷியாவையும், மறுபக்கம் ஆஸ்திரியா வழியாக வந்த நாடுகளையும் ஒரேநேரத்தில் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. ஒட்டோமனின் கூட்டாளியாக பிரான்சு இருந்தது. அதற்கு பொருளாதார காரணமோ கொள்கை காரணமோ இருந்திருக்கவில்லை. ஆஸ்திரியாவை ஓட்டோமனுடன் சண்டையிடவைத்தால்தான், பிரான்சின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் பிற ஐரோப்பிய பகுதிகளில் ஆஸ்திரியா மூக்கை நுழைக்காது என்று பிரான்சு நினைத்தது. அதற்காகவே ஓட்டோமனுடன் பிரான்சு கைகோர்த்திருந்தது. கூட்டணிகள் எப்போதும் மதவேறுபாடுகளால் மட்டுமேயில்லாமல், அரசியல் மற்றும் அதிகார விருப்பங்கலால்தான் உருவாகியிருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இம்முரண்பாடுகளுக்கு நடுவே மூன்றாவதாக மற்றொரு நாடு நுழைந்தது. அதுதான் பிரிட்டன். 15ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் நடந்த ரோஜாப்போர்களுக்குப் பின்னர், உள்நாட்டுப் போர் என்று பெரிதாக எதுவும் நடக்கவில்லை. நவீன முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு பிரிட்டன் மாறத்துவங்கியிருந்தது. ஜவுளித்துறையில் உலகிலேயே சிறந்துவிளங்கியது. பிரான்சும் ஒட்டோமனும் ஒரு கூட்டணியாகவும், பிரிட்டனும் ப்ருசியாவும் மற்றொரு கூட்டணியாகவும் மிக நீண்டகாலம் தொடர்ந்தன.

பிரஞ்சுப்புரட்சியின் தோற்றமும்-வீழ்ச்சியும், பிரிட்டனின் வளர்ச்சியும்:

பிரஞ்சுப்புரட்சிவரை இக்கூட்டணிகளில் பெரிய மாற்றமில்லை. மனிதவரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது பிரெஞ்சுப் புரட்சிதான். மக்களுக்கு பகுத்தறிவுச் சிந்தனையை உருவாக்கிக்கொடுத்தது. எரிக் ஹோப்ஸ்பான் என்பவர் எழுதிய “ஏஜ் ஆஃப் ரெவல்யூசன்” என்கிற நூலில் 1780இல் பிரான்சு எவ்வாறு இருந்தது என்று விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். பிரான்சின் இன்றைய தலைநகரான பாரிஸ் அன்றைக்கு மிகச்சிறிய கிராமமாக இருந்ததாகவும், அங்கு வாழ்ந்த் மக்களுக்கு உலகம் குறித்த புரிதல் எதுவும் இல்லாமல் மிகவும் பிந்தங்கிய பகுதியாக இருந்ததாகவும் எழுதியிருக்கிறார். ஆனால் அடுத்த 9 ஆண்டுகளில் பிரான்சில் உருவான பிரெஞ்சுப் புரட்சி, மக்களின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. இன்றைக்கு புழக்கத்திலிருக்கிற நவீன தேசியத்தை அறிமுகப்படுத்தியதே பிரெஞ்சுப்புரட்சிதான். பிரான்சில் மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் மற்றனைத்துப் பகுதிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை பிரெஞ்சுப் புரட்சி ஏற்படுத்தியது. ‘மன்னருக்குக்கீழ்தான் மக்கள்’ என்கிற மன்னராட்சி முறையிலிருந்து, ‘தேசம் என்கிற அமைப்பின் அங்கத்தினர்தான் மக்கள்’ என்கிற முறை உருவாகி, மக்களுக்கும் அவர்கள் வாழ்கிற நிலத்திற்குமான உறவை நெருக்கமாக்கியதும் பிரெஞ்சுப்புரட்சி தான்.

நாட்டிற்கென தனியான அரசியலமைப்புச் சட்டம், எல்லை, உள்ளாட்சி அமைப்புகள் என எல்லாமும் உருவானது பிரஞ்சுப்புரட்சிக்குப்பின்னர் தான். குடிமக்களின் உரிமைகளுக்கான பிரகடனமும், பொது சிவில் சட்டமும் கூட உருவாக்கப்பட்டது அப்போதுதான். “சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம்” என முழங்கிய பிரெஞ்சுப் புரட்சியின் உணர்வும் வெற்றியும், ஐரோப்பா முழுவதும் பரவியது. மொழிவாரியான தேசிய இனங்களையொட்டிய தேசங்கள் ஐரோப்பாவில் உருவாகின. அதன் தொடர்ச்சியாக தேசிய இன உணர்வும் மேலோங்கியது. பிரெஞ்சுப் புரட்சியினால் உருவாகத்துவங்கிய மக்களுக்கான மாற்றங்களைக் கண்டு அப்போதைய ஏகாதிபத்திய நாடுகள் அஞ்சின. பிரிட்டன், ஹாலந்து, ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட 16 பேரரசுகள் இணைந்து நெப்போலியன் என்கிற தனிமனிதனை வெல்வதற்காக மட்டுமே வாட்டர்லூவில் போரிடவில்லை. அதனையும் தாண்டி பிரஞ்சு புரட்சியினால் உருவான சிந்தனைகளை அழிப்பதற்காக அவர்கள் எடுத்த முயற்சிதான் அப்போர். நெப்போலியன் என்கிற மாவீரன் தோற்கடிக்கப்பட்ட போராக மட்டுமே வாட்டர்லூ போரினை நமக்கு வரலாற்றுப் பாடங்களில் கற்றுத்தருகிறார்கள். ஆனால் அவரைத் தோற்கடித்தவர்கள் யார்? அவர்களது நோக்கம் என்ன? என்பதையெல்லாம் திட்டமிட்டே மறைக்கப்பட்டிருக்கிறது. நெப்போலியனையும் பிரஞ்சு அரசையும் வீழ்த்தமுடிந்த அவர்களால், அப்புரட்சி திறந்துவைத்த சமத்துவக் கதவுகளை மூடமுடியவில்லை.

புதிய சிந்தனைகள் உருவெடுக்கிறபோதெல்லாம், பிற்போக்கு சக்திகள் அதனை அழிக்க முற்படுவது இன்றுமட்டுமல்ல; பிரெஞ்சுப் புரட்சி காலகட்டத்திலும் நடந்திருக்கிறது. ஐரோப்பாவிலேயே நவீன தொழிற்புரட்சி நடந்த முதல் தேசம் பிரிட்டன்தான். பிரெஞ்சுப்புரட்சியை முறியடித்துவிட்டபின்னர், எகிப்தின் முகமது அலியை வீழ்த்துவதற்காக ஒட்டோமனுடன் கைகோர்த்தது பிரிட்டன். அல்ஜீரியா முதல் எகிப்து வரையில் ஆப்பிரிக்க கண்டத்தையும், சிரியா, ஈராக், ஏமன் உள்ளிட்ட மத்திய கிழக்குப் பகுதிகளையும் பகுதிகளையும் 400-500 ஆண்டுகளாக ஒட்டோமன் ஆட்சி செய்தது. அதனால் ஒட்டோமனுடன் நட்புபாராட்டவே பிரிட்டன் விரும்பியது. தன்னுடன் மட்டுமே பொருளாதார உறவுகளைப் பேணவேண்டும் என்றும், வேறந்த ஐரோப்பிய நாடுகளோடும் பொருளாதார உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் ஒட்டோமனுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது பிரிட்டன். பிரிட்டனைப் பொருத்தவரை மதமோ, நட்போ, கொள்கையோ எதுவுமே முக்கியமாக இருந்திருக்கவில்லை. இந்தியா என்கிற தங்கமுட்டையிடும் வாத்தை தன்னோடு வைத்துக்கொள்வதற்காக யாருடனும் எத்தகைய ஒப்பந்தத்தையும் கையெழுத்திடத் தயாராகவே பிரிட்டன் இருந்தது. பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்குச் செல்லும் கடல்வழிப்பாதையில் உள்ள எல்லா பகுதிகளையும் பிரிட்டன் ஆக்கிரமித்தது. அப்படித்தான் ஒட்டோமனுடன் இணைந்து முகமது அலியை வீழ்த்தி எகிப்தைக் கைப்பற்றியது.

பிரெஞ்சுப்புரட்சியை தடுத்து தோற்கடித்துவிட்டோம் என்கிற பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் மகிழ்ச்சி பெரிதாக நீடிக்கவில்லை. நவீன தேசமும் தேசியமும் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு பரவத்துவங்கின. அதன்விளைவாக ஒருங்கிணைந்த ஜெர்மனி உருவானது. ஜெர்மனி என்கிற பெரிய தேசம் உருவாவதை பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் ஆஸ்திரியாவுடன் இணைந்து ஜெர்மனியுடன் சண்டைக்கு போனது பிரிட்டன். ஜெர்மனிக்குள் இருந்த புரோட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்க முரண்பாடுகளைப் பயன்படுத்திக்கொண்டு சண்டைகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் ஒருங்கிணைந்த ஜெர்மனியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தபோதெல்லாம் ஆஸ்திரியா நடுவில் வந்து குழப்பிவிடுவதை வழக்கமாகக்கொண்டிருந்தது. (இன்றைய அரபுலகத்தோடு அன்றைய ஐரோப்பாவை ஒப்பிடலாம். அரபுலகில் ஏதாவதொரு சூழலில் ஒற்றுமை உருவாகிறபோது, அதனை அரபுலகில் இருக்கும் ஏதாவது ஒன்றிரண்டு அரசுகள் கலைத்துவிடுவதைப் பார்க்கமுடிகிறது)

தொடரும்…

-முகமது ஹசன்
(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)
-இ.பா.சிந்தன்