இன்றைக்கு மத்தியகிழக்கு என்கிற வார்த்தையைக் கேட்டாலே, ‘அது கலவர பூமியாச்சே’ என்ற எண்ணம்தான் நம்மில் பலருக்கும் வரும். மத்தியகிழக்கு என்றால் என்ன? அது எந்தெந்த பகுதிகளையும் நாடுகளையும் உள்ளடக்கியது? இன்றைக்கு மத்தியகிழக்கு என்பது பொதுவாக லிபியா முதல் ஆப்கானிஸ்தான் வரையிலான நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. ஆனால் மத்தியகிழக்கு என்கிற பெயரை மத்தியகிழக்கில் வாழும் மக்களேகூட 50-60 ஆண்டுகளுக்குமுன்னர் பயன்படுத்தியதில்லை. ஐரோப்பாவும் அமெரிக்காவும் இணைந்துதான் அப்படியான பெயரை வைத்தன. பிரிட்டனிலிருந்து கிழக்கே வெகுதூரத்தில் சீனா இருந்தமையால் அது தூர கிழக்காகவும், ஒட்டோமனின் தலைநகரும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் (இன்றைய துருக்கி) அருகாமைக்கிழக்காகவும், பிரிட்டனுக்கும் துருக்கிக்கும் இடையில் இருக்கும் பகுதிகள் அனைத்தும் மத்திய கிழக்கு என்றும் பிரிட்டன் வரையறுத்திருந்தது. ஒட்டோமன் பேரரசு வீழ்ந்ததற்குப்பின்னர், அதன் பகுதிகள் அனைத்தும் பல தேசங்களாக மாறின. அதன்பின்னர் அப்பகுதிகளையும் இணைத்துக்கொண்டு “மத்திய கிழக்கு” என்று நாம் இன்றைக்கு அழைக்கிற பகுதிகளை பிரபலமாக்கியது அமெரிக்காதான்.
கடந்த சில பத்தாண்டுகளாகவே உலக அரசியலின் மையப்புள்ளியாக இருந்துவருகிறது மத்திய கிழக்குப் பிரதேசம். இரண்டாம் உலகப்போருக்குப்பின்னரான காலகட்டத்தில் அதிகளவிலான போர்களைச் சந்தித்த பகுதியும் மத்திய கிழக்குதான். இஸ்ரேலிய-அரபுப் போர், வளைகுடாப்போர், அறுபது நாள் போர், இரண்டு லெபனான் போர்கள், சூயஸ் போர், யேமன் போர்கள், வளைகுடாப்போர், ஈராக் போர், ஆப்கான் போர், லிபியா போர், சிரியா போர், சன்னி-ஷியா மோதல்கள், இஸ்ரேல்-பாலஸ்தீன சண்டைகள் என எண்ணற்ற போர்களையும் குழப்பங்களையும் சண்டைகளையும் மோதல்களையும் மத்திய கிழக்கு எதிர்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இத்தனை போர்களும் சண்டைகளும் அங்கே அமைதியைக் கொண்டுவந்திருக்கின்றனவா?
இன்று உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளாகச் சொல்லப்படும் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நாகரீகமடைந்த மத்திய கிழக்குப் பகுதிகள் ஏன் இன்றும் குழப்பங்களிலேயே தத்தளிக்கின்றன?
மேற்குலக நாடுகளிலெல்லாம் பண்பாட்டோ வாழ்க்கைமுறையோ உருவாகியிருக்காத காலத்திலேயே, மதங்கள் உருவான இடம்தான் மத்தியகிழக்கு. இன்று உலகின் பெரும்பகுதி மக்களால் பின்பற்றப்படும் யூத, கிருத்துவ, இசுலாமிய மதங்கள் மத்திய கிழக்கில் தான் தோன்றின. ஆனால் அவற்றால் பலனடைந்த பல நாடுகளின் நிலையைப்போல மத்தியகிழக்கு இன்று இல்லாமல் போனதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்?
மத்தியகிழக்கின் இன்றைய பிரச்சனைகளுக்கும் என்னவெல்லாம் காரணங்களாக இருக்கும்? என்ற நம்முடைய கேள்விக்கு விடைகிடைக்க வேண்டுமென்றால், மத்திய கிழக்கின் சில நூற்றாண்டு வரலாற்றைப் புரட்டிப்பார்க்கவேண்டியிருக்கிறது. ஒட்டோமன் பேரரசு முதல் இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ். வரையில் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்திவந்தவர்களின் நோக்கங்கள், வரலாறு, வளர்ச்சி, வீழ்ச்சி போன்றவற்றின் குறுக்குவெட்டுப்பார்வை தேவைப்படுகிறது. வரலாற்று ஆதாரங்களோடு அதனை செய்யமுயற்சிப்பதுதான் இக்கட்டுரைத்தொடரின் நோக்கம்.
சைக்ஸ் – பிகோ ஒப்பந்தம்
மத்திய கிழக்கின் பெரும்பகுதிகளை 700 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிசெய்துவந்த ஒட்டோமன் பேரரசு 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வீழ்ச்சியடைந்தது. அப்பேரரசு வீழ்ச்சியடையும் தருவாயில், அதன் கட்டுப்பாட்டில் இருந்த ஒட்டுமொத்த மத்தியகிழக்கையும் பங்குபோடுவது குறித்து ஓர் இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டது. பிரிட்டன், பிரான்சு மற்றும் ஜார் ரஷியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து மத்தியகிழக்கை தங்களுக்குள் பிரித்து எடுத்துக்கொள்வது என்று முடிவெடுத்தனர். அவ்வொப்பந்தத்தின் பெயர் “சைக்ஸ்-பிகோ ஒப்பந்தம்”. அதனை தயாரித்து உருவாக்கிய சைக்ஸ் மற்றும் பிகோ ஆகிய இருவரின் பெயர்களை இணைத்து அவ்வொப்பந்தத்திற்கு சூட்டப்பட்டது. இன்றிலிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட இந்த இரகசிய ஒப்பந்தம்தான் மத்தியகிழக்கின் இன்றைய பெரும்பாலான குழப்பங்களுக்குக் காரணம். மத்திய கிழக்கில் வாழும் மக்களின் வாழ்க்கை மக்களின் வாழ்க்கைமுறை, இனக்குழுக்கள், மொழி, மதம் என எதையுமே கணக்கிலெடுத்துக்கொள்ளாமல், தங்களது பேராசைக்காக மத்திய துண்டாடியது ஏகாதிபத்தியம்.
சைக்ஸ் மற்றும் பிகோ இருவரும் தற்செயலாக மத்திய கிழக்கின் தூதரகப் பணியில் இணைந்துவிட்டனர். ஆனால், மத்திய கிழக்கையே புரட்டிப்போடும் வரலாற்றுச் முக்கியம்வாய்ந்த சைக்ஸ்-பிகோ ஒப்பந்தத்தின் நாயகர்களாகிவிட்டனர். சைக்ஸ் என்பவர் பிரிட்டனின் அதிகாரவர்க்க பரம்பரையில் பிறந்தவர். ஒரு காலகட்டத்தில் ஒட்டோமன் பேரரசில் அதிகம் படித்த அறிவுஜீவியாக கருதப்பட்டார். ஆனால் உண்மையில் ஒட்டோமன் பேரரசின் நிலப்பிரதேசம் குறித்தான அவரது அறிவு மிகக்குறைவுதான். ஒட்டோமன் பகுதிகளை பல முறை சுற்றுலாப்பயணியாக பல முறை சுற்றித்திரிந்தவர் என்கிற ஒரேயொரு தகுதிதான் மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக்காட்டியது. இன்றுபோல் ஊர்சுற்றிப்பார்ப்பதெல்லாம் எல்லா மக்களுக்கும் அக்காலகட்டத்தில் எளிதாக இருந்ததில்லை. வெறுமனே பணக்காரர்களுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மட்டுமே மத்திய கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை சுற்றிவர முடிந்தது. ஆகையால் சைக்சுக்கு மத்தியகிழக்கை சுற்றிவரும் வாய்ப்புகள் கிடைத்தன. அதனால் மத்தியகிழக்கை அதிகம் அறிந்தவர் என்கிற பெருமையுடன் பிரிட்டனில் மத்திய கிழக்கு தொடர்பான உயரிய ஆலோசகர் பதவியும் அவருக்குக் கிடைத்தது.
பிகோ என்பவர் பிரெஞ்சு காலனியாதிக்கக் கட்சியின் உறுப்பினராகவும், அயல்துறை அதிகாரியாகவும், தூதராகவும் இருந்தவர். மத்திய கிழக்கு குறித்தான அறிவு அவருக்கும் மிகக்குறைவாகத்தான் இருந்தது.
இப்படியானதொரு ஒப்பந்தம் போடப்பட்டதே மத்திய கிழக்கின் எந்த நாட்டிற்கும், எந்த மக்களுக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை. 1917இல் ரஷியாவில் இருந்த ஜார் மன்னராட்சியினை மக்கள் புரட்சியொன்று முடிவுக்குக் கொண்டுவந்தது. புரட்சிக்குப்பின்னர் அங்கே சோவியத் யூனியன் உருவானது. ஜார் மன்னராட்சியில் போடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், இரகசியமாக வைக்கப்பட்டிருந்த எல்லா ஆவணங்களையும் மக்கள் முன்னர் வைக்கவேண்டுமென்று லெனின் உத்தரவிட்டார். அப்போதுதான் மத்தியகிழக்கை துண்டாடி பங்குபோட பிரிட்டன், பிரான்சு மற்றும் ஜார் ரஷியா திட்டமிட்டிருந்தது உலகுக்கு தெரிந்தது.
தொடரும்….
-முகமது ஹசன்
(முன்னாள் எத்தியோப்பிய தூதர்)
-இ.பா.சிந்தன்