அரசியல்

எரிக்கப்பட்ட கல்விக்கடன் பத்திரங்களும், எழுச்சிமிகு மாணவர் போராட்டங்களும்…

20120628 Paro Bkp 098 Img

இ.பா.சிந்தன்

உலகிலேயே சிலி நாட்டில்தான் கல்விக்கு அரசு செலவிடும் தொகை மிகக்குறைவாக இருக்கிறது. அதிலும் உயர்கல்விக்கான செலவு மொத்தமும், ஏறத்தாழ மாணவர்களின் தலையிலேயே விழுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கழகம் என்கிற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வின்படி சிலி நாட்டின் உயர்கல்விக் கட்டணம் தான் பெரும்பாலான வளரும் நாடுகளிலேயே மிக அதிகம் என்று தெரியவந்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன் போன்ற ஸ்கேன்டிநேவியன் நாடுகளில், உயர்க்கல்விக்கான செலவில் 5-10% மட்டுமே மாணவர்கள் செலுத்த வேண்டும்; மீதித் தொகையினை அரசே ஏற்றுக்கொள்கிறது. அதுவே, அமெரிக்காவில் மாணவர்களின் தலையில் 40% சுமத்தப்படுகிறது. சிலியிலொ 75% உயர்க்கல்விக்கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டிய கட்டாயமிருக்கிறது.

கல்வியில் இலாப நோக்கம் இருக்கக் கூடாது என்பது சிலி நாட்டின் சட்டத்தில் இருக்கிறதென்றாலும், நாட்டின் ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் பாதியளவிற்கு இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களிலேயே பயில்கின்றனர். அந்நிறுவனங்கள் அனைத்தும், மாணவர்களிடமிருந்தும் கட்டணத்தை வசூலித்துக்கொண்டு, அரசின் நிதியுதவிகளையும் பெற்றுக்கொண்டு இயங்கி வருகின்றன.

இதனை எதிர்த்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார்கள் சிலி  நாட்டின் மாணவர்கள். மாணவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக, சமீபத்தில்  நடந்த அதிபர் தேர்தலில், ஆட்சி மாற்றமே நிகழ்ந்திருக்கிறது. சிலியின் அதிபராக இருந்த செபாஸ்டின் தோற்கடிக்கப்பட்டு, மிசல் பாசெலெட் புதிய அதிபராக வென்று இருக்கிறார். உயர்க்கல்விவரை இலவசமாக அனைவருக்கும் கல்வி வழங்கப்படும் என்கிற கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாலேயே மிசல் பாசெலெட்டிற்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. கல்வியைத் தனியாரிடமிருந்து பறித்து அரசே ஏற்று நடத்த வேண்டும், உயர்க்கல்வி உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் போன்றவை மாணவர்களின் கோரிக்கை.

புதிதாகப் பதவியேற்ற அரசின் நடவடிக்கைகளால், தனியார் பல்கலைக்கழகங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, ‘மர் பல்கலைகழக‘த்திற்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு பயின்று வந்த மாணவர்களை வேறு பல்கலைகழகங்களுக்கு அனுப்பியது அரசு. இது போன்று மேலும்11 பல்கலைகழகங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதெல்லாம் போதாதென்றும் தேர்தலுக்கு முன்பு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளான இலவசக்கல்வி, இலாபநோக்கற்ற கல்விக்கொள்கை, தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தி, மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளனர் மாணவர்கள். 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் பல்கலைகழக மாணவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

மர் பல்கலைகழகம்:

சிலி நாட்டின் சட்டத்தின்படி, உயர்கல்வியில் இலாபநோக்கம் இருக்கக்கூடாதென்றாலும், ‘மர் பல்கலைக்கழகம்’ உள்ளிட்ட தனியார் பல்கலைக்கழகங்கள், ஏராளமான முறைகேடுகள் செய்து மாணவர்களிடம் அதிகளவில் பணம் வசூலித்து வருகின்றன. ‘மர் பல்கலைக்கழகம்’ இயங்கியகாலத்தில், கடன் பெற்று ஏராளமான மாணவர்கள் கல்விபயின்றிருக்கின்றனர். அப்பல்கலைக்கழகம் தற்போது மூடப்பட்டிருந்தாலும் முன்னர் வழங்கிய கடன்கள் தற்போதும் வசூலிக்கப்படுகின்றது. அவர்கள் நிர்ணயித்த கல்விக்கட்டணமோ, வசூலித்த பணத்தை கையாண்டவிதமோ முறைகேடானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ள சூழலிலும், மாணவர்களிடமிருந்து கல்விக்கடன் தொகையினை வசூலித்துக்கொண்டிருக்கிறார்கள். (ஏறத்தாழ 2500 கோடி ரூபாய் அளவிற்கு கடன் தொகையினை மாணவர்கள் திருப்பிச்செலுத்த வேண்டுமாம்). கல்வியின் பெயரால் கொள்ளையடித்தது போததென்று, பணமோசடியும் செய்து வந்த பல்கலைகழகத்தில் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதும் கடினமாக இருக்கிறது.

கடன்பத்திரங்கள் எரிப்பு:

மாணவர்கள் செலுத்த வேண்டிய கடன்களுக்கான கடன்பத்திரங்களை பல்கலைக்கழகங்களில் இருந்து எடுத்து, எரித்துவிட்டதாக சிலியின் புகழ்பெற்ற ஓவியர் பிரான்சிஸ்கோ அறிவித்திருக்கிறார். எரிக்கப்பட்ட கடன்பத்திரங்களின் சாம்பல்களை தன்னுடைய ஓவியக்கண்காட்சியில் ஒரு காட்சிப்பொருளாகவே  காட்டி இதனை அறிவித்தார். எதற்காக மாணவர்களின் கடன்பத்திரங்களை எரித்தார் என்பதனை விளக்கும் வீடியோ ஒன்றையும் யூ-டியூபில் வெளியிட்டிருக்கிறார்.

“மாணவர்களே! இத்துடன் முடிந்துவிட்டது! நீங்கள் அனைவரும் கடனிலிருந்து விடுபட்டுவிட்டீர்கள். கடனில் ஒரு பைசா கூட திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. இனியும் நாம் பயப்படக்கூடாது. ஏழை என்பதால் கிரிமினல்களாகப் பார்ப்பார்களோ என்கிற பயத்தை நாம் விட்டொழிக்க வேண்டும். நானும் உங்களைப் போன்றவன் தான். ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டிய, மோசமான வாழ்க்கையை வாழ்கிறவன். இது உங்கள் மீதான என் அன்பின் வெளிப்பாடு. பல்லாயிரக்கணக்கான மாணவர்களை ஏமாற்றிய மர் பல்கலைகழகத்தினுடைய முதலாளிகளின் செயலுக்கு பதிலடி இது.”

“நான் கல்லூரிப்படிப்பெல்லாம் படிக்கவில்லை. எனக்குத் தெரிந்த கலையினை ஆயுதமாகக் கொண்டு என்னாலான பங்களிப்பைச் செய்கிறேன். இளம் மாணவர்களின் கல்விக்கடன் சுமையால் அவர்களின் வீடுகள் ஏலம்போவதும், உடைமைகளை இழக்கவேண்டி வருவதும், நம் இதயங்களை நொறுங்கச்செய்யும் அநீதியாக இருக்கிறது  இதற்கெல்லாம் நாம் மெல்லப் பழகிக்கொண்டிருக்கிறோமோ எனத் தோன்றுகிறது.”

“கலை என்பது அழகியல் சார்ந்ததாக மட்டுமே மாறிக்கொண்டிருக்கின்றது. ஆனால் கலையும் போராட்டத்தின் ஆயுதம் தான். போராட்டமும் ஒரு கலை தான். சாண்டியாகோவில் வசிக்கும் உழைக்கும் வர்கத்தின் பிரதிநிதி தான் நான். கல்வியில் மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நேரமிது. போராடுவதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. கல்விக்கட்டணம் செலுத்த மறுக்கவேண்டும். அதனை அரசே ஏற்க வேண்டும்.”

கடன் பத்திரங்கள் எரிந்துவிட்டமையால், மாணவர்களின் கடன்களை நிரூபிப்பதும், பின்னர் வசூலிப்பதும் பல்கலைக்கழகத்திற்கு அத்தனை எளிதான காரியமாக இருக்காது என்று சிலியின் சட்ட ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய அரசின் கல்விச்சீர்திருத்தம்:

மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட  வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையிலும், கல்விச் சீர்திருத்தச் சட்டத்தினை புதிய அரசு நிறைவேற்றியிருக்கிறது. இதன் மூலம்,

1. இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு அரசு வழங்கி வந்த நிதியினை நிறுத்துவது,

2. அந்நிதியினை அரசு பள்ளிகளுக்கு திருப்பிவிடுவது,

3. பள்ளி கல்வி முழுவதையும் இலவசமாக அரசே வழங்குவது,

4. மாணவர்களின் பின்புலம், பெற்றோரின் வசதி போன்றவற்றை கணக்கில் கொண்டே நடத்தப்படும் மாணவர் சேர்க்கையை முழுவதுமாக இரத்துசெய்வது,

போன்றவை அக்கல்வி சீர்திருத்தச் சட்டத்தில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள்.

புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்குவது, உயர்கல்வியினை முழுவதுமாக இலவசமாக்குவது போன்றவற்றை அடுத்தகட்ட சீர்த்திருத்தச் சட்டமாக பின்னர் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் போராட்டங்களின் மூலம் ஒரு நாட்டின் அரசே மாறியதும், ஏற்கனவே இருக்கிற சட்டங்கள் யாவும் மக்களின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படுவதும் உலக மக்களுக்கெல்லாம் மிகப்பெரிய முன்னுதாரணமாகும். காசிருந்தால் மட்டுமே கல்வி என்கிற நிலை உருவாகியிருக்கிற இந்தியா போன்ற நாடுகளின் மாணவர்களும் மாணவர் இயக்கங்களும் கற்றறிந்துகொள்ளவேண்டிய போராட்டங்கள் இவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஓவியர் பிரான்சிஸ்கோ சொன்னது போல, “கலையும் போராட்டத்தின் ஆயுதம் தான்போராட்டமும் ஒரு கலை தான். நாமும் கலைஞர்களாவோம்